Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 6

உங்கள் பருவவயது பிள்ளை செழித்தோங்க உதவிசெய்யுங்கள்

உங்கள் பருவவயது பிள்ளை செழித்தோங்க உதவிசெய்யுங்கள்

1, 2. பருவவயது என்ன சவால்களையும் மகிழ்ச்சிகளையும் இன்பங்களையும் கொண்டுவரலாம்?

 ஒ ரு பருவவயது பிள்ளையை வீட்டில் வைத்திருப்பது, ஐந்து வயது அல்லது பத்து வயது பிள்ளையை வைத்திருப்பதைக் காட்டிலும் மிகவும் வித்தியாசமான விஷயம். பருவவயது அதற்குரிய சவால்களையும் பிரச்சினைகளையும் கொண்டு வருகிறது, ஆனால் அது இன்பங்களையும் பலன்களையும்கூட கொண்டுவரக்கூடும். இளம் நபர்கள் பொறுப்புள்ளவர்களாக நடந்துகொண்டு யெகோவாவோடு ஒரு சிறந்த உறவை வைத்திருக்கக்கூடும் என்பதை யோசேப்பு, தாவீது, யோசியா, தீமோத்தேயு போன்றவர்களின் முன்மாதிரிகள் காண்பிக்கின்றன. (ஆதியாகமம் 37:2-11; 1 சாமுவேல் 16:11-13; 2 இராஜாக்கள் 22:3-7; அப்போஸ்தலர் 16:1, 2) இன்றுள்ள பருவவயது பிள்ளைகள் அநேகர் இதே விஷயத்தை நடைமுறையில் செயல்படுத்திக் காண்பிக்கின்றனர். அவர்களில் சிலரை நீங்கள் ஒருவேளை அறிந்திருப்பீர்கள்.

2 இருப்பினும், சிலருக்கு பருவவயது கொந்தளிப்பானதாய் இருக்கிறது. வளரிளமைப் பருவத்தினர் உணர்ச்சிகளில் ஏற்றத்தாழ்வுகளை அனுபவிக்கின்றனர். பருவவயது ஆண்களும் பெண்களும் தனித்து செயல்படுவதற்கு அதிகமாக விரும்பலாம், அவர்கள்மீது பெற்றோர் வைக்கும் வரம்புகளை அவர்கள் கடுமையாக எதிர்க்கலாம். இருப்பினும், அப்படிப்பட்ட இளைஞர்கள் இன்னும் அனுபவமற்றவர்களாகவே இருக்கின்றனர், அவர்களுக்கு பெற்றோரின் அன்பான, பொறுமையுடன்கூடிய உதவி தேவை. ஆம், பருவவயது கிளர்ச்சியூட்டுவதாக இருக்கக்கூடும், ஆனால் அது பெற்றோருக்கும் பருவவயது பிள்ளைகளுக்கும் மனதைக் குழப்புவதாகவும்கூட இருக்கக்கூடும். அப்படிப்பட்ட வருடங்களின்போது இளைஞர்களுக்கு எவ்வாறு உதவிசெய்யலாம்?

3. என்ன வழியில் பெற்றோர் தங்கள் வளரிளமைப் பருவத்திலிருக்கும் பிள்ளைகளுக்கு வாழ்க்கையில் ஒரு மிகச் சிறந்த வாய்ப்பை அளிக்கலாம்?

3 பைபிளின் புத்திமதியைப் பின்பற்றும் பெற்றோர், வளரிளமைப் பருவத்திலிருக்கும் தங்கள் பிள்ளைகள் அச்சோதனைகள் வாயிலாக பொறுப்புள்ள பெரியவர்களாக வளர்ந்து வெற்றிகரமாக முன்னேற்றமடைவதற்கு தங்களாலான மிகச் சிறந்த வாய்ப்பை அளிக்கின்றனர். எல்லா தேசங்களிலும் எல்லா காலப்பகுதிகளின்போதும், பைபிள் நியமங்களை ஒன்றுசேர்ந்து பொருத்திய பெற்றோரும் பருவவயது பிள்ளைகளும் வெற்றியுடன் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கின்றனர்.—சங்கீதம் 119:1.

நேர்மையான மற்றும் ஒளிவுமறைவற்ற கருத்து பரிமாற்றம்

4. பருவவயதில் விசேஷமாக இதயத்திலிருந்து விஷயங்களை மனம்விட்டுப் பேசுவது ஏன் முக்கியமானது?

4 பைபிள் சொல்கிறது: “ஆலோசனையில்லாமையால் எண்ணங்கள் சித்தியாமற்போம்.” (நீதிமொழிகள் 15:22) பிள்ளைகள் சிறியவர்களாய் இருக்கையில் இதயத்திலிருந்து விஷயங்களை மனம்விட்டுப் பேசுவது அவசியமென்றால், பருவவயதின்போது—இளைஞர்கள் வீட்டில் குறைவான நேரமும் பள்ளி நண்பர்களோடு அல்லது மற்ற கூட்டாளிகளோடு அதிக நேரமும் செலவழிக்கும்போது—அது விசேஷமாய் இன்றியமையாததாய் இருக்கிறது. இதயத்திலிருந்து விஷயங்களை மனம்விட்டுப் பேசாவிடில்—பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் இடையே நேர்மையான, ஒளிவுமறைவற்ற கருத்து பரிமாற்றம் இல்லாவிடில்—பருவவயதினர் வீட்டில் அந்நியர்களாக ஆகிவிடலாம். ஆகையால் கருத்து பரிமாற்றத்துக்கான வழிகளை எவ்வாறு திறந்து வைக்கலாம்?

5. பருவவயது பிள்ளைகள் தங்கள் பெற்றோரிடம் கருத்து பரிமாற்றம் செய்யும் விஷயத்தை எவ்வாறு நோக்க வேண்டும் என்று உற்சாகப்படுத்தப்படுகின்றனர்?

5 இதில் பருவவயது பிள்ளைகளும் பெற்றோரும் தங்கள் பங்கைச் செய்ய வேண்டும். வளரிளமைப் பருவத்தினர் சிறியவர்களாய் இருந்தபோது தங்கள் பெற்றோரிடம் பேசியதைவிட இப்போது அவர்களுடன் பேசுவதை அதிக கடினமாகக் காணலாம் என்பது உண்மையே. இருப்பினும், “ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்துபோவார்கள்; அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் சுகம் உண்டாகும்.” (நீதிமொழிகள் 11:14) இந்த வார்த்தைகள் இளைஞர், வயோதிபர் உட்பட எல்லாருக்கும் பொருந்தும். இதை உணரும் பருவவயதினர் தங்களுக்கு திறமைவாய்ந்த வழிநடத்துதல் இன்னும் தேவை என்பதை புரிந்துகொள்வர், ஏனென்றால் அவர்கள் முன்பு இருந்ததைவிட அதிக சிக்கலான பிரச்சினைகளை எதிர்ப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். விசுவாசத்தில் இருக்கும் தங்கள் பெற்றோர் ஆலோசகர்களாக இருப்பதற்கு நன்கு தகுதி பெற்றிருப்பவர்கள் என்பதை அவர்கள் கண்டுணர வேண்டும், ஏனென்றால் அவர்கள் வாழ்க்கையில் கூடுதலான அனுபவம் பெற்றிருக்கின்றனர், மேலும் பல வருடங்களாக தங்கள் அன்பான கவனிப்பை நிரூபித்துக் காண்பித்திருக்கின்றனர். எனவே, ஞானமுள்ள பருவவயதினர் வாழ்க்கையின் இந்தக் கட்டத்தில் தங்கள் பெற்றோரின் வழிநடத்துதலை புறக்கணிக்க மாட்டார்கள்.

6. தங்கள் பருவவயது பிள்ளைகளிடம் கருத்து பரிமாற்றம் செய்கையில் ஞானமும் அன்புமுள்ள பெற்றோர் என்ன மனநிலையைக் கொண்டிருப்பர்?

6 ஒளிவுமறைவற்ற கருத்து பரிமாற்றம் என்பதன் அர்த்தம், இளவயது பிள்ளை பேசுவதற்கு விரும்பும் சமயத்தில் பெற்றோர் அங்கு இருந்து செவிசாய்ப்பதற்கு கடினமாக முயற்சி செய்வர் என்பதாகும். நீங்கள் ஒரு பெற்றோராய் இருந்தால், பேசுவதற்கு விருப்பமுள்ளவராய் இருக்கிறீர்கள் என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். இது சுலபமாக இல்லாமல் இருக்கலாம். “மவுனமாயிருக்க ஒரு காலமுண்டு, பேச ஒரு காலமுண்டு” என்று பைபிள் சொல்கிறது. (பிரசங்கி 3:7) பேசுவதற்கான சமயம் இதுவே என்று உங்கள் பருவவயது பிள்ளை விரும்பும் சமயம், நீங்கள் மவுனமாயிருப்பதற்கான சமயமாக இருக்கலாம். நீங்கள் ஒருவேளை அந்த நேரத்தை தனிப்பட்ட படிப்பு, ஓய்வு, அல்லது வீட்டில் ஏதாவது வேலை செய்வது போன்றவற்றுக்காக ஒதுக்கி வைத்திருக்கலாம். இருப்பினும், உங்கள் இளைஞர் உங்களிடம் பேச விரும்பினால், உங்கள் அட்டவணையை மாற்றியமைத்துக் கொண்டு செவிகொடுக்க முயற்சி செய்யுங்கள். அப்படி செய்யவில்லையென்றால், அவன் மறுபடியும் முயற்சி செய்யமாட்டான். இயேசுவின் உதாரணத்தை நினைவில் வையுங்கள். ஒரு சமயம் அவர் ஓய்வெடுப்பதற்காக குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி வைத்திருந்தார். ஆனால் ஜனங்கள் அவர் பேசுவதைக் கேட்பதற்காக அவரைச் சுற்றி திரண்டு வந்தபோது, அவர் ஓய்வெடுப்பதை தள்ளிப்போட்டுவிட்டு அவர்களுக்கு போதிக்க ஆரம்பித்தார். (மாற்கு 6:30-34) அலுவல்கள் நிறைந்த வாழ்க்கையை தங்கள் பெற்றோர் நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதை பெரும்பாலான பருவவயதினர் உணருகின்றனர், ஆனால் தேவை ஏற்படுமானால் உதவிசெய்வதற்கு தயாராக பெற்றோர் அவர்களுக்காக இருக்கின்றனர் என்று திரும்பவும் உறுதிசெய்வது பிள்ளைகளுக்கு தேவைப்படுகிறது. எனவே, உதவிசெய்ய தயாராக இருங்கள், புரிந்துகொள்ளக்கூடியவர்களாயும் இருங்கள்.

7. பெற்றோர் எதைத் தவிர்க்க வேண்டும்?

7 நீங்கள் பருவவயது பிள்ளையாய் இருந்த சமயம் எப்படி இருந்தது என்பதை நினைவுக்குக் கொண்டுவர முயற்சி செய்யுங்கள், மேலும் உங்கள் நகைச்சுவை உணர்வை இழந்துவிடாதீர்கள்! பெற்றோர் தங்கள் பிள்ளைகளோடு இருப்பதை மகிழ்ந்து அனுபவிக்க வேண்டும். ஓய்வு நேரம் கிடைக்கையில், பெற்றோர் அதை எவ்வாறு செலவழிக்கின்றனர்? தங்கள் குடும்பத்தை உட்படுத்தாத வேலைகளை செய்வதில் பெற்றோர் தங்கள் ஓய்வு நேரத்தை எப்போதும் பயன்படுத்த விரும்பினால், பருவவயதினர் உடனடியாக கவனித்து விடுவர். பெற்றோரைக் காட்டிலும் பள்ளி நண்பர்களே தங்களை உயர்வாகக் கருதுகிறார்கள் என்ற முடிவுக்கு வளரிளமைப் பருவத்தினர் வரும்போது, அவர்களுக்கு பிரச்சினைகள் நிச்சயமாகவே இருக்கும்.

எதைப் பற்றி கருத்து பரிமாற்றம் செய்வது

8. நேர்மை, கடின உழைப்பு, சரியான நடத்தை ஆகியவற்றுக்கான போற்றுதலை பெற்றோர் எவ்வாறு பிள்ளைகளுடைய மனதில் பதியவைக்கலாம்?

8 நேர்மை மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றுக்கான மதித்துணர்வை பெற்றோர் முன்கூட்டியே தங்கள் பிள்ளைகளின் மனங்களில் ஆழப்பதியவைத்தில்லை என்றால், அவர்கள் நிச்சயமாகவே அதைப் பருவவயதின்போது செய்ய வேண்டும். (1 தெசலோனிக்கேயர் 4:12; 2 தெசலோனிக்கேயர் 3:10) ஒழுக்கமான, சுத்தமான வாழ்க்கை வாழ வேண்டியதன் அவசியத்தை தங்கள் பிள்ளைகள் இதயப்பூர்வமாக நம்புகின்றனர் என்பதையும்கூட அவர்கள் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டியது முக்கியமானது. (நீதிமொழிகள் 20:11) முன்மாதிரியின் மூலமாய், இந்த அம்சங்களில் பெற்றோர் அதிகமாக தொடர்புகொள்கின்றனர். விசுவாசத்தில் இல்லாத கணவர்கள் ‘தங்கள் மனைவிகளின் நடக்கையினாலேயே ஆதாயப்படுத்திக்கொள்ளப்படுவது’ போல, பருவவயது பிள்ளைகள் தங்கள் பெற்றோரின் நடத்தையின் மூலம் சரியான நியமங்களை கற்றுக்கொள்ளலாம். (1 பேதுரு 3:1, 2) இருப்பினும், எப்போதும் முன்மாதிரி மட்டுமே போதாது, ஏனென்றால் பிள்ளைகள் அநேக கெட்ட முன்மாதிரிகளையும், வீட்டிற்கு வெளியே கவர்ச்சியூட்டும் பிரச்சாரங்கள் ஏராளமாக குவிந்துகொண்டிருப்பதையும் காண்கின்றனர். ஆகையால், அக்கறையுள்ள பெற்றோர், தங்கள் பருவவயதினர் காண்பவற்றின் பேரிலும் கேட்பவற்றின் பேரிலும் அவர்களுடைய கருத்துக்களை அறிந்துகொள்ள வேண்டும், இதற்கு அர்த்தமுள்ள உரையாடல் அவசியம்.—நீதிமொழிகள் 20:5.

