மத்தேயு எழுதியது 1:1-25

1  ஆபிரகாமின் மகனாகிய+ தாவீதின் மகன்+ இயேசு கிறிஸ்துவின் சரித்திரத்தை* பற்றிய புத்தகம்:   ஆபிரகாமின்+ மகன் ஈசாக்கு;+ஈசாக்கின் மகன் யாக்கோபு;+யாக்கோபின் மகன்கள் யூதாவும்,+ யூதாவின் சகோதரர்களும்;+   யூதாவுக்கும் தாமாருக்கும்+ பிறந்த மகன்கள் பாரேஸ், சேராகு;+பாரேசின் மகன் எஸ்ரோன்;+எஸ்ரோனின் மகன் ராம்;+   ராமின் மகன் அம்மினதாப்;அம்மினதாபின் மகன் நகசோன்;+நகசோனின் மகன் சல்மோன்;   சல்மோனுக்கும் ராகாபுக்கும்+ பிறந்த மகன் போவாஸ்;+போவாசுக்கும் ரூத்துக்கும்+ பிறந்த மகன் ஓபேத்;+ஓபேத்தின் மகன் ஈசாய்;+   ஈசாயின் மகன் ராஜாவாகிய தாவீது;+ தாவீதுக்கும் உரியாவின்+ மனைவிக்கும்* பிறந்த மகன் சாலொமோன்;+   சாலொமோனின் மகன் ரெகொபெயாம்;+ரெகொபெயாமின் மகன் அபியா;+அபியாவின் மகன் ஆசா;+   ஆசாவின் மகன் யோசபாத்;+யோசபாத்தின் மகன் யோராம்;+யோராமின் மகன் உசியா;+   உசியாவின் மகன் யோதாம்;+யோதாமின் மகன் ஆகாஸ்;+ஆகாசின் மகன் எசேக்கியா;+ 10  எசேக்கியாவின் மகன் மனாசே;+மனாசேயின் மகன் ஆமோன்;+ஆமோனின் மகன் யோசியா;+ 11  யூதர்கள் பாபிலோனுக்குச் சிறைபிடிக்கப்பட்டுப் போன காலத்தில்,+ யோசியாவுக்குப்+ பிறந்த மகன்கள் எகொனியாவும்,+ எகொனியாவின் சகோதரர்களும்; 12  பாபிலோனுக்குச் சிறைபிடிக்கப்பட்டுப் போன பின்பு, எகொனியாவுக்குப் பிறந்த மகன் சலாத்தியேல்;சலாத்தியேலின் மகன் செருபாபேல்;+ 13  செருபாபேலின் மகன் அபியூத்;அபியூத்தின் மகன் எலியாக்கீம்;எலியாக்கீமின் மகன் ஆசோர்; 14  ஆசோரின் மகன் சாதோக்;சாதோக்கின் மகன் ஆகீம்;ஆகீமின் மகன் எலியூத்; 15  எலியூத்தின் மகன் எலெயாசார்;எலெயாசாரின் மகன் மாத்தான்;மாத்தானின் மகன் யாக்கோபு; 16  யாக்கோபின் மகன் யோசேப்பு; இந்த யோசேப்புதான் மரியாளின் கணவர்; இந்த மரியாளுக்குத்தான் இயேசு பிறந்தார்.+ இவர் கிறிஸ்து என்று அழைக்கப்படுகிறார்.+ 17  இப்படி, ஆபிரகாம்முதல் தாவீதுவரை 14 தலைமுறைகள்; தாவீதுமுதல் பாபிலோனுக்குச் சிறைபிடிக்கப்பட்டுப் போன யூதர்கள்வரை+ 14 தலைமுறைகள்; பாபிலோனுக்குச் சிறைபிடிக்கப்பட்டுப் போன யூதர்கள்முதல் கிறிஸ்துவரை 14 தலைமுறைகள். 18  இயேசு கிறிஸ்து பிறந்த விவரம் இதுதான்: அவருடைய அம்மா மரியாள் யோசேப்புக்கு நிச்சயிக்கப்பட்டிருந்தாள்;+ அவர்களுக்குக் கல்யாணம் ஆவதற்கு முன்பே, கடவுளுடைய சக்தியின் மூலம் மரியாள் கர்ப்பமானாள்.+ 19  ஆனால், அவளுடைய கணவரான யோசேப்பு நீதிமானாக இருந்ததால், எல்லார் முன்னாலும் அவளை அவமானப்படுத்த விரும்பவில்லை; அதனால், அவளை ரகசியமாக விவாகரத்து* செய்ய* நினைத்தார்.+ 20  இந்த விஷயங்களைப் பற்றி யோசித்த பின்பு அவர் தூங்கிவிட்டார்; அப்போது யெகோவாவின் தூதர் அவருடைய கனவில் வந்து, “யோசேப்பே, தாவீதின் மகனே, உன் மனைவி மரியாளை வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு வர பயப்படாதே; கடவுளுடைய சக்தியின் மூலம்தான் அவள் கர்ப்பமாகியிருக்கிறாள்.+ 21  அவளுக்கு ஒரு மகன் பிறப்பார்; அவருக்கு இயேசு என்று நீ பெயர் வைக்க வேண்டும்;+ ஏனென்றால், அவர் தன்னுடைய மக்களைப் பாவத்திலிருந்து மீட்பார்”+ என்று சொன்னார். 22  யெகோவா தன்னுடைய தீர்க்கதரிசியின் மூலம் சொன்னது நிறைவேற வேண்டும் என்பதற்காகவே இதெல்லாம் நடந்தது. 23  “இதோ! ஒரு கன்னிப்பெண் கர்ப்பமாகி ஒரு மகனைப் பெற்றெடுப்பாள்; அவனுக்கு இம்மானுவேல் என்று பெயர் வைப்பார்கள்”+ என்று அவர் சொல்லியிருந்தார். இம்மானுவேல் என்றால், “கடவுள் நம்மோடு* இருக்கிறார்”+ என்று அர்த்தம். 24  யோசேப்பு தூங்கியெழுந்த பின்பு, யெகோவாவின் தூதர் சொன்னபடி தன்னுடைய மனைவியை வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு வந்தார். 25  ஆனால், அவளுக்கு ஒரு மகன் பிறக்கும்வரை+ அவளோடு அவர் உறவுகொள்ளவில்லை; அந்த மகனுக்கு இயேசு என்று பெயர் வைத்தார்.+

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மத்தேயு: “மத்தேயு” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கிரேக்கப் பெயர், “மத்தித்தியா” (1நா 15:18) என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் எபிரெயப் பெயரின் சுருக்கமாக இருக்கலாம். “மத்தித்தியா” என்ற பெயரின் அர்த்தம், “யெகோவாவின் பரிசு.”

மத்தேயு எழுதியது: எந்த சுவிசேஷப் புத்தகத்தின் எழுத்தாளரும், தான்தான் அதை எழுதியதாக எங்கும் குறிப்பிடவில்லை. அதோடு, மூலப்பிரதியில் பைபிள் புத்தகங்களுக்குத் தலைப்புகள் இருந்ததாகத் தெரியவில்லை. மத்தேயு சுவிசேஷத்தின் சில கையெழுத்துப் பிரதிகளில், யூயாஜீலியான் கட்டே மாத்தையான் (“நல்ல செய்தி [அல்லது, “சுவிசேஷம்”] மத்தேயு எழுதியது”) என்ற தலைப்பு காணப்படுகிறது. மற்ற கையெழுத்துப் பிரதிகளில், கட்டே மாத்தையான் (“மத்தேயு எழுதியது”) என்ற சுருக்கமான தலைப்பு காணப்படுகிறது. இந்தத் தலைப்புகள் எப்போது சேர்க்கப்பட்டன அல்லது எப்போதுமுதல் பயன்படுத்தப்பட்டன என்பது சரியாகத் தெரியவில்லை. அவை கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்று சிலர் சொல்கிறார்கள். ஏனென்றால், இரண்டாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியை அல்லது மூன்றாம் நூற்றாண்டின் ஆரம்பப்பகுதியைச் சேர்ந்த சில கையெழுத்துப் பிரதிகளில், சுவிசேஷப் புத்தகங்களுக்கு நீளமான தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தப் புத்தகங்கள் “சுவிசேஷம்” (நே.மொ., “நல்ல செய்தி”) என்று அழைக்கப்படுவதற்குக் காரணம், மாற்கு புத்தகத்தின் ஆரம்ப வார்த்தைகளாக இருக்கலாம் என்று சில அறிஞர்கள் சொல்கிறார்கள்; அதாவது, “கடவுளுடைய மகன் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நல்ல செய்தியின் ஆரம்பம்” என்ற வார்த்தைகளாக இருக்கலாம் என்று சொல்கிறார்கள். எழுத்தாளரின் பெயரோடு சேர்த்து இப்படிப்பட்ட தலைப்புகள் கொடுக்கப்பட்டிருப்பதற்கு நல்ல காரணங்கள் இருந்திருக்கலாம்; உதாரணத்துக்கு, புத்தகங்களைத் தெளிவாக அடையாளம் காட்டுவதற்காக அவை அப்படிக் கொடுக்கப்பட்டிருக்கலாம்.

ஆபிரகாமின் மகனாகிய: யூதர்களை மனதில் வைத்து இயேசுவின் சட்டப்பூர்வ வம்சாவளியை மத்தேயு பதிவு செய்ய ஆரம்பிக்கிறார்; இயேசுதான் ஆபிரகாமின் சட்டப்பூர்வ வாரிசு என்பதை அவர் சிறப்பித்துக் காட்டுகிறார்; அதாவது, ஆபிரகாமுக்குக் கடவுள் கொடுத்த வாக்குறுதியின்படி, இயேசுவின் மூலமாகத்தான் பூமியிலுள்ள எல்லா தேசத்தாரும் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வார்கள் என்பதை சிறப்பித்துக் காட்டுகிறார்.

மகன்: இந்த வம்சாவளிப் பட்டியலில், ‘மகன்’ என்ற வார்த்தை ஒரு நபருடைய சொந்த மகனையோ, பேரனையோ, அல்லது அந்த நபருடைய வம்சத்தில் வந்த ஒருவரையோ குறிக்கலாம்.

தாவீதின் மகன்: தாவீதின் வம்சத்தில் வருகிற ஒருவரால்தான் அரசாங்க ஒப்பந்தம் நிறைவேற வேண்டியிருந்தது; அந்த வாரிசு இயேசுதான் என்பதை இந்த வார்த்தைகள் காட்டுகின்றன.

இயேசு கிறிஸ்துவின் சரித்திரத்தை: தாவீதின் மகன் சாலொமோனின் வம்சாவளியில்தான் இயேசுவின் சட்டப்பூர்வ தகப்பனாகிய யோசேப்பு வந்ததாக மத்தேயு குறிப்பிடுகிறார். (மத் 1:6, 7) இப்படி, தாவீதின் அரச பரம்பரையில் வந்த சட்டப்பூர்வ வாரிசுதான் இயேசு என்பதை அவர் காட்டுகிறார். ஆனால், தாவீதின் மகன் நாத்தானின் வம்சாவளியில் இயேசு வந்ததாக லூக்கா குறிப்பிடுகிறார். (லூ 3:31) அவர் மரியாளின் வம்சாவளியைப் பற்றிக் குறிப்பிடுவதாகத் தெரிகிறது. இப்படி, தாவீதின் பரம்பரையில் வந்த இயற்கை வாரிசுதான் இயேசு என்பதைக் காட்டுகிறார்.

கிறிஸ்துவின்: “கிறிஸ்து” என்ற பட்டப்பெயர், கிறிஸ்டோஸ் என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து வந்திருக்கிறது. இதற்கான எபிரெயப் பட்டப்பெயர் “மேசியா” (மஷியாக் என்ற எபிரெய வார்த்தையிலிருந்து வந்திருக்கிறது). “அபிஷேகம் செய்யப்பட்டவர்” என்பதுதான் இந்த இரண்டு வார்த்தைகளின் அர்த்தம். பைபிள் காலங்களில், ராஜாக்களை எண்ணெயால் அபிஷேகம் செய்யும் சடங்கு பின்பற்றப்பட்டது.

சரித்திரத்தை பற்றிய புத்தகம்: கிரேக்கில் இவைதான் மத்தேயுவின் ஆரம்ப வார்த்தைகள். இவற்றுக்கான கிரேக்க வார்த்தைகள், பைப்ளாஸ் ஜெனீசியாஸ் (ஜீனிசிஸ் என்பதன் ஒரு வடிவம்தான் ஜெனீசியாஸ்). இவற்றை “வரலாற்றுப் பதிவு” அல்லது “வம்சாவளிப் பதிவு” என்றும் மொழிபெயர்க்கலாம். ஜீனிசிஸ் என்ற கிரேக்க வார்த்தையின் நேரடி அர்த்தம், “ஆரம்பம்; பிறப்பு; வம்சாவளி.” டோலேதோத் என்ற எபிரெய வார்த்தைக்கு இந்தக் கிரேக்க வார்த்தையைத்தான் செப்டுவஜன்ட் பயன்படுத்தியிருக்கிறது. கிட்டத்தட்ட அதே அர்த்தமுள்ள அந்த எபிரெய வார்த்தை, ஆதியாகமம் புத்தகத்தில் பொதுவாக “வரலாறு” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.—ஆதி 6:9; 10:1; 11:10, 27; 25:12, 19; 36:1, 9; 37:2.

தாமாருக்கும்: தாமார் என்பவள் மேசியாவின் வம்சாவளியைப் பற்றிய மத்தேயுவின் பதிவில் வரும் ஐந்து பெண்களில் முதல் பெண். மற்ற நான்கு பெண்கள்: ராகாப் மற்றும் ரூத், இந்த இரண்டு பேரும் இஸ்ரவேலர் அல்லாத மற்ற தேசத்துப் பெண்கள் (வச. 5); ‘உரியாவின் மனைவியான’ பத்சேபாள் (வச. 6); மரியாள் (வச. 16). இந்தப் பெண்கள் ஒவ்வொருவரும் இயேசுவின் மூதாதையாக ஆனதில் ஒரு விசேஷம் இருக்கிறது; அதனால்தான், ஆண்களுடைய பெயர்களையே பெரும்பாலும் குறிப்பிடும் இந்த வம்சாவளிப் பட்டியலில் இவர்களுடைய பெயர்களும் சேர்க்கப்பட்டிருக்கலாம்.

ராஜாவாகிய தாவீது: இந்த வம்சாவளிப் பட்டியலில் நிறைய ராஜாக்களுடைய பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன; இருந்தாலும், தாவீதுக்கு மட்டும்தான் “ராஜா” என்ற பட்டப்பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது. இஸ்ரவேலின் அரசப் பரம்பரை, ‘தாவீதின் வம்சம்’ என்று சொல்லப்பட்டது. (1ரா 12:19, 20) முதல் வசனத்தில் இயேசுவை “தாவீதின் மகன்” என்று சொல்வதன் மூலம், பைபிளின் மையப்பொருளாகிய கடவுளுடைய அரசாங்கத்தை மத்தேயு சிறப்பித்துக் காட்டுகிறார்; தாவீதோடு கடவுள் செய்த ஒப்பந்தத்தின்படி, தாவீதின் அரச பரம்பரையில் வரும் வாரிசு இயேசுதான் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.—2சா 7:11-16.

உரியாவின் மனைவி: அதாவது, “பத்சேபாள்.” இவருடைய கணவரான உரியா ஒரு ஏத்தியன்; தாவீதின் படையில் இருந்த மற்ற தேசத்து வீரர்களில் ஒருவர்.—2சா 11:3; 23:8, 39.

யோராமின் மகன் உசியா: வம்சாவளிப் பட்டியல்களில் “மகன்” என்ற வார்த்தை “வம்சத்தில் வந்த ஒருவர்” என்றும் அர்த்தப்படுத்தலாம்; இந்தப் பதிவிலும் அதைத்தான் அர்த்தப்படுத்துகிறது. 1நா 3:11, 12 காட்டுகிறபடி, தாவீதின் வம்சாவளிப் பட்டியலில் யோராமுக்கும் உசியாவுக்கும் (அசரியா என்றும் அழைக்கப்படுகிறார்) இடையில் மூன்று பொல்லாத ராஜாக்களின் பெயர்கள் (அகசியா, யோவாஸ், அமத்சியா) சேர்க்கப்படவில்லை.

யோசியாவுக்குப் பிறந்த மகன் எகொனியா: இங்கே “மகன்” என்ற வார்த்தை “பேரன்” என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால், யோசியாவுக்குப் பிறந்த மகனாகிய யோயாக்கீமின் மகன்தான் எகொனியா. இவர் யோயாக்கீன் என்றும் கோனியா என்றும்கூட அழைக்கப்படுகிறார்.—2ரா 24:6; 1நா 3:15-17; எஸ்தர் 2:6; எரே 22:24.

சலாத்தியேலின் மகன் செருபாபேல்: செருபாபேல் நிறைய வசனங்களில் சலாத்தியேலின் மகன் என்று சொல்லப்பட்டிருப்பது உண்மைதான். (எஸ்றா 3:2, 8; 5:2; நெ 12:1; ஆகா 1:1, 12, 14; 2:2, 23; லூ 3:27) ஆனால், ஒரு வசனத்தில் அவர் சலாத்தியேலின் சகோதரரான பெதாயாவின் மகன் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. (1நா 3:19) செருபாபேல் பெதாயாவின் சொந்த மகனாக இருந்திருக்க வேண்டும்; அநேகமாக, அவர் சலாத்தியேலின் சட்டப்பூர்வ மகனாகக் கருதப்பட்டார்.

யோசேப்பு: இயேசுவின் வம்சாவளிப் பட்டியலைப் பற்றிய மத்தேயுவின் பதிவு, இயேசுவை யோசேப்பின் “மகன்” (மத் 1:1-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்) என்று எங்குமே குறிப்பிடவில்லை. “யோசேப்புதான் மரியாளின் கணவர்; இந்த மரியாளுக்குத்தான் இயேசு பிறந்தார்” என்றுதான் குறிப்பிடுகிறது. அப்படியென்றால், மத்தேயு பதிவு செய்த வம்சாவளிப் பட்டியல் வலியுறுத்தும் கருத்து: இயேசு யோசேப்பின் சொந்த மகன் அல்ல, வளர்ப்பு மகன்தான்; அதனால், அவர் தாவீதின் வம்சத்தில் வந்த சட்டப்பூர்வ வாரிசு. ஆனால், லூக்கா பதிவு செய்த வம்சாவளிப் பட்டியல் வலியுறுத்தும் கருத்து: இயேசு மரியாளுக்குப் பிறந்ததால், அவர் தாவீதின் வம்சத்தில் வந்த இயற்கை வாரிசு.

கிறிஸ்து: மத் 1:1-க்கான ஆராய்ச்சிக் குறிப்பையும் சொல் பட்டியலையும் பாருங்கள்.

நிச்சயிக்கப்பட்டிருந்தாள்: திருமண ‘நிச்சயத்தை’ எபிரெயர்கள் ஒரு நிரந்தர ஒப்பந்தமாகக் கருதினார்கள். நிச்சயிக்கப்பட்ட ஆணும் பெண்ணும் ஏற்கெனவே திருமணமானவர்கள் போலக் கருதப்பட்டார்கள். ஆனால், திருமண சம்பிரதாயங்கள் முடிந்த பிறகுதான் அவர்கள் கணவன் மனைவியாக சேர்ந்து வாழ ஆரம்பித்தார்கள்.

கடவுளுடைய சக்தியின்: ‘கடவுளுடைய சக்தி’ என்பதற்கான கிரேக்க வார்த்தை, நியூமா. கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் இங்குதான் இந்த வார்த்தை முதன்முதலில் பயன்படுத்தப்பட்டுள்ளது.—சொல் பட்டியலில் “ரூவக்; நியூமா” என்ற தலைப்பைப் பாருங்கள்.

கணவர் . . . விவாகரத்து: நிச்சயிக்கப்பட்ட ஆணும் பெண்ணும் திருமணமானவர்களாகக் கருதப்பட்டதால், யோசேப்பை மரியாளின் கணவர் என்றும் மரியாளை யோசேப்பின் மனைவி என்றும் சொல்ல முடிந்தது. (மத் 1:20) திருமண நிச்சயத்தை முறிப்பதற்கு விவாகரத்து செய்ய வேண்டியிருந்தது.

யெகோவாவின்: கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் இந்த மொழிபெயர்ப்பில், கடவுளுடைய பெயரான யெகோவா 237 இடங்களில் வருகிறது; அதில் முதல் இடம் இதுதான்.—இணைப்பு C-ஐப் பாருங்கள்.

யெகோவாவின் தூதர்: இந்த வார்த்தைகள் எபிரெய வேதாகமத்தில் நிறைய வசனங்களில் வருகின்றன; அதில் முதல் வசனம் ஆதி 16:7. செப்டுவஜன்ட்டின் ஆரம்பகாலப் பிரதிகளில் ஆஜிலாஸ் (தேவதூதர்; தூதர்) என்ற கிரேக்க வார்த்தைக்குப் பிறகு கடவுளுடைய பெயரைக் குறிக்கும் எபிரெய எழுத்துக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதேபோலத்தான், இஸ்ரவேலில் உள்ள நஹால் ஹெவரில் கண்டெடுக்கப்பட்ட ஒரு செப்டுவஜன்ட் பிரதியில் (அதாவது, சக 3:5, 6 வசனங்களில்) கொடுக்கப்பட்டுள்ளது; இந்தப் பிரதி கி.மு. 50-க்கும் கி.பி. 50-க்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தது. (இணைப்பு C-ஐப் பாருங்கள்.) நிறைய பைபிள் மொழிபெயர்ப்புகள் இந்த வசனத்தில் கடவுளுடைய பெயரை நீக்காமல், “யெகோவாவின் தூதர்” என்றே மொழிபெயர்த்திருக்கின்றன.​—இணைப்பு A5-யும் இணைப்பு C-யும் பாருங்கள்.

தாவீதின் மகனே: தான் சொல்லவரும் விஷயத்தைக் கேட்பதற்கு யோசேப்பைத் தயார்படுத்த யெகோவாவின் தூதர் அவரை “தாவீதின் மகனே” என்று அழைத்தார்; இப்படி, தாவீதோடு கடவுள் செய்த ஒப்பந்தத்தில் உள்ள வாக்குறுதியை யோசேப்புக்கு அவர் ஞாபகப்படுத்தினார்.—மத் 1:1, 6-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்.

உன் மனைவி மரியாளை வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு வர: யூதர்களின் வழக்கப்படி, ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் நிச்சயம் செய்யப்பட்டபோது திருமண சம்பிரதாயங்கள் ஆரம்பமாயின. கணவன் தன் மனைவியைத் தன்னுடைய வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போனபோது திருமண சம்பிரதாயங்கள் முடிவுக்கு வந்தன. பொதுவாக, இந்தக் கடைசி சம்பிரதாயம் ஒரு குறிப்பிட்ட நாளில் நடந்தது; அது ஒரு விழாவாகக் கொண்டாடப்பட்டது. அப்போதுதான், அந்தப் பெண்ணைத் தன்னுடைய மணத்துணையாக ஏற்றுக்கொண்டதை மணமகன் எல்லாருக்கும் முன்னால் தெரியப்படுத்தினார். இப்படி, திருமணம் எல்லாருக்கும் தெரிவிக்கப்பட்டது, ஏற்றுக்கொள்ளப்பட்டது; அது பதிவு செய்யப்பட்டு, நிரந்தர ஒப்பந்தமாக ஆனது.—ஆதி 24:67; மத் 1:​18, 19-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்.

கர்ப்பமாகியிருக்கிறாள்: நே.மொ., “அவளிடம் உற்பத்தியாயிருக்கிறது; உண்டாயிருக்கிறது.” இதற்கான கிரேக்க வார்த்தை வசனம் 16-ல் “பிறந்தார்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இயேசு: எபிரெயுவில், யெஷுவா அல்லது யோசுவா. இது யெஹோஷுவா என்ற பெயரின் சுருக்கம். இதன் அர்த்தம், “யெகோவாவே மீட்பு.”

யெகோவா: இதற்கு அடுத்த வசனத்தில் வரும் மேற்கோள் ஏசா 7:14-லிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. அதில், யெகோவாவே அடையாளத்தைக் கொடுப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. (இணைப்பு C-ஐப் பாருங்கள்.) எபிரெய வேதாகமத்திலிருந்து மத்தேயு மேற்கோள் காட்டியிருக்கும் முதல் வசனம் இதுதான்.

யெகோவா தன்னுடைய தீர்க்கதரிசியின் மூலம் சொன்னது நிறைவேற வேண்டும் என்பதற்காகவே: இந்த வார்த்தைகளையும் இதுபோன்ற வார்த்தைகளையும் மத்தேயு தன் சுவிசேஷத்தில் அடிக்கடி பயன்படுத்தியிருக்கிறார். இயேசுதான் வாக்குக் கொடுக்கப்பட்டிருந்த மேசியா என்பதை யூதர்களுக்கு வலியுறுத்துவதற்காக அவர் இந்த வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்தியிருக்கலாம்.—மத் 2:15, 23; 4:16; 8:17; 12:17; 13:35; 21:5; 26:56; 27:10.

இதோ!: இதற்கான கிரேக்க வார்த்தை இடோ. அடுத்து சொல்லப்படும் விஷயத்துக்குக் கவனத்தைத் திருப்புவதற்கு இந்த வார்த்தை அடிக்கடி பயன்படுத்தப்பட்டுள்ளது; காட்சியைக் கற்பனை செய்துபார்க்கும்படியோ ஒரு விவரத்தைக் கவனிக்கும்படியோ தூண்டுவதற்கு அது பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு விஷயத்தை வலியுறுத்துவதற்கோ, புதிய அல்லது ஆச்சரியமான ஒரு விஷயத்தை அறிமுகப்படுத்துவதற்கோகூட அது பயன்படுத்தப்பட்டுள்ளது. கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் மத்தேயு மற்றும் லூக்கா சுவிசேஷங்களிலும், வெளிப்படுத்துதல் புத்தகத்திலும் இந்த வார்த்தை அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த கிரேக்க வார்த்தைக்கு இணையான ஒரு வார்த்தை எபிரெய வேதாகமத்திலும் அடிக்கடி பயன்படுத்தப்பட்டுள்ளது.

கன்னிப்பெண்: ஏசா 7:14-லுள்ள வார்த்தைகளை செப்டுவஜன்ட் பதிப்பிலிருந்து மத்தேயு இங்கே மேற்கோள் காட்டுகிறார். அந்தப் பதிப்பில் பயன்படுத்தப்பட்ட வார்த்தை பார்த்தீனாஸ். அதன் அர்த்தம், “இதுவரை பாலியல் உறவிலேயே ஈடுபடாத ஒருவர்.” அதற்கான எபிரெய வார்த்தை ஆல்மா. இது “கன்னிப்பெண்” என்ற அர்த்தத்தை அல்லது வெறுமனே “ஒரு இளம் பெண்” என்ற அர்த்தத்தைத் தரலாம். ஆனால் மத்தேயு, கடவுளுடைய சக்தியினால் தூண்டப்பட்டு, “கன்னிப்பெண்” என்ற அர்த்தத்தைத் தரும் கிரேக்க வார்த்தையை இயேசுவின் தாய்க்குப் பயன்படுத்தியிருக்கிறார்.

இம்மானுவேல்: ஏசா 7:14; 8:8, 10 ஆகிய வசனங்களில் வரும் ஒரு எபிரெயப் பெயர். மேசியாவை அடையாளம் காட்டுவதற்காகக் கொடுக்கப்பட்ட தீர்க்கதரிசன பட்டப்பெயர்களில் ஒன்று.

யெகோவாவின்: மத் 1:20-க்கான ஆராய்ச்சிக் குறிப்பையும் இணைப்பு C-ஐயும் பாருங்கள்.

உறவுகொள்ளவில்லை: நே.மொ., “அறியவில்லை.” பைபிளில் பயன்படுத்தப்பட்ட கிரேக்க மொழியில், “அறிந்துகொள்வது” என்பதற்கான வினைச்சொல் பாலியல் உறவைக் குறிப்பதற்கான மங்கல வழக்காகவும் பயன்படுத்தப்பட்டது. பைபிளில் பயன்படுத்தப்பட்ட எபிரெய மொழியிலும் இதுதான் உண்மை; இதற்கு உதாரணமாக ஆதி 4:1 போன்ற வசனங்களைக் குறிப்பிடலாம்.

மீடியா

மத்தேயு புத்தகத்துக்கான அறிமுக வீடியோ
மத்தேயு புத்தகத்துக்கான அறிமுக வீடியோ
முதல் நூற்றாண்டு வீடு
முதல் நூற்றாண்டு வீடு

முதல் நூற்றாண்டில், கட்டிடம் கட்டுவதற்குப் பல தொழில்நுட்பங்கள் இஸ்ரவேலில் பயன்படுத்தப்பட்டன. கட்டுகிறவரின் வசதிவாய்ப்புகளைப் பொறுத்தும், கிடைக்கக்கூடிய கட்டுமானப் பொருள்களைப் பொறுத்தும் வித்தியாசமான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன. சின்னதாக இருந்த நிறைய வீடுகள், வெயிலில் காய வைக்கப்பட்ட களிமண் செங்கற்களால் அல்லது சீராக வெட்டப்படாத கற்களால் கட்டப்பட்டன. உட்சுவர்களுக்குப் பெரும்பாலும் சாந்து பூசப்பட்டது. பெரும்பாலான வீடுகளில், சமப்படுத்தப்பட்ட மண் தரைகள்தான் இருந்தன, ஆனால் சில வீடுகளின் தரைகளில் கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. கூரை அமைப்பதற்காகத் தரையில் கம்பங்கள் நிறுத்தப்பட்டு, அவற்றின் மேல் மரச் சட்டங்கள் நேராகவும் குறுக்காகவும் பொருத்தப்பட்டன. அந்தச் சட்டங்கள்மேல் கிளைகளும் நாணற்தண்டுகளும் பரப்பி வைக்கப்பட்டன. பின்பு அதெல்லாம் களிமண்ணால் மூடப்பட்டு, கடைசியில் சாந்து பூசப்பட்டது. அதனால், அது ஓரளவுக்குத் தண்ணீர் ஒழுகாத கூரையாக இருந்தது. மொட்டைமாடிக்குப் போக மாடிப்படிகள் இருந்தன. ஏழைகளின் வீடுகளில் மாடிப்படிக்குப் பதிலாக வெளியே ஒரு ஏணி வைக்கப்பட்டிருந்தது; அவர்களுடைய வீடுகளில் நாற்காலி, மேஜை போன்ற சாமான்கள் மிகக் குறைவாகவே இருந்தன.