மத்தேயு எழுதியது 25:1-46
ஆராய்ச்சிக் குறிப்புகள்
புத்தியுள்ளவர்கள்: வே.வா., “விவேகமுள்ளவர்கள்.”—மத் 24:45-க்கான ஆராய்ச்சிக் குறிப்பில் “விவேகமும்” என்ற தலைப்பைப் பாருங்கள்.
தங்கள் விளக்குகளைத் தயார்படுத்தினார்கள்: அநேகமாக, விளக்குகள் நன்றாக எரிவதற்காகத் திரிகளை வெட்டிவிடுவது, எண்ணெய் ஊற்றுவது போன்ற வேலைகள் செய்வதைக் குறிக்கிறது.
விழிப்புடன் இருங்கள்: ஆன்மீக ரீதியில் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதுதான் பத்துக் கன்னிப்பெண்களைப் பற்றிய உவமை சொல்லும் செய்தி.—மத் 24:42; 26:38-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்.
தாலந்தும்: கிரேக்க தாலந்து என்பது காசு அல்ல, அது ஒரு எடையாக இருந்தது; அது பணமாகவும் பயன்படுத்தப்பட்டது. ஒரு கிரேக்க வெள்ளி தாலந்து 20.4 கிலோ எடையுள்ளதாக இருந்தது. அதன் மதிப்பு கிட்டத்தட்ட 6,000 திராக்மாவுக்கு அல்லது ரோம தினாரியுவுக்குச் சமமாக இருந்தது. கிட்டத்தட்ட 20 வருஷ வேலைக்காக ஒரு சாதாரண கூலியாளுக்குக் கொடுக்கப்பட்ட கூலியாக இருந்தது.—இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
பணத்தை: நே.மொ., “வெள்ளியை.” அதாவது, “பணமாகப் பயன்படுத்தப்பட்ட வெள்ளியை.”
நீங்கள் கொடுத்த தாலந்தை மண்ணுக்குள் புதைத்து வைத்தேன்: பைபிள் காலத்தைச் சேர்ந்த ஊர்களில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் விவசாயிகளும் நிறைய பொக்கிஷங்களையும் காசுகளையும் கண்டெடுத்திருக்கிறார்கள்; இப்படிப்பட்ட பொருள்களை மண்ணில் புதைத்து வைக்கும் வழக்கம் அன்று இருந்ததற்கு இது அத்தாட்சி அளிக்கிறது.
வட்டிக் கடைக்காரர்களிடமாவது . . . வட்டியோடு: கி.பி. முதல் நூற்றாண்டில், இஸ்ரவேலிலும் சுற்றுப்புற தேசங்களிலும் வட்டிக் கடைக்காரர்கள், அதாவது கடன் கொடுக்கிறவர்கள், பிரபலமானவர்களாக இருந்தார்கள். ஏழைகளாக இருந்த மற்ற யூதர்களுக்குக் கடன் கொடுத்தால் வட்டி வாங்கக் கூடாது என்று திருச்சட்டம் இஸ்ரவேலர்களுக்குச் சொன்னது (யாத் 22:25). ஆனால், மற்ற தேசத்தைச் சேர்ந்தவர்களிடம் அநேகமாக வியாபாரத்துக்காக வட்டி வாங்க அது அனுமதித்தது (உபா 23:20). வட்டிக் கடைக்காரர்களிடம் பணத்தைக் கொடுத்து சேமித்து வைப்பதும் அதற்கு வட்டி வாங்குவதும் இயேசுவின் காலத்தில் சகஜமாக இருந்ததென்று தெரிகிறது.
அழுது அங்கலாய்ப்பான்: மத் 8:12-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
மனிதகுமாரன்: மத் 8:20-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
தன் வலது பக்கத்தில் . . . தன் இடது பக்கத்தில்: சில சந்தர்ப்பங்களில் வலது பக்கம், இடது பக்கம் ஆகிய இரண்டுமே மதிப்பையும் அதிகாரத்தையும் குறித்தன. (மத் 20:21, 23) ஆனால், எப்போதுமே வலது பக்கம்தான் மிகவும் மதிப்புக்குரிய இடமாக இருந்தது. (சங் 110:1; அப் 7:55, 56; ரோ 8:34) ஆனால், வலது பக்கமும் இடது பக்கமும் நேர்மாறான நிலைகளைக் குறிப்பதை இந்த வசனமும் மத் 25:34, 41 வசனங்களும் காட்டுகின்றன. அதாவது, ராஜாவின் வலது பக்கத்தில் இருப்பது அவரால் ஏற்றுக்கொள்ளப்படும் நிலையில் இருப்பதையும், அவருடைய இடது பக்கத்தில் இருப்பது அவரால் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் இருப்பதையும் காட்டுகின்றன.
உலகம் உண்டானதுமுதல்: ‘உண்டானது’ என்பதற்கான கிரேக்க வார்த்தை எபி 11:11-ல் “கர்ப்பமானாள்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இங்கே ‘உலகம் உண்டானது’ என்று சொல்லப்படும்போது, ஆதாம், ஏவாளுடைய பிள்ளைகள் கருவில் உருவானதையும் பிறந்ததையும் குறிப்பதாகத் தெரிகிறது. இயேசு ‘உலகம் உண்டானதை’ ஆபேலோடு சம்பந்தப்படுத்திப் பேசினார். அநேகமாக, மீட்பைப் பெறத் தகுதிபெற்றிருந்த முதல் மனிதர் ஆபேல்தான். அவருடைய பெயர் “உலகம் உண்டானதுமுதல்” வாழ்வின் சுருளில் எழுதப்பட்டிருந்தது.—லூ 11:50, 51; வெளி 17:8.
அரசாங்கத்தை: வே.வா., “ராஜ்யத்தை.” பைபிளில் இந்த வார்த்தை வெவ்வேறு அர்த்தங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது “ஒரு அரசர் ஆட்சி செய்யும் இடத்தை அல்லது நாட்டை,” “அரசதிகாரத்தை,” அல்லது “ஆட்சிப்பகுதியை” குறிக்கிறது. “ஒரு அரசருடைய ஆட்சியின் கீழ் இருப்பதையும்” குறிக்கிறது. இந்த வசனத்தில், கடவுளுடைய ஆட்சியின் கீழ் நன்மைகளை அல்லது ஆசீர்வாதங்களைப் பெறுவதையும், அவருடைய ஆட்சிப்பகுதியில் சந்தோஷமாக வாழ்வதையும் குறிப்பதாகத் தெரிகிறது.
சொந்தமாக்கிக்கொள்ளுங்கள்: இதற்கான கிரேக்க வினைச்சொல்லின் அடிப்படை அர்த்தம், (பெரும்பாலும், உறவுமுறையின் காரணமாக) ஒரு வாரிசு தன் உரிமையைப் பெற்றுக்கொள்வதைக் குறிக்கிறது. உதாரணத்துக்கு, தகப்பனிடமிருந்து மகன் பரம்பரைச் சொத்தைப் பெற்றுக்கொள்வதைக் குறிக்கிறது. (கலா 4:30) ஆனால் இந்த வசனத்திலும், கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்திலுள்ள பெரும்பாலான மற்ற வசனங்களிலும், கடவுளிடமிருந்து எதையோ ஒன்றை ஆசீர்வாதமாகப் பெற்றுக்கொள்வதைப் பொதுப்படையாகக் குறிக்கிறது.—மத் 19:29; 1கொ 6:9, அடிக்குறிப்பு.
உடையில்லாமல் இருந்தேன்: வே.வா., “போதிய உடையில்லாமல் இருந்தேன்.” இதற்கான கிரேக்க வார்த்தை ஜிம்னோஸ். இது, “அரைகுறையாக உடுத்தியிருப்பதை; வெறும் உள்ளாடைகளோடு இருப்பதை” அர்த்தப்படுத்தலாம்.
உண்மையாகவே: மத் 5:18-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
சகோதரர்களாகிய: ‘சகோதரர்’ என்பதற்கான கிரேக்க வார்த்தையின் பன்மை வடிவம், ஆண்களை மட்டுமல்லாமல் பெண்களையும் குறிக்கலாம்.
அழிக்கப்படுவார்கள்: நே.மொ., “வெட்டப்படுவார்கள்.” இதற்கான கிரேக்க வார்த்தை கோலாசிஸ். மரத்திலுள்ள தேவையில்லாத கிளைகளை “வெட்டியெறிவதை” அல்லது “அறுத்துப்போடுவதை” அது குறிக்கிறது. இப்படி ‘நிரந்தரமாக அழிக்கப்படுபவர்களுக்கு’ உயிர்த்தெழுதல் இருக்காது.
மீடியா
ஒரு விவசாயி தூற்றுவாரியைப் பயன்படுத்தி, பதரும் தானியமும் கலந்த கலவையைக் காற்றில் அள்ளி வீசுவார். அப்போது, தானிய மணிகள் தரையில் விழுந்துவிடும், ஆனால் லேசான பதர் காற்றில் பறந்துவிடும். எல்லா தானியத்தையும் முழுமையாகப் பிரித்தெடுக்கும்வரை விவசாயி இப்படிச் செய்துகொண்டே இருப்பார்.