லேவியராகமம் 17:1-16
17 பின்பு யெகோவா மோசேயைப் பார்த்து,
2 “நீ ஆரோனிடமும் அவனுடைய மகன்களிடமும் இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரிடமும் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘யெகோவாவின் கட்டளை இதுதான்:
3 “இஸ்ரவேல் ஜனங்களில் ஒருவன் காளையையோ செம்மறியாட்டுக் கடாக் குட்டியையோ வெள்ளாட்டையோ சந்திப்புக் கூடாரத்தின் வாசலுக்குக் கொண்டுவராமல்,
4 அதாவது யெகோவாவின் வழிபாட்டுக் கூடாரத்துக்கு யெகோவாவுக்காகக் கொண்டுவராமல், முகாமுக்கு உள்ளே அல்லது வெளியே வெட்டினால் அவன்மேல் கொலைப்பழி* விழும். இரத்தம் சிந்திய அவன் கொல்லப்பட வேண்டும்.
5 அதனால், இஸ்ரவேலர்கள் இனிமேலும் மிருகங்களை வெட்டவெளியில் பலி கொடுக்கக் கூடாது. அவற்றை யெகோவாவுக்காகச் சந்திப்புக் கூடாரத்தின் வாசலுக்குக் கொண்டுவந்து குருவானவரிடம் கொடுக்க வேண்டும். அவற்றைச் சமாதான பலிகளாக யெகோவாவுக்குச் செலுத்த வேண்டும்.+
6 அந்தப் பலிகளின் இரத்தத்தைச் சந்திப்புக் கூடாரத்தின் வாசலுக்குப் பக்கத்திலுள்ள யெகோவாவின் பலிபீடத்தின் மேல் குருவானவர் தெளிக்க வேண்டும். அவற்றின் கொழுப்பைத் தகன பலியாகச் செலுத்த வேண்டும். அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும்.+
7 இஸ்ரவேலர்கள் இனியும் ஆட்டு உருவப் பேய்களுக்கு* பலிகள் செலுத்தி+ எனக்குத் துரோகம் செய்யக் கூடாது.+ இது தலைமுறை தலைமுறைக்கும் ஒரு நிரந்தரச் சட்டம்.”’
8 நீ இஸ்ரவேலர்களிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘உங்களில் யாராவது அல்லது உங்களோடு குடியிருக்கிற மற்ற தேசத்து ஜனங்களில் யாராவது தான் செலுத்துகிற தகன பலியையோ வேறொரு பலியையோ
9 யெகோவாவுக்காகச் சந்திப்புக் கூடாரத்தின் வாசலுக்குக் கொண்டுவராவிட்டால், அவன் கொல்லப்பட வேண்டும்.+
10 உங்களில் யாராவது அல்லது உங்களோடு குடியிருக்கிற மற்ற தேசத்து ஜனங்களில் யாராவது இரத்தத்தைச் சாப்பிட்டால்+ நான் அவனை ஒதுக்கித்தள்ளி, அவனை அழித்துவிடுவேன்.
11 ஏனென்றால், உயிரினங்களின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது.+ பாவப் பரிகாரம் செய்வதற்காக மட்டும் நீங்கள் பலிபீடத்தில் இரத்தத்தைச் செலுத்தலாம் என்ற கட்டளையை நான் கொடுத்திருக்கிறேன்.+ ஏனென்றால், இரத்தம்தான் பாவப் பரிகாரம் செய்கிறது,+ அதில்தான் உயிர் இருக்கிறது.
12 அதனால்தான், “நீங்கள் யாரும் இரத்தத்தைச் சாப்பிடக் கூடாது, உங்களோடு குடியிருக்கிற மற்ற தேசத்து ஜனங்களும்+ இரத்தத்தைச் சாப்பிடக் கூடாது”+ என்று இஸ்ரவேலர்களுக்குக் கட்டளை கொடுத்திருக்கிறேன்.
13 உங்களில் ஒருவனோ உங்களோடு குடியிருக்கிற மற்ற தேசத்து ஜனங்களில் ஒருவனோ சாப்பிடுவதற்கு நான் அனுமதித்திருக்கும் ஒரு காட்டு மிருகத்தை அல்லது பறவையை வேட்டையாடிப் பிடித்தால், அதன் இரத்தத்தைக் கீழே ஊற்றி+ மண்ணைப் போட்டு மூடிவிட வேண்டும்.
14 எல்லா உயிரினத்துக்கும் இரத்தம்தான் உயிராக இருக்கிறது. ஏனென்றால், இரத்தத்தில்தான் அதன் உயிர் இருக்கிறது. அதனால், “எந்த உயிரினத்தின் இரத்தத்தையும் நீங்கள் சாப்பிடக் கூடாது, ஏனென்றால் எல்லா உயிரினத்துக்கும் இரத்தம்தான் உயிராக இருக்கிறது. அதைச் சாப்பிடுகிற எவனும் கொல்லப்பட வேண்டும்”+ என்று இஸ்ரவேலர்களிடம் சொன்னேன்.
15 இஸ்ரவேலர்களில் ஒருவனாக இருந்தாலும் சரி, அவர்களோடு குடியிருக்கிற மற்ற தேசத்தைச் சேர்ந்த ஒருவனாக இருந்தாலும் சரி, தானாகச் செத்துப்போன மிருகத்தையோ காட்டு மிருகத்தால் கொல்லப்பட்ட மிருகத்தையோ சாப்பிட்டால்+ அவன் தன்னுடைய உடைகளைத் துவைத்து, குளிக்க வேண்டும். அவன் சாயங்காலம்வரை தீட்டுள்ளவனாக இருப்பான்,+ அதன்பின் சுத்தமாவான்.
16 ஆனால், அவன் தன்னுடைய உடைகளைத் துவைக்காமலோ குளிக்காமலோ இருந்தால், அந்தக் குற்றத்துக்காகத் தண்டிக்கப்படுவான்’”+ என்றார்.