எசேக்கியேல் 24:1-27
24 ஒன்பதாம் வருஷம், பத்தாம் மாதம், பத்தாம் நாளில் யெகோவா மறுபடியும் என்னிடம்,
2 “மனிதகுமாரனே, பாபிலோன் ராஜா எருசலேமைத் தாக்க ஆரம்பித்த இந்த நாளையும் தேதியையும் குறித்து வைத்துக்கொள்.+
3 எனக்கு அடங்கி நடக்காத ஜனங்களைப் பற்றிய இந்த உவமையை* நீ சொல்:
‘உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்:
“பானையை எடுத்து அடுப்பில் வையுங்கள். அதில் தண்ணீரை ஊற்றுங்கள்.+
4 அதில் நல்ல நல்ல இறைச்சித் துண்டுகளைப் போடுங்கள்.+தொடையையும், தோள் பகுதியையும், நல்ல நல்ல எலும்புகளையும் போடுங்கள்.
5 அதற்காக மந்தையில் இருக்கிற மிகச் சிறந்த செம்மறியாட்டைத் தேர்ந்தெடுங்கள்.+
பானையின் கீழே விறகுக் கட்டைகளை அடுக்கி வையுங்கள்.
இறைச்சித் துண்டுகளையும் எலும்புகளையும் பானையில் வேக வையுங்கள்.”’
6 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்:
‘இரத்தம் சிந்துகிற நகரத்துக்கு அழிவு வரப்போகிறது!+
அந்த நகரம் களிம்பு* படிந்த ஒரு செம்புப் பானை. அதன் களிம்பு நீக்கப்படவில்லை.
அதிலுள்ள இறைச்சித் துண்டுகளை ஒவ்வொன்றாக வெளியே எடுங்கள்.+
அவற்றுக்காகக் குலுக்கல் போடாதீர்கள்.
7 அவள்* சிந்திய இரத்தம் அவள் நடுவிலேயே இருக்கிறது.+
அதைத் தரையில் ஊற்றி மண்ணினால் மூடாமல்+
வெட்டவெளியில் இருக்கிற வெறுமையான பாறைமேல் ஊற்றினாள்.
8 என்னுடைய கோபத்தைக் காட்டுவதற்கும் அவளைப் பழிவாங்குவதற்கும்,அவள் சிந்திய இரத்தத்தை வெட்டவெளியில் இருக்கிற வெறுமையான பாறைமேல் நான் விட்டுவிட்டேன்.அது மூடி மறைக்கப்படாமல் இருப்பதற்காக அப்படிச் செய்தேன்.’+
9 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்:
‘இரத்தம் சிந்திய நகரத்துக்கு+ அழிவு வரப்போகிறது!
நான் விறகுகளை உயரமாகக் குவித்து வைப்பேன்.
10 நீங்கள் விறகுகளை அடுக்கி வைத்து அதற்குத் தீ மூட்டுங்கள்.இறைச்சியை நன்றாக வேக வைத்து, அந்தத் தண்ணீரை வெளியே ஊற்றுங்கள்.
எலும்புகள் கருகிப்போகட்டும்.
11 காலியான அந்தச் செம்புப் பானையைத் தணல்மேல் வைத்துச் சூடாக்குங்கள்.அதிலுள்ள அசுத்தமெல்லாம் உருகி,+ அதன் களிம்பு போவதற்காக
அது சிவப்பாகும்வரை நன்றாகச் சூடாக்குங்கள்.
12 ஆனால், அதிலிருக்கும் விடாப்பிடியான களிம்பு போகவே போகாது.+சலிப்பும் அலுப்பும்தான் மிஞ்சும்.
அதனால், களிம்பு படிந்த அந்தப் பானையை எடுத்து நெருப்புக்குள் தூக்கிப்போடுங்கள்.’
13 ‘உன்னுடைய வெட்கங்கெட்ட நடத்தையால் நீ அசுத்தமானாய்.+ உன்னைச் சுத்தப்படுத்த நான் முயற்சி செய்தேன். ஆனால், நீ சுத்தம் ஆகவில்லை. எனக்கு உன்மேல் இருக்கிற கோபம் தீரும்வரை நீ சுத்தம் ஆகப்போவதில்லை.+
14 யெகோவாவாகிய நானே இதைச் சொல்கிறேன். இது நடக்கும். நான் தயங்காமலும் வருத்தப்படாமலும் பாவம்பார்க்காமலும் உன்மேல் நடவடிக்கை எடுப்பேன்.+ நீ செய்கிற அக்கிரமங்களுக்குத் தகுந்த தண்டனை உனக்குக் கொடுக்கப்படும்’ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்” என்றார்.
15 யெகோவா மறுபடியும் என்னிடம்,
16 “மனிதகுமாரனே, உனக்குப் பிரியமானவளை நான் தண்டிக்கப்போகிறேன். நீ திடீரென்று அவளைப் பறிகொடுப்பாய்.+ ஆனால், அவளுக்காக அழுது* புலம்பாதே. கண்ணீர் விடாதே.
17 அவளுக்காகத் துக்கம் அனுசரிக்காதே. மனதிலேயே குமுறிக்கொண்டிரு.+ தலைப்பாகையையும்+ செருப்புகளையும் போட்டுக்கொள்.+ உன் மீசையை மூடிக்கொள்ளாதே.+ மற்றவர்கள் கொண்டுவரும் உணவைச் சாப்பிடாதே”+ என்றார்.
18 காலையில் நான் ஜனங்களிடம் பேசினேன். சாயங்காலத்தில் என் மனைவி இறந்துவிட்டாள். எனக்குக் கட்டளை கொடுக்கப்பட்டபடியே மறுநாள் காலையில் செய்தேன்.
19 அப்போது ஜனங்கள் என்னிடம், “ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? இதற்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்டார்கள்.
20 அதற்கு நான், “யெகோவா என்னிடம் இப்படிச் சொன்னார்:
21 ‘இஸ்ரவேல் ஜனங்களிடம் நீ இப்படிச் சொல்: “உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘நீங்கள் என்னுடைய ஆலயத்தைப் பார்த்து மிகவும் பெருமைப்படுகிறீர்கள். அதன்மேல் கொள்ளைப் பிரியம் வைத்திருக்கிறீர்கள். ஆனால், நான் அதைத் தீட்டுப்படுத்தப்போகிறேன்.+ உங்கள் தேசத்தில் நீங்கள் விட்டுவிட்டு வந்த உங்கள் பிள்ளைகள் வாளால் வெட்டிச் சாய்க்கப்படுவார்கள்.+
22 அப்போது, எசேக்கியேல் செய்ததையே நீங்களும் செய்ய வேண்டியிருக்கும். உங்கள் மீசையை மூடிக்கொள்ள மாட்டீர்கள். மற்றவர்கள் கொண்டுவரும் உணவைச் சாப்பிட மாட்டீர்கள்.+
23 தலைப்பாகையையும் செருப்புகளையும் போட்டிருப்பீர்கள். அழுது புலம்ப மாட்டீர்கள். ஆனால், உங்களுடைய குற்றங்களால் உங்கள் வாழ்க்கையைச் சீரழித்துக்கொண்டு வாடி வதங்குவீர்கள்.+ ஒருவரை ஒருவர் பார்த்து மனதுக்குள் குமுறுவீர்கள்.
24 எசேக்கியேல் உங்களுக்கு ஒரு அடையாளமாக இருக்கிறார்.+ அவர் செய்தது போலவே நீங்களும் செய்வீர்கள். நான் சொன்னது நடக்கும்போது, நான் உன்னதப் பேரரசராகிய யெகோவா என்று தெரிந்துகொள்வீர்கள்’”’” என்றேன்.
25 “மனிதகுமாரனே, இந்த ஜனங்கள் அவர்களுடைய அழகான கோட்டையின் மேல் கொள்ளைப் பிரியம் வைத்திருக்கிறார்கள். அதைப் பார்த்து சந்தோஷப்படுகிறார்கள். ஆனால், நான் அதை அழித்துவிடுவேன். அவர்களுடைய பிள்ளைகளையும் அழித்துவிடுவேன்.+
26 அந்த அழிவில் தப்பிக்கிற ஒருவன் உனக்கு அந்தச் செய்தியைச் சொல்வான்.+
27 அவனிடம் நீ வாயைத் திறந்து பேசுவாய். அதற்குமேலும் அமைதியாக இருக்க மாட்டாய்.+ நீ அவர்களுக்கு ஒரு அடையாளமாக இருப்பாய். நான் யெகோவா என்று அவர்கள் தெரிந்துகொள்வார்கள்.”
அடிக்குறிப்புகள்
^ வே.வா., “உருவகக்கதையை.”
^ பித்தளை, செம்பு பாத்திரங்களில் ஏற்படும் பச்சை நிறமுடைய நச்சுத்தன்மையுள்ள படிவு.
^ அதாவது, “அந்த நகரம்.”
^ வே.வா., “நெஞ்சில் அடித்துக்கொண்டு.”