யாத்திராகமம் 13:1-22

13  பின்பு யெகோவா மோசேயிடம்,  “இஸ்ரவேலர்களுக்குப் பிறக்கிற முதல் ஆண் குழந்தைகளும் சரி, அவர்களுடைய மிருகங்களுக்குப் பிறக்கிற முதல் ஆண்குட்டிகளும் சரி, எனக்குத்தான் சொந்தம்.+ அதனால் அந்த எல்லா ஆண் குழந்தைகளையும் ஆண்குட்டிகளையும் எனக்கு அர்ப்பணிக்க வேண்டும்” என்றார்.  அதன்பின் மோசே ஜனங்களிடம், “எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து* விடுதலையான இந்த நாளை நீங்கள் நினைவில் வையுங்கள்.+ யெகோவா தன்னுடைய கைபலத்தால் உங்களை அங்கிருந்து கூட்டிக்கொண்டு வந்திருக்கிறார்.+ அதனால், புளிப்பு சேர்க்கப்பட்ட எதையுமே நீங்கள் சாப்பிடக் கூடாது.  ஆபிப்* மாதத்தின் இந்த நாளில் நீங்கள் வெளியேறினீர்கள்.+  யெகோவா உங்களுடைய முன்னோர்களுக்கு வாக்குறுதி கொடுத்தபடியே+ பாலும் தேனும் ஓடுகிற தேசத்துக்கு+ நான் உங்களைக் கொண்டுபோன பின்பு, இதே மாதத்தில் நீங்கள் இந்தப் பண்டிகையைக் கொண்டாட வேண்டும். கானானியர்களும் ஏத்தியர்களும் எமோரியர்களும் ஏவியர்களும் எபூசியர்களும்+ வாழ்கிற அந்தத் தேசத்துக்குப் போனதும் நீங்கள் தவறாமல் இந்தப் பண்டிகையைக் கொண்டாட வேண்டும்.  ஏழு நாட்களுக்கு நீங்கள் புளிப்பில்லாத ரொட்டிகளைச் சாப்பிட வேண்டும்.+ ஏழாம் நாளில் யெகோவாவுக்கு ஒரு பண்டிகையைக் கொண்டாட வேண்டும்.  ஏழு நாட்களும் புளிப்பில்லாத ரொட்டிகளைச் சாப்பிட வேண்டும்.+ புளிப்பு சேர்க்கப்பட்ட எதையுமே நீங்கள் வைத்திருக்கக் கூடாது.+ புளித்த மாவு எதுவுமே உங்கள் எல்லைகளுக்குள் இருக்கக் கூடாது.  அந்த நாளில் உங்கள் மகன்களிடம், ‘யெகோவா எங்களை எகிப்திலிருந்து எப்படி விடுதலை செய்தார் என்பதை நினைத்துப் பார்க்கத்தான் இந்தப் பண்டிகையைக் கொண்டாடுகிறோம்’ என்று சொல்லுங்கள்.+  யெகோவா தன்னுடைய கைபலத்தால் உங்களை எகிப்திலிருந்து விடுதலை செய்ததை இந்தப் பண்டிகை உங்களுக்கு ஞாபகப்படுத்தும். இது உங்கள் கையில் ஒரு அடையாளம் போலவும் நெற்றியில் ஒரு நினைப்பூட்டுதல் போலவும் இருக்கும்.+ அதனால் யெகோவாவின் சட்டத்தைப் பற்றி எப்போதும் பேசுவீர்கள். 10  ஒவ்வொரு வருஷமும் குறித்த காலத்தில் நீங்கள் இந்தச் சட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.+ 11  கானானியர்களின் தேசத்தை உங்களுக்குக் கொடுப்பதாக உங்களுக்கும் உங்கள் முன்னோர்களுக்கும் யெகோவா வாக்குறுதி தந்திருக்கிறார்.+ அங்கே அவர் உங்களைக் கூட்டிக்கொண்டு போகும்போது, 12  எல்லாரும் தங்களுக்குப் பிறக்கிற முதல் ஆண் குழந்தையை யெகோவாவுக்கு அர்ப்பணிக்க வேண்டும். அதேபோல், உங்களுடைய மிருகங்களுக்குப் பிறக்கிற முதல் ஆண்குட்டியையும் அர்ப்பணிக்க வேண்டும். எல்லா ஆண் குழந்தைகளும் ஆண்குட்டிகளும் யெகோவாவுக்குத்தான் சொந்தம்.+ 13  கழுதையின் முதல் குட்டியை, ஒரு ஆட்டைக் கொடுத்து நீங்கள் மீட்க வேண்டும். அப்படி அதை மீட்காவிட்டால், அதன் கழுத்தை முறிக்க வேண்டும். உங்களுக்குப் பிறக்கிற முதல் ஆண் குழந்தைகளையும் நீங்கள் மீட்டுக்கொள்ள வேண்டும்.+ 14  ‘எதற்காக இப்படிச் செய்கிறோம்?’ என்று உங்கள் மகன்கள் கேட்டால், ‘நாங்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்தபோது யெகோவா தன்னுடைய கைபலத்தால் எங்களை விடுதலை செய்தார்.+ 15  பார்வோன் எங்களை அனுப்பாமல் பிடிவாதம் பிடித்தபோது,+ எகிப்திலிருந்த மூத்த மகன்கள் எல்லாரையும் மிருகங்களுடைய முதல் குட்டிகள் எல்லாவற்றையும் யெகோவா கொன்றுபோட்டார்;+ அதனால்தான், மிருகங்களுக்குப் பிறந்த முதல் ஆண்குட்டிகள் எல்லாவற்றையும் யெகோவாவுக்குப் பலி கொடுத்து, என்னுடைய மூத்த மகனை மீட்கிறேன்’ என்று சொல்லுங்கள். 16  இது உங்கள் கையிலும் நெற்றியிலும் ஒரு அடையாளம்போல் இருக்க வேண்டும்.+ ஏனென்றால், யெகோவா தன்னுடைய கைபலத்தால் எகிப்திலிருந்து நம்மை விடுதலை செய்தார்” என்றார். 17  இஸ்ரவேலர்களை பார்வோன் அனுப்பிய பின்பு, கடவுள் அவர்களை பெலிஸ்தியர்களுடைய தேசத்தின் வழியாகக் கூட்டிக்கொண்டு போகவில்லை. “அந்த வழியாகப் போனால் அங்கே இருக்கிறவர்கள் இவர்களோடு போர் செய்யலாம். உடனே இவர்கள் மனம் மாறி எகிப்துக்கே திரும்பிப் போய்விடலாம்” என்று கடவுள் சொன்னார். அதனால்தான், அது குறுக்கு வழியாக இருந்தாலும் அதன் வழியாகக் கூட்டிக்கொண்டு போகாமல், 18  செங்கடலுக்குப் பக்கத்தில் இருக்கிற வனாந்தரத்தின் வழியாகச் சுற்றிப் போக வைத்தார்.+ எகிப்திலிருந்து இஸ்ரவேலர்கள் ஒரு படையைப் போல அணிவகுத்துப் போனார்கள். 19  யோசேப்பின் எலும்புகளையும் மோசே எடுத்துக்கொண்டு போனார். ஏனென்றால் யோசேப்பு இஸ்ரவேல் வம்சத்தாரிடம், “கடவுள் கண்டிப்பாக உங்களுக்குக் கருணை காட்டுவார். அதனால், நீங்கள் இங்கிருந்து போகும்போது என் எலும்புகளைக் கொண்டுபோக வேண்டும்” என்று சொல்லி உறுதிமொழி வாங்கியிருந்தார்.+ 20  அவர்கள் சுக்கோத்திலிருந்து புறப்பட்டு வனாந்தரத்தின் எல்லையில் இருந்த ஈத்தாமில் கூடாரம் போட்டுத் தங்கினார்கள். 21  யெகோவா அவர்களுக்கு முன்னால் போய் வழிகாட்டினார். பகலில் மேகத் தூணின் மூலம் வழிகாட்டினார்,+ ராத்திரியில் நெருப்புத் தூணின் மூலம் வெளிச்சம் காட்டினார். அதனால், பகலிலும் ராத்திரியிலும் அவர்களால் பயணம் செய்ய முடிந்தது.+ 22  பகலில் மேகத் தூணும் ராத்திரியில் நெருப்புத் தூணும் ஜனங்களைவிட்டு விலகவே இல்லை.+

அடிக்குறிப்புகள்

நே.மொ., “அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து.”
இணைப்பு B15-ஐப் பாருங்கள்.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா