ஏசாயா 8:1-22

8  யெகோவா என்னிடம், “நீ ஒரு பெரிய பலகையை எடுத்து,+ அதில் ‘மகேர்-சாலால்-அஷ்-பாஸ்’* என்று எழுத்தாணியால்* எழுது.  நம்பிக்கைக்குரிய சாட்சிகளான யெபெரெகியாவின் மகன் சகரியாவும் குருவாகிய உரியாவும்+ இதை எழுத்தில் எழுதி எனக்கு உறுதிப்படுத்தட்டும்” என்று சொன்னார்.  அதன்பின், தீர்க்கதரிசனம் சொல்கிறவளான என் மனைவியோடு நான் உறவுகொண்டேன். அவள் கர்ப்பமாகி ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்.+ அப்போது யெகோவா என்னிடம், “அவனுக்கு மகேர்-சாலால்-அஷ்-பாஸ் என்று பெயர் வை.  ஏனென்றால், ‘அம்மா,’ ‘அப்பா’ என்று அவன் கூப்பிடுவதற்கு முன்பே அசீரியர்கள் தமஸ்குவின் சொத்துகளையும் சமாரியாவில் கைப்பற்றிய பொருள்களையும் தங்கள் ராஜாவுக்கு முன்பாகக் கொண்டுபோவார்கள்”+ என்று சொன்னார்.  யெகோவா திரும்பவும் என்னிடம்,   “லேசாக வழிந்தோடுகிற சீலோவாவின்* தண்ணீரை இந்த ஜனங்கள் ஒதுக்கிவிட்டார்கள்.+ரேத்சீனையும் ரெமலியாவின் மகனையும்+ சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார்கள்.   அதனால், இவர்களுக்கு எதிராக அசீரிய ராஜா படைபலத்தோடு வருவான்.+யெகோவாதான் அவனை வரச் செய்வார்.வேகமாகப் பாய்ந்து வரும் ஆற்றை* போல அவன் வருவான். அதன் எல்லா சிற்றாறுகளிலும் தண்ணீர் பெருக்கெடுக்கும்.அது எல்லா கரைகளிலும் புரண்டோடும்.   அது யூதாவுக்குள் காட்டாறாய்ப் பாயும். அதன் கழுத்துவரை எட்டும்,+ அதை வெள்ளக்காடாக்கும்.இம்மானுவேலே,*+அவன் தன்னுடைய சிறகுகளை விரித்து உன் தேசம் முழுவதையும் மூடுவான்” என்று சொன்னார்.   எதிரிகளே, தாக்குங்கள். ஆனால், நீங்கள்தான் படுதோல்வி அடைவீர்கள். தொலைதூரப் பகுதிகளைச் சேர்ந்தவர்களே, கேளுங்கள்! போருக்குத் தயாராகுங்கள். ஆனால், நீங்கள்தான் படுதோல்வி அடைவீர்கள்!+ போருக்குத் தயாராகுங்கள். ஆனால், நீங்கள்தான் படுதோல்வி அடைவீர்கள்! 10  நீங்கள் என்னதான் சதி செய்தாலும் அது பலிக்காது. என்னதான் கூடிப் பேசினாலும் அது நடக்காது.ஏனென்றால், கடவுள் எங்களோடு இருக்கிறார்!*+ 11  யெகோவா தன்னுடைய பலமான கையை என்மேல் வைத்து, இந்த ஜனங்களின் வழியில் போகக் கூடாதென்று எச்சரித்தார். அவர் என்னிடம், 12  “கூட்டுச் சேரலாம் என்று இந்த ஜனங்கள் சொன்னால் அவர்கள் சொல்வது போலக் கூட்டுச் சேரக் கூடாது!* இவர்கள் எதற்குப் பயப்படுகிறார்களோ அதற்குப் பயப்படக் கூடாது.அதை நினைத்து நடுங்கக் கூடாது. 13  பரலோகப் படைகளின் யெகோவாவுக்கு மட்டுமே பயப்பட வேண்டும்.அவரை நினைத்துதான் நடுங்க வேண்டும்.+அவர் மட்டும்தான் பரிசுத்தமானவர்+ என்பதை மனதில் வைக்க வேண்டும்” என்று சொன்னார். 14  அவர் புகலிடமாக இருப்பார்.ஆனால், இஸ்ரவேலின் இரண்டு ராஜ்யங்களுக்கும்அவர் தடுக்கி விழ வைக்கும் கல்லாகவும்,மோதி விழ வைக்கும் கற்பாறையாகவும் இருப்பார்.+எருசலேம் குடிமக்களுக்குஒரு கண்ணியாகவும் வலையாகவும் இருப்பார். 15  அவர்களில் நிறைய பேர் தடுக்கி விழுந்து படுகாயம் அடைவார்கள்.கண்ணியில் சிக்கிப் பிடிபடுவார்கள். 16  இதையெல்லாம் சுருளில் எழுதி முடித்தபின் அதைக் கட்டி வை.என் சீஷர்களுக்கான இந்தச் சட்டத்தை* முத்திரை போடு. 17  யாக்கோபின் வம்சத்தாருக்கு யெகோவா தன்னுடைய முகத்தை மறைத்திருக்கிறார்;+ ஆனாலும் நான் அவருக்காக ஆவலோடு காத்திருப்பேன்,+ அவர்மேல் நம்பிக்கையாக இருப்பேன். 18  யெகோவா சீயோன் மலையில் வீற்றிருக்கிறார். பரலோகப் படைகளின் யெகோவா என்னையும் எனக்குத் தந்த பிள்ளைகளையும்+ இஸ்ரவேலில் அடையாளங்களாகவும்+ அற்புதங்களாகவும் வைத்திருக்கிறார். 19  அவர்கள் உங்களிடம், “ஆவிகளோடு பேசுகிறவர்களிடம் அல்லது குறிசொல்கிறவர்களிடம் போய் விசாரியுங்கள், அவர்கள் முணுமுணுப்பதையும் கிசுகிசுப்பதையும் கேளுங்கள்” என்று சொல்வார்கள். ஆனால், அந்த ஜனங்கள் தங்களுடைய கடவுளிடம்தானே விசாரிக்க வேண்டும்? உயிரோடு இருக்கிறவர்களுக்காகச் செத்தவர்களிடம் விசாரிப்பது சரியா?+ 20  அவர்கள் கடவுளுடைய சட்டங்களையும் அவர் எழுதி வைத்திருக்கிற சான்றுகளையும்தானே ஆராய்ந்து பார்க்க வேண்டும்? இவற்றின்படி அவர்கள் பேசாவிட்டால், அவர்களுக்கு விடிவு காலமே வராது.+ 21  வேதனையோடும் பசியோடும்தான் தேசத்தில் அலைந்து திரிவார்கள்.+ பசி தாங்காமல் கோபத்தில் ராஜாவைச் சபிப்பார்கள். மேலே பார்த்து கடவுளையும் சபிப்பார்கள். 22  பின்பு பூமியைப் பார்ப்பார்கள். அங்கு இக்கட்டும் இருட்டுமே இருக்கும். அது இருண்டுபோன கொடிய காலமாக இருக்கும். எங்குமே வெளிச்சம் இருக்காது, கும்மிருட்டுதான் இருக்கும்.

அடிக்குறிப்புகள்

ஒருவேளை இதன் அர்த்தம், “பொருள்களைக் கைப்பற்றுவதற்கு வேகமாக வருதல்.”
நே.மொ., “சாதாரண மனிதனுடைய எழுத்தாணியால்.”
சீலோவா என்பது ஒரு வாய்க்கால்.
அதாவது, “யூப்ரடிஸ் ஆற்றை.”
ஏசா 7:14-ஐப் பாருங்கள்.
“கடவுள் எங்களோடு இருக்கிறார்” என்பதற்கான எபிரெய வார்த்தை இம்மானுவேல். ஏசா 7:14; 8:8-ஐப் பாருங்கள்.
நே.மொ., “இந்த ஜனங்கள் சதித்திட்டம் என்று சொல்வதையெல்லாம் நீங்கள் சதித்திட்டம் என்று சொல்லாதீர்கள்!”
வே.வா., “அறிவுரையை.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா