நியாயாதிபதிகள் 7:1-25

7  பின்பு யெருபாகாலும், அதாவது கிதியோனும்,+ அவரோடு இருந்த ஆட்கள் எல்லாரும் விடியற்காலையில் எழுந்து ஆரத் என்ற நீரூற்றுக்குப் பக்கத்தில் முகாம்போட்டார்கள். அவர்களுடைய முகாமுக்கு வடக்கே, மோரேயின் குன்றுக்குப் பக்கத்திலுள்ள சமவெளியில் மீதியானியர்கள் முகாம்போட்டிருந்தார்கள்.  அப்போது யெகோவா கிதியோனிடம், “உன்னோடு நிறைய வீரர்கள் இருப்பதால், மீதியானியர்களை உங்கள் கையில் கொடுக்க மாட்டேன்.+ அப்படிக் கொடுத்தால், ‘எங்கள் பலத்தால்தான் வெற்றி கிடைத்தது’ என்று என் முன்னால் பெருமை பேசுவீர்கள்.+  அதனால், ‘பயத்தில் நடுங்குகிற எல்லாரும் வீட்டுக்குப் போய்விடுங்கள்’ என்று தயவுசெய்து அறிவிப்பு செய்”+ என்று சொன்னார். கிதியோனும் அந்த அறிவிப்பைச் செய்து, அவர்களைச் சோதித்துப் பார்த்தார். அப்போது 22,000 பேர் திரும்பிப் போனார்கள். 10,000 பேர் மட்டும் மீதியாக இருந்தார்கள்.  பின்பு யெகோவா கிதியோனிடம், “இப்போதும்கூட நிறைய வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களை நீரோடைக்குக் கூட்டிக்கொண்டு போ. உனக்காக நான் அவர்களைச் சோதித்துப் பார்ப்பேன். யாரெல்லாம் உன்னோடு வரலாம் என்று சொல்கிறேனோ அவர்கள் உன்னோடு வரலாம். யாரெல்லாம் வரக் கூடாது என்று சொல்கிறேனோ அவர்கள் உன்னோடு வரக் கூடாது” என்றார்.  அதனால் கிதியோன் தன் வீரர்களைக் கூட்டிக்கொண்டு நீரோடைக்குப் போனார். அப்போது யெகோவா கிதியோனிடம், “தண்ணீரைக் கையில் அள்ளி நாய்போல் நக்கிக் குடிக்கிற எல்லாரையும் தனியாக நிற்க வை. மண்டிபோட்டுக் குடிக்கிற எல்லாரையும் தனியாக நிற்க வை” என்று சொன்னார்.  தண்ணீரைக் கையில் அள்ளி நக்கிக் குடித்தவர்கள் 300 பேர். மற்றவர்கள் எல்லாரும் மண்டிபோட்டுக் குடித்தார்கள்.  அப்போது யெகோவா கிதியோனிடம், “தண்ணீரைக் கையில் அள்ளி நக்கிக் குடித்த 300 பேரை வைத்து நான் உங்களைக் காப்பாற்றி, மீதியானியர்களை உங்கள் கையில் கொடுப்பேன்.+ மற்றவர்கள் எல்லாரும் வீட்டுக்குப் போகட்டும்” என்று சொன்னார்.  அதன்படியே, கிதியோன் 300 பேரை மட்டும் வைத்துக்கொண்டு, மற்றவர்களை அவரவர் வீட்டுக்கு அனுப்பிவிட்டார். அனுப்பப்பட்டவர்களிடம் இருந்த உணவுப் பொருள்களையும் ஊதுகொம்புகளையும் இவர்கள் வாங்கிக்கொண்டார்கள். இஸ்ரவேலர்களின் முகாமுக்குக் கீழே இருந்த சமவெளியில் மீதியானியர்கள் முகாம்போட்டிருந்தார்கள்.+  அன்றைக்கு ராத்திரி யெகோவா அவரிடம், “புறப்பட்டுப் போய், அவர்களுடைய முகாமைத் தாக்கு. அவர்களை உன் கையில் கொடுத்துவிட்டேன்.+ 10  அவர்களைத் தாக்குவதற்குப் பயமாக இருந்தால், உன்னுடைய உதவியாளன் பூராவைக் கூட்டிக்கொண்டு அவர்களுடைய முகாமுக்குப் போ. 11  அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று கவனி. அப்போது, அவர்களுடைய முகாமைத் தாக்க உனக்குத் தைரியம் வரும்” என்று சொன்னார். உடனே அவரும் அவருடைய உதவியாளன் பூராவும் அந்த முகாமின் எல்லைக்குப் போனார்கள். 12  மீதியானியர்களும் அமலேக்கியர்களும் கிழக்கத்தியர்கள்+ எல்லாரும் வெட்டுக்கிளி கூட்டம்போல் அந்தச் சமவெளி முழுவதும் குவிந்திருந்தார்கள். கடற்கரை மணலைப் போல எண்ண முடியாத அளவுக்கு அவர்களிடம் ஒட்டகங்கள் இருந்தன.+ 13  கிதியோன் அங்கு வந்தபோது, ஒருவன் தன் நண்பனிடம், “எனக்கு ஒரு கனவு வந்தது. அந்தக் கனவில் வட்டமான பார்லி ரொட்டி ஒன்று மீதியானியர்களின் முகாமுக்குள் உருண்டு வந்து ஒரு கூடாரத்தின் மேல் பலமாக மோதியது. அப்போது அந்தக் கூடாரம் அப்படியே கவிழ்ந்து, தரைமட்டமானது”+ என்று சொல்லிக்கொண்டிருந்தான். 14  அதற்கு அவனுடைய நண்பன், “அது யோவாசின் மகனாகிய கிதியோனின் வாளாகத்தான் இருக்க வேண்டும்.+ கடவுள் அந்த இஸ்ரவேலனின் கையில் மீதியானியர்களையும் இந்தப் படை முழுவதையும் கொடுத்துவிட்டார்”+ என்று சொன்னான். 15  அந்தக் கனவையும் அதற்கான விளக்கத்தையும் கிதியோன் கேட்டவுடன்+ மண்டிபோட்டு கடவுளை வணங்கினார். அதன்பின், இஸ்ரவேலர்களின் முகாமுக்குத் திரும்பி வந்து, “புறப்படுங்கள், மீதியானியர்களின் படையை யெகோவா உங்கள் கையில் கொடுத்துவிட்டார்” என்று சொன்னார். 16  பின்பு, அந்த 300 வீரர்களையும் மூன்று பிரிவாகப் பிரித்து, அவர்கள் எல்லாருடைய கையிலும் ஓர் ஊதுகொம்பையும்+ ஒரு பெரிய ஜாடியையும் கொடுத்தார். அந்த ஜாடிக்குள் ஒரு தீப்பந்தத்தை வைத்துக் கொடுத்தார். 17  அதன்பின் அவர், “நான் செய்வதை நன்றாகக் கவனித்து, அதேபோல் செய்யுங்கள். முகாமின் எல்லையை அடைந்ததும் நான் செய்வது போலவே நீங்களும் செய்ய வேண்டும். 18  நானும் என்னோடு இருப்பவர்களும் ஊதுகொம்பை ஊதியவுடனே முகாமைச் சூழ்ந்து நிற்கிற நீங்களும் ஊதுகொம்பை ஊத வேண்டும். ‘இது யெகோவாவின் போர்! கிதியோனின் போர்!’ என்று முழங்க வேண்டும்” என்றார். 19  நடுஜாமம்* தொடங்கிய நேரத்தில், காவலர்கள் மாற்றி நிறுத்தப்பட்ட கொஞ்ச நேரத்தில், கிதியோனும் அவரோடு இருந்த 100 வீரர்களும் முகாமின் எல்லையை அடைந்தார்கள். உடனே, தங்களுடைய ஊதுகொம்புகளை+ ஊதி கையிலிருந்த பெரிய ஜாடிகளை உடைத்தார்கள்.+ 20  மூன்று பிரிவினரும் அதேபோல் ஊதுகொம்புகளை ஊதி ஜாடிகளை உடைத்தார்கள். தங்களுடைய இடது கையில் தீப்பந்தத்தைப் பிடித்துக்கொண்டு, வலது கையிலிருந்த ஊதுகொம்பை ஊதி, “இது யெகோவாவின் போர்! கிதியோனின் போர்!” என்று முழங்கினார்கள். 21  அப்போது, அவர்கள் எல்லாரும் முகாமைச் சுற்றி அவரவர் இடத்தில் நின்றுகொண்டிருந்தார்கள். ஆனால், முகாமிலிருந்த எதிரிகள் எல்லாரும் கத்திக்கொண்டே தலைதெறிக்க ஓடினார்கள்.+ 22  இஸ்ரவேலின் 300 வீரர்களும் ஊதுகொம்புகளை ஊதிக்கொண்டே இருந்தபோது, முகாமிலிருந்த எதிரிகள் எல்லாரும் ஒருவரை ஒருவர் வாளால் வெட்டிக் கொல்லும்படி+ யெகோவா செய்தார். அந்தப் படைவீரர்கள் சேரெராவுக்கு நேராக பெத்-சித்தா வரையிலும், தாபத்துக்குப் பக்கத்திலுள்ள ஆபேல்-மெகொல்லாவின்+ எல்லை வரையிலும் ஓடினார்கள். 23  அப்போது நப்தலி, ஆசேர், மனாசே கோத்திரங்களிலிருந்து இஸ்ரவேல் வீரர்கள் வர வைக்கப்பட்டார்கள்.+ அவர்கள் மீதியானியர்களைத் துரத்திக்கொண்டு போனார்கள். 24  கிதியோன் உடனே எப்பிராயீம் மலைப்பகுதி முழுக்க தூதுவர்களை அனுப்பி, “மீதியானியர்களைத் தாக்க கீழே இறங்கி வாருங்கள். பெத்-பாராவரை இருக்கிற யோர்தானின் ஆற்றுத்துறைகளையும்* அதனுடைய கிளை ஆறுகளின் ஆற்றுத்துறைகளையும் கைப்பற்றுங்கள்” என்று சொன்னார். அதனால், எப்பிராயீம் வீரர்கள் எல்லாரும் ஒன்றுதிரட்டப்பட்டார்கள். அவர்கள் பெத்-பாராவரை இருக்கிற யோர்தானின் ஆற்றுத்துறைகளையும் அதனுடைய கிளை ஆறுகளின் ஆற்றுத்துறைகளையும் கைப்பற்றினார்கள். 25  அதோடு, மீதியானின் அதிகாரிகளான ஒரேபையும் சேபையும் பிடித்தார்கள். ஒரேபை ஒரு கற்பாறையில் கொன்றார்கள், பிற்பாடு அது ஒரேபின் கற்பாறை என்று அழைக்கப்பட்டது.+ சேபை ஒரு திராட்சரச ஆலையில் கொன்றார்கள், பிற்பாடு அது சேபின் திராட்சரச ஆலை என்று அழைக்கப்பட்டது. அவர்கள் மீதியானியர்களைத் துரத்திக்கொண்டே போனார்கள்.+ பின்பு, ஒரேபின் தலையையும் சேபின் தலையையும் யோர்தான் பிரதேசத்தில் இருந்த கிதியோனிடம் கொண்டுவந்தார்கள்.

அடிக்குறிப்புகள்

இது ராத்திரி சுமார் 10 மணிமுதல் அதிகாலை 2 மணி வரையிலான சமயம்.
ஜனங்கள் ஆற்றைக் கடக்கும் ஆழமில்லாத பகுதிகள்.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா