ஆதியாகமம் 43:1-34

43  அந்தத் தேசத்தில் பஞ்சம் கடுமையாக இருந்தது.+  எகிப்திலிருந்து வாங்கிவந்த தானியம் தீர்ந்துபோனபோது,+ அவர்களுடைய அப்பா அவர்களிடம், “மறுபடியும் போய், நமக்குக் கொஞ்சம் தானியம் வாங்கிக்கொண்டு வாருங்கள்” என்றார்.  அப்போது யூதா அவரிடம், “‘உங்களுடைய தம்பியைக் கூட்டிக்கொண்டு வரவில்லை என்றால் என் முகத்திலேயே முழிக்க வேண்டாம்’ என்று அந்த மனுஷர் எங்களைக் கடுமையாக எச்சரித்திருக்கிறார்.+  தம்பியை நீங்கள் எங்களுடன் அனுப்பி வைத்தால்தான் நாங்கள் போய் தானியம் வாங்கிக்கொண்டு வருவோம்.  இல்லையென்றால் நாங்கள் போக மாட்டோம். ஏனென்றால், ‘உங்களுடைய தம்பியைக் கூட்டிக்கொண்டு வராவிட்டால் என் முகத்திலேயே முழிக்க வேண்டாம்’ என்று அந்த மனுஷர் எங்களிடம் சொல்லியிருக்கிறார்”+ என்றார்.  அப்போது இஸ்ரவேல்+ அவர்களிடம், “உங்களுக்கு இன்னொரு தம்பி இருக்கிறான் என்று அவரிடம் எதற்காகச் சொன்னீர்கள்? ஏன் எனக்கு இவ்வளவு பெரிய பிரச்சினையைக் கொண்டுவந்தீர்கள்?” என்று கோபமாகக் கேட்டார்.  அதற்கு அவர்கள், “எங்களைப் பற்றி அவர் நேரடியாகக் கேட்டார். நம் குடும்பத்தில் வேறு யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று விசாரித்தார். ‘உங்களுக்கு அப்பா இருக்கிறாரா? இன்னொரு தம்பி இருக்கிறானா?’ என்றெல்லாம் கேட்டார். அதனால்தான் நாங்கள் இதையெல்லாம் சொன்னோம்.+ தம்பியைக் கூட்டிக்கொண்டு வரச் சொல்வாரென்று எங்களுக்கு எப்படித் தெரியும்?”+ என்றார்கள்.  அப்போது, யூதா தன்னுடைய அப்பா இஸ்ரவேலிடம், “நீங்களும் நாங்களும் எங்கள் பிள்ளைகுட்டிகளும்+ சாகாமல் உயிரோடிருக்க வேண்டுமென்றால்,+ அவனை என்னோடு அனுப்பி வையுங்கள்.+ நாங்கள் போகிறோம்.  அவனுடைய உயிருக்கு நான் உத்தரவாதம் தருகிறேன்.+ அவனுக்கு ஏதாவது ஆகிவிட்டால் அதற்கு நான் பொறுப்பு. நான் அவனைக் கூட்டிக்கொண்டு வந்து உங்கள்முன் நிறுத்தாவிட்டால், நான் சாகும்வரைக்கும் அந்தப் பழி என் தலைமேல் இருக்கட்டும். 10  நீங்கள் எங்களை முன்பே போக விட்டிருந்தால், இந்நேரத்துக்குள் இரண்டு தடவை போய்விட்டு வந்திருப்போம்” என்று சொன்னார். 11  அதற்கு அவர்களுடைய அப்பா இஸ்ரவேல், “அப்படியென்றால் ஒன்று செய்யுங்கள். இந்தத் தேசத்திலுள்ள சிறந்த பொருள்களை உங்களுடைய பைகளில் எடுத்துக்கொண்டுபோய் அவருக்கு அன்பளிப்பாகக் கொடுங்கள்.+ கொஞ்சம் பரிமளத் தைலத்தையும்,+ கொஞ்சம் தேனையும், மலைரோஜா பிசினையும், பிசின் பட்டையையும்,+ பாதாமையும், பிஸ்தாவையும் கொண்டுபோய்க் கொடுங்கள். 