ஆளும் குழுவிடமிருந்து ஒரு கடிதம்
‘நீங்கள் போதகர்களாக இருக்க வேண்டும்’ என்று பைபிள் சொல்கிறது. (எபி. 5:12) இதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: இந்தப் பிரபஞ்சத்திலேயே மிகச் சிறந்த போதகரான யெகோவா, தன்னைப் பற்றி மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்க நம்மை அழைக்கிறார்! குடும்பத்திலும், சபையிலும், வெளி ஊழியத்திலும் யெகோவாவைப் பற்றிய உண்மைகளைக் கற்றுக்கொடுக்க நமக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கின்றன. அந்த ஒவ்வொரு வாய்ப்பும் நமக்குக் கிடைக்கிற அருமையான பாக்கியம், பெரிய பொறுப்பும்கூட! அப்படியென்றால், இந்தப் பொறுப்பை நாம் எப்படிச் சிறப்பாகச் செய்யலாம்?
இதைத் தெரிந்துகொள்வதற்கு, தீமோத்தேயுவுக்கு அப்போஸ்தலன் பவுல் எழுதிய இந்த வார்த்தைகளைக் கவனியுங்கள்: “சபையார் முன்னால் வாசிப்பதிலும், அவர்களுக்கு அறிவுரை சொல்வதிலும், கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபட்டுக்கொண்டிரு. . . . இப்படிச் செய்யும்போது நீயும் மீட்புப் பெறுவாய், நீ சொல்வதைக் கேட்கிறவர்களும் மீட்புப் பெறுவார்கள்.” (1 தீ. 4:13, 16) உயிரைப் பாதுகாக்கும் செய்தியை நாம் மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டியிருப்பதால், வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முன்னேற வேண்டியது அவசியம். அதைச் செய்ய இந்தச் சிற்றேடு உங்களுக்கு உதவும். இந்தச் சிற்றேட்டின் சில அம்சங்களைக் கவனியுங்கள்:
ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு பைபிள் வசனம் கொடுக்கப்பட்டிருக்கும். அந்தப் பக்கத்தில் சொல்லப்படும் படிப்புக் குறிப்போடு சம்பந்தப்பட்ட ஒரு நியமம் அல்லது உதாரணம் அந்த வசனத்தில் இருக்கும்.
யெகோவாதான் ‘மகத்தான போதகர்’ என்று பைபிள் சொல்கிறது. (ஏசா. 30:20) இந்தச் சிற்றேடு, வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் உங்கள் திறமையை மெருகூட்டும்; ஆனால், நாம் சொல்லும் செய்தி யெகோவாவின் செய்தி என்பதையும், அவர்தான் மக்களைத் தன்னிடம் ஈர்க்கிறார் என்பதையும் ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். (யோவா. 6:44) கடவுளுடைய சக்தியைக் கேட்டு அடிக்கடி ஜெபம் செய்யுங்கள். அதோடு, அவருடைய வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துங்கள். மற்றவர்களுடைய கவனத்தை உங்களிடம் திருப்பாமல், யெகோவாவிடம் திருப்புங்கள். யெகோவாவின் மேல் இதயப்பூர்வமான அன்பை வளர்த்துக்கொள்ள அவர்களுக்கு உதவுங்கள்.
மனிதர்களுக்குக் கொடுக்கப்பட்ட செய்திகளிலேயே மிக முக்கியமான செய்தியைப் பற்றிக் கற்றுக்கொடுக்க நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்! “கடவுள் கொடுக்கிற பலத்தில்” சார்ந்திருந்து இந்த வேலையைச் சிறப்பாகச் செய்வீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.—1 பே. 4:11.
உங்கள் சக போதகர்கள்,
யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழு