எசேக்கியேல் 21:1-32

21  யெகோவா மறுபடியும் என்னிடம்,  “மனிதகுமாரனே, எருசலேமுக்கு நேராக உன் முகத்தைத் திருப்பிக்கொண்டு, பரிசுத்த இடங்களுக்கு எதிராக ஒரு அறிவிப்பு செய். இஸ்ரவேல் தேசத்துக்கு எதிராகத் தீர்க்கதரிசனம் சொல்.  இஸ்ரவேல் தேசத்திடம் இப்படிச் சொல்: ‘யெகோவா சொல்வது இதுதான்: “நான் உன்னுடைய எதிரியாக வருவேன். என்னுடைய வாளை உறையிலிருந்து உருவி+ உன்னில் இருக்கிற நீதிமான்களையும் பொல்லாதவர்களையும் கொன்றுபோடுவேன்.  தெற்கிலிருந்து வடக்குவரை இருக்கிற எல்லா மனுஷர்களுக்கும் எதிராக என்னுடைய வாளை உருவுவேன். ஏனென்றால், உன்னில் இருக்கிற நீதிமான்களையும் பொல்லாதவர்களையும் நான் கொல்லப்போகிறேன்.  அப்போது, வாளை உறையிலிருந்து உருவியது யெகோவாவாகிய நான்தான் என்று எல்லா ஜனங்களும் தெரிந்துகொள்வார்கள். என்னுடைய வாள் மறுபடியும் அதன் உறைக்குத் திரும்பாது.”’+  மனிதகுமாரனே, நீ நடுக்கத்தோடு பெருமூச்சு விடு. அவர்களுக்குமுன் வேதனையோடு பெருமூச்சுவிடு.+  ‘ஏன் பெருமூச்சு விடுகிறாய்?’ என்று அவர்கள் கேட்டால், ‘ஒரு செய்தி வந்திருப்பதால்தான்’ என்று சொல். ஏனென்றால், அது கண்டிப்பாக வரும். அதைக் கேட்டு எல்லாரும் கதிகலங்கிப்போவார்கள். அவர்களுடைய கைகள் தளர்ந்துவிடும். அவர்களுடைய மனம் சோர்ந்துபோகும். அவர்களுடைய முழங்கால்களில் நீர் வழிந்தோடும்.*+ ‘இதோ, அந்தச் செய்தி கண்டிப்பாக வரும், அது வராமல் போகாது’ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்” என்றார்.  யெகோவா மறுபடியும் என்னிடம்,  “மனிதகுமாரனே, நீ இப்படித் தீர்க்கதரிசனம் சொல்: ‘யெகோவா சொல்வது இதுதான்: “இதோ, ஒரு வாள்! கூர்மையாக்கப்பட்ட வாள்!+ பளபளப்பாக்கப்பட்ட வாள்! 10  ஏராளமானவர்களைக் கொன்று குவிப்பதற்காக அது கூர்மையாக்கப்பட்டது. மின்னலைப் போல மின்னுவதற்காகப் பளபளப்பாக்கப்பட்டது”’” என்று சொன்னார். அப்போது ஜனங்கள், “நாம் சந்தோஷப்பட வேண்டாமா?” என்று கேட்டார்கள். ஆனால் கடவுள், “‘எந்த மரங்களையும் விட்டுவைக்காத என்னுடைய வாள் என்னுடைய மகனுடைய செங்கோலை மட்டும் விட்டுவைக்குமா?’+ என்று கேட்டார். 11  பளபளப்பாக்குவதற்கும் வெட்டுவதற்கும் அது கையில் கொடுக்கப்பட்டது. தண்டனை தருகிறவனுடைய கையில் கொடுப்பதற்காக அது கூர்மையாக்கப்பட்டது, பளபளப்பாக்கப்பட்டது.+ 12  ‘மனிதகுமாரனே, நீ கதறி அழு.+ ஏனென்றால், அந்த வாள் என் ஜனங்களுக்கு எதிராக வந்துவிட்டது. அது இஸ்ரவேலின் தலைவர்கள் எல்லாருக்கும் எதிராக வந்திருக்கிறது.+ அவர்களும் என்னுடைய ஜனங்களும் அந்த வாளுக்குப் பலியாவார்கள். அதனால், வேதனையில் உன் தொடையிலே அடித்துக்கொள். 13  அது பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.+ அந்த வாள் செங்கோலை ஒதுக்கித்தள்ளினால் என்னவாகும்? செங்கோல் இல்லாமல் போய்விடும்’+ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார். 14  ‘மனிதகுமாரனே, நீ தீர்க்கதரிசனம் சொல். உன் கைகளைத் தட்டி, மூன்று தடவை ‘இதோ, ஒரு வாள்!’ என்று சொல். எல்லாரையும் வெட்டி வீழ்த்தும் வாள் அது. அவர்களைச் சுற்றியிருக்கிற எல்லாரையும் கொன்று குவிக்கும் வாள் அது.+ 15  அவர்கள் பயத்தில் குலைநடுங்குவார்கள்.+ நிறைய பேர் நகரவாசல்களில் விழுவார்கள். நான் எல்லாரையும் வாளால் வெட்டிச் சாய்ப்பேன். அது மின்னலைப் போல மின்னும் வாள்! படுகொலை செய்வதற்காகத் தீட்டப்பட்ட வாள்! 16  வாளே, வலது பக்கமாக ஓங்கி வெட்டு! இடது பக்கமாகவும் ஓங்கி வெட்டு! திரும்புகிற பக்கமெல்லாம் வெட்டித்தள்ளு! 17  நானும் கைதட்டி, என் கோபத்தைத் தீர்த்துக்கொள்வேன்.+ யெகோவாவாகிய நானே இதைச் சொல்கிறேன்” என்றார். 18  யெகோவா மறுபடியும் என்னிடம், 19  “மனிதகுமாரனே, நீ ஒரு வழியை வரைந்து காட்டு. அது ஒரு தேசத்திலிருந்து புறப்பட வேண்டும். ஒரு இடத்துக்கு வந்தவுடன் அது இரண்டு வழிகளாகப் பிரிந்து இரண்டு நகரங்களுக்குப் போக வேண்டும். வாளோடு வருகிற பாபிலோன் ராஜா அதில் எந்த வழியில் போவதென்று முடிவுசெய்ய வேண்டும். அது இரண்டாகப் பிரிகிற இடத்தில், திசைகாட்டும் கம்பத்தை நீ நிறுத்த வேண்டும். 20  ஒரு வழி அம்மோனியர்களின் நகரமான ரப்பாவுக்குப்+ போக வேண்டும். இன்னொரு வழி யூதாவிலுள்ள மதில் சூழ்ந்த எருசலேமுக்குப்+ போக வேண்டும். 21  பாபிலோன் ராஜா அந்த இரண்டு வழிகளும் பிரிகிற இடத்தில் நின்று குறிபார்ப்பான். தன்னுடைய அம்புகளைக் குலுக்கிப்போட்டு, தன்னுடைய சிலைகளிடம்* விசாரிப்பான். கல்லீரலை வைத்துக் குறிபார்ப்பான். 22  அப்போது, எருசலேமுக்குப் போக வேண்டும் என்று அவனுடைய வலது கையில் குறி கிடைக்கும். மதில் இடிக்கும் இயந்திரங்களைக் கொண்டுபோய் நிறுத்தும்படியும், தாக்குதலை ஆரம்பிக்க கட்டளை கொடுக்கும்படியும், போர் முழக்கம் செய்யும்படியும், இயந்திரங்களால் நுழைவாசல்களை இடிக்கும்படியும், சுற்றிலும் மண்மேடுகளை எழுப்பும்படியும், முற்றுகைச் சுவரைக் கட்டும்படியும்+ அவனுக்குக் குறி கிடைக்கும். 23  ஆனால், இதெல்லாம் பொய் என்று அவர்களுக்கு* உறுதிமொழி கொடுத்தவர்கள்* நினைப்பார்கள்.+ இருந்தாலும், அவர்கள் செய்த குற்றங்கள் பாபிலோன் ராஜாவின் நினைவுக்கு வரும், அவன் அவர்களைப் பிடித்துக்கொண்டு போவான்.+ 24  உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘உங்கள் குற்றங்கள் அம்பலமாகிவிட்டன, நீங்கள் செய்த எல்லா பாவங்களும் வெட்டவெளிச்சத்துக்கு வந்துவிட்டன. உங்களுடைய குற்றங்களை நீங்களே நினைவுக்குக் கொண்டுவந்துவிட்டீர்கள். அதனால், இப்போது பலவந்தமாகப் பிடித்துக்கொண்டு போகப்படுவீர்கள்.’ 25  இஸ்ரவேலின் பொல்லாத தலைவனே,+ படுகாயம் அடைந்தவனே, நீ இறுதி தண்டனையைப் பெறப்போகும் நாள் வந்துவிட்டது. 26  உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘உன்னுடைய தலைப்பாகையைக் கழற்று! உன் கிரீடத்தை எடுத்துவிடு!+ எல்லாம் மாறப்போகிறது.+ உயர்ந்தவனை* தாழ்த்து,+ தாழ்ந்தவனை* உயர்த்து.+ 27  நான் ஆட்சியைக் கவிழ்ப்பேன், கவிழ்ப்பேன், கவிழ்ப்பேன். உரிமைக்காரர் வரும்வரை அது யாருடைய கைக்கும் போகாது.+ நான் அவருக்குத்தான் அதைக் கொடுப்பேன்.’+ 28  மனிதகுமாரனே, நீ இப்படித் தீர்க்கதரிசனம் சொல்: ‘அம்மோனியர்களைப் பற்றியும் அவர்களுடைய பழிப்பேச்சுகளைப் பற்றியும் உன்னதப் பேரரசராகிய யெகோவா இதைச் சொல்கிறார். இதோ ஒரு வாள் உருவப்பட்டிருக்கிறது! கொன்று குவிப்பதற்காக அது உருவப்பட்டிருக்கிறது. வெட்டி வீழ்த்தவும் மின்னலைப் போல் மின்னவும் அது தீட்டப்பட்டிருக்கிறது. 29  குறிசொல்கிறவர்கள் உன்னைப் பற்றிப் பொய்யாகக் குறிசொன்னார்கள், தீர்க்கதரிசிகள் உன்னைப் பற்றிப் பொய்த் தரிசனங்களைப் பார்த்தார்கள். ஆனாலும், நீ பொல்லாதவர்களுடைய பிணங்களோடு சேர்த்துக் குவிக்கப்படுவாய். அவர்களுக்கு இறுதி தண்டனை கிடைக்கும் நாள் வந்துவிட்டது. 30  வாளை மறுபடியும் உறையில் போடு. நீ பிறந்த தேசமாகிய உன் சொந்த தேசத்தில் நான் உன்னை நியாயந்தீர்ப்பேன். 31  என்னுடைய கோபத்தை உன்மேல் கொட்டுவேன். அது நெருப்பு போல உன்னைச் சுட்டெரிக்கும். அழிப்பதில் சாமர்த்தியமுள்ள கொடூரக்காரர்களின் கையில் உன்னைக் கொடுப்பேன்.+ 32  நீ நெருப்புக்குப் பலியாவாய்.+ உன் இரத்தம் உன் தேசத்தில் சிந்திக் கிடக்கும். இனி நீ நினைக்கப்பட மாட்டாய். யெகோவாவாகிய நானே இதைச் சொல்கிறேன்’” என்றார்.

அடிக்குறிப்புகள்

அதாவது, “பயத்தில் அவர்கள் சிறுநீர் கழித்துவிடுவார்கள்.”
வே.வா., “குலதெய்வச் சிலைகளிடம்.”
அநேகமாக, “பாபிலோனியர்களுக்கு.”
அதாவது, “எருசலேம் ஜனங்கள்.”
வே.வா., “தாழ்ந்ததை.”
வே.வா., “உயர்ந்ததை.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா