யாத்திராகமம் 16:1-36

16  இஸ்ரவேல் ஜனங்கள் ஏலிமிலிருந்து புறப்பட்டார்கள். கடைசியில், அவர்கள் எல்லாரும் ஏலிமுக்கும் சீனாய்க்கும் இடையில் இருக்கிற சின் வனாந்தரத்துக்கு வந்துசேர்ந்தார்கள்.+ எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட பின்பு, இரண்டாம் மாதம் 15-ஆம் நாளில் அங்கு வந்துசேர்ந்தார்கள்.  பின்பு, அந்த வனாந்தரத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாருமே மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முணுமுணுத்தார்கள்.+  இஸ்ரவேலர்கள் அவர்களிடம் போய், “எகிப்து தேசத்தில் நாங்கள் இறைச்சியையும் ரொட்டியையும் திருப்தியாகச் சாப்பிட்டோமே, அப்போதே யெகோவாவின் கையால் செத்துப்போயிருந்தால் நன்றாக இருந்திருக்கும்!+ எங்கள் எல்லாரையும் பட்டினிபோட்டு சாகடிப்பதற்காகத்தான் இந்த வனாந்தரத்துக்குக் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறீர்கள்” என்று சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.+  அதனால் யெகோவா மோசேயிடம், “இப்போது நான் வானத்திலிருந்து உணவைப் பொழியப்போகிறேன்.+ ஒவ்வொருவரும் போய் அந்தந்த நாளுக்குத் தேவையானதை எடுத்துக்கொள்ள வேண்டும்.+ அவர்கள் என்னுடைய கட்டளையின்படி நடக்கிறார்களா இல்லையா என்று நான் சோதித்துப் பார்ப்பேன்.+  ஆனால் ஆறாம் நாளில்,+ மற்ற நாட்களைவிட இரண்டு மடங்கு அதிகமாக எடுத்து சமைத்துக்கொள்ளலாம்”+ என்றார்.  அதனால் மோசேயும் ஆரோனும் இஸ்ரவேலர்களிடம், “யெகோவாதான் உங்களை எகிப்து தேசத்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்தார் என்பதைச் சாயங்காலத்தில் நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்.+  யெகோவாவுக்கு எதிராக நீங்கள் முணுமுணுத்ததை அவர் கேட்டார். அதனால், காலையில் யெகோவாவின் மகிமையைப் பார்ப்பீர்கள். ஏன் எங்களுக்கு எதிராக முணுமுணுக்கிறீர்கள்? நாங்களா முக்கியம்?” என்றார்கள்.  பின்பு மோசே, “நீங்கள் திருப்தியாய்ச் சாப்பிடுவதற்காகச் சாயங்காலத்தில் இறைச்சியையும் காலையில் உணவையும் யெகோவா உங்களுக்குத் தருவார். யெகோவாவுக்கு விரோதமாக நீங்கள் முணுமுணுத்தது அவர் காதுக்கு எட்டியது என்பதை அப்போது புரிந்துகொள்வீர்கள். நாங்களெல்லாம் ஒன்றுமே இல்லை. உண்மையில் நீங்கள் எங்களுக்கு எதிராக முணுமுணுக்கவில்லை, யெகோவாவுக்கு எதிராகத்தான் முணுமுணுக்கிறீர்கள்”+ என்றார்.  பின்பு மோசே ஆரோனிடம், “நீங்கள் இஸ்ரவேலர்கள் எல்லாரையும் பார்த்து, ‘யெகோவாவுக்கு முன்னால் வாருங்கள், நீங்கள் முணுமுணுத்ததை அவர் கேட்டார்’+ என்று சொல்ல வேண்டும்” என்றார். 10  ஆரோன் இதை இஸ்ரவேலர்கள் எல்லாரிடமும் சொன்னவுடன், அவர்கள் வனாந்தரம் இருந்த திசையில் திரும்பிப் பார்த்தார்கள். அப்போது, யெகோவாவின் மகிமை மேகத்தில் தோன்றியது.+ 11  யெகோவா மோசேயிடம், 12  “இஸ்ரவேலர்கள் முணுமுணுத்ததை நான் கேட்டேன்.+ நீ அவர்களிடம், ‘சாயங்காலத்தில் நீங்கள் இறைச்சியைச் சாப்பிடுவீர்கள், காலையில் உணவைத் திருப்தியாகச் சாப்பிடுவீர்கள்.+ அப்போது, உங்கள் கடவுளாகிய யெகோவா நானே என்று தெரிந்துகொள்வீர்கள்’+ என்று சொல்” என்றார். 13  அன்றைக்குச் சாயங்காலம், காடைகள் பறந்து வந்து முகாமை மூடிக்கொண்டன.+ காலையில் முகாமைச் சுற்றிலும் பனி பெய்திருந்தது. 14  பனி மறைந்த பின்பு, சிறுசிறு மணிகள் போன்ற ஏதோவொன்று வனாந்தரமெங்கும் கிடந்தது.+ அது மென்மையான உறைபனி போலத் தரையெங்கும் கிடந்தது. 15  இஸ்ரவேலர்கள் அதைப் பார்த்தபோது, “இது என்ன?” என்று ஒருவரை ஒருவர் கேட்டுக்கொண்டார்கள். அது என்னவென்று அவர்களுக்குத் தெரியவில்லை. மோசே அவர்களிடம், “நீங்கள் சாப்பிடுவதற்காக யெகோவா தந்திருக்கிற உணவு இது.+ 16  யெகோவாவின் கட்டளை இதுதான்: ‘ஒவ்வொருவரும் தாங்கள் சாப்பிடும் அளவுக்கு அதை எடுத்துக்கொள்ள வேண்டும். தலைக்கு ஒரு ஓமர் அளவு*+ என்ற கணக்குப்படி, உங்கள் கூடாரத்தில் எத்தனை பேர் இருக்கிறார்களோ அத்தனை பேருக்காக அதை எடுத்துக்கொள்ளலாம்’” என்றார். 17  இஸ்ரவேலர்கள் அப்படியே செய்தார்கள். சிலர் அதிகமாகவும் சிலர் குறைவாகவும் எடுத்தார்கள். 18  அதை அவர்கள் ஓமரால் அளந்து பார்த்தபோது, அதிகமாக எடுத்தவரிடம் அதிகமாகவும் இல்லை, குறைவாக எடுத்தவரிடம் குறைவாகவும் இல்லை.+ ஒவ்வொருவரும் தாங்கள் சாப்பிடும் அளவுக்கு அதை எடுத்திருந்தார்கள். 19  பின்பு மோசே அவர்களிடம், “அடுத்த நாள் காலையில் சாப்பிடுவதற்காக யாரும் அதை மிச்சம் வைக்கக் கூடாது”+ என்றார். 20  ஆனால் சிலர் மோசேயின் பேச்சைக் கேட்காமல், காலையில் சாப்பிடுவதற்காக அதை மிச்சம் வைத்தார்கள். அப்போது அது புழுபுழுத்து, துர்நாற்றம் வீசியது. அதனால் மோசேக்கு அவர்கள்மேல் கடும் கோபம் வந்தது. 21  தினமும் காலையில், ஒவ்வொருவரும் அவரவர் சாப்பிடும் அளவுக்கு அதை எடுத்தார்கள். வெயில் ஏற ஏற அது உருகிப்போனது. 22  ஆறாம் நாளில் அதை இரண்டு மடங்கு எடுத்தார்கள்,+ அதாவது தலைக்கு இரண்டு ஓமர் அளவு எடுத்தார்கள். ஜனங்களின் தலைவர்கள் எல்லாரும் வந்து அதை மோசேயிடம் சொன்னார்கள். 23  அதற்கு அவர், “யெகோவா சொல்லியிருப்பது இதுதான். நாளைக்கு முழு ஓய்வுநாள், அது யெகோவாவுக்கான பரிசுத்த ஓய்வுநாள்.+ அதனால், நீங்கள் சுட்டு வைக்க வேண்டியதைச் சுட்டு வைத்துக்கொள்ளுங்கள், வேக வைக்க வேண்டியதை வேக வைத்துக்கொள்ளுங்கள்.+ மீதியை அடுத்த நாள் காலைக்காக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்” என்றார். 24  மோசே கட்டளை கொடுத்தபடியே, அடுத்த நாள் காலையில் சாப்பிடுவதற்காக ஜனங்கள் அதை எடுத்து வைத்தார்கள். அது புழுபுழுக்கவும் இல்லை, துர்நாற்றம் வீசவும் இல்லை. 25  பின்பு மோசே அவர்களிடம், “நீங்கள் எடுத்து வைத்ததை இன்றைக்குச் சாப்பிடுங்கள். இன்று அதை வெளியில் எங்கும் பார்க்க முடியாது. ஏனென்றால், இன்று யெகோவாவுக்கான ஓய்வுநாள். 26  ஆறு நாளும் அதை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், ஏழாம் நாள் ஓய்வுநாளாக+ இருப்பதால் அன்றைக்கு ஒன்றுமே கிடைக்காது” என்றார். 27  இருந்தாலும், சிலர் ஏழாம் நாளிலும் அதை எடுப்பதற்காக வெளியே போனார்கள். ஆனால், ஒன்றுமே கிடைக்கவில்லை. 28  அதனால் யெகோவா மோசேயிடம், “இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் என்னுடைய கட்டளைகளுக்கும் சட்டங்களுக்கும் கீழ்ப்படியாமல் இருப்பீர்கள்?+ 29  யெகோவாவாகிய நான்தான் உங்களுக்கு ஓய்வுநாளைத் தந்திருக்கிறேன் என்பதை மறந்துவிடாதீர்கள்.+ அதனால்தான், ஆறாம் நாளில் இரண்டு நாளைக்குத் தேவையான உணவைத் தருகிறேன். ஏழாம் நாளில், எல்லாரும் அவரவர் இடத்திலேயே இருக்க வேண்டும். யாரும் வெளியே போகக் கூடாது” என்றார். 30  அதனால், ஜனங்கள் ஏழாம் நாளில் ஓய்வுநாளை அனுசரித்தார்கள்.+ 31  இஸ்ரவேல் ஜனங்கள் அந்த உணவுக்கு “மன்னா”* என்று பெயர் வைத்தார்கள். அது வெள்ளையாகவும் கொத்துமல்லி விதையைப் போலவும் இருந்தது. அதன் ருசி தேன் கலந்த அப்பத்தைப் போல இருந்தது.+ 32  பின்பு மோசே, “யெகோவா கட்டளையிடுவது இதுதான்: ‘இதில் ஒரு ஓமர் அளவு எடுத்து, தலைமுறை தலைமுறையாகப் பாதுகாத்து வையுங்கள்.+ ஏனென்றால், உங்களை எகிப்து தேசத்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்தபோது வனாந்தரத்தில் நான் தந்த உணவை வருங்காலத் தலைமுறைகள் பார்க்க வேண்டும்’” என்றார். 33  அப்போது மோசே ஆரோனிடம், “நீங்கள் ஒரு ஜாடியை எடுத்து, அதில் ஒரு ஓமர் அளவு மன்னாவைப் போட்டு, தலைமுறை தலைமுறையாகப் பாதுகாப்பதற்காக யெகோவாவின் முன்னிலையில் வைக்க வேண்டும்” என்றார்.+ 34  மோசேக்கு யெகோவா கட்டளை கொடுத்தபடியே, அதைப் பாதுகாப்பதற்காக ஒரு விசேஷப் பெட்டிக்கு*+ முன்னால் ஆரோன் அதை வைத்தார். 35  40 வருஷங்களாக இஸ்ரவேலர்கள் மன்னாவைச் சாப்பிட்டார்கள்.+ கானான் தேசத்தின்+ எல்லைக்கு வந்து சேரும்வரை+ அவர்கள் மன்னாவைச் சாப்பிட்டார்கள். 36  ஒரு ஓமர் என்பது ஒரு எப்பா* அளவில் பத்திலொரு பாகம்.

அடிக்குறிப்புகள்

அதாவது, “சுமார் இரண்டு லிட்டர்.” இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
“இது என்ன?” என்பதற்கான எபிரெய வார்த்தைகளிலிருந்து இந்தப் பெயர் அநேகமாக வந்திருக்கலாம்.
நே.மொ., “ஒரு சாட்சிக்கு.” இது ஒருவேளை முக்கிய ஆவணங்களைப் பாதுகாப்பதற்கான பெட்டியாக இருந்திருக்கலாம்.
ஒரு எப்பா என்பது 22 லி. இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா