Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நாம் ஏன் முதியோராகி மரிக்கிறோம்?

நாம் ஏன் முதியோராகி மரிக்கிறோம்?

அதிகாரம் 6

நாம் ஏன் முதியோராகி மரிக்கிறோம்?

மனிதர்கள் ஏன் முதியோராகி மரிக்கின்றனர் என்பதை அறிவியல் அறிஞர்கள் அறியாதிருக்கின்றனர். நம்முடைய உயிரணுக்கள் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்றும் நாம் என்றுமாக வாழ்ந்துகொண்டிருக்க வேண்டும் என்றும் தோன்றுகிறது. ஹையோஜூன் சோஷிக்கிகாக்கு (தரமான உயிர்தசைமங்கள் பற்றிய ஆய்வுநூல்) என்ற புத்தகம் சொல்கிறது: “உயிரணுக்கள் முதிர்ச்சியடைவது எவ்வாறு ஒரு தனி நபர் முதிர்ச்சியடைவதோடும் மரணத்தோடும் சம்பந்தப்பட்டிருக்கிறது என்பது புரியாத ஒரு பெரும் புதிராகவே இருக்கிறது.” அநேக அறிவியல் அறிஞர்கள் வாழ்க்கைக்கு “இயற்கையால் வழங்கப்பட்ட ஒரு இயல்பான வரம்பு” இருக்கிறது என்பதாக நம்புகிறார்கள். அவர்கள் சொல்வது சரியென்று நீங்கள் நினைக்கிறீர்களா?

2மனிதர்கள் எப்பொழுதும் நெடுநாள் வாழ்வதற்கு ஆவலுள்ளவர்களாக இருந்திருக்கிறார்கள், சாவாமையை அடைவதற்கும்கூட முயன்று வந்திருக்கிறார்கள். பொ.ச.மு. நான்காவது நூற்றாண்டு முதற்கொண்டு, சாவாமையைக் கூடிய காரியமாக ஆக்குவதற்காக வடிவமைக்கப்பட்டதாக கருதப்பட்ட மருந்துகள் சீன உயர்குடி மக்களின் கவனத்தைக் கவர்ந்தன. பிற்கால சீன பேரரசர்கள் வாழ்நாளை நீடிக்க வல்ல மருந்தாக கருதப்பட்ட பாதரசத்திலிருந்து செய்யப்பட்ட காயகல்பங்களை சாப்பிட்டு இறந்தனர்! மரணம் தங்களுடைய வாழ்க்கையின் முடிவு அல்ல என்பதாக மக்கள் உலகம் முழுவதிலுமாக நம்புகிறார்கள். புத்தமதத்தினர், இந்துக்கள், முகமதியர்கள் இன்னும் மற்றவர்களும் மரணத்துக்குப் பின்னான வாழ்க்கையைப் பற்றி பிரகாசமான நம்பிக்கைகளைக் கொண்டிருக்கின்றனர். கிறிஸ்தவமண்டலத்தில், அநேகர் மறுமையில் பரலோகத்தில் பேரின்பமான வாழ்க்கையை எதிர்நோக்கியிருக்கின்றனர்.

3மரணத்துக்குப்பின் மகிழ்ச்சி பற்றிய பொதுக் கருத்துக்கள் நித்திய வாழ்க்கைக்கான ஆவலைப் பிரதிபலிக்கின்றன. கடவுள் நம்மில் வைத்திருக்கும் நித்தியத்தின் எண்ணத்தைக் குறித்து பைபிள் “நித்தியகால நினைவையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்,” என்று சொல்கிறது. (பிரசங்கி 3:11, திருத்திய மொழிபெயர்ப்பு) அவர் முதல் மனிதர்களை பூமியில் என்றுமாக வாழக்கூடிய எதிர்பார்ப்புடன் படைத்தார். (ஆதியாகமம் 2:16, 17) அப்படியென்றால் மனிதர்கள் ஏன் மரிக்கிறார்கள்? மரணம் எவ்விதமாக உலகத்திற்குள் அறிமுகப்படுத்தப்பட்டது? இந்தக் கேள்விகளுக்குத் தேவனை அறியும் அறிவு ஆவிக்குரிய உட்பார்வையை அளிக்கிறது.—சங்கீதம் 119:105.

வஞ்சனையான ஒரு சதித்திட்டம்

4ஒரு குற்றவாளி குற்றச்சாட்டின் அத்தாட்சியை அழித்துவிட முயற்சிசெய்கிறான். கோடிக்கணக்கானோரின் மரணத்தில் விளைவடைந்திருக்கும் ஒரு குற்றச்செயலுக்குப் பொறுப்பாயிருந்தவனின் விஷயத்திலும் இது உண்மையாக இருந்திருக்கிறது. மனித மரணத்தைப் புரியாத ஒரு புதிராக மூடிவைப்பதற்காக காரியங்களை அவன் திட்டமிட்டு செய்திருக்கிறான். இயேசு கிறிஸ்து தம்மைக் கொலைசெய்ய வகைதேடிக்கொண்டிருந்தவர்களிடம் இவ்வாறு சொன்னபோது இந்தக் குற்றவாளியை அடையாளங்காட்டினார்: “நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை.”—யோவான் 8:31, 40, 44.

5ஆம், பிசாசு கெட்ட நோக்கமுடைய ஒரு ‘கொலைபாதகன்.’ அவன் உண்மையான ஒரு ஆள், ஒருவரின் இருதயத்தில் இருக்கும் வெறும் ஒரு தீமை அல்ல என்பதை பைபிள் வெளிப்படுத்துகிறது. (மத்தேயு 4:1-11) நீதியுள்ள ஒரு தூதனாக படைக்கப்பட்டபோதிலும், அவன் “சத்தியத்திலே நிலைநிற்கவில்லை.” அவன் பிசாசாகிய சாத்தான் என்று பெயரிடப்பட்டிருப்பது எவ்வளவு பொருத்தமாயுள்ளது! (வெளிப்படுத்துதல் 12:9) அவன் யெகோவாவை எதிர்த்து பணிய மறுப்பதால், “சாத்தான்,” அல்லது “எதிர்ப்பவன்,” என்று அழைக்கப்படுகிறான். இந்தக் குற்றவாளி “பழிதூற்றுபவன்,” என்று பொருள்படும் “பிசாசு,” என்றும்கூட அழைக்கப்படுகிறான், ஏனென்றால் அவன் தூஷணமாக கடவுளைத் தவறாகப் பிரதிநிதித்துவம் செய்திருக்கிறான்.

6சாத்தானை கடவுளுக்கு எதிராக கலகம் செய்யும்படியாகத் தூண்டியது என்ன? பேராசை. மனிதர்களிடமிருந்து யெகோவா பெற்றுக்கொண்ட வணக்கத்தை அவன் பேராசையோடு இச்சித்தான். சரியாகவே படைப்பாளருக்கு மாத்திரமே உரியதாக இருக்கும் இப்படிப்பட்ட வணக்கத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசையை பிசாசு தள்ளிவிடவில்லை. (எசேக்கியேல் 28:12-19-ஐ ஒப்பிடுக.) மாறாக, சாத்தானாக மாறிய தூதன் இந்தப் பேராசையான இச்சை கர்ப்பந்தரித்து பாவத்தைப் பிறப்பிக்கும் வரையாக அதை வளர்த்துக்கொண்டான்.—யாக்கோபு 1:14, 15.

7மனிதர்களின் மரணத்துக்கு வழிநடத்திய குற்றச்செயலை செய்த ஒரு குற்றவாளியை நாம் அடையாளம் கண்டுகொண்டோம். ஆனால் மனிதரின் மரணத்துக்குத் திட்டவட்டமான காரணம் என்ன? பைபிள் சொல்கிறது: “மரணத்தின் கூர் பாவம்.” (1 கொரிந்தியர் 15:56) பாவம் என்பது என்ன? இந்த வார்த்தையைப் புரிந்துகொள்வதற்கு பைபிளின் மூல மொழிகளில் இந்த வார்த்தை வெளிப்படுத்திய பொருளை நாம் சிந்திப்போம். “பாவம் செய்ய” என்பதாக பொதுவாக மொழிபெயர்க்கப்பட்டுள்ள எபிரெய மற்றும் கிரேக்க வினைச்சொற்கள் ஒரு குறியைத் தவற விடுவது அல்லது ஒரு இலக்கை அடையாதிருப்பது என்ற கருத்தில் “தவறவிடுதல்” என்பதைக் குறிக்கிறது. நாம் அனைவரும் தவறவிடும் அந்தக் குறி என்ன? கடவுளுக்குப் பரிபூரணமான கீழ்ப்படிதலின் குறி. ஆனால் பாவம் எவ்வாறு உலகத்திற்குள் அறிமுகப்படுத்தப்பட்டது?

சதித்திட்டம் எவ்வாறு நிறைவேற்றப்பட்டது

8சாத்தான் எல்லா மனிதர்மீதும் தான் ஆட்சிசெய்யவும் அவர்களுடைய வணக்கத்தைப் பெற்றுக்கொள்ளவும் வழிவகுக்கும் என்பதாக நினைத்த ஒரு சதித்திட்டத்தை கவனமாக தீட்டினான். முதல் மனித தம்பதியாகிய ஆதாம் ஏவாளை கடவுளுக்கு எதிராக பாவம் செய்யத் தூண்டுவதற்கு முடிவுசெய்தான். யெகோவா நம்முடைய முதல் பெற்றோருக்கு அவர்களை நித்திய ஜீவனுக்கு வழிநடத்தியிருக்கும் அறிவைக் கொடுத்திருந்தார். தங்கள் படைப்பாளர் தங்களை ஒரு அழகான ஏதேன் தோட்டத்தில் வைத்தபடியால் அவர் நல்லவர் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். அழகாகவும் உதவியாகவும் இருக்கும் ஒரு மனைவியை ஆதாமுக்கு கடவுள் கொடுத்தபோது அவன் தன்னுடைய பரலோக தகப்பனின் நற்குணத்தை விசேஷமாக உணர்ந்துகொண்டான். (ஆதியாகமம் 1:26, 29; 2:7-9, 18-23) முதல் மனித தம்பதி தொடர்ந்து வாழ்வதானது கடவுளுக்குக் கீழ்ப்பட்டிருப்பதன் பேரில் சார்ந்திருந்தது.

9கடவுள் ஆதாமுக்கு இவ்வாறு கட்டளையிட்டார்: “நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்.” (ஆதியாகமம் 2:16, 17) படைப்பாளராக, தம்முடைய படைப்புகளுக்கு ஒழுக்க தராதரங்களை நிர்ணயிப்பதற்கும் எது நல்லது, எது கெட்டது என்பதை வரையறுக்கவும் யெகோவா தேவனுக்கு உரிமை இருந்தது. அவருடைய கட்டளை நியாயமானதாக இருந்தது, ஏனென்றால் ஆதாமும் ஏவாளும் தோட்டத்திலிருந்த மற்ற எல்லா விருட்சங்களின் கனிகளையும் தாராளமாக புசிக்க முடியும். பெருமையோடு தங்களுடைய சொந்த ஒழுக்க தராதரங்களை நிர்ணயித்துக்கொள்வதற்குப் பதிலாக இந்தச் சட்டத்துக்குக் கீழ்ப்படிவதன் மூலம் அவர்கள் யெகோவாவின் நியாயமான அரசாட்சிக்குத் தங்களுடைய போற்றுதலைக் காண்பிக்கலாம்.

10முதல் மனிதர்களை கடவுளிடமிருந்து இழுத்துக்கொள்ள பிசாசு சதிசெய்தான். தன் பக்கமாக அவர்களை வசீகரித்துக்கொள்ள சாத்தான் பொய் பேசினான். குரலை மாற்றிப்பேசும் கலையில் ஒரு வல்லுநர் வாய் பேசாத ஒரு பொம்மையைப் பயன்படுத்துவது போலவே, பிசாசு ஒரு சர்ப்பத்தை பயன்படுத்தி ஏவாளிடம் கேட்டான்: “நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ?” கடவுளுடைய கட்டளையை ஏவாள் எடுத்துக் கூறியபோது சாத்தான் சொன்னான்: “நீங்கள் சாகவே சாவதில்லை.” அதற்குப் பின்னர், “நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார்,” என்று சொல்வதன் மூலம் யெகோவாவுக்குக் கெட்ட உள்ளெண்ணம் இருப்பதாக அவன் சுட்டிக்காட்டினான். (ஆதியாகமம் 3:1-5) இவ்விதமாக கடவுள் நன்மையான ஏதோவொன்றை கொடுக்க மறுப்பதாக பிசாசு குறிப்பாலறிவித்தான். உண்மையுள்ள, அன்பான பரலோக தகப்பன் யெகோவாவின்மீது என்னே ஒரு அவதூறான தாக்குதல்!

11ஏவாள் மறுபடியுமாக விருட்சத்தைப் பார்த்தாள், அதனுடைய கனி இப்பொழுது விசேஷமாக இச்சிக்கப்படத்தக்கதாக இருந்தது. ஆகவே அவள் கனியை எடுத்து அதைச் சாப்பிட்டாள். பின்னால், அவளுடைய கணவன் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல்போகும் இந்தப் பாவமுள்ள செயலில் வேண்டுமென்றே அவளைச் சேர்ந்துகொண்டான். (ஆதியாகமம் 3:6) ஏவாள் வஞ்சிக்கப்பட்டபோதிலும், அவளும் ஆதாமும் மனித இனத்தை ஆளுகை செய்வதற்கான சாத்தானின் சதித்திட்டத்தை ஆதரித்தனர். உண்மையில், அவர்கள் அவனுக்கு உடந்தையாய் இருப்பவர்களானார்கள்.—ரோமர் 6:16; 1 தீமோத்தேயு 2:14.

12ஆதாமும் ஏவாளும் தங்களுடைய செயல்களுக்கான பின்விளைவுகளை எதிர்ப்பட வேண்டியதாக இருந்தது. அவர்கள் விசேஷித்த அறிவுடைய கடவுளைப் போல ஆகவில்லை. மாறாக, அவர்கள் வெட்கப்பட்டு தங்களை ஒளித்துக்கொண்டார்கள். யெகோவா ஆதாமை விசாரிக்க அழைத்து இந்தத் தீர்ப்பை வழங்கினார்: “நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்.” (ஆதியாகமம் 3:19) நம்முடைய முதல் பெற்றோர் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்திலிருந்து புசித்த “நாளிலே” அவர்கள் கடவுளால் தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்டு அவருடைய நோக்குநிலையில் மரித்தவர்களானார்கள். பின்னர் அவர்கள் பரதீஸிலிருந்து துரத்தப்பட்டனர், சரீரப்பிரகாரமாக மரணத்தை நோக்கிய பயணம் ஆரம்பமானது.

பாவமும் மரணமும் எப்படி பரவியது

13மனிதரின் வணக்கத்தைப் பெற்றுக்கொள்வதற்கான சதித்திட்டத்தில் சாத்தான் வெற்றியடைந்தவன் போல் தோன்றினான். இருப்பினும், அவனால் அவனுடைய வணக்கத்தாரை உயிரோடே காத்துக்கொள்ள முடியவில்லை. பாவம் முதல் மனித தம்பதியினரில் வேலைசெய்ய ஆரம்பித்தபோது, அவர்களால் இனிமேலும் பரிபூரணத்தைத் தங்களுடைய சந்ததிக்குக் கடத்தமுடியவில்லை. ஒரு கல்லில் செதுக்கப்பட்ட சாசனத்தைப் போல, பாவம் நம்முடைய முதல் பெற்றோரின் ஜீன்களுக்குள் ஆழமாக பதிந்துவிட்டது. இதன் காரணமாக அவர்களால் அபூரணமான பிள்ளைகளை மாத்திரமே பிறப்பிக்க முடியும். ஆதாமும் ஏவாளும் பாவம் செய்த பிறகே அவர்களுடைய எல்லா பிள்ளைகளும் பிறந்தபடியால், அவர்களுடைய பிள்ளைகள் பாவத்தையும் மரணத்தையும் சுதந்தரித்துக்கொண்டார்கள்.—சங்கீதம் 51:5; ரோமர் 5:12.

14இருப்பினும் இன்று அநேகர் தாங்கள் பாவிகள் என்று நினைப்பது கிடையாது. உலகின் சில பகுதிகளில், சுதந்தரிக்கப்பட்ட பாவம் என்ற கருத்து பொதுவாக அறியப்பட்டில்லை. ஆனால் பாவம் இல்லை என்பதற்கு இது நிரூபணமாக இல்லை. அழுக்கடைந்த முகமுள்ள ஒரு பையன் தான் சுத்தமாக இருப்பதாக உரிமைபாராட்டக்கூடும், அவன் அப்படி இல்லை என்பதை ஒரு கண்ணாடியில் தன்னைப் பார்த்தபிறகே நம்பக்கூடும். பண்டைய இஸ்ரவேலர் கடவுளுடைய நியாயப்பிரமாணத்தை அவருடைய தீர்க்கதரிசியாகிய மோசேயின் மூலமாக பெற்றுக்கொண்டபோது அப்படிப்பட்ட ஒரு பையனைப்போலவே இருந்தனர். பாவம் இருந்ததை நியாயப்பிரமாணம் தெளிவாக்கினது. “பாவம் இன்னதென்று நியாயப்பிரமாணத்தினால் நான் அறிந்தேனேயன்றி மற்றப்படி அறியவில்லை,” என்பதாக அப்போஸ்தலன் பவுல் விளக்குகிறார். (ரோமர் 7:7-12) ஒரு கண்ணாடியில் பார்க்கும் ஒரு பையனைப் போல, தங்களைத் தாங்களே பார்த்துக்கொள்வதற்கு நியாயப்பிரமாணத்தைப் பயன்படுத்துவதன் மூலம், இஸ்ரவேலர் தாங்கள் யெகோவாவின் பார்வையில் அசுத்தமாயிருப்பதைக் காணமுடிந்தது.

15கடவுளுடைய வார்த்தையின் கண்ணாடியில் பார்த்து அதன் தராதரங்களைக் கவனிப்பதன் மூலம், நாம் அபூரணராயிருப்பதை காணமுடியும். (யாக்கோபு 1:23-25) உதாரணமாக, மத்தேயு 22:37-40-ல் பதிவுசெய்யப்பட்டுள்ளபடி, இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களிடம் கடவுளையும் தங்களுடைய அயலானையும் நேசிப்பதைப் பற்றி என்ன சொன்னார் என்பதைக் கவனியுங்கள். இந்தப் பகுதிகளில் எவ்வளவு அடிக்கடி மனிதர்கள் குறியைத் தவறவிடுகிறார்கள்! கடவுளுக்கு அல்லது தங்களுடைய அயலாருக்கு அன்பு காண்பிக்கத் தவறும் விஷயத்தில் அநேகர் சிறிதும் மனச்சாட்சி உறுத்தலை உணருவது கிடையாது.—லூக்கா 10:29-37.

சாத்தானின் தந்திரங்களைக் குறித்து ஜாக்கிரதையாயிருங்கள்

16வேண்டுமென்றே பாவத்தைப் பழக்கமாகச் செய்யும்படியாக சாத்தான் நம்மைச் செய்விக்கிறான். (1 யோவான் 3:8) அவனுடைய தந்திரங்களுக்குப் பலியாவதைத் தவிர்ப்பதற்கு ஏதாவது ஒரு வழி இருக்கிறதா? ஆம், ஆனால் இது மனமார செய்யப்படும் பாவத்தினிடமான மனச்சாய்வை நாம் எதிர்த்துப் போராடுவதைத் தேவைப்படுத்துகிறது. இது சுலபமல்ல, ஏனென்றால் பாவம் செய்வதற்கு இயல்பாய் அமைந்த மனச்சாய்வு மிகவும் பலமானதாயிருக்கிறது. (எபேசியர் 2:3) பவுல் உண்மையான ஒரு போராட்டத்தைப் போராட வேண்டியதாக இருந்தது. ஏன்? ஏனென்றால் பாவம் அவனில் வாசம் செய்தது. கடவுளுடைய அங்கீகாரம் நமக்கு வேண்டுமென்றால், நமக்குள் இருக்கும் பாவமுள்ள மனச்சாய்வுகளை நாமும்கூட எதிர்த்துப் போராட வேண்டும்.—ரோமர் 7:14-24; 2 கொரிந்தியர் 5:10.

17கடவுளுடைய சட்டங்களை மீறும்படியாக நம்மை வசீகரிப்பதற்கான சந்தர்ப்பங்களுக்காக சாத்தான் எப்போதும் பார்த்துக்கொண்டிருப்பதன் காரணமாக, பாவத்துக்கு எதிரான நம்முடைய போராட்டம் சுலபமானதில்லை. (1 பேதுரு 5:8) உடன் கிறிஸ்தவர்களுக்கு அக்கறை காண்பிப்பவராக பவுல் சொன்னார்: “சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்தது போல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப் பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்.” (2 கொரிந்தியர் 11:3) சாத்தான் அதேப் போன்ற தந்திரங்களை இன்று பயன்படுத்துகிறான். யெகோவாவின் நற்குணத்தைப் பற்றியும் கடவுளுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதால் வரும் நன்மைகளைப் பற்றியும் சந்தேகத்தின் விதைகளை விதைக்க அவன் முயற்சிசெய்கிறான். சுதந்தரிக்கப்பட்ட நம்முடைய பாவமுள்ள மனச்சாய்வுகளை பிசாசு அனுகூலப்படுத்திக்கொள்ள முயற்சிசெய்து பெருமை, பேராசை, பகை மற்றும் தப்பெண்ணம் ஆகியவை அடங்கிய ஒரு போக்கை நாம் பின்தொடரும்படி செய்கிறான்.

18பிசாசு நமக்கு எதிராக பயன்படுத்தும் உபாயங்களில் ஒன்று, அவனுடைய அதிகாரத்துக்குள் கிடக்கும் உலகமாகும். (1 யோவான் 5:19) நாம் கவனமாக இல்லாவிட்டால், நம்மைச் சுற்றியிருக்கும் உலகிலுள்ள இலஞ்சம் பெறக்கூடிய மற்றும் நேர்மையற்ற ஆட்கள் கடவுளுடைய ஒழுக்க தராதரங்களை மீறும் பாவமுள்ள ஒரு போக்கினுள் சென்றுவிடுவதற்கு நமக்கு அழுத்தங்களைக் கொண்டுவருவர். (1 பேதுரு 4:3-5) அநேகர் கடவுளுடைய சட்டங்களை அசட்டை செய்து தங்கள் மனச்சாட்சியின் உறுத்தல்களையும்கூட துடைத்துப்போட்டு, கடைசியாக அதை மரத்துப்போகும்படியாகச் செய்துவிடுகின்றனர். (ரோமர் 2:14, 15; 1 தீமோத்தேயு 4:1, 2) சிலர் அவர்களுடைய அபூரணமான மனச்சாட்சியும்கூட முன்னதாக அவர்களைச் செய்வதற்கு அனுமதிக்காத ஒரு போக்கை படிப்படியாக ஏற்றுக்கொண்டுவிடுகின்றனர்.—ரோமர் 1:24-32; எபேசியர் 4:17-19.

19சுத்தமான ஒரு வாழ்க்கையை நடத்துவது இந்த உலகத்தில் ஒரு சாதனையாக இருக்கிறது. இருப்பினும், நம்முடைய படைப்பாளரைப் பிரியப்படுத்துவதற்கு அதிகம் தேவைப்படுகிறது. நாம் கடவுளில் விசுவாசம் வைத்து அவரிடமாக ஒரு பொறுப்பை உணரவேண்டும். (எபிரெயர் 11:6) “ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும்,” என்று சீஷனாகிய யாக்கோபு எழுதினார். (யாக்கோபு 4:17) ஆம், கடவுளையும் அவருடைய கட்டளைகளையும் வேண்டுமென்றே அசட்டைசெய்வதுதானே ஒரு விதமான பாவமாகும்.

20பைபிளை நீங்கள் படிப்பதன் மூலமாக நீங்கள் தேவனை அறியும் அறிவைப் பின்தொடருவதற்கு சாத்தான் எதிர்ப்பைத் தூண்டிவிடுவது மிகவும் சாத்தியமானதாக இருக்கிறது. இப்படிப்பட்ட அழுத்தங்கள் சரியானதை அப்பியாசிப்பதிலிருந்து உங்களைத் தடைசெய்ய நீங்கள் அனுமதிக்கமாட்டீர்கள் என்று உண்மையாக நம்பப்படுகிறது. (யோவான் 16:2) இயேசுவினுடைய ஊழியத்தின்போது, அநேக ஆட்சியாளர்கள் அவரில் விசுவாசம் வைத்தபோதிலும், அவர்கள் தங்களுடைய சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டுவிடுவரோ என்ற பயத்தின் காரணமாக அவரைக் குறித்து அறிக்கை செய்யாதிருந்தனர். (யோவான் 12:42, 43) தேவனை அறியும் அறிவை நாடும் எவரையும் சாத்தான் இரக்கமின்றி அச்சுறுத்தி தன் விருப்பப்படி செய்ய முயற்சிசெய்கிறான். இருப்பினும், யெகோவா செய்திருக்கும் அதிசயமான காரியங்களை எப்போதும் நீங்கள் நினைவில் வைக்கவும் போற்றவும் வேண்டும். எதிர்க்கிறவர்களும்கூட அதே போற்றுதலைப் பெற்றுக்கொள்ள ஒருவேளை நீங்கள் உதவிசெய்யக்கூடியவர்களாக இருக்கலாம்.

21நாம் அபூரணராய் இருக்கும் வரையில் பாவம் செய்வோம். (1 யோவான் 1:8) இருந்தபோதிலும் இந்தப் போராட்டத்தைப் போராடுவதில் நமக்கு உதவி இருக்கிறது. ஆம், பொல்லாங்கனாகிய பிசாசாகிய சாத்தானுக்கு எதிரான நம்முடைய போராட்டத்தில் வெற்றிபெற்றவர்களாக வெளிவருவது சாத்தியமாகும். (ரோமர் 5:21) பூமியில் இயேசுவின் ஊழியம் முடியும் சமயத்தில், அவர் தம்மைப் பின்பற்றுவோரை இந்த வார்த்தைகளால் ஊக்குவித்தார்: “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்.” (யோவான் 16:33) அபூரண மனிதர்களுக்கும்கூட கடவுளுடைய உதவியோடு உலகத்தை ஜெயிப்பது கூடிய காரியமாகும். சாத்தானை எதிர்த்து ‘கடவுளுக்குத் தங்களைக் கீழ்ப்படுத்துகிறவர்களை’ அவனால் தொடமுடியாது. (யாக்கோபு 4:7; 1 யோவான் 5:18; NW) நாம் பார்க்கப் போகிற விதமாக, பாவம் மற்றும் மரணத்தின் அடிமைத்தனத்திலிருந்து வெளியேற கடவுள் ஒரு வழியை உண்டுபண்ணியிருக்கிறார்.

உங்கள் அறிவை சோதித்துப்பாருங்கள்

பிசாசாகிய சாத்தான் யார்?

மனிதர்கள் ஏன் முதியோராகி மரிக்கின்றனர்?

பாவம் என்பது என்ன?

சாத்தான் எவ்விதமாக கடவுளுக்கு எதிராக வேண்டுமென்றே பாவம்செய்யும்படியாக மக்களை இழுக்கிறான்?

[கேள்விகள்]

1. அறிவியல் அறிஞர்கள் மனித வாழ்க்கையைப் பற்றி எதை விளக்க இயலாதவர்களாக இருந்திருக்கின்றனர்?

2. வாழ்க்கை விரைவில் கடந்துபோகும் இயல்புடையதாய் இருப்பதன் காரணமாக சிலர் என்ன செய்திருக்கின்றனர்?

3. (அ) மனிதர்கள் ஏன் நித்திய வாழ்க்கைக்கான ஆவலைக் கொண்டிருக்கின்றனர்? (ஆ) மரணத்தைப் பற்றி என்ன கேள்விகள் பதிலளிக்கப்பட வேண்டும்?

4. மனிதரின் மரணத்துக்குப் பொறுப்பான குற்றவாளியை இயேசு எவ்விதமாக அடையாளங்காட்டினார்?

5. (அ) பிசாசாகிய சாத்தானாக மாறியவனின் ஆரம்பம் என்ன? (ஆ) “சாத்தான்” மற்றும் “பிசாசு” என்ற வார்த்தைகள் அர்த்தப்படுத்துவது என்ன?

6. சாத்தான் ஏன் கடவுளுக்கு எதிராக கலகம் செய்தான்?

7. (அ) மனிதரின் மரணத்துக்குக் காரணம் என்ன? (ஆ) பாவம் என்பது என்ன?

8. சாத்தான் எவ்விதமாக மனிதர்களின் வணக்கத்தைப் பெற்றுக்கொள்ள முயன்றான்?

9. முதல் மனிதருக்கு கடவுள் என்ன கட்டளையைக் கொடுத்தார், இது ஏன் நியாயமானதாக இருந்தது?

10. (அ) சாத்தான் மனிதர்களை தன் பக்கமாக இழுத்துக்கொள்ள அவர்களை எவ்வாறு அணுகினான்? (ஆ) கடவுளுக்கு என்ன கெட்ட உள்ளெண்ணம் இருப்பதாக சாத்தான் சுட்டிக்காட்டினான்? (இ) கடவுள்மீது சாத்தானின் தாக்குதலைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

11. ஆதாமும் ஏவாளும் எவ்வாறு சாத்தானுக்கு உடந்தையாய் இருப்பவர்களானார்கள்?

12. கடவுளுக்கு எதிரான மனிதரின் கலகத்தனத்திலிருந்து என்ன விளைவடைந்தது?

13. பாவம் எவ்வாறு எல்லா மனித இனத்துக்கும் பரவியது?

14. (அ) தங்கள் பாவத்தை மறுதலிப்பவர்களை நாம் யாருக்கு ஒப்பிடலாம்? (ஆ) இஸ்ரவேலருக்கு அவர்களுடைய பாவத்தன்மை எவ்விதமாக உணர்த்தப்பட்டது?

15. கடவுளுடைய வார்த்தையின் கண்ணாடியில் பார்ப்பதன் மூலம் என்ன வெளிப்படுத்தப்படுகிறது?

16. சாத்தானின் தந்திரங்களுக்குப் பலியாவதைத் தவிர்க்க நாம் என்ன செய்யக்கூடும், இது ஏன் கடினமாக இருக்கிறது?

17. நம்முடைய பாவமுள்ள மனச்சாய்வுகளுக்கு எதிரான போராட்டத்தை எது அதிக கடினமாக்கிவிடுகிறது?

18. பாவத்தை முன்னேற்றுவிக்க சாத்தான் எவ்வாறு உலகத்தைப் பயன்படுத்திக்கொள்கிறான்?

19. சுத்தமான ஒரு வாழ்க்கையை வாழ்வது மட்டுமே ஏன் போதுமானதல்ல?

20. சரியானதைச் செய்வதிலிருந்து உங்களைத் தடைசெய்ய சாத்தான் எவ்வாறு முயற்சி செய்யக்கூடும், ஆனால் இப்படிப்பட்ட அழுத்தத்தை எதிர்த்து நிற்க உங்களுக்கு எது உதவக்கூடும்?

21. நாம் எவ்வாறு உலகத்தையும் நம்முடைய சொந்த பாவமுள்ள மனச்சாய்வுகளையும் ஜெயிக்கக்கூடும்?

[பக்கம் 54-ன் முழுபடம்]