அதிகாரம் 26
“மன்னிக்க தயாராக இருக்கிற” கடவுள்
1-3. (அ) தாவீதின் பாரமான சுமை எது, அலைக்கழிக்கும் இதயத்திற்கு அவர் எவ்வாறு ஆறுதலை கண்டடைந்தார்? (ஆ) நாம் பாவம் செய்கையில் எப்படிப்பட்ட பாரத்தை சுமக்கலாம், ஆனால் யெகோவா நமக்கு என்ன உறுதியளிக்கிறார்?
“என்னுடைய குற்றங்கள் என் தலைக்குமேல் குவிந்திருக்கின்றன. பாரமான சுமைபோல் என்னை அழுத்துகின்றன. என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. நான் உணர்ச்சியற்றவன்போல் ஆகிவிட்டேன், நொறுங்கிப்போய்விட்டேன்” என சங்கீதக்காரனாகிய தாவீது எழுதினார். (சங்கீதம் 38:4, 8) குற்றமுள்ள மனசாட்சியின் சுமை எவ்வளவு பாரமாயிருக்கும் என்பதை தாவீது அறிந்திருந்தார். ஆனால் அலைக்கழிக்கும் தன் இதயத்திற்கு ஆறுதலை கண்டடைந்தார். யெகோவா பாவத்தை வெறுக்கிறபோதிலும், பாவம் செய்தவர் உண்மையிலேயே மனந்திரும்பி தன் பாவப் போக்கை விட்டொழித்தால் அவரை அவர் வெறுப்பதில்லை என்பதை தாவீது புரிந்துகொண்டார். மனந்திரும்புவோருக்கு யெகோவா மனப்பூர்வமாய் இரக்கம் காட்டுவார் என்பதில் முழு நம்பிக்கை வைத்து, தாவீது இவ்வாறு கூறினார்: “யெகோவாவே, நீங்கள் . . . மன்னிக்கத் தயாராக இருக்கிறவர்.”—சங்கீதம் 86:5.
2 பாவம் செய்யும்போது வேதனைமிக்க மனசாட்சியின் பாரச் சுமை நம்மையும் நொறுக்கலாம். ஆனாலும் இத்தகைய மனவேதனை பயனுள்ளது. ஏனென்றால் நம்முடைய தவறுகளை சரிசெய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க அது நம்மை உந்துவிக்கலாம். இருந்தாலும், குற்றவுணர்ச்சியால் ஒரேடியாக அமிழ்ந்துபோகும் ஆபத்தும் இருக்கிறது. நாம் எவ்வளவுதான் மனந்திரும்பினாலும் யெகோவா நம்மை மன்னிக்கவே மாட்டார் என நம்முடைய இதயம் நம்மை கண்டனம் செய்யலாம். நாம் குற்றவுணர்ச்சியால் ‘ஒரேயடியாகச் சோகத்தில் மூழ்கிவிட்டால்,’ யெகோவா நம்மை லாயக்கற்றவர்களாக கருதுகிறார் என்றும் அவரை சேவிப்பதற்கு நம்மை தகுதியற்றவர்களாக கருதுகிறார் என்றும் நினைக்க வைக்க சாத்தான் முயலுவான். அவருடைய சேவையை நாம் கைவிட்டுவிடும்படி செய்வதற்கும் அவன் முயலுவான்.—2 கொரிந்தியர் 2:5-11.
3 உண்மையிலேயே நம்மை லாயக்கற்றவர்களாக யெகோவா கருதுகிறாரா? நிச்சயமாகவே இல்லை! மன்னிப்பது யெகோவாவின் ஒப்பற்ற அன்பின் ஓர் அம்சம். நாம் உண்மையான மனந்திரும்புதலை இதயப்பூர்வமாகக் காட்டும்போது நம்மை மன்னிக்க தயாராயிருப்பதை அவர் தம்முடைய வார்த்தையில் உறுதியளிக்கிறார். (நீதிமொழிகள் 28:13) யெகோவாவின் மன்னிப்பை நாம் பெறவே முடியாது என்ற முடிவுக்கு வராமலிருக்க, அவர் ஏன் மன்னிக்கிறார், எப்படி மன்னிக்கிறார் என்பதை ஆராய்வோமாக.
யெகோவா ஏன் “மன்னிக்கத் தயாராக இருக்கிறார்”
4. நம்முடைய இயல்பைக் குறித்து யெகோவா என்ன நினைத்துப் பார்க்கிறார், அவர் நம்மை நடத்தும் விதத்தை இது எவ்வாறு பாதிக்கிறது?
4 யெகோவா நம்முடைய வரம்புகளை அறிந்திருக்கிறார். “நாம் எப்படி உருவாக்கப்பட்டோம் என்பதை அவர் நன்றாக அறிந்திருக்கிறார். நாம் மண் என்பதை அவர் நினைத்துப் பார்க்கிறார்” என சங்கீதம் 103:14 சொல்கிறது. நாம் மண்ணினால் உருவாக்கப்பட்டிருப்பதையும் பாவ இயல்பின் காரணமாக பலவீனங்களைப் பெற்றிருப்பதையும் அவர் மறந்துவிடுவதில்லை. “நாம் எப்படி உருவாக்கப்பட்டோம் என்பதை” அவர் அறிவார் என்ற சொற்றொடர், பைபிளில் உள்ள ஒரு ஒப்புமையை நமக்கு நினைப்பூட்டுகிறது. அதில், யெகோவா ஒரு குயவர் என்றும் நாமோ அவர் உருவாக்கும் களிமண் பாண்டங்கள் என்றும் சொல்லப்படுகிறது. (எரேமியா 18:2-6) ஆகவே, நம்முடைய பாவ இயல்புக்கு ஏற்பவும், அவருடைய வழிநடத்துதலை ஏற்கிறோமா இல்லையா என்பதைப் பொறுத்தும் பெரிய குயவர் நம்மை நியாயமாக நடத்துகிறார்.
5. பாவத்தின் பலமான பிடியை ரோமர் புத்தகம் எவ்வாறு வர்ணிக்கிறது?
5 பாவம் எவ்வளவு வல்லமை வாய்ந்தது என்பதை யெகோவா புரிந்துகொள்கிறார். பாவம் வலிமை வாய்ந்தது என்றும், சாவுக்கேதுவான அதன் பிடியில் மனிதனை வைத்திருக்கிறது என்றும் அவருடைய வார்த்தை விவரிக்கிறது. பாவத்தின் பிடி எவ்வளவு பலமானது? இதை ரோமர் புத்தகத்தில் அப்போஸ்தலன் பவுல் இவ்வாறெல்லாம் விளக்குகிறார்: படைவீரர்கள் தளபதியின் கீழ் இருப்பதுபோல, நாம் “பாவத்தின் பிடியில்” இருக்கிறோம் (ரோமர் 3:9); பாவம் ஓர் ராஜாவைப் போல மனிதவர்க்கத்தை ‘ஆட்சி செய்திருக்கிறது’ (ரோமர் 5:21); பாவம் நமக்குள் ‘குடியிருக்கிறது’ (ரோமர் 7:17, 20); அதன் “சட்டம்” நம்மில் தொடர்ந்து செயல்பட்டு, நம்முடைய போக்கை கட்டுப்படுத்த முயலுகிறது. (ரோமர் 7:23, 25) ஆகவே, பாவத்தின் உடும்புப் பிடியில் நம் குறையுள்ள உடல் சிக்கித் தவிப்பது தெளிவாகத் தெரிகிறது.—ரோமர் 7:21, 24.
6, 7. (அ) நொறுங்கிய இதயத்தோடு தம்முடைய இரக்கத்தை நாடுகிறவர்களை யெகோவா எவ்வாறு கருதுகிறார்? (ஆ) ஏன் கடவுளுடைய இரக்கத்தை நமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளக் கூடாது?
6 இந்தப் பாவப் பிடியின் காரணமாக, நாம் எவ்வளவுதான் கடினமாக முயன்றாலும் முழுமையான கீழ்ப்படிதலைக் காட்ட முடியாது என்பதை யெகோவா அறிந்திருக்கிறார். நொறுங்கிய இதயத்தோடு அவருடைய இரக்கத்தை நாடும்போது மன்னிப்பு அளிப்பதாக அவர் நமக்கு அன்போடு உறுதியளிக்கிறார். சங்கீதம் 51:17 இவ்வாறு சொல்கிறது: “உடைந்த மனம்தான் கடவுளுக்குப் பிரியமான பலியாக இருக்கிறது. கடவுளே, உடைந்த உள்ளத்தையும் நொறுங்கிய நெஞ்சத்தையும் நீங்கள் ஒதுக்கித்தள்ள மாட்டீர்கள்.” குற்றவுணர்ச்சியின் பாரத்தால் “உடைந்த உள்ளத்தையும் நொறுங்கிய நெஞ்சத்தையும்” யெகோவா ஒதுக்கித்தள்ள மாட்டார்.
7 ஆனால் நம்முடைய பாவமுள்ள இயல்பை சாக்காக பயன்படுத்தி, அடுத்தடுத்து பாவம் செய்து, கடவுளுடைய இரக்கத்தை நமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என இது அர்த்தப்படுத்துகிறதா? நிச்சயமாகவே இல்லை! யெகோவா எதையும் உணர்ச்சிவசப்பட்டு செய்கிறவரல்ல. அவருடைய இரக்கத்திற்கு எல்லை உண்டு. துளிகூட மனந்திரும்பாமல் கடின இதயத்துடன் வேண்டுமென்றே பாவத்தை பழக்கமாக செய்கிறவர்களை அவர் மன்னிக்கவே மாட்டார். (எபிரெயர் 10:26) மறுபட்சத்தில், நொறுங்கிய இதயத்தைப் பார்க்கும்போது, மன்னிப்பதற்கு தயாராயிருக்கிறார். யெகோவாவுடைய அன்பின் இந்த அற்புதமான அம்சத்தை விவரிப்பதற்கு பைபிளில் பயன்படுத்தப்பட்டுள்ள தத்ரூபமான மொழிநடைகள் சிலவற்றை இப்பொழுது நாம் ஆராயலாம்.
யெகோவா எந்தளவு முழுமையாக மன்னிக்கிறார்?
8. நம்முடைய பாவங்களை மன்னிக்கும்போது யெகோவா என்ன செய்கிறார், இது நமக்கு என்ன நம்பிக்கையைத் தருகிறது?
8 மனந்திரும்பிய தாவீது இவ்வாறு கூறினார்: “கடைசியில், என் பாவத்தை உங்களிடம் ஒத்துக்கொண்டேன். என் தவறுகள் எதையும் மறைக்கவில்லை. . . . நீங்களும் என்னுடைய பாவங்களையெல்லாம் மன்னித்தீர்கள்.” (சங்கீதம் 32:5) “மன்னித்தீர்கள்” என மொழிபெயர்க்கப்பட்டுள்ள எபிரெய வார்த்தை, “தூக்கியெடு” அல்லது “சுமந்துசெல்” என அடிப்படையில் அர்த்தப்படுத்துகிறது. இங்கே இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டிருப்பது, “குற்றத்தை, பாவத்தை, மீறுதலை” நீக்கிவிடுவதைக் குறிக்கிறது. ஆகவே, தாவீதின் பாவங்களை யெகோவா தூக்கியெடுத்து சுமந்து சென்றதாக சொல்லலாம். இது, தாவீது சுமந்து கொண்டிருந்த குற்றவுணர்ச்சிகளை தணித்தது என்பதில் சந்தேகமே இல்லை. (சங்கீதம் 32:3) இயேசுவின் மீட்கும் பலியில் விசுவாசம் வைத்து, மன்னிப்பை நாடுகிறவர்களுடைய பாவங்களை சுமந்து செல்கிற இப்படிப்பட்ட கடவுளில் நாமும் முழு நம்பிக்கை வைக்கலாம்.—மத்தேயு 20:28.
9. நம்முடைய பாவங்களை யெகோவா நம்மைவிட்டு எவ்வளவு தூரம் போட்டுவிடுகிறார்?
9 யெகோவாவின் மன்னிப்பை விவரிப்பதற்கு தாவீது மற்றொரு தத்ரூபமான சொற்றொடரைப் பயன்படுத்தினார்: “கிழக்குக்கும் மேற்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரத்துக்கு நம்முடைய குற்றங்களை அவர் தூக்கியெறிந்திருக்கிறார்.” (சங்கீதம் 103:12) கிழக்குக்கும் மேற்குக்கும் எவ்வளவு தூரம்? ஒரு கருத்தில், நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு கிழக்கு எப்பொழுதும் மேற்கிலிருந்து வெகு தொலைவில் இருக்கிறது; அவை இரண்டும் சந்திக்கவே முடியாது. இச்சொற்றொடர், “எந்தளவு தூரமாக இருக்க முடியுமோ அந்தளவு தூரமாக; நம்மால் எந்தளவு கற்பனை செய்ய முடியுமோ அந்தளவு தூரமாக” என அர்த்தப்படுத்துவதாக ஓர் அறிஞர் குறிப்பிடுகிறார். யெகோவா மன்னிக்கும்போது, நம்மால் எந்தளவு கற்பனை செய்ய முடியுமோ அந்தளவு தூரத்தில் நம்முடைய பாவங்களை போட்டுவிடுகிறார் என கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் தாவீது எழுதிய வார்த்தைகள் சொல்கின்றன.
10. யெகோவா நம் பாவங்களை மன்னிக்கும்போது, நம்முடைய மீதமுள்ள வாழ்நாள் காலமெல்லாம் இத்தகைய பாவக் கறைகளை சுமப்போம் என நாம் ஏன் எண்ண வேண்டிய அவசியமில்லை?
10 வெள்ளை ஆடையிலிருந்து கறையை நீக்குவதற்கு நீங்கள் எப்பொழுதாவது முயற்சி செய்திருக்கிறீர்களா? நீங்கள் எவ்வளவுதான் முயன்றும் அந்தக் கறை போகாமல் அப்படியே இருந்திருக்கலாம். ஆனால், தம்மால் எந்தளவு மன்னிக்க முடியும் என்பதை யெகோவா வர்ணிக்கும் விதத்தைக் கவனியுங்கள்: “உங்களுடைய பாவங்கள் இரத்தம்போல் சிவப்பாக இருந்தாலும், பனிபோல் வெண்மையாகும். செக்கச்செவேல் என்று இருந்தாலும், வெள்ளைவெளேர் என்று ஆகும்.” (ஏசாயா 1:18) நம்முடைய சொந்த முயற்சியால் பாவத்தின் கறையை நாம் ஒருகாலும் நீக்க முடியாது. ஆனால், கடுஞ்சிவப்பாகவும், a இரத்த நிறமாகவும் இருக்கிற பாவங்களை உறைந்த பனியைப் போலவோ அல்லது சாயமேற்றப்படாத பஞ்சைப் போலவோ யெகோவா வெண்மையாக்குவார். யெகோவா நம்முடைய பாவங்களை மன்னிக்கும்போது, நம்முடைய மீதமுள்ள வாழ்நாள் காலமெல்லாம் இத்தகைய பாவக் கறைகளை நாம் சுமப்போம் என எண்ண வேண்டிய அவசியமில்லை.
11. என்ன அர்த்தத்தில் யெகோவா நம் பாவங்களை தமது முதுகுக்குப் பின்னால் எறிந்துவிடுகிறார்?
11 சாவுக்கேதுவான வியாதியிலிருந்து காப்பாற்றப்பட்ட பிறகு மனதை உந்துவிக்கும் ஒரு பாடலை எசேக்கியா இயற்றினார்; அதில், “என்னுடைய பாவங்களையெல்லாம் உங்கள் முதுகுக்குப் பின்னால் தூக்கி எறிந்தீர்கள்” என யெகோவாவிடம் கூறினார். (ஏசாயா 38:17) மனந்திரும்பிய பாவியின் பாவங்களை தமது முதுகுக்குப் பின்னாக எறிந்துவிடுவது போல யெகோவா இங்கே சித்தரிக்கப்படுகிறார்; அதன் பிறகு அவற்றை அவர் பார்ப்பதுமில்லை கண்டுகொள்வதுமில்லை. இங்கே சொல்லப்படும் கருத்தை இவ்வாறு தெரிவிக்கலாம் என ஒரு புத்தகம் சொல்கிறது: “[என்னுடைய பாவங்களை] அவை நடக்காதது போலவே நீர் செய்துவிட்டீர்.” இந்தக் கருத்து நம்பிக்கை அளிக்கிறது அல்லவா?
12. யெகோவா மன்னிக்கும்போது நம்முடைய பாவங்களை நிரந்தரமாக நீக்கிவிடுகிறார் என்பதை தீர்க்கதரிசியாகிய மீகா எவ்வாறு சுட்டிக்காட்டுகிறார்?
12 திரும்ப நிலைநாட்டப்படுவதைப் பற்றிய வாக்குறுதியில், மனந்திரும்பிய தமது மக்களை யெகோவா மன்னிப்பார் என்பதில் தீர்க்கதரிசியாகிய மீகா தன் உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்தினார். ‘உங்களைப் போன்ற கடவுள் யாரும் இல்லை. உங்களுடைய ஜனங்களில் மீதியாக இருப்பவர்களின் பாவத்தை நீங்கள் மன்னிக்கிறீர்கள். எங்களுடைய எல்லா பாவங்களையும் ஆழ்கடலுக்குள் போட்டுவிடுவீர்கள்’ என அவர் எழுதினார். (மீகா 7:18, 19) பைபிள் காலங்களில் வாழ்ந்தவர்களுக்கு அந்த வார்த்தைகள் எதை அர்த்தப்படுத்தின என்பதை சற்று கற்பனை செய்து பாருங்கள். “ஆழ்கடலுக்குள்” எறியப்பட்டதை திரும்பப் பெறும் வாய்ப்பே இல்லை! ஆகவே, யெகோவா மன்னிக்கும்போது, நம்முடைய பாவங்களை நிரந்தரமாக நீக்கிவிடுகிறார் என்பதையே மீகாவின் வார்த்தைகள் சுட்டிக்காட்டுகின்றன.
13. “எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியுங்கள்” என்று இயேசு கூறிய வார்த்தைகளின் அர்த்தமென்ன?
13 யெகோவாவின் மன்னிப்பை விளக்குவதற்கு, கடன் கொடுக்கிறவர்களுக்கும் கடனாளிகளுக்கும் உள்ள தொடர்புக்கு இயேசு கவனத்தைத் திருப்பினார். “எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியுங்கள்” என ஜெபிக்கும்படி இயேசு கற்றுக்கொடுத்தார். (மத்தேயு 6:12) இவ்வாறு, பாவங்களை கடன்களுக்கு அவர் ஒப்பிட்டார். (லூக்கா 11:4) நாம் பாவம் செய்கையில், யெகோவாவுக்கு ‘கடனாளிகளாகிறோம்.’ “மன்னியுங்கள்” என மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை, “கடனை கேட்காமல் விட்டுவிடு, கைவிட்டுவிடு” என அர்த்தப்படுத்துவதாக ஒரு நூல் கூறுகிறது. ஒரு கருத்தில், யெகோவா மன்னிக்கும்போது நம்முடைய கணக்கில் உள்ள கடனை ரத்துசெய்கிறார். ஆகவே பாவத்திலிருந்து மனந்திரும்புகிறவர்கள் ஆறுதல் பெறலாம். ரத்துசெய்த கடனை யெகோவா ஒருபோதும் திரும்ப கேட்க மாட்டார்!—சங்கீதம் 32:1, 2.
14. “உங்களுடைய பாவங்கள் துடைத்தழிக்கப்படும்” என்ற சொற்றொடர் மனதிற்கு கொண்டுவரும் காட்சி என்ன?
14 யெகோவாவின் மன்னிப்பைப் பற்றி அப்போஸ்தலர் 3:19 மேலுமாக விவரிக்கிறது. “மனம் திருந்தி, உங்கள் வழியை மாற்றிக்கொள்ளுங்கள்; அப்போதுதான் உங்களுடைய பாவங்கள் துடைத்தழிக்கப்படும்” என அது சொல்கிறது. “துடைத்தழிக்கப்படும்” என்பதற்கான கிரேக்க வார்த்தை “துடை, . . . ரத்துசெய் அல்லது அழி” என்ற அர்த்தத்தைத் தரலாம். எழுதப்பட்டதை துடைத்து அழிக்கும் கருத்தே இங்கு உருவகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது என கல்விமான்கள் சிலர் கூறுகின்றனர். இது எப்படி சாத்தியம்? பூர்வ காலங்களில் கார்பன், பசை, தண்ணீர் ஆகியவற்றை கலந்தே மை தயாரிக்கப்பட்டது. இந்த மையால் எழுதியவற்றை ஈரமான ஒரு துணியை வைத்து உடனடியாக அழித்துவிட முடிந்தது. இது யெகோவாவின் இரக்கத்தை அழகாக வர்ணிக்கிறது. அவர் நமது பாவங்களை மன்னிக்கும்போது, ஒரு துணியால் அவற்றை துடைத்து அழிப்பதைப் போலவே இருக்கிறது.
15. நாம் எதை அறிந்துகொள்ள வேண்டும் என்று யெகோவா விரும்புகிறார்?
15 பல்வகையான இந்த வர்ணிப்புகளை நாம் சிந்தித்துப் பார்க்கும்போது எது தெளிவாகத் தெரிகிறது? நாம் உள்ளப்பூர்வமாக மனந்திரும்பும் பட்சத்தில், நம்முடைய பாவங்களை மன்னிப்பதற்கு யெகோவா உண்மையிலேயே தயாராயிருப்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டுமென அவர் விரும்புவது தெளிவாகத் தெரிகிறது அல்லவா! எதிர்காலத்தில் இந்தப் பாவங்களுக்காக யெகோவா நம்மை தண்டிப்பார் என நாம் பயப்பட வேண்டியதில்லை. யெகோவாவின் இரக்கத்தைப் பற்றி பைபிள் வெளிப்படுத்தும் மற்றொரு விஷயம் இதை உறுதிப்படுத்துகிறது; அதாவது, அவர் மன்னித்தபின் அதை மறந்தும்விடுகிறார் என அது சொல்கிறது.
யெகோவா “மன்னிக்கத் தயாராக இருக்கிறார்,” இதை நாம் அறிந்துகொள்ளும்படி விரும்புகிறார்
“அவர்களுடைய பாவத்தை இனியும் நினைத்துப் பார்க்க மாட்டேன்”
16, 17. யெகோவா நம்முடைய பாவங்களை மறந்துவிடுகிறார் என பைபிள் சொல்வதன் அர்த்தம் என்ன, ஏன் அவ்வாறு பதிலளிக்கிறீர்கள்?
16 புதிய உடன்படிக்கைக்குள் இருப்பவர்கள் சம்பந்தமாக யெகோவா ஒரு வாக்குறுதி அளித்தார்; “நான் அவர்களுடைய குற்றத்தை மன்னிப்பேன். அவர்களுடைய பாவத்தை இனியும் நினைத்துப் பார்க்க மாட்டேன்” என்றார். (எரேமியா 31:34) யெகோவா பாவங்களை மன்னிக்கும்போது அவரால் இனிமேல் அவற்றை நினைவுக்குக் கொண்டுவர முடியாது என இது அர்த்தப்படுத்துகிறதா? இல்லை. தாவீதின் பாவங்களை மட்டுமல்ல, இன்னும் அநேகருடைய பாவங்களை யெகோவா மன்னித்ததைப் பற்றி பைபிளிலேயே பதிவு இருக்கிறதே. (2 சாமுவேல் 11:1-17; 12:13) அவர்கள் செய்த தவறுகளை உண்மையில் யெகோவா நன்றாகவே அறிந்திருக்கிறார். அவர்கள் பாவங்கள் செய்து, மனந்திரும்பி, கடவுளுடைய மன்னிப்பைப் பெற்றதைப் பற்றிய விவரங்கள் நம்முடைய நன்மைக்காக பதிவு செய்து வைக்கப்பட்டுள்ளன. (ரோமர் 15:4) அப்படியானால், பாவங்களை மன்னித்த பிறகு அவற்றை “நினைத்துப் பார்க்க மாட்டேன்” என யெகோவா சொல்லும்போது எதை அர்த்தப்படுத்துகிறார்?
17 “இனியும் நினைத்துப் பார்க்க மாட்டேன்” என மொழிபெயர்க்கப்பட்ட எபிரெய வினைச்சொல் கடந்த காலத்தை மீண்டும் ஞாபகப்படுத்திப் பார்ப்பதை மட்டுமே அர்த்தப்படுத்தவில்லை. அது “தகுந்த நடவடிக்கை எடுப்பதையும் அர்த்தப்படுத்துகிறது” என பழைய ஏற்பாட்டின் இறையியல் அகராதி என்ற ஆங்கில நூல் குறிப்பிடுகிறது. இந்தக் கருத்தில், பாவத்தை ‘நினைத்துப் பார்ப்பது’ என்பது பாவிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை குறிக்கிறது. (ஓசியா 9:9) ஆகவே “அவர்களுடைய பாவத்தை இனியும் நினைத்துப் பார்க்க மாட்டேன்” என கடவுள் சொல்லும்போது, மனந்திரும்பிய பாவிகளை மன்னித்த பிறகு, அந்தப் பாவங்களின் நிமித்தம் எதிர்காலத்தில் அவர்களை தண்டிக்கப் போவதில்லை என்ற உறுதியை அளிக்கிறார். (எசேக்கியேல் 18:21, 22) ஆகவே, திரும்பத் திரும்ப நம்முடைய பாவங்களை ஞாபகத்திற்குக் கொண்டுவந்து நம்மை குற்றப்படுத்த அல்லது தண்டிக்க மாட்டார் என்ற அர்த்தத்தில் யெகோவா அவற்றை மறந்துவிடுகிறார். நம்முடைய கடவுள் மன்னித்து மறந்துவிடுகிறவர் என்பதை அறிவது ஆறுதலாக இல்லையா?
விளைவுகளைப் பற்றியென்ன?
18. யெகோவா மன்னிக்கத் தயாராயிருப்பது, மனந்திரும்பிய பாவி தன்னுடைய பாவங்களின் எல்லா விளைவுகளிலிருந்தும் விடுவிக்கப்படுவார் என ஏன் அர்த்தப்படுத்துகிறதில்லை?
18 யெகோவா மன்னிக்கத் தயாராயிருப்பதால், மனந்திரும்பியவர் தான் செய்த பாவங்களின் எல்லா விளைவுகளிலிருந்தும் விடுவிக்கப்படுவார் என அர்த்தப்படுத்துகிறதா? இல்லவே இல்லை. நாம் பாவம் செய்துவிட்டு எந்தத் தண்டனையுமின்றி தப்பித்துவிடலாம் என எதிர்பார்க்க முடியாது. “ஒருவன் எதை விதைக்கிறானோ அதையே அறுவடை செய்வான்” என பவுல் எழுதினார். (கலாத்தியர் 6:7) நம்முடைய செயல்களின் பின்விளைவுகளை நாம் எதிர்ப்படலாம். ஆனால் யெகோவா நம்மை மன்னித்துவிட்டு பிறகு தீமையை வரப்பண்ணுகிறார் என்பதை இது அர்த்தப்படுத்துகிறதில்லை. துன்பங்கள் நேரிடுகையில், ‘முன்பு செய்த பாவங்களுக்காகத்தான் யெகோவா என்னை தண்டிக்கிறார்’ என ஒரு கிறிஸ்தவர் நினைக்கக்கூடாது. (யாக்கோபு 1:13) அதேசமயத்தில், தவறான செயல்களால் வரும் எல்லா விளைவுகளிலிருந்தும் யெகோவா நம்மை பாதுகாப்பதில்லை. விவாகரத்து, தேவையற்ற கருத்தரிப்பு, பாலியல் நோய்கள், நம்பிக்கையை அல்லது மரியாதையை இழந்துவிடுதல்—இவையனைத்தும் பாவத்தால் வரும் கவலைக்குரிய, தவிர்க்க முடியா விளைவுகளாக இருக்கலாம். பத்சேபாள் மற்றும் உரியா விஷயத்தில் தாவீது செய்த பாவங்களை யெகோவா மன்னித்த போதிலும்கூட, அதற்குப் பிறகு நேரிட்ட பயங்கரமான விளைவுகளிலிருந்து தாவீதை அவர் பாதுகாக்கவில்லை என்பதை நினைவில் வையுங்கள்.—2 சாமுவேல் 12:9-12.
19-21. (அ) லேவியராகமம் 6:1-7-ல் பதிவுசெய்யப்பட்டுள்ள சட்டம் எவ்வாறு பாதிக்கப்பட்டவருக்கும் தவறிழைத்தவருக்கும் நன்மை செய்தது? (ஆ) நம்முடைய பாவங்களால் மற்றவர்கள் பாதிக்கப்பட்டிருந்தால், என்ன நடவடிக்கை எடுக்கும்போது யெகோவா சந்தோஷப்படுகிறார்?
19 முக்கியமாக நம்முடைய செயல்கள் மற்றவர்களை புண்படுத்துகையில் நமது பாவங்களால் வரும் விளைவுகள் இன்னும் அதிகமாக இருக்கலாம். உதாரணமாக, லேவியராகமம் 6-ம் அதிகாரத்திலுள்ள பதிவை கவனியுங்கள். ஒருவன் சக இஸ்ரவேலனுடைய பொருள்களை திருடுவதன் மூலமோ அபகரிப்பதன் மூலமோ மோசடி செய்வதன் மூலமோ வினைமையான பாவம் செய்யும் சூழ்நிலையை திருச்சட்டம் இங்கே குறிப்பிடுகிறது. அந்தப் பாவி தன் குற்றத்தை மறுக்கலாம், பொய் சத்தியம் செய்யும் அளவுக்குத் துணியலாம். அவன் கொடுக்கும் சாட்சி இன்னொருவனுடைய சாட்சிக்கு முரண்படலாம். என்றபோதிலும், அந்தப் பாவி பிற்பாடு மனசாட்சியால் குத்தப்பட்டு தன் பாவத்தை அறிக்கை செய்யலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில், கடவுளுடைய மன்னிப்பை பெற அவன் மூன்று காரியங்களை செய்ய வேண்டும் என திருச்சட்டம் குறிப்பிட்டது; அதாவது, தான் எடுத்ததை திருப்பிக் கொடுக்க வேண்டும், திருடப்பட்ட பொருளின் மதிப்பில் 20 சதவீதத்தை அதன் சொந்தக்காரருக்கு அபராதமாக கொடுக்க வேண்டும், குற்ற நிவாரண பலியாக ஒரு செம்மறியாட்டுக் கடாவை செலுத்த வேண்டும். அதன் பின்பு, ‘குருவானவர் யெகோவாவின் முன்னிலையில் அவனுக்காகப் பாவப் பரிகாரம் செய்வார். அவனுடைய குற்றம் மன்னிக்கப்படும்’ என்று திருச்சட்டம் சொன்னது.—லேவியராகமம் 6:1-7.
20 இந்தச் சட்டம் ஓர் இரக்கமான ஏற்பாடு. அது பாதிக்கப்பட்ட நபருக்கு நன்மை செய்தது. அவருடைய பொருள்கள் திருப்பிக் கொடுக்கப்பட்டன; தப்பு செய்தவன் கடைசியில் தன் பாவத்தை ஒப்புக்கொண்டபோது பாதிக்கப்பட்டவர் அதிக நிம்மதி அடைந்திருப்பார் என்பதிலும் சந்தேகமில்லை. அதேசமயத்தில், மனசாட்சியால் தூண்டப்பட்டு இறுதியில் குற்றத்தை ஒப்புக்கொண்டு தன்னுடைய தவறை திருத்திக் கொள்கிறவனுக்கும் அந்தச் சட்டம் நன்மை செய்தது. சொல்லப்போனால், அவன் அப்படி செய்ய தவறினால் கடவுளிடமிருந்து எந்த மன்னிப்பையும் பெற முடியாதே.
21 நாம் திருச்சட்டத்தின் கீழ் இல்லாதபோதிலும், அது யெகோவாவின் மனதை உற்று நோக்கவும் மன்னிப்பின் பேரில் அவருடைய எண்ணத்தைத் தெரிந்துகொள்ளவும் உதவுகிறது. (கொலோசெயர் 2:13, 14) நம் பாவங்களால் மற்றவர்கள் பாதிக்கப்பட்டிருந்தால், அதை சரிப்படுத்த நம்மால் இயன்றதை செய்யும்போது யெகோவா சந்தோஷப்படுகிறார். (மத்தேயு 5:23, 24) இது நம்முடைய பாவத்தை ஏற்றுக்கொண்டு குற்றத்தை ஒப்புக்கொள்வதையும், பாதிக்கப்பட்டவரிடம் மன்னிப்பு கேட்பதையும் உட்படுத்தலாம். பிறகு இயேசுவின் மீட்புப் பலியின் அடிப்படையில் நாம் யெகோவாவிடம் மன்றாட வேண்டும். அப்போது, அவருடைய மன்னிப்பைப் பெற்றுவிட்டோம் என்ற உறுதியைப் பெறலாம்.—எபிரெயர் 10:21, 22.
22. யெகோவா மன்னிப்போடு எதையும் அளிக்கலாம்?
22 அன்புள்ள தகப்பனை போல யெகோவாவும், மன்னிப்பதோடு ஓரளவு சிட்சையையும் அளிக்கலாம். (நீதிமொழிகள் 3:11, 12) மனந்திரும்பும் கிறிஸ்தவர் மூப்பராகவோ உதவி ஊழியராகவோ முழுநேர ஊழியராகவோ சேவை செய்யும் சிலாக்கியத்தை இழக்க வேண்டியதாயிருக்கலாம். இப்படிப்பட்ட சிலாக்கியங்களை சில காலத்திற்கு இழப்பது வேதனை தரலாம். ஆனால் இத்தகைய சிட்சை, யெகோவா மன்னிக்கவில்லை என்பதை அர்த்தப்படுத்தாது. யெகோவாவிடமிருந்து வரும் சிட்சை நம்மீது அவர் வைத்திருக்கும் அன்பிற்கு அத்தாட்சியாகும். அதை ஏற்றுக்கொண்டு கடைப்பிடிப்பது நம்முடைய மிகச் சிறந்த நலனுக்கே.—எபிரெயர் 12:5-11.
23. நாம் யெகோவாவின் இரக்கத்தைப் பெற துளிகூட லாயக்கற்றவர்கள் என்ற முடிவுக்கு ஏன் ஒருபோதும் வரக் கூடாது, அவருடைய மன்னிக்கும் குணத்தை நாம் ஏன் பின்பற்ற வேண்டும்?
23 கடவுள் “மன்னிக்கத் தயாராக இருக்கிறார்” என்பதை அறிவது எவ்வளவு புத்துணர்ச்சி அளிக்கிறது! நாம் தவறுகளை செய்திருந்தாலும், யெகோவாவின் இரக்கத்தைப் பெற துளிகூட லாயக்கற்றவர்கள் என ஒருபோதும் முடிவு செய்துவிடக் கூடாது. உண்மையிலேயே மனந்திரும்பி, தவறை சரிசெய்ய நடவடிக்கை எடுத்து, இயேசுவின் இரத்தத்தின் அடிப்படையில் மன்னிப்பை பெற ஊக்கமாக ஜெபம் செய்தால், யெகோவா நம்மை கண்டிப்பாக மன்னிப்பார். (1 யோவான் 1:9) ஒருவரையொருவர் நடத்தும் விதத்திலும் அவருடைய மன்னிக்கும் குணத்தை பின்பற்றுவோமாக. பாவமே செய்யாத யெகோவா மிகவும் அன்போடு நம்மை மன்னிக்கிறார் என்றால், பாவிகளாகிய நாம் ஒருவரையொருவர் மன்னிக்க வேண்டாமா?
a இங்கே கடுஞ்சிவப்பு நிறம் என்பது “சாயம் போகாத அடர்ந்த நிறத்தை” குறிப்பதாக அறிஞர் ஒருவர் கூறுகிறார். “பனியிலும் மழையிலும் அதன் சாயம் வெளுத்துப் போகாது, துவைத்து பல காலம் பயன்படுத்தினால்கூட அது வெளிறிப் போகாது” என்கிறார்.