1 சாமுவேல் 28:1-25

28  அந்தக் காலத்தில், பெலிஸ்தியர்கள் இஸ்ரவேலர்களோடு போர் செய்ய+ படைகளை ஒன்றுதிரட்டினார்கள். அப்போது ஆகீஸ் தாவீதிடம், “நீயும் உன்னுடைய ஆட்களும் என்னோடு போருக்கு வர வேண்டும் என்பது உனக்குத் தெரியும்தானே?”+ என்று கேட்டான்.  அதற்கு தாவீது, “அடியேன் என்ன செய்வேன் என்று உங்களுக்கே தெரியும்” என்றார். அப்போது ஆகீஸ், “அதனால்தான் உன்னை என்னுடைய நிரந்தர மெய்க்காப்பாளனாக நியமிக்கப்போகிறேன்”+ என்றான்.  இதற்கு முன்பே சாமுவேல் இறந்துபோயிருந்தார். அவருக்காக இஸ்ரவேலர்கள் எல்லாரும் துக்கம் அனுசரித்து, அவருடைய ஊராகிய ராமாவில் அவரை அடக்கம் செய்திருந்தார்கள்.+ ஆவிகளோடு பேசுகிறவர்களையும் குறிசொல்கிறவர்களையும் சவுல் தேசத்திலிருந்து துரத்தியடித்திருந்தார்.+  பெலிஸ்தியர்கள் ஒன்றுதிரண்டு வந்து சூனேமில்+ முகாம்போட்டார்கள். சவுல் இஸ்ரவேலர்களை ஒன்றுதிரட்டி கில்போவாவில்+ முகாம்போட்டார்.  ஆனால், பெலிஸ்தியர்களின் படையைப் பார்த்தவுடன் சவுல் பயந்துபோனார். அவருடைய இதயம் படபடவென்று அடித்தது.+  சவுல் யெகோவாவிடம் விசாரித்தார்.+ ஆனால், யெகோவா அவருக்குக் கனவுகள் மூலமாகவோ ஊரீம்+ மூலமாகவோ தீர்க்கதரிசிகள் மூலமாகவோ பதில் சொல்லவே இல்லை.  கடைசியில், சவுல் தன்னுடைய ஊழியர்களிடம், “ஆவிகளோடு பேசுகிற ஒரு பெண்ணைக் கண்டுபிடியுங்கள்.+ நான் அவளிடம் போய் கேட்டுத் தெரிந்துகொள்கிறேன்” என்றார். அதற்கு அவர்கள், “ஆவிகளோடு பேசுகிற ஒரு பெண் எந்தோரில்+ இருக்கிறாள்” என்று சொன்னார்கள்.  அதனால், சவுல் அந்தப் பெண்ணைப் பார்க்க மாறுவேடத்தில் இரண்டு ஆட்களோடு ராத்திரியில் போனார். அவர் அவளிடம், “உன்னுடைய மந்திர சக்தியால் ஆவியுலகத்தோடு தொடர்புகொண்டு+ நான் சொல்கிற ஆளைத் தயவுசெய்து கூப்பிடு” என்றார்.  ஆனால் அவள், “ஆவிகளோடு பேசுகிறவர்களையும் குறிசொல்கிறவர்களையும் தேசத்திலிருந்து சவுல் துரத்தியடித்த விஷயம்+ உங்களுக்குத் தெரிந்திருக்கும். அப்படித் தெரிந்திருந்தும், என் உயிருக்கு உலை வைக்கப் பார்க்கிறீர்களா?”+ என்று கேட்டாள். 10  அப்போது சவுல், “உனக்கு எந்தத் தண்டனையும் கிடைக்காது, இது உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல் ஆணை”* என்று சொல்லி, யெகோவாவின் பெயரில் சத்தியம் செய்து கொடுத்தார். 11  அந்தப் பெண், “உங்களுக்காக நான் யாரைக் கூப்பிட வேண்டும்?” என்று கேட்டாள். அதற்கு சவுல், “சாமுவேலைக் கூப்பிடு” என்றார். 12  அவள் “சாமுவேலை”*+ பார்த்ததும் தொண்டைகிழியக் கத்தினாள். பின்பு சவுலைப் பார்த்து, “ஏன் என்னை ஏமாற்றினீர்கள்? நீங்கள் சவுல்தானே?” என்று கேட்டாள். 13  அதற்கு ராஜா, “பயப்படாதே, நீ என்ன பார்க்கிறாய்?” என்று கேட்டார். அப்போது அவள், “கடவுளைப் போல ஒருவர் பூமிக்கு அடியிலிருந்து எழுந்து வருவதைப் பார்க்கிறேன்” என்றாள். 14  உடனே சவுல், “அவர் பார்ப்பதற்கு எப்படி இருக்கிறார்?” என்று கேட்டார். அதற்கு அவள், “வயதானவராக இருக்கிறார், கையில்லாத ஒரு மேலங்கியைப் போட்டிருக்கிறார்”+ என்றாள். அது “சாமுவேல்” என்பதை சவுல் புரிந்துகொண்டதுமே மண்டிபோட்டு, தரைவரைக்கும் குனிந்து வணங்கினார். 15  அப்போது “சாமுவேல்” சவுலிடம், “நீ ஏன் என்னைக் கூப்பிட்டுத் தொந்தரவு செய்கிறாய்?” என்று கேட்டார். அதற்கு சவுல், “பயங்கரமான ஒரு இக்கட்டில் இருக்கிறேன். பெலிஸ்தியர்கள் என்னோடு போர் செய்வதற்கு வந்திருக்கிறார்கள். கடவுள் என்னைவிட்டு விலகிவிட்டார். அவர் தீர்க்கதரிசிகள் மூலமாகவும் பதில் சொல்வதில்லை, கனவுகள் மூலமாகவும் பதில் சொல்வதில்லை.+ அதனால்தான் நான் உங்களைக் கூப்பிட்டேன், நான் என்ன செய்ய வேண்டுமென்று சொல்லுங்கள்”+ என்றார். 16  அப்போது “சாமுவேல்” சவுலிடம், “யெகோவாவே உன்னைவிட்டு விலகி+ உனக்கு விரோதியாகிவிட்டார். அப்படியிருக்கும்போது, நீ ஏன் என்னிடம் வந்து கேட்கிறாய்? 17  யெகோவா என் மூலம் முன்பு சொன்னதை இப்போது நிறைவேற்றுவார். யெகோவா உன்னிடமிருந்து ஆட்சியைப் பிடுங்கி உன் ஊழியனாகிய தாவீதுக்குக் கொடுப்பார்.+ 18  நீ யெகோவாவுக்குக் கீழ்ப்படியவில்லை, அவருடைய கோபத்தைக் கிளறிய அமலேக்கியர்களை அழிக்கவில்லை.+ அதனால்தான், இன்றைக்கு யெகோவா உனக்கு இப்படிச் செய்கிறார். 19  உன்னையும் இஸ்ரவேலர்களையும் பெலிஸ்தியர்களின் கையில் யெகோவா கொடுப்பார்.+ நாளைக்கு நீயும்+ உன் மகன்களும்+ என்னோடு இருப்பீர்கள். யெகோவா இஸ்ரவேல் படையை பெலிஸ்தியர்களிடம் தோற்றுப்போக வைப்பார்”+ என்று சொன்னார். 20  உடனே, சவுல் சாஷ்டாங்கமாக விழுந்தார். “சாமுவேல்” சொன்ன விஷயங்களைக் கேட்டு ரொம்பவும் பயந்துபோனார். பகல் முழுவதும் ராத்திரி முழுவதும் அவர் ஒன்றுமே சாப்பிடாததால் அவருக்குக் கொஞ்சம்கூட தெம்பு இருக்கவில்லை. 21  அந்தப் பெண் சவுலின் பக்கத்தில் வந்து அவர் ரொம்பவே கதிகலங்கிப்போயிருப்பதைப் பார்த்து, “இந்த அடிமைப் பெண் உங்களுக்குக் கட்டுப்பட்டு நடந்தேன், என் உயிரைப் பணயம் வைத்து+ நீங்கள் சொன்னதைச் செய்தேன். 22  இப்போது, உங்களுடைய அடிமைப் பெண் சொல்வதைத் தயவுசெய்து கேளுங்கள். உங்களுக்குக் கொஞ்சம் ரொட்டி தருகிறேன். அதைச் சாப்பிட்டுவிட்டுக் கொஞ்சம் தெம்பாகப் புறப்பட்டுப் போங்கள்” என்றாள். 23  ஆனால் அவர், “நான் சாப்பிட மாட்டேன்” என்று சொன்னார். அவருடைய ஊழியர்களும் அந்தப் பெண்ணும் அவரைத் திரும்பத் திரும்ப வற்புறுத்தினார்கள். கடைசியில் அவர் ஒத்துக்கொண்டு, தரையிலிருந்து எழுந்து கட்டிலில் உட்கார்ந்தார். 24  அந்தப் பெண்ணின் வீட்டில் ஒரு கொழுத்த கன்றுக்குட்டி இருந்தது. அவள் சீக்கிரமாக அதை வெட்டிச் சமைத்தாள். பின்பு, மாவை எடுத்துப் பிசைந்து, புளிப்பில்லாத ரொட்டி சுட்டாள். 25  சவுலுக்கும் அவருடைய ஊழியர்களுக்கும் அவற்றைப் பரிமாறினாள், அவர்கள் சாப்பிட்டார்கள். அதன்பின், அந்த ராத்திரியே அங்கிருந்து புறப்பட்டுப் போனார்கள்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “யெகோவா உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயம்.”
அதாவது, “சாமுவேலைப் போல நடித்த ஒரு கெட்ட தேவதூதனை.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா