உண்மையான கடவுள் யார்?
அதிகாரம் 3
உண்மையான கடவுள் யார்?
தெளிவான ஒரு இரவு நேரத்தில் வானத்தை நீங்கள் அண்ணாந்து பார்க்கையில், இத்தனை அநேக நட்சத்திரங்களைப் பார்த்து நீங்கள் ஆச்சரியப்படுவதில்லையா? அவை அங்கிருப்பதற்கான காரணத்தை நீங்கள் எவ்வாறு விளக்குவீர்கள்? மேலும் பூமியில் உயிர் வாழும் பொருட்கள்—வண்ணமிக்க மலர்கள், மகிழ்விக்கும் பாடல்களைப் பாடும் பறவைகள், சமுத்திரத்தில் தாண்டி குதிக்கும் வலிமைவாய்ந்த திமிங்கலங்கள்—பற்றி என்ன? பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறது. இவை அனைத்தும் தற்செயலாக வந்திருக்க முடியாது. பைபிளின் ஆரம்ப வார்த்தைகளை அநேகர் ஒப்புக்கொள்வது குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை: “ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்”!—ஆதியாகமம் 1:1.
2கடவுளைப் பற்றிய கேள்வியில் மனிதவர்க்கம் வெகுவாக பிரிவுற்றிருக்கிறது. கடவுள் தனி ஒரு நபரைக் குறிக்காத சக்தி என்பதாக சிலர் நினைக்கின்றனர். கடவுள் அணுகமுடியாதபடி நெடுந்தொலையில் இருப்பதாக நம்புவதால் லட்சக்கணக்கானோர் மரித்துப்போன மூதாதையரை வணங்குகிறார்கள். ஆனால் உண்மையான கடவுள், தனிநபர்களாக நம்மில் கனிவான அக்கறையைக் காண்பிக்கும் உண்மையான ஒரு ஆளாக இருக்கிறார் என்று பைபிள் வெளிப்படுத்துகிறது. அதன் காரணமாகவே, “அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே,” என்பதாக சொல்லி ‘தேவனைத் தேடும்படியாக’ அது நம்மை உற்சாகப்படுத்துகிறது.—அப்போஸ்தலர் 17:27.
3கடவுள் பார்ப்பதற்கு எப்படி இருக்கிறார்? அவருடைய ஊழியர்களில் சிலர் அவருடைய மகிமைபொருந்திய பிரசன்னத்தின் காட்சிகளைப் பார்த்திருக்கின்றனர். இவற்றில் அவர் ஒரு சிங்காசனத்தில் அமர்ந்திருப்பதாகவும், அவரிடமிருந்து பிரமிப்பூட்டும் பிரகாசம் புறப்பட்டுவருவதாகவும் அவர் தம்மை அடையாளப்படுத்தியிருக்கிறார். என்றபோதிலும், இப்படிப்பட்ட காட்சிகளைப் பார்த்தவர்கள் ஒருபோதும் தெளிவாக ஒரு முகத்தை விவரிக்கவில்லை. (தானியேல் 7:9, 10; வெளிப்படுத்துதல் 4:2, 3) அது ஏனென்றால் “தேவன் ஆவியாயிருக்கிறார்”; அவருக்கு சரீரப்பிரகாரமான ஒரு உடல் கிடையாது. (யோவான் 4:24) உண்மையில், நம்முடைய படைப்பாளருக்குத் துல்லியமாக சரீரசம்பந்தமான ஒரு உருவத்தை உண்டாக்குவது கூடாத காரியமாகும், ஏனென்றால், “தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை.” (யோவான் 1:18; யாத்திராகமம் 33:20) என்றபோதிலும், கடவுளைப் பற்றி பைபிள் நமக்கு அதிகத்தைப் போதிக்கிறது.
உண்மையான கடவுளுக்கு ஒரு பெயர் இருக்கிறது
4பைபிளில், உண்மையான கடவுள் “சர்வவல்லமையுள்ள தேவன்,” ‘உன்னதமானவர்,’ ‘மகத்தான சிருஷ்டிகர்,’ ‘மகத்தான போதகர்,’ ‘கர்த்தராகிய ஆண்டவர்,’ மற்றும் ‘நித்தியத்தின் ராஜா,’ போன்ற சொற்றொடர்களால் விவரிக்கப்படுகிறார். (ஆதியாகமம் 17:1; சங்கீதம் 50:14; பிரசங்கி 12:1, NW; ஏசாயா 30:20, NW; அப்போஸ்தலர் 4:24; 1 தீமோத்தேயு 1:17) இப்படிப்பட்ட பட்டப்பெயர்களின்பேரில் தியானம்செய்வது தேவனை அறியும் அறிவில் வளருவதற்கு நமக்கு உதவக்கூடும்.
5என்றபோதிலும், எபிரெய வேதாகமத்தில் மட்டுமே சுமார் 7,000 தடவைகள் தோன்றும் ஒரு தனிச்சிறப்பான பெயர் கடவுளுக்கு இருக்கிறது—அவருடைய பட்டப்பெயர்கள் எதையும்விட அதிகமான தடவைகள். சுமார் 1,900 ஆண்டுகளுக்கு முன்பாக, யூதர்கள் மூட நம்பிக்கையின் காரணமாக தெய்வீகப் பெயரை உச்சரிப்பதை நிறுத்திவிட்டனர். பைபிள் எபிரெயு, உயிரெழுத்துக்கள் இல்லாமல் எழுதப்பட்டது. ஆகவே நான்கு மெய் எழுத்துக்களை (יהוה) இணைப்பதால் உருவாகும் தெய்வீகப் பெயரை மோசே, தாவீது அல்லது பண்டைய காலத்தைச் சேர்ந்த மற்றவர்கள் எவ்விதமாக உச்சரித்தனர் என்பதைக் குறித்து துல்லியமாக அறிவதற்கு எந்த வழியுமில்லை. ஒருசில கல்விமான்கள் கடவுளுடைய பெயர் “யாவே” என்பதாக உச்சரிக்கப்பட்டிருக்கலாம் என கருத்து தெரிவிக்கின்றனர், ஆனால் அவர்களால் நிச்சயமாக சொல்லமுடியாது. “யெகோவா” என்ற உச்சரிப்பு பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டுவருகிறது, மற்ற மொழிகளில் அதற்கு இணையானவை பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.—தமிழ் யூனியன் பைபிளில் யாத்திராகமம் 6:3 மற்றும் ஏசாயா 26:4-ஐக் காண்க.
நீங்கள் ஏன் கடவுளுடைய பெயரை பயன்படுத்த வேண்டும்
6கடவுளுடைய தனிச்சிறப்பு பெயரான யெகோவா என்பது அவரை மற்ற எல்லா கடவுட்களிடமிருந்து வித்தியாசப்படுத்த உதவியாக இருக்கிறது. சங்கீதம் 83:17 தெளிவாக சொல்கிறது: “யேகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமானவர்.” ஆகவே கடவுளுடைய பெயரை அவரைப் பற்றி பேசுகையில் நாம் உபயோகிப்பது பொருத்தமாகவே இருக்கிறது.
அதன் காரணமாகவே அந்தப் பெயர் பைபிளில், விசேஷமாக அதனுடைய எபிரெய வாசகத்தில் அத்தனை அடிக்கடி தோன்றுகிறது. அநேக மொழிபெயர்ப்பாளர்கள் தெய்வீகப் பெயரைப் பயன்படுத்த தவறுகின்றனர், ஆனால்7யெகோவா என்ற பெயர் “ஆகும்படி செய்தல்,” என்ற ஒரு வகையான எபிரெய வினைவடிவமாகும். இதன் காரணமாக, கடவுளுடைய பெயரின் அர்த்தம் “ஆகும்படி செய்கிறவர்,” என்பதாகும். அதன் காரணமாக யெகோவா மிகப் பெரிய நோக்கமுள்ளவராக தம்மை அடையாளப்படுத்துகிறார். அவர் எப்போதும் தம்முடைய நோக்கங்கள் கைகூடிவரும்படியாகச் செய்கிறார். உண்மையான கடவுள் மாத்திரமே சரியாகவே இந்தப் பெயரைத் தாங்கியிருக்க முடியும், ஏனென்றால் மனிதர்கள் தங்களுடைய திட்டங்கள் வெற்றிபெறும் என்பதாக ஒருபோதும் நிச்சயமாயிருக்க முடியாது. (யாக்கோபு 4:13, 14) யெகோவா மாத்திரமே சொல்லமுடியும்: “அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும். . . . நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்.”—ஏசாயா 55:11.
8எபிரெய கோத்திரப் பிதாக்களான ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு ஆகிய ஒவ்வொருவரும் ‘யெகோவாவுடைய நாமத்தை தொழுதுகொண்டார்கள்,’ ஆனால் தெய்வீகப் பெயரின் முழு பொருளை அவர்கள் அறியாமல் இருந்தனர். (ஆதியாகமம் 21:33; 26:25; 32:9; NW; யாத்திராகமம் 6:3) பின்னால் யெகோவா அவர்களுடைய சந்ததியாரான இஸ்ரவேலரை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலைசெய்து “பாலும் தேனும் ஓடுகிற தேச”த்தை அவர்களுக்குக் கொடுப்பதாக தம்முடைய நோக்கத்தை வெளிப்படுத்தியபோது அவர்களுக்கு இது கூடாத காரியமாக தோன்றியிருக்கலாம். (யாத்திராகமம் 3:17) என்றபோதிலும், கடவுள் அவருடைய பெயரின் நித்தியப் பொருளை வலியுறுத்துபவராக தீர்க்கதரிசியாகிய மோசேயிடம் சொன்னார்: “ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் [“யெகோவா,” NW] என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்வாயாக; என்றைக்கும் இதுவே என் நாமம், தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என் பேர்ப்பிரஸ்தாபம்.”—யாத்திராகமம் 3:15.
9மோசே எகிப்திய ராஜாவாகிய பார்வோனிடம், யெகோவாவை வனாந்தரத்திலே வணங்குவதற்காக இஸ்ரவேலரை போகவிடும்படி கேட்டார். ஆனால் கடவுளாக கருதப்பட்டவனும் மற்ற எகிப்திய கடவுட்களை யாத்திராகமம் 5:1, 2.
வணங்கியவனுமாகிய பார்வோன் இவ்வாறு பதிலளித்தான்: “நான் இஸ்ரவேலைப் போகவிடக் கர்த்தரின் [“யெகோவாவின்,” NW] வார்த்தையைக் கேட்கிறதற்கு அவர் யார்? நான் கர்த்தரை அறியேன்; நான் இஸ்ரவேலைப் போகவிடுவதில்லை.”—10யெகோவா தம்முடைய பெயரின் பொருளுக்கு இசைவாக செயல்படுகிறவராய் தம்முடைய நோக்கத்தை நிறைவேற்ற படிப்படியான நடவடிக்கை எடுத்தார். பூர்வ எகிப்தின்மீது அவர் பத்து வாதைகளைக் கொண்டுவந்தார். கடைசி வாதை மேட்டிமையான பார்வோனின் மகன் உள்ளிட்ட எல்லா எகிப்திய முதற்பேறானவர்களையும் கொன்றுவிட்டது. அப்போது இஸ்ரவேலர் போய்விட வேண்டும் என்றும் எகிப்தியர் ஆவலாக இருந்தனர். என்றபோதிலும், ஒருசில எகிப்தியர்கள் யெகோவாவின் வல்லமையினால் அந்தளவு மனம் கவரப்பட்டதன் காரணமாக எகிப்தைவிட்டு புறப்படுவதில் இஸ்ரவேலரை சேர்ந்துகொண்டனர்.—யாத்திராகமம் 12:35-38.
11அறுநூறு போர் இரதங்களோடு, பிடிவாதமுள்ள பார்வோனும் அவனுடைய சேனையும் அவனுடைய அடிமைகளைத் திரும்பப் பிடிப்பதற்காக புறப்பட்டனர். எகிப்தியர் கிட்ட வந்தபோது, இஸ்ரவேலர் வறண்ட நிலத்தில் கடந்துபோகும்படியாக சிவந்த சமுத்திரத்தை கடவுள் அற்புதமாக பிளந்தார். துரத்திக்கொண்டு வந்தவர்கள் சமுத்திரத்தின் நடுவே வந்தபோது, யெகோவா “அவர்களுடைய இரதங்களிலிருந்து உருளைகள் கழலவும், அவர்கள் தங்கள் இரதங்களை வருத்தத்தோடே நடத்தவும்பண்ணினார்.” எகிப்திய போர்வீரர்கள் “இஸ்ரவேலரைவிட்டு ஓடிப்போவோம், கர்த்தர் அவர்களுக்குத் துணைநின்று எகிப்தியருக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிறார் என்றார்கள்.” (யாத்திராகமம் 14:22-25, 28) இவ்விதமாக யெகோவா தமக்கு ஒரு மகத்தான பெயரை உண்டுபண்ணிக்கொண்டார், அந்தச் சம்பவம் இன்றுவரையாக மறக்கப்படவில்லை.—யோசுவா 2:9-11.
12கடவுள் தமக்கு உண்டுபண்ணிக்கொண்டிருக்கும் பெயர் இன்று நமக்கு அதிகமான அர்த்தத்தையுடையதாக இருக்கிறது. யெகோவா என்ற அவருடைய பெயர், அவர் நோக்கங்கொண்டிருக்கும் எல்லாவற்றையும் கைகூடிவரப்பண்ணுவார் என்பதற்கு உத்தரவாதமாக நிற்கிறது. இதில் நம்முடைய பூமி ஒரு பரதீஸாக மாறவேண்டும் என்ற அவருடைய ஆதி நோக்கத்தின் நிறைவேற்றமும் அடங்கும். (ஆதியாகமம் 1:28; 2:8) அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக, இன்று அவருடைய அரசாட்சியை எதிர்ப்பவர்கள் அனைவரையும் அவர் அகற்றிவிடுவார், ஏனென்றால் அவர் சொல்லியிருக்கிறார்: “அப்பொழுது நான் கர்த்தர் [“யெகோவா,” NW] என்று அறிந்துகொள்வார்கள்.” (எசேக்கியேல் 38:23) அதன்பிறகு கடவுள் நீதியுள்ள ஒரு புதிய உலகிற்குள் தம்முடைய வணக்கத்தாரைக் கொண்டுசெல்வதாக அவர் கொடுத்திருக்கும் வாக்கை நிறைவேற்றுவார்.—2 பேதுரு 3:13.
13கடவுளுடைய தயவைப் பெற விரும்புகிற அனைவரும் அவருடைய பெயரைநோக்கி விசுவாசத்தோடு கூப்பிட கற்றுக்கொள்ள வேண்டும். பைபிள் வாக்களிக்கிறது: ‘யெகோவாவுடைய நாமத்தை நோக்கி கூப்பிடுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.’ (ரோமர் 10:13, NW) ஆம், யெகோவா என்ற பெயர் மிகவும் அர்த்தமுள்ளதாகும். உங்கள் கடவுளாகவும் விடுவிப்பாளராகவும் யெகோவாவை நோக்கிக் கூப்பிடுவது உங்களை முடிவில்லாத மகிழ்ச்சிக்கு வழிநடத்திச் செல்லக்கூடும்.
உண்மையான கடவுளின் பண்புகள்
14எகிப்திலிருந்து இஸ்ரவேலர் விடுவிக்கப்பட்டதைப் பற்றிய படிப்பு பரிபூரண சமநிலையில் இருக்கும் கடவுளுடைய நான்கு அடிப்படை பண்புகளை உயர்த்திக் காண்பிக்கிறது. பார்வோனோடு அவர் கொண்டிருந்த செயல்தொடர்புகள் பிரமிக்க வைக்கும் அவருடைய வல்லமையை வெளிப்படுத்தின. (யாத்திராகமம் 9:16) சிக்கலான அந்த நிலைமையை கடவுள் திறமையாக கையாண்ட விதம் அவருடைய ஒப்பற்ற ஞானத்தைக் காண்பித்தது. (ரோமர் 11:33) பிடிவாதமாக எதிர்ப்பவர்களுக்கும் தம்முடைய மக்களை ஒடுக்குபவர்களுக்கும் தண்டனையை வழங்குவதில் அவர் தம்முடைய நீதியை வெளிப்படுத்தினார். (உபாகமம் 32:4) கடவுளுடைய தலையாய பண்பு அன்பு. யெகோவா ஆபிரகாமின் சந்ததியாரைக் குறித்த தம்முடைய வாக்குறுதியை நிறைவேற்றுவதன் மூலம் குறிப்பிடத்தக்க அன்பைக் காண்பித்தார். (உபாகமம் 7:8) தங்கள் பொய்க் கடவுட்களைவிட்டு ஒரே உண்மையான கடவுளுக்காக தங்கள் நிலைநிற்கையை எடுப்பதன் மூலம் அதிகமாக பயனடைவதற்கு சில எகிப்தியரை அனுமதிப்பதன் மூலமாகவும்கூட அவர் அன்பைக் காண்பித்தார்.
15நீங்கள் பைபிளை வாசிக்கையில், அன்பே கடவுளுடைய முக்கிய குணமாக இருப்பதையும், அதை அவர் அநேக வழிகளில் காண்பிப்பதையும் கவனிப்பீர்கள். உதாரணமாக, அன்பின் காரணமாகவே அவர் படைப்பாளராக ஆகவும் வாழ்வதன் சந்தோஷத்தை முதலாவது ஆவி சிருஷ்டிகளோடு பகிர்ந்துகொள்ளவும் தூண்டப்பட்டார். அந்தக் கோடான கோடி தேவதூதர்கள் கடவுளை நேசித்து அவரைத் துதிக்கின்றனர். (யோபு 38:4, 7; தானியேல் 7:10) பூமியைப் படைத்து சந்தோஷமாக மனிதர் அதில் வாழ்வதற்காக அதை ஆயத்தப்படுத்தியதிலும்கூட கடவுள் அன்பைக் காட்டினார்.—ஆதியாகமம் 1:1, 26-28; சங்கீதம் 115:16.
சங்கீதம் 139:14) அவர் “வானத்திலிருந்து மழைகளையும் செழிப்புள்ள காலங்களையும் நமக்குத் தந்து, ஆகாரத்தினாலும் சந்தோஷத்தினாலும் நம்முடைய இருதயங்களை நிரப்”புவதில் அவருடைய அன்பு காண்பிக்கப்படுகிறது. (அப்போஸ்தலர் 14:17) கடவுள் “தீயோர்மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.” (மத்தேயு 5:45) தேவனை அறியும் அறிவை அடைந்து அவருடைய வணக்கத்தாராக அவரை மகிழ்ச்சியோடு சேவிப்பதற்கு உதவிசெய்வதற்கும்கூட அன்பு நம்முடைய படைப்பாளரைத் தூண்டுகிறது. ஆம், “தேவன் அன்பாகவே இருக்கிறார்.” (1 யோவான் 4:8) ஆனால் அவருடைய ஆளுமையில் இன்னும் அநேக அம்சங்கள் இருக்கின்றன.
16நாம் சொல்லமுடியாதபடி அத்தனை அநேக வழிகளில் கடவுளுடைய அன்பிலிருந்து பயனடைகிறோம். ஒரு காரியமானது, நாம் வாழ்க்கையை அனுபவித்து மகிழும்படி அன்பாக நம்முடைய சரீரங்களை அத்தனை மகத்தான விதத்தில் உண்டுபண்ணியிருக்கிறார். (‘இரக்கமும் கிருபையுமுள்ள தேவன்’
17இஸ்ரவேலர் சிவந்த சமுத்திரத்தைக் கடந்தப் பின்பு, அவர்கள் இன்னும் கடவுளை நன்றாக அறிந்துகொள்ள வேண்டிய தேவை இருந்தது. மோசே இந்தத் தேவையை உணர்ந்து இவ்வாறு ஜெபித்தார்: “உம்முடைய கண்களில் இப்பொழுது எனக்குக் கிருபை கிடைத்ததானால் நான் உம்மை அறிவதற்கும், உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைப்பதற்கும், உம்முடைய வழியை எனக்கு அறிவியும்.” (யாத்திராகமம் 33:13) கடவுளுடைய சொந்த அறிப்பைக் கேட்டபோது, மோசே கடவுளை மேம்பட்ட விதமாக அறியவந்தார்: “கர்த்தர், கர்த்தர்; இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், [“கோபிக்க தாமதிக்கிற குணமும்,” NW] மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன். ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்; அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவர்; குற்றவாளியைக் குற்றமற்றவனாக விடா[திருக்கிறவர்].” (யாத்திராகமம் 34:6, 7) கடவுள் தம்முடைய அன்பை நீதியோடு சமநிலைப்படுத்தி வேண்டுமென்றே பாவம்செய்கிறவர்களை அவர்களுடைய பாவங்களின் விளைவுகளிலிருந்து பாதுகாக்காமல் இருக்கிறார்.
18மோசே கற்றுக்கொண்டவிதமாகவே, யெகோவா இரக்கம் காண்பிக்கிறார். இரக்கமுள்ள ஒரு நபர் துன்பப்படுகிறவர்கள் மேல் பரிதாபப்பட்டு அவர்களுடைய கஷ்டத்தைப் போக்க முயற்சி செய்கிறார். இவ்விதமாகவே கடவுள் துன்பம், நோய் மற்றும் மரணத்திலிருந்து நிரந்தரமான விடுதலையை ஏற்பாடுசெய்வதன் மூலம் மனிதவர்க்கத்துக்குக் கருணை காண்பித்திருக்கிறார். (வெளிப்படுத்துதல் 21:3-5) கடவுளுடைய வணக்கத்தார் இந்தப் பொல்லாத உலக நிலைமைகளின் காரணமாக பெருந்துன்பங்களை அனுபவிக்கவோ அல்லது ஞானமற்றவிதமாக நடந்துகொண்டு தொந்தரவை எதிர்ப்படவோ செய்யலாம். ஆனால் உதவிக்காக அவர்கள் மனத்தாழ்மையாக யெகோவாவிடம் திரும்பினால், அவர் அவர்களுக்கு ஆறுதலளித்து உதவிசெய்வார். ஏன்? ஏனென்றால் அவர் இரக்கமாக தம்முடைய வணக்கத்தாருக்குக் கனிவான அக்கறையைக் காண்பிக்கிறார்.—சங்கீதம் 86:15; 1 பேதுரு 5:6, 7.
19அதிகாரத்திலுள்ள அநேக ஆட்கள் மற்றவர்களைக் கொடூரமாக நடத்துகின்றனர். எதிர்மாறாக, யெகோவா தம்முடைய மனத்தாழ்மையுள்ள ஊழியர்களிடமாக எவ்வளவு கிருபையாக இருக்கிறார்! சர்வலோகத்திலும் மிக உயர்ந்த அதிகாரமுடையவராய் இருந்தபோதிலும், எல்லா மனிதவர்க்கத்துக்கும் பொதுவாக அவர் குறிப்பிடத்தக்க தயவைக் காண்பிக்கிறார். (சங்கீதம் 8:3, 4; லூக்கா 6:35) யெகோவா தனிநபர்களிடமாகவும்கூட கிருபையுள்ளவராக, தயவுக்காக அவர்களுடைய திட்டவட்டமான வேண்டுதல்களுக்குப் பதிலளிக்கிறவராக இருக்கிறார். (யாத்திராகமம் 22:26, 27; லூக்கா 18:13, 14) நிச்சயமாகவே கடவுள் எவருக்குமே தயவை அல்லது இரக்கத்தைக் காண்பிக்க கடமைப்பட்டவராக இல்லை. (யாத்திராகமம் 33:19) ஆகவே, கடவுளுடைய இரக்கத்துக்காகவும் கிருபைக்காகவும் நாம் ஆழ்ந்த போற்றுதலைக் காண்பிப்பது அவசியமாகும்.—சங்கீதம் 145:1, 8.
கோபிக்க தாமதிக்கிறவர், பாரபட்சமற்றவர், நீதியுள்ளவர்
20யெகோவா கோபிக்க தாமதிக்கிறவர். என்றபோதிலும், அவர் நடவடிக்கை எடுப்பதில்லை என்பதை இது அர்த்தப்படுத்துவதில்லை, ஏனென்றால் பிடிவாதமுள்ள பார்வோனையும் அவனுடைய சேனையையும் சிவந்த சமுத்திரத்தில் அழிக்கையில் அவ்விதமாகச் செய்தார். யெகோவா பாரபட்சமற்றவராகக்கூட இருக்கிறார். ஆகவே, அவருடைய தயவைப் பெற்ற மக்களாகிய இஸ்ரவேலர், விடாப்பிடியாக தவறுசெய்துகொண்டிருந்த காரணத்தால் கடைசியில் அவருடைய தயவை அவர்கள் இழந்துபோனார்கள். எல்லா தேசங்களிலும் இருந்துவரும் மக்களை, ஆனால் அவருடைய நீதியுள்ள வழிகளுக்கு இசைவாக வாழ்பவர்களை மாத்திரமே அவருடைய வணக்கத்தாராக அவர் ஏற்றுக்கொள்கிறார்.—அப்போஸ்தலர் 10:34, 35.
21பைபிள் புத்தகமாகிய வெளிப்படுத்துதல் கடவுளுடைய ‘நீதியான செயல்களைப்’ பற்றி கற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை உயர்த்திக் காண்பிக்கிறது. பரலோக சிருஷ்டிகள் இவ்வாறு பாடுவதாக அது நமக்குச் சொல்கிறது: “சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள். கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம்? தேவரீர் ஒருவரே பரிசுத்தர், எல்லா ஜாதிகளும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்; உம்முடைய நீதியான செயல்கள் வெளியரங்கமாயின.” (வெளிப்படுத்துதல் 15:2-4) அவர் எது சரியென்று சொல்கிறாரோ அதற்கிசைவாக வாழ்வதன் மூலம் நாம் யெகோவாவுக்கு ஆரோக்கியமான பயத்தை அல்லது மரியாதையைக் காண்பிக்கிறோம். கடவுளுடைய ஞானத்தையும் அன்பையும் குறித்து நமக்கு நாமே நினைப்பூட்டிக்கொள்வதன் மூலம் இதைச் செய்வது சுலபமாகிறது. அவருடைய எல்லா கட்டளைகளும் நம்முடைய நன்மைக்கானவையே.—ஏசாயா 48:17, 18.
‘நம்முடைய தேவனாகிய யெகோவா ஒருவரே’
22பண்டைய எகிப்தியர் அநேக கடவுட்களை வணங்கினர், ஆனால் யெகோவா ‘தனிப்பட்ட பக்தியை வற்புறுத்துகிற கடவுள்.’ (யாத்திராகமம் 20:5, NW) மோசே இஸ்ரவேலருக்கு, ‘நம்முடைய தேவனாகிய யெகோவா ஒருவரே யெகோவா,’ என்பதாக நினைப்பூட்டினார். (உபாகமம் 6:4, NW) இயேசு கிறிஸ்து அந்த வார்த்தைகளை திரும்பக் கூறினார். (மாற்கு 12:28, 29, NW) ஆகவே, பைபிளை கடவுளுடைய வார்த்தையாக ஏற்றுக்கொள்பவர்கள் ஒருவரில் மூன்று நபர்களையோ அல்லது மூன்று கடவுட்களையோ கொண்ட ஒரு திரித்துவத்தை வணங்குவதில்லை. உண்மையில், “திரித்துவம்” என்ற வார்த்தை பைபிளில் காணப்படுவதுகூட இல்லை. உண்மையான கடவுள் இயேசு கிறிஸ்துவிலிருந்து வேறுபட்ட தனியொரு ஆளாக இருக்கிறார். (யோவான் 14:28; 1 கொரிந்தியர் 15:28) கடவுளுடைய பரிசுத்த ஆவி ஒரு ஆளல்ல. அது சர்வ வல்லமையுள்ளவர் தம்முடைய நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக பயன்படுத்தும் யெகோவாவின் செயல் நடப்பிக்கும் சக்தியாகும்.—ஆதியாகமம் 1:2, NW; அப்போஸ்தலர் 2:1-4, 32, 33; 2 பேதுரு 1:20, 21.
23யெகோவா எவ்வளவு அதிசயமானவர் என்பதை நீங்கள் சிந்திக்கும்போது, உங்கள் வணக்கத்துக்கு அவர் தகுதியுள்ளவர் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ள மாட்டீர்களா? அவருடைய வார்த்தையாகிய பைபிளை நீங்கள் படிக்கையில், அவரை மேம்பட்டவிதமாக நீங்கள் அறிந்துகொண்டு, உங்களுடைய நித்திய நலனுக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் உங்களிடம் அவர் என்ன தேவைப்படுத்துகிறார் என்பதை கற்றறிவீர்கள். (மத்தேயு 5:3, 6) மேலுமாக, கடவுளிடமாக உங்கள் அன்பு வளரும். அது பொருத்தமானதே, ஏனென்றால் இயேசு சொன்னார்: “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும் உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக.” (மாற்கு 12:30) தெளிவாகவே, கடவுளிடமாக இயேசு இப்படிப்பட்ட அன்பை வைத்திருந்தார். ஆனால் இயேசு கிறிஸ்துவைப் பற்றி பைபிள் என்ன வெளிப்படுத்துகிறது? யெகோவாவின் நோக்கத்தில் அவருடைய பங்கு என்ன?
உங்கள் அறிவை சோதித்துப்பாருங்கள்
கடவுளுடைய பெயர் என்ன, எபிரெய வேதாகமத்தில் அது எவ்வளவு அடிக்கடி பயன்படுத்தப்பட்டிருக்கிறது?
கடவுளுடைய பெயரை நீங்கள் ஏன் பயன்படுத்தவேண்டும்?
யெகோவா தேவனின் என்ன பண்புகள் விசேஷமாக உங்களைக் கவருவதாக இருக்கின்றன?
[கேள்விகள்]
1. அநேகர் பைபிளின் ஆரம்ப வார்த்தைகளை ஏன் ஒப்புக்கொள்கின்றனர்?
2. கடவுளைப்பற்றி பைபிள் என்ன சொல்லுகிறது, நம்மை என்ன செய்யும்படியாக அது உற்சாகப்படுத்துகிறது?
3. கடவுளுக்கு ஒரு உருவத்தை உண்டுபண்ணுவது ஏன் கூடாத காரியம்?
4. பைபிளில் கடவுளுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கும் சில அர்த்தமுள்ள பட்டப்பெயர்கள் யாவை?
5. கடவுளுடைய பெயர் என்ன, எபிரெய வேதாகமத்தில் அது எவ்வளவு அடிக்கடி தோன்றுகிறது?
6. சங்கீதம் 83:17 யெகோவாவைப் பற்றி என்ன சொல்லுகிறது, அவருடைய பெயரை நாம் ஏன் பயன்படுத்தவேண்டும்?
7. யெகோவா என்ற பெயர் கடவுளைப் பற்றி நமக்கு என்ன போதிக்கிறது?
8. மோசேயின் மூலமாக யெகோவா என்ன நோக்கத்தை அறிவித்தார்?
9. யெகோவாவை பார்வோன் எவ்விதமாக கருதினான்?
10. பூர்வ எகிப்தில், இஸ்ரவேலரை உட்படுத்தும் தம்முடைய நோக்கத்தை நிறைவேற்ற யெகோவா என்ன நடவடிக்கை எடுத்தார்?
11. சிவந்த சமுத்திரத்தில் யெகோவா என்ன அற்புதத்தை நடப்பித்தார், அவருடைய சத்துருக்கள் எதை ஒப்புக்கொள்ளும்படியாக கட்டாயப்படுத்தப்பட்டனர்?
12, 13. (அ) கடவுளுடைய பெயர் இன்று நமக்கு என்ன அர்த்தத்தையுடையதாக இருக்கிறது? (ஆ) மக்கள் எதைக் கற்றுக்கொள்வது அவசரமாயிருக்கிறது, ஏன்?
14. கடவுளுடைய என்ன அடிப்படை பண்புகளை பைபிள் உயர்த்திக் காண்பிக்கிறது?
15, 16. கடவுள் என்ன வழிகளில் அன்பைக் காண்பித்திருக்கிறார்?
17. யாத்திராகமம் 34:6, 7-ல் கடவுளைப் பற்றி நாம் என்ன கற்றறிகிறோம்?
18. யெகோவா எவ்விதமாக இரக்கமுள்ளவராக நிரூபித்திருக்கிறார்?
19. கடவுள் கிருபையுள்ளவர் என்று நாம் ஏன் சொல்லமுடியும்?
20. கடவுள் கோபிக்க தாமதிக்கிறவரும் பாரபட்சமற்றவருமாக இருக்கிறார் என்பதை எது காட்டுகிறது?
21. (அ) வெளிப்படுத்துதல் 15:2-4 கடவுளைப் பற்றி நமக்கு என்ன கற்பிக்கிறது? (ஆ) கடவுள் எது சரியென்று சொல்கிறாரோ அதைச் செய்வதை எது நமக்கு சுலபமாக்கும்?
22. பைபிளை ஏற்றுக்கொள்பவர்கள் ஏன் ஒரு திரித்துவத்தை வணங்குவதில்லை?
23. (அ) கடவுளிடமாக உங்கள் அன்பு எவ்விதமாக வளரும்? (ஆ) கடவுளை நேசிப்பதைப் பற்றி இயேசு என்ன சொன்னார், கிறிஸ்துவைப் பற்றி நாம் என்ன கற்றுக்கொள்வது அவசியமாகும்?
[பக்கம் 29-ன் படம்]
சகலத்தையும் படைத்தவரை உங்களுக்கு எவ்வளவு நன்றாகத் தெரியும்?