எசேக்கியேல் 31:1-18
31 11-ஆம் வருஷம், மூன்றாம் மாதம், முதலாம் நாளில் யெகோவா மறுபடியும் என்னிடம்,
2 “மனிதகுமாரனே, எகிப்தின் ராஜாவான பார்வோனிடமும் அவனுடைய ஜனக்கூட்டத்திடமும் இப்படிச் சொல்:+‘உன்னுடைய சிறப்பை எதனோடு ஒப்பிடுவது?
3 நீ அசீரியனைப் போலவும் லீபனோனின் தேவதாரு மரத்தைப் போலவும் இருந்தாய்.அழகான கிளைகளுடன், அடர்த்தியாக வளர்ந்து நிழல் தந்தாய்.மேகங்களைத் தொடுமளவுக்கு உயரமாக நின்றாய்.
4 ஏராளமான தண்ணீர் பாய்ந்ததால் நீ உயரமாகவும் அடர்த்தியாகவும் வளர்ந்தாய்.
நீ நடப்பட்ட இடத்தைச் சுற்றிலும் நீரோடைகள் இருந்தன.அவற்றின் வாய்க்கால்கள் காட்டிலுள்ள எல்லா மரங்களுக்கும் தண்ணீர் பாய்ச்சின.
5 காட்டிலுள்ள எல்லா மரங்களையும்விட நீ மிக உயரமாக வளர்ந்தாய்.
நிறைய தண்ணீர் கிடைத்ததால் நிறைய கிளைகள் விட்டாய்.உன் கிளைகள் நீளமாக வளர்ந்தன.
6 வானத்தில் பறக்கிற எல்லா பறவைகளும் உன் கிளைகளில் கூடுகட்டின.காட்டில் திரிகிற எல்லா மிருகங்களும் உன்னுடைய கிளைகளின் கீழே குட்டி போட்டன.பெரிய தேசங்கள்கூட உன் நிழலில் தங்கின.
7 நீ நீளமாகக் கிளைகள்விட்டு, அழகாக வளர்ந்து, கம்பீரமாக நின்றாய்.ஏராளமான தண்ணீருக்குள் ஆழமாக வேர்விட்டாய்.
8 கடவுளுடைய தோட்டத்திலுள்ள+ வேறெந்தத் தேவதாரு மரமும் உனக்குச் சமமாக முடியாது.
எந்த ஆபால் மரத்துக்கும் உன்னைப் போலக் கொப்புகள் கிடையாது.எந்த அர்மோன் மரத்துக்கும் உன்னைப் போலக் கிளைகள் கிடையாது.
கடவுளுடைய தோட்டத்திலுள்ள வேறெந்த மரத்துக்கும் உன்னைப் போன்ற அழகு கிடையாது.
9 நான் உன்னை அழகாகவும் அடர்த்தியாகவும் வளர வைத்தேன்.உண்மைக் கடவுளுடைய தோட்டமான ஏதேனில் இருக்கிற மற்ற எல்லா மரங்களும் உன்னைப் பார்த்துப் பொறாமைப்பட்டன.’
10 அதனால், உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘நீ மேகத்தையே தொடுமளவுக்கு மிக உயரமாக வளர்ந்தாய். உன்னுடைய உயரத்தால் உன் இதயம் கர்வம் அடைந்தது.
11 அதனால், பலம்படைத்த ராஜாவின் கையில் நான் உன்னைக் கொடுப்பேன்.+ அவன் கண்டிப்பாக உன்னைத் தண்டிப்பான். நீ அக்கிரமம் செய்ததால் நான் உன்னை ஒதுக்கித்தள்ளுவேன்.
12 மிகவும் கொடூரமான தேசத்தார் உன்னை வெட்டி, மலைகளின் மேல் போட்டுவிடுவார்கள். உன்னுடைய இலைகள் எல்லா பள்ளத்தாக்குகளிலும் சிதறிக் கிடக்கும். உன்னுடைய கிளைகள் உடைந்து எல்லா ஓடைகளிலும் விழும்.+ உன்னுடைய நிழலில் இருந்த எல்லா ஜனக்கூட்டங்களும் அங்கிருந்து போய்விடுவார்கள்.
13 விழுந்து கிடக்கிற உன்னுடைய மரத்தின் மேல் எல்லா பறவைகளும் தங்கும். உன்னுடைய கிளைகளின் மேல் எல்லா காட்டு மிருகங்களும் தங்கும்.+
14 தண்ணீருக்குப் பக்கத்தில் இருக்கிற எந்த மரமும் இனி இவ்வளவு உயரமாக வளர்ந்து மேகத்தைத் தொடக் கூடாது என்பதற்காகவே உனக்கு இப்படி நடக்கும். நன்றாகத் தண்ணீர் பாய்ச்சப்படுகிற எந்த மரமும் இனி மேகத்தைத் தொடும் அளவுக்கு உயரமாக வளரக் கூடாது. எல்லா மரங்களுமே வெட்டப்பட்டு, சவக்குழிக்குப் போகிற மனுஷர்களோடு சேர்ந்து மண்ணுக்குக் கீழே போகும்.’
15 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘நீ மண்ணுக்குக் கீழே* போகும் நாளில், நான் ஜனங்களை அழுது புலம்ப வைப்பேன். ஆழத்தில் ஓடும் தண்ணீரை அடைத்துவிடுவேன். அதன் ஓடைகளில் பாய்ந்து வரும் தண்ணீரைத் தடுத்துவிடுவேன். லீபனோனை இருண்டுபோக வைப்பேன். காட்டு மரங்கள் எல்லாமே வாடிப்போகும்.
16 சவக்குழிக்குப் போகிற மனுஷர்களோடு சேர்ந்து உன்னை நான் மண்ணுக்குக் கீழே* போக வைப்பேன். நீ விழும் சத்தத்தைக் கேட்டு தேசங்கள் நடுநடுங்கும். நன்றாகத் தண்ணீர் பாய்ச்சப்பட்ட மரங்களான ஏதேனின் எல்லா மரங்களும்,+ லீபனோனின் மிக அருமையான மரங்களும் மண்ணுக்குக் கீழே ஆறுதல் அடையும்.
17 உன்னோடு சேர்ந்து அவையும் மண்ணுக்குக் கீழே* போய், வாளுக்குப் பலியானவர்களோடு கிடக்கும்.+ உன்னுடைய நிழலில் தங்கியிருந்த உன் ஆதரவாளர்களும் அங்குதான் கிடப்பார்கள்.’+
18 ‘மகிமையிலும் மேன்மையிலும் உனக்குச் சமமாக வேறெந்த மரம் ஏதேனில் இருந்தது?+ ஆனால்கூட, ஏதேனின் மரங்களோடு சேர்ந்து நீயும் மண்ணுக்குக் கீழே போவாய். விருத்தசேதனம் செய்யப்படாத ஜனங்களின் நடுவிலே, வாளுக்குப் பலியான ஆட்களோடு நீயும் கிடப்பாய். பார்வோனுக்கும் அவனுடைய கூட்டத்துக்கும் நடக்கப்போவது இதுதான்’ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்” என்றார்.
அடிக்குறிப்புகள்
^ வே.வா., “கல்லறைக்கு.” சொல் பட்டியலைப் பாருங்கள்.
^ வே.வா., “கல்லறைக்கு.” சொல் பட்டியலைப் பாருங்கள்.
^ வே.வா., “கல்லறைக்கு.” சொல் பட்டியலைப் பாருங்கள்.