12  இரண்டு மடங்கு பணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் பைகளில் திருப்பி அனுப்பப்பட்ட பணத்தையும்+ எடுத்துக்கொள்ளுங்கள். அதை ஒருவேளை அவர்கள் தவறுதலாக வைத்திருக்கலாம். 13  உங்கள் தம்பியைக் கூட்டிக்கொண்டு அந்த மனுஷரிடம் போங்கள். 14  சர்வவல்லமையுள்ள கடவுள் உங்களுக்கு அந்த மனுஷருடைய இரக்கம் கிடைக்கும்படி செய்யட்டும். உங்களுடைய இன்னொரு சகோதரனை அவர் விடுதலை செய்து, அவனையும் பென்யமீனையும் உங்களோடு அனுப்பி வைக்கட்டும். ஒருவேளை நான் என் பிள்ளைகளைப் பறிகொடுக்க வேண்டுமென்றால் பறிகொடுத்துதான் ஆக வேண்டும்!”+ என்றார். 15  அவர்கள் அந்த அன்பளிப்புகளையும் இரண்டு மடங்கு பணத்தையும் எடுத்துக்கொண்டு பென்யமீனோடு எகிப்துக்குப் புறப்பட்டுப் போய், மறுபடியும் யோசேப்பின் முன்னால் நின்றார்கள்.+ 16  யோசேப்பு பென்யமீனைப் பார்த்தவுடன், தன்னுடைய வீட்டு நிர்வாகியிடம், “இவர்களை வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போ. மத்தியானம் இவர்கள் என்னோடு சாப்பிடுவார்கள். அதனால், ஆடுமாடுகளை அடித்து விருந்துக்கு ஏற்பாடு செய்” என்று சொன்னார். 17  உடனே அந்த நிர்வாகி, யோசேப்பு சொன்னபடி அவர்களை அவருடைய வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போனார்.+ 18  யோசேப்பின் வீட்டுக்குக் கொண்டுபோகப்பட்டதால் அவர்கள் பயந்துபோய், “போன தடவை நம்முடைய பைகளில் பணம் இருந்ததென்று சொல்லி இப்போது அவர்கள் நம்மை அடித்து உதைத்து அடிமைகளாக்கிவிடுவார்கள். நம்முடைய கழுதைகளையும் பிடுங்கிக்கொள்வார்கள்!”+ என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டார்கள். 19  அதனால், யோசேப்பின் வீட்டு வாசலில் நின்றபடி அவர்கள் அந்த நிர்வாகியிடம், 20  “எஜமானே! தானியம் வாங்க முன்பு ஒருமுறை நாங்கள் இங்கே வந்திருந்தோம்.+ 21  திரும்பிப்போகும் வழியில் ஒரு சத்திரத்திலே எங்களுடைய பைகளைத் திறந்து பார்த்தபோது, அவரவர் பையில் அவரவர் பணம் அப்படியே இருந்தது.+ அதை எங்கள் கையாலேயே உங்களிடம் திருப்பிக் கொடுக்க விரும்புகிறோம். 22  தானியம் வாங்க இன்னும் நிறைய பணம் கொண்டுவந்திருக்கிறோம். யார் எங்களுடைய பையில் பணத்தைத் திருப்பி வைத்தார்கள் என்று எங்களுக்குத் தெரியாது”+ என்று சொன்னார்கள். 23  அதற்கு அவர், “பரவாயில்லை, பயப்படாதீர்கள்! உங்கள் முன்னோர்களுக்கும் உங்களுக்கும் கடவுளாக இருப்பவர்தான் உங்களுடைய பைகளில் இந்தப் பணத்தை வைத்திருப்பார். நீங்கள் கொடுத்த பணம் எனக்கு ஏற்கெனவே கிடைத்துவிட்டது” என்றார். அதன்பின், சிமியோனை அவர்களிடம் கூட்டிக்கொண்டு வந்தார்.+ 24  பிறகு, அந்த நிர்வாகி அவர்களை யோசேப்பின் வீட்டுக்குள் கூட்டிக்கொண்டுபோய், பாதங்களைக் கழுவ தண்ணீர் தந்தார். அவர்களுடைய கழுதைகளுக்குத் தீவனமும் தந்தார். 25  அவர்கள் யோசேப்புக்காக அன்பளிப்புகளை+ எடுத்துத் தயாராக வைத்தார்கள். ஏனென்றால், அவர்களோடு சாப்பிடுவதற்கு அவர் மத்தியானம் வரப்போகிறார் என்று கேள்விப்பட்டார்கள்.+ 26  யோசேப்பு வீட்டுக்குள் வந்தபோது, அவருக்கு அன்பளிப்புகளைக் கொண்டுவந்து கொடுத்து, அவர்முன் சாஷ்டாங்கமாக விழுந்தார்கள்.+ 27  அவர் அவர்களிடம் நலம் விசாரித்தார். அதன்பின், “உங்களுக்கு வயதான அப்பா இருப்பதாகச் சொல்லியிருந்தீர்களே, அவர் நன்றாக இருக்கிறாரா?”+ என்று கேட்டார். 28  அதற்கு அவர்கள், “உங்கள் அடிமையாகிய எங்கள் அப்பா நன்றாக இருக்கிறார்” என்று சொன்னார்கள். பின்பு, அவர்முன் சாஷ்டாங்கமாக விழுந்தார்கள்.+ 29  அவர் தன்னுடைய கூடப்பிறந்த தம்பி பென்யமீனைப்+ பார்த்தபோது, “நீங்கள் சொன்ன கடைசித் தம்பி இவன்தானா?”+ என்று கேட்டார். பின்பு, “என் மகனே, கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும்” என்றார். 30  தம்பியைப் பார்த்த பின்பு யோசேப்பினால் அழுகையை அடக்கவே முடியவில்லை. அதனால், வேகமாக ஓர் அறைக்குள் போய் அங்கே கண்ணீர்விட்டு அழுதார்.+ 31  அதன்பின் தன்னுடைய உணர்ச்சியைக் கட்டுப்படுத்திக்கொண்டு, தன்னுடைய முகத்தைக் கழுவினார். பிறகு வெளியே வந்து தன்னுடைய வேலைக்காரர்களிடம், “உணவு பரிமாறுங்கள்” என்று சொன்னார். 32  அவர்கள் யோசேப்புக்குத் தனியாகவும், அவருடைய சகோதரர்களுக்குத் தனியாகவும், அங்கிருந்த எகிப்தியர்களுக்குத் தனியாகவும் பரிமாறினார்கள். ஏனென்றால், எபிரெயர்களுடன் உணவு சாப்பிடுவதை எகிப்தியர்கள் அருவருப்பாக நினைத்தார்கள்.+ 33  யோசேப்பின் சகோதரர்கள் அவர்முன் உட்கார வைக்கப்பட்டார்கள். அவர்களில் மூத்தவன் மூத்த மகனின் உரிமைப்படி+ முதலாவதாகவும், மற்றவர்கள் அவரவர் வயதின்படி வரிசையாகவும் உட்கார வைக்கப்பட்டார்கள். அப்போது, அவர்கள் ஒருவரை ஒருவர் ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டார்கள். 34  அவர் தன்னுடைய மேஜையிலிருந்து உணவு வகைகளை அவர்களுக்கு அனுப்பிக்கொண்டே இருந்தார். மற்ற எல்லாரையும்விட பென்யமீனுக்கு ஐந்து பங்கு அதிகமாக அனுப்பினார்.+ அவர்கள் திருப்தியாகச் சாப்பிட்டார்கள், குடித்தார்கள்.

அடிக்குறிப்புகள்

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா