நீதிமொழிகள் 14:1-35
14 ஞானமுள்ள பெண் தன் குடும்பத்தைக் கட்டிக்காக்கிறாள்.+ஆனால், புத்தியில்லாத பெண் அதைக் குட்டிச்சுவராக்குகிறாள்.
2 நேர்மையாக நடக்கிறவன் யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறான்.ஆனால், குறுக்கு வழியில் போகிறவன் அவரை அவமதிக்கிறான்.
3 முட்டாளின் வாயிலிருந்து வரும் ஆணவப் பேச்சு பிரம்புபோல் இருக்கும்.ஆனால், ஞானமுள்ளவர்களின் உதடுகள் அவர்களைப் பாதுகாக்கும்.
4 மாடுகள் இல்லையென்றால் தொழுவம் சுத்தமாக இருக்கும்.ஆனால், காளையின் பலத்தால் அறுவடை அமோகமாக இருக்கும்.
5 உண்மையான சாட்சி பொய் பேச மாட்டான்.ஆனால், பொய் சாட்சி மூச்சுக்கு மூச்சு பொய் பேசுவான்.+
6 கேலி செய்கிறவன் ஞானத்தை எவ்வளவுதான் தேடினாலும் கண்டுபிடிக்க மாட்டான்.ஆனால், புரிந்துகொள்ளும் திறன் உள்ளவனுக்கு அறிவு எளிதில் கிடைக்கும்.+
7 முட்டாளைவிட்டுத் தூர விலகு.ஏனென்றால், அவன் எதையும் அறிவோடு பேச மாட்டான்.+
8 சாமர்த்தியமாக நடக்கிறவன் தான் போகும் பாதையை ஞானத்தால் புரிந்துகொள்கிறான்.ஆனால், முட்டாள்கள் தங்களுடைய முட்டாள்தனத்தால் ஏமாந்துபோகிறார்கள்.*+
9 முட்டாள்கள் குற்றம் செய்துவிட்டுக் கவலையில்லாமல் சிரிக்கிறார்கள்.+ஆனால், நேர்மையானவர்கள் சமரசமாவதற்குத் தயாராக இருக்கிறார்கள்.
10 இதயத்திலுள்ள வேதனை இதயத்துக்குத்தான் தெரியும்.அதன் சந்தோஷத்தை வேறு யாராலும் புரிந்துகொள்ள முடியாது.
11 பொல்லாதவர்களின் வீடு அழிந்துபோகும்.+ஆனால், நேர்மையானவர்களின் கூடாரம் செழிக்கும்.
12 மனுஷனுக்குச் சரியென்று தோன்றுகிற வழி உண்டு.+ஆனால், அது கடைசியில் மரணத்தில்தான் கொண்டுபோய்விடும்.+
13 ஒருவன் வெளியே சிரித்தாலும் உள்ளத்தில் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கலாம்.ஒருவனுடைய சந்தோஷம் துக்கத்தில் போய் முடியலாம்.
14 ஒருவனுடைய உள்ளம் தாறுமாறாகப் போகும்போது அதன் விளைவுகளை அவன் சந்திப்பான்.+ஆனால், நல்லவன் தன்னுடைய செயல்களுக்குத் தகுந்த பலனைப் பெறுவான்.+
15 விவரம் தெரியாதவன்* யார் எதைச் சொன்னாலும் நம்பிவிடுகிறான்.ஆனால், சாமர்த்தியமாக நடக்கிறவன் ஒவ்வொரு அடியையும் யோசித்துதான் எடுத்து வைக்கிறான்.+
16 ஞானமுள்ளவன் ஜாக்கிரதையாக நடந்து, கெட்ட வழியைவிட்டு விலகுகிறான்.ஆனால், முட்டாள் அளவுக்கு மீறிய தன்னம்பிக்கையோடு கண்மூடித்தனமாக* நடந்துகொள்கிறான்.
17 சட்டென்று கோபப்படுகிறவன் முட்டாள்தனமாக நடந்துகொள்கிறான்.+ஆனால், எதையும் யோசித்து செய்கிறவன் வெறுக்கப்படுகிறான்.
18 விவரம் தெரியாதவர்கள்* முட்டாள்தனமாக நடந்துகொள்வார்கள்.ஆனால், சாமர்த்தியமாக நடக்கிறவர்கள் அறிவு என்ற கிரீடத்தைச் சூடியிருப்பார்கள்.+
19 நல்லவர்களுக்கு முன் கெட்டவர்கள் தலைவணங்க வேண்டியிருக்கும்.நீதிமான்களின் வாசலில் பொல்லாதவர்கள் தலைவணங்குவார்கள்.
20 ஏழையை அக்கம்பக்கத்தார்கூட வெறுக்கிறார்கள்.+ஆனால், பணக்காரனுக்கு ஏகப்பட்ட நண்பர்கள் இருக்கிறார்கள்.+
21 அடுத்தவரை அவமதிக்கிறவன் பாவம் செய்கிறான்.ஆனால், எளியவர்களுக்குக் கரிசனை காட்டுகிறவன் சந்தோஷமானவன்.+
22 சதித்திட்டம் போடுகிறவர்கள் வழிதவறிப் போய்விடுவார்கள்.
ஆனால், நல்லது செய்யப் பாடுபடுகிறவர்களுக்கு மாறாத அன்பும் உண்மைத்தன்மையும் காட்டப்படும்.+
23 எல்லா விதமான கடின உழைப்பும் நல்ல பலனைத் தரும்.ஆனால், வெட்டிப் பேச்சு வறுமையைக் கொண்டுவரும்.+
24 ஞானமுள்ளவர்களின் கிரீடம் அவர்களுடைய செல்வம்.ஆனால், முட்டாள்களின் முட்டாள்தனத்தால் விளைவது இன்னுமதிக முட்டாள்தனமே.+
25 உண்மையாகச் சாட்சி சொல்கிறவன் உயிர்களைக் காப்பாற்றுகிறான்.ஆனால், ஏமாற்றுக்காரன் மூச்சுக்கு மூச்சு பொய் சொல்கிறான்.
26 யெகோவாமேல் இருக்கும் பயம் ஒருவனுக்கு அசைக்க முடியாத நம்பிக்கையைத் தரும்.+அது அவனுடைய பிள்ளைகளுக்கு அடைக்கலமாக இருக்கும்.+
27 யெகோவாமேல் இருக்கும் பயம் வாழ்வளிக்கும் ஊற்றுபோல் இருக்கிறது.மரணத்தின் கண்ணிகளிலிருந்து அது ஒருவனைக் காப்பாற்றுகிறது.
28 மக்கள்தொகை உயர்ந்தால் ராஜாவின் மகிமை கூடும்.+மக்கள்தொகை குறைந்தால் அவனுடைய ஆட்சி கவிழும்.
29 பகுத்தறிவு நிறைந்தவன் சட்டெனக் கோபப்பட மாட்டான்.+ஆனால், பொறுமை இல்லாதவன் முட்டாள்தனமாக நடந்துகொள்வான்.+
30 அமைதியான உள்ளம் உடலுக்கு ஆரோக்கியம்.*ஆனால், பொறாமை எலும்புருக்கி.+
31 எளியவனை ஏமாற்றுகிறவன் அவனைப் படைத்தவரை அவமதிக்கிறான்.+ஆனால், ஏழைக்குக் கரிசனை காட்டுகிறவன் அவருக்கு மகிமை சேர்க்கிறான்.+
32 பொல்லாதவன் தன்னுடைய அக்கிரமத்தாலேயே வீழ்ச்சி அடைவான்.ஆனால், நீதிமான் தன்னுடைய உத்தமத்திலே அடைக்கலம் காண்பான்.+
33 புத்தி* உள்ளவரின் இதயத்தில் ஞானம் அமைதியாகக் குடியிருக்கும்.+ஆனால், முட்டாள் தனக்கு ஞானமாகத் தோன்றுவதையெல்லாம் சொல்லிக்கொண்டு திரிகிறான்.
34 நீதி ஒரு தேசத்தின் மதிப்பை உயர்த்தும்.+ஆனால், பாவம் குடிமக்களின் மதிப்பைக் கெடுக்கும்.
35 விவேகமாக நடக்கிற ஊழியன்மேல் ராஜா பிரியமாக இருக்கிறார்.+ஆனால், வெட்கக்கேடாக நடக்கிறவனைப் பார்த்து அவர் கோபத்தில் கொதிக்கிறார்.+
அடிக்குறிப்புகள்
^ அல்லது, “மற்றவர்களை ஏமாற்றுகிறார்கள்.”
^ வே.வா., “அனுபவம் இல்லாதவன்.”
^ வே.வா., “வெறித்தனமாக.”
^ வே.வா., “அனுபவம் இல்லாதவர்கள்.”
^ வே.வா., “உயிர்.”
^ வே.வா., “புரிந்துகொள்ளுதல்.”