லூக்கா எழுதியது 6:1-49

6  ஓய்வுநாளில் அவர் தன்னுடைய சீஷர்களோடு வயல் வழியாகப் போய்க்கொண்டிருந்தார்; அப்போது, அவருடைய சீஷர்கள் கதிர்களைப் பறித்து+ தங்களுடைய கைகளில் தேய்த்துச் சாப்பிட்டார்கள்.+  அதைப் பார்த்த பரிசேயர்களில் சிலர், “ஓய்வுநாளில் செய்யக்கூடாத காரியத்தை ஏன் செய்கிறீர்கள்?”+ என்று கேட்டார்கள்.  அதற்கு இயேசு, “தாவீதுக்கும் அவருடைய ஆட்களுக்கும் பசியெடுத்தபோது அவர் என்ன செய்தார் என்பதை நீங்கள் வாசித்ததே இல்லையா?+  அவர் கடவுளுடைய வீட்டுக்குள்* போய், குருமார்கள் தவிர வேறு யாருமே சாப்பிடக்கூடாத படையல் ரொட்டிகளை வாங்கிச் சாப்பிட்டு, அவற்றில் சிலவற்றைத் தன்னோடிருந்த ஆட்களுக்கும் கொடுத்தார்”+ என்று சொன்னார்.  “மனிதகுமாரன் ஓய்வுநாளுக்கு எஜமானாக இருக்கிறார்”+ என்றும் அவர்களிடம் சொன்னார்.  இன்னொரு ஓய்வுநாளில்+ அவர் ஒரு ஜெபக்கூடத்துக்குள் போய்க் கற்பிக்க ஆரம்பித்தார். அங்கே வலது கை சூம்பிய* ஒருவன் இருந்தான்.+  அந்த ஓய்வுநாளில் இயேசு குணப்படுத்துவாரா என்று வேத அறிஞர்களும் பரிசேயர்களும் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தார்கள்; ஏனென்றால், அவரிடம் ஏதாவது குற்றம் கண்டுபிடிக்க வேண்டும் என்று குறியாக இருந்தார்கள்.  ஆனால், அவர்களுடைய எண்ணங்கள் அவருக்குத் தெரிந்திருந்தது.+ அதனால், சூம்பிய* கையுடையவனைப் பார்த்து, “எழுந்து வந்து நடுவில் நில்” என்று சொன்னார். அவனும் எழுந்து வந்து நின்றான்.  அப்போது இயேசு அவர்களிடம், “நான் உங்களிடம் ஒன்று கேட்கிறேன், ஓய்வுநாளில் எதைச் செய்வது சரி? நல்லது செய்வதா கெட்டது செய்வதா, உயிரைக் காப்பாற்றுவதா, அழிப்பதா?”+ என்று கேட்டார். 10  பின்பு, தன்னைச் சுற்றியிருந்த எல்லாரையும் பார்த்துவிட்டு அவனிடம், “உன் கையை நீட்டு” என்று சொன்னார். அவனும் நீட்டினான், அது குணமானது. 11  ஆனால் அவர்கள் கோபவெறியோடு, இயேசுவை என்ன செய்யலாம் என்று கூடிப்பேச ஆரம்பித்தார்கள். 12  ஒருநாள், ஜெபம் செய்வதற்காக அவர் ஒரு மலைக்குப் போனார்;+ அன்று ராத்திரி முழுவதும் கடவுளிடம் ஜெபம் செய்தார்.+ 13  விடிந்ததும் தன்னுடைய சீஷர்களை வரவழைத்து அவர்களில் 12 பேரைத் தேர்ந்தெடுத்தார்; அவர்களுக்கு அப்போஸ்தலர்கள்* என்று பெயர் வைத்தார்.+ 14  அந்த 12 பேர் இவர்கள்தான்: சீமோன் (இவருக்கு பேதுரு என்று பெயர் வைத்தார்), இவருடைய சகோதரர் அந்திரேயா, யாக்கோபு, யோவான், பிலிப்பு,+ பர்த்தொலொமேயு, 15  மத்தேயு, தோமா,+ அல்பேயுவின் மகன் யாக்கோபு, “பக்திவைராக்கியமுள்ளவன்” என்று அழைக்கப்பட்ட சீமோன், 16  யாக்கோபின் மகன் யூதாஸ், துரோகியாக மாறிய யூதாஸ் இஸ்காரியோத்து. 17  இயேசு அவர்களோடு கீழே இறங்கி ஒரு சமவெளிக்கு வந்தார்; அங்கே அவருடைய சீஷர்களில் ஏராளமானவர்கள் இருந்தார்கள். யூதேயா முழுவதிலிருந்தும், எருசலேமிலிருந்தும், கடலோரப் பகுதிகளான தீரு, சீதோனிலிருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்திருந்தார்கள். இவர்கள் எல்லாரும் அவருடைய போதனைகளைக் கேட்பதற்கும் நோய்களிலிருந்து குணமாவதற்கும் அங்கே வந்திருந்தார்கள். 18  பேய்களின் தொல்லைக்கு ஆளானவர்களும் குணமானார்கள். 19  மக்கள் எல்லாரும் அவரைத் தொட முயற்சி செய்தார்கள்; ஏனென்றால், அவரிடமிருந்து வல்லமை புறப்பட்டு+ எல்லாரையும் குணமாக்கியது. 20  அப்போது, அவர் தன்னுடைய சீஷர்களைப் பார்த்து: “ஏழைகளாக இருக்கிற நீங்கள் சந்தோஷமானவர்கள், ஏனென்றால் கடவுளுடைய அரசாங்கம் உங்களுடையது.+ 21  இப்போது பசியாக இருக்கிற நீங்கள் சந்தோஷமானவர்கள், ஏனென்றால் நீங்கள் திருப்தி செய்யப்படுவீர்கள்.+ இப்போது அழுகிற நீங்கள் சந்தோஷமானவர்கள், ஏனென்றால் நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள்.+ 22  நீங்கள் மனிதகுமாரனின் சீஷர்கள் என்பதால் மக்கள் உங்களை வெறுக்கும்போதும்,+ உங்களை விலக்கி வைக்கும்போதும்,+ கேவலமாகப் பேசும்போதும், பொல்லாதவர்கள் என்று சொல்லி உங்கள் பெயரைக் கெடுக்கும்போதும் சந்தோஷப்படுங்கள். 23  அந்த நாளில் மகிழ்ச்சியோடு துள்ளிக் குதியுங்கள்; பரலோகத்தில் உங்களுக்கு மிகப் பெரிய பலன் கிடைக்கும்; அவர்களுடைய முன்னோர்களும் அதைத்தான் தீர்க்கதரிசிகளுக்குச் செய்துவந்தார்கள்.+ 24  ஆனால், பணக்காரர்களான உங்களுக்குக் கேடுதான் வரும்!+ ஏனென்றால், நீங்கள் எல்லா சௌகரியங்களையும் அனுபவித்துவிட்டீர்கள்.+ 25  இப்போது திருப்தியாக இருக்கிற உங்களுக்குக் கேடுதான் வரும்! ஏனென்றால், நீங்கள் பசியால் வாடுவீர்கள். இப்போது சிரித்து மகிழ்கிற உங்களுக்குக் கேடுதான் வரும்! ஏனென்றால், நீங்கள் துக்கப்பட்டு அழுவீர்கள்.+ 26  எல்லா மனுஷர்களும் உங்களைப் புகழ்ந்து பேசும்போது உங்களுக்குக் கேடுதான் வரும்!+ ஏனென்றால், அவர்களுடைய முன்னோர்களும் போலித் தீர்க்கதரிசிகளுக்கு அப்படித்தான் செய்தார்கள். 27  நான் பேசுவதைக் காதுகொடுத்துக் கேட்டுக்கொண்டிருக்கிற உங்களுக்குச் சொல்கிறேன்: உங்கள் எதிரிகளிடம் தொடர்ந்து அன்பு காட்டுங்கள், உங்களை வெறுக்கிறவர்களுக்குத் தொடர்ந்து நல்லது செய்யுங்கள்.+ 28  உங்களைச் சபிக்கிறவர்களைத் தொடர்ந்து ஆசீர்வதியுங்கள், உங்களை அவமதிக்கிறவர்களுக்காகத் தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள்.+ 29  உங்களை ஒரு கன்னத்தில் அடிக்கிறவனுக்கு இன்னொரு கன்னத்தையும் காட்டுங்கள்; உங்கள் மேலங்கியை எடுத்துக்கொள்கிறவன் உங்கள் உள்ளங்கியையும் எடுத்துக்கொள்ளப் பார்த்தால் அவனைத் தடுக்காதீர்கள்.+ 30  உங்களிடம் கேட்கிற எல்லாருக்கும் கொடுங்கள்,+ உங்களுடைய பொருள்களை எடுத்துக்கொள்கிறவனிடம் அவற்றைத் திருப்பிக் கேட்காதீர்கள். 31  அதோடு, மற்றவர்கள் உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.+ 32  உங்கள்மேல் அன்பு காட்டுகிறவர்களிடம் மட்டுமே நீங்கள் அன்பு காட்டினால், உங்களைப் பாராட்ட என்ன இருக்கிறது? பாவிகளும்கூட தங்கள்மேல் அன்பு காட்டுகிறவர்களிடம் மட்டுமே அன்பு காட்டுகிறார்கள்.+ 33  உங்களுக்கு நல்லது செய்கிறவர்களுக்கு மட்டுமே நீங்கள் நல்லது செய்தால், உங்களைப் பாராட்ட என்ன இருக்கிறது? பாவிகளும்கூட அதைத்தான் செய்கிறார்கள். 34  அதோடு, திரும்பக் கிடைக்கும் என எதிர்பார்த்து நீங்கள் கடன் கொடுத்தால்,* உங்களைப் பாராட்ட என்ன இருக்கிறது?+ பாவிகளும்கூட அப்படி எதிர்பார்த்துதான் பாவிகளுக்குக் கடன் கொடுக்கிறார்கள். 35  உங்கள் எதிரிகளிடம் தொடர்ந்து அன்பு காட்டுங்கள், அவர்களுக்கு நல்லது செய்யுங்கள், எதையும் எதிர்பார்க்காமல் கடன் கொடுங்கள்.+ அப்போது, உங்களுக்கு மிகப் பெரிய பலன் கிடைக்கும், உன்னதமான கடவுளுடைய பிள்ளைகளாகவும் இருப்பீர்கள்; ஏனென்றால், அவர் நன்றிகெட்டவர்களுக்கும் பொல்லாதவர்களுக்கும்கூட கருணை காட்டுகிறார்.+ 36  உங்கள் பரலோகத் தகப்பன் இரக்கமுள்ளவராக இருப்பது போலவே நீங்களும் இரக்கமுள்ளவர்களாக இருங்கள்.+ 37  மற்றவர்களை நியாயந்தீர்ப்பதை நிறுத்துங்கள், அப்போது நீங்களும் நியாயந்தீர்க்கப்பட மாட்டீர்கள்;+ மற்றவர்களைக் கண்டனம் செய்வதை நிறுத்துங்கள், அப்போது நீங்களும் கண்டனம் செய்யப்பட மாட்டீர்கள். மன்னித்துக்கொண்டே இருங்கள், அப்போது நீங்களும் மன்னிக்கப்படுவீர்கள்.+ 38  கொடுப்பதைப் பழக்கமாக்கிக்கொள்ளுங்கள், அப்போது மக்களும் உங்களுக்குக் கொடுப்பார்கள்.+ அதுவும், அமுக்கிக் குலுக்கி நிரம்பி வழியும்படி நன்றாக அளந்து உங்களுடைய மடியில் போடுவார்கள். எந்த அளவையால் மற்றவர்களுக்கு அளக்கிறீர்களோ, அதே அளவையால்தான் அவர்களும் உங்களுக்கு அளப்பார்கள்” என்று சொன்னார். 39  பின்பு, அவர்களுக்கு ஓர் உவமையையும் சொன்னார்; “குருடனுக்குக் குருடன் வழிகாட்ட முடியாது, இல்லையா? இரண்டு பேரும் குழியில்தானே விழுவார்கள்?+ 40  மாணவன் தன்னுடைய ஆசிரியரைவிட* உயர்ந்தவன் கிடையாது, ஆனால் முழுமையாகப் பயிற்சி கொடுக்கப்பட்ட ஒவ்வொருவனும் தன்னுடைய ஆசிரியரைப் போலவே இருப்பான். 41  உங்கள் கண்ணில் இருக்கிற மரக்கட்டையை* கவனிக்காமல் உங்கள் சகோதரன் கண்ணில் இருக்கிற தூசியை ஏன் பார்க்கிறீர்கள்?+ 42  உங்கள் கண்ணில் இருக்கிற மரக்கட்டையைக் கவனிக்காமல் நீங்கள் எப்படி உங்கள் சகோதரனிடம், ‘உன் கண்ணில் இருக்கிற தூசியை எடுக்கட்டுமா?’ என்று கேட்க முடியும்? வெளிவேஷக்காரர்களே! முதலில் உங்கள் கண்ணில் இருக்கிற மரக்கட்டையை எடுத்துப்போடுங்கள், அப்போதுதான் உங்கள் சகோதரன் கண்ணில் இருக்கிற தூசியை எப்படி எடுப்பது என்று உங்களுக்குத் தெளிவாகத் தெரியும். 43  நல்ல மரம் எதுவும் கெட்ட கனியைக் கொடுக்காது; அதேபோல், கெட்ட மரம் எதுவும் நல்ல கனியைக் கொடுக்காது.+ 44  ஒவ்வொரு மரமும் எப்படிப்பட்டது என்பதை அதன் கனியை வைத்துத் தெரிந்துகொள்ளலாம்.+ உதாரணமாக, யாரும் முட்செடிகளிலிருந்து அத்திகளைப் பறிப்பது இல்லை, முட்புதர்களிலிருந்து திராட்சைகளைப் பறிப்பதும் இல்லை. 45  நல்ல மனுஷன் தன்னுடைய இதயம் என்ற நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவற்றை எடுக்கிறான், பொல்லாத மனுஷனோ தன்னுடைய பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவற்றை எடுக்கிறான். இதயத்தில் நிறைந்திருப்பதையே வாய் பேசும்.+ 46  நான் சொல்கிறபடி செய்யாமல் ஏன் என்னை ‘கர்த்தாவே! கர்த்தாவே!’* என்று கூப்பிடுகிறீர்கள்?+ 47  என்னிடம் வந்து என்னுடைய வார்த்தைகளைக் கேட்டு அவற்றின்படி செய்கிறவன் யாரைப் போல் இருக்கிறான் என்று உங்களுக்குச் சொல்கிறேன்:+ 48  ஆழமாகத் தோண்டி, பாறைமேல் அஸ்திவாரம் போட்டு வீடு கட்டிய மனுஷனைப் போல் அவன் இருக்கிறான். வெள்ளம் ஆறாகப் பெருக்கெடுத்து அந்த வீட்டின்மேல் மோதியபோதும், அதை அசைக்க முடியவில்லை. ஏனென்றால், அது உறுதியாகக் கட்டப்பட்டிருந்தது.+ 49  ஆனால், நான் சொன்ன இந்த வார்த்தைகளைக் கேட்டும் அவற்றின்படி செய்யாதவன்+ அஸ்திவாரம் போடாமல் மண்மேல் வீடு கட்டிய மனுஷனைப் போல் இருக்கிறான். வெள்ளம் பெருக்கெடுத்து அதன்மேல் மோதிய உடனே அது விழுந்து அடியோடு நாசமானது” என்றார்.

அடிக்குறிப்புகள்

அதாவது, “வழிபாட்டுக் கூடாரத்துக்குள்.”
வே.வா., “பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட.”
வே.வா., “பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட.”
அர்த்தம், “அனுப்பப்பட்டவர்கள்.”
அதாவது, “வட்டியில்லாமல் கடன் கொடுத்தால்.”
வே.வா., “சீஷன் தன்னுடைய போதகரைவிட.”
நே.மொ., “உத்திரத்தை.”
வே.வா., “எஜமானே! எஜமானே!”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா

கலிலேயா கடலின் வடக்குக் கரை, வடமேற்குக் காட்சி
கலிலேயா கடலின் வடக்குக் கரை, வடமேற்குக் காட்சி

1. கெனேசரேத் சமவெளி. இது முக்கோண வடிவில் இருந்த செழிப்பான நிலப்பகுதி. சுமார் 5 கி.மீ. (3 மைல்) நீளத்திலும் 2.5 கி.மீ. (1.5 மைல்) அகலத்திலும் இருந்தது. இந்தப் பகுதியின் கடலோரத்தில்தான் பேதுரு, அந்திரேயா, யாக்கோபு, யோவான் ஆகிய மீனவர்களைத் தன்னோடு சேர்ந்து ஊழியம் செய்ய இயேசு அழைத்தார்.—மத் 4:18-22.

2. இயேசு இங்குதான் மலைப்பிரசங்கத்தைக் கொடுத்தார் என்று பாரம்பரியம் சொல்கிறது.—மத் 5:1; லூ 6:17, 20.

3. கப்பர்நகூம். இந்த நகரத்தில்தான் இயேசு குடியிருந்தார். இந்த நகரத்திலோ இதற்குப் பக்கத்திலோதான் அவர் மத்தேயுவைச் சந்தித்தார்.—மத் 4:13; 9:1, 9.

அத்தி மரம், திராட்சைக் கொடி, முட்புதர்
அத்தி மரம், திராட்சைக் கொடி, முட்புதர்

இயேசு தன்னுடைய உவமைகளில் செடிகளைச் சிலசமயங்களில் பயன்படுத்தினார். அவற்றை அவர் கவனமாகத் தேர்ந்தெடுத்துதான் பயன்படுத்தினார் என்பதில் சந்தேகமே இல்லை. உதாரணத்துக்கு, அத்தி மரமும் (1) திராட்சைக் கொடியும் (2) நிறைய வசனங்களில் சேர்த்துக் குறிப்பிடப்பட்டுள்ளன. அத்தி மரங்கள் திராட்சைத் தோட்டங்களில் பெரும்பாலும் நட்டு வைக்கப்பட்டதை லூ 13:6-ல் உள்ள இயேசுவின் வார்த்தைகள் காட்டுகின்றன. (2ரா 18:31; யோவே 2:22) “ஒவ்வொருவரும் தங்கள் திராட்சைக் கொடியின் கீழும் அத்தி மரத்தின் கீழும் உட்கார்ந்திருப்பார்கள்” என்ற வார்த்தைகள் சமாதானமான, செழிப்பான, பாதுகாப்பான நிலைமை வரும் என்பதைக் குறித்தன. (1ரா 4:25; மீ 4:4; சக 3:10) ஆனால், ஆதாம் பாவம் செய்த பிறகு யெகோவா இந்த நிலத்தைச் சபித்தபோது முட்செடிகளையும் முட்புதர்களையும் பற்றிக் குறிப்பிட்டார். (ஆதி 3:17, 18) மத் 7:16-ல் இயேசு எந்த வகையான முட்புதரைப் பற்றிச் சொன்னார் என்று சரியாகத் தெரியவில்லை. ஆனால், இங்கே படத்தில் காட்டப்பட்டிருப்பது (3), இஸ்ரவேல் காடுகளில் வளரும் ஒரு வகையான முட்செடி (சென்ட்டௌரியா இபெரிக்கா).