9, 10. பாலின விஷயங்களைக் குறித்து பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு போதிக்க வேண்டியதை ஏன் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும், இதை அவர்கள் எவ்வாறு செய்யலாம்?

9 பாலின விஷயங்களில் இது முக்கியமாக உண்மையாய் இருக்கிறது. பெற்றோரே, உங்கள் பிள்ளைகளோடு பாலினத்தைப் பற்றி கலந்து பேசுவதற்கு கூச்சப்படுகிறீர்களா? அப்படி உணர்ந்தாலும்கூட, அதைக் குறித்து பேச முயற்சி செய்யுங்கள், ஏனென்றால் உங்கள் வாலிபப் பிள்ளைகள் பாலின விஷயங்களைக் குறித்து வேறு எவரிடமிருந்தாவது நிச்சயமாய் கற்றுக்கொள்வார்கள். பிள்ளைகள் உங்களிடமிருந்து அதைக் கற்றுக்கொள்ளவில்லை என்றால், அவர்கள் என்ன மாதிரி திரித்து கூறப்பட்ட தவறான தகவலை பெற்றுக்கொள்வார்கள் என்பது யாருக்குத் தெரியும்? பைபிளில், பாலின சம்பந்தப்பட்ட விஷயங்களை யெகோவா தவிர்ப்பதில்லை, பெற்றோரும் அவ்வாறு தவிர்க்கக்கூடாது.—நீதிமொழிகள் 4:1-4; 5:1-21.

10 பாலின நடத்தை சம்பந்தப்பட்ட விஷயத்தில் பைபிள் தெளிவான வழிநடத்துதலைக் கொடுப்பதற்காக நாம் நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். இந்த வழிநடத்துதல் நவீன உலகிற்கும்கூட பொருந்துகிறது என்பதைக் காண்பிக்கும் அதிக உதவியளிக்கும் தகவலை உவாட்ச்டவர் சொஸைட்டி பிரசுரித்திருக்கிறது. இந்த ஏதுவை ஏன் பயன்படுத்திக்கொள்ளக்கூடாது? உதாரணமாக, உங்கள் மகனோடோ அல்லது மகளோடோ இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் புத்தகத்தில் “பாலுறவும் ஒழுக்க நெறிகளும்” என்ற பகுதியை ஏன் மறுபார்வை செய்யக்கூடாது? விளைவுகளைக் கண்டு உங்களுக்கு மகிழ்ச்சி கலந்த ஆச்சரியம் ஏற்படக்கூடும்.

11. யெகோவாவை எவ்வாறு சேவிப்பது என்பதைக் குறித்து பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு கற்பிப்பதற்கு எது அதிக பலன்தரும் வழியாகும்?

11 பெற்றோரும் பிள்ளைகளும் என்ன அதிமுக்கியமான பொருளைப் பற்றி கலந்து பேச வேண்டும்? அப்போஸ்தலனாகிய பவுல் பின்வருமாறு எழுதுகையில் அதைக் குறிப்பிட்டார்: “கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை [உங்கள் பிள்ளைகளை] வளர்ப்பீர்களாக.” (எபேசியர் 6:4) பிள்ளைகள் யெகோவாவைப் பற்றி தொடர்ந்து கற்றுக்கொண்டேயிருக்க வேண்டும். முக்கியமாக, அவர்கள் யெகோவாவை நேசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும், அவரை சேவிப்பதற்கு அவர்கள் விருப்பம் காண்பிக்க வேண்டும். இந்த விஷயத்திலும்கூட முன்மாதிரியின்மூலம் அதிகத்தைக் கற்றுக்கொடுக்கலாம். பெற்றோர் கடவுளை ‘தங்கள் முழு இருதயத்தோடும் தங்கள் முழு ஆத்துமாவோடும் தங்கள் முழு மனதோடும்’ நேசிக்கிறார்கள் என்பதையும், இது பெற்றோரின் வாழ்க்கையில் நல்ல கனிகளைப் பிறப்பிக்கிறது என்பதையும் வளரிளமைப் பருவத்தினர் பார்த்தால், அவர்களும் அதையே செய்வதற்கு வெகுவாக உந்துவிக்கப்படுவர். (மத்தேயு 22:37) அதேபோல், பெற்றோர் பொருளுடைமைகளைப் பற்றி நியாயமான எண்ணத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் கடவுளுடைய ராஜ்யத்தை முதலாவது வைக்கிறார்கள் என்பதையும் இளம் நபர்கள் கண்டால், அவர்களும் அதே மனநிலையை வளர்த்துக்கொள்ளும்படி உதவப்படுவர்.—பிரசங்கி 7:12; மத்தேயு 6:31-33.

ஒழுங்கான பைபிள் படிப்பு குடும்பத்துக்கு இன்றியமையாதது

12, 13. குடும்ப படிப்பு வெற்றிகரமாக இருக்க வேண்டுமென்றால் என்ன குறிப்புகளை மனதில் வைக்க வேண்டும்?

12 ஆவிக்குரிய மதிப்பீடுகளை இளம் நபர்களிடம் எடுத்துக் கூறுவதற்கு வாராந்தர குடும்ப பைபிள் படிப்பு மிக முக்கியமான உதவியாய் இருக்கிறது. (சங்கீதம் 119:33, 34; நீதிமொழிகள் 4:20-23) அப்படிப்பட்ட படிப்பை ஒழுங்காகக் கொண்டிருப்பது இன்றியமையாதது. (சங்கீதம் 1:1-3) குடும்ப படிப்பை மையமாக வைத்தே மற்ற காரியங்கள் வரிசைப்படுத்தப்பட வேண்டும், இதற்கு எதிர்மாறாக இருக்கக்கூடாது என்பதை பெற்றோரும் பிள்ளைகளும் மதித்துணர வேண்டும். மேலும், குடும்ப படிப்பு பலன்தருவதாக இருக்கவேண்டுமென்றால், சரியான மனநிலை இன்றியமையாதது. ஒரு தந்தை சொன்னார்: “குடும்ப படிப்பின்போது இயலமைதியான, அதே சமயத்தில் மரியாதையுள்ள சூழ்நிலையை படிப்பு நடத்துபவர் உற்சாகப்படுத்துவதே அதன் இரகசியம்—முறைப்படி அமையாத ஆனால் அற்பமாய் இராத ஒன்றாக படிப்பு இருக்க வேண்டும். சரியான சமநிலையை அடைவது எப்போதுமே சுலபமானதாக இருக்காது, இளைஞர்களுடைய மனநிலையை அடிக்கடி சரிப்படுத்திட வேண்டியது அவசியமாய் இருக்கும். ஒன்றிரண்டு சமயங்களில் காரியங்கள் சரியில்லையென்றால், விடாமுயற்சியுடன் இருந்து அடுத்த சமயத்துக்காக எதிர்பார்த்திருங்கள்.” அதில் உட்பட்டிருக்கும் எல்லாரும் சரியான நோக்குநிலையை வைத்திருக்கும்படி உதவி செய்யவேண்டுமென்று ஒவ்வொரு படிப்புக்கு முன்பும் ஜெபத்தில் யெகோவாவிடம் கேட்டதாக இதே தந்தை கூறினார்.—சங்கீதம் 119:66.

13 குடும்ப படிப்பை நடத்துவது விசுவாசத்தில் இருக்கும் பெற்றோரின் பொறுப்பு. சில பெற்றோர் இயல்பாகவே திறமையுள்ள போதனையாளர்களாக இல்லாமல் இருக்கலாம், குடும்ப படிப்பை ஆர்வமுள்ளதாக வைப்பதற்கான வழிகளை கண்டுபிடிப்பது அவர்களுக்கு கடினமாக இருக்கலாம். இருப்பினும், நீங்கள் உங்கள் பருவவயதினரை “கிரியையினாலும் உண்மையினாலும்” நேசித்தீர்களென்றால், அவர்கள் ஆவிக்குரியப்பிரகாரமாய் முன்னேறுவதற்கு தாழ்மையோடும் நேர்மையான விதத்திலும் அவர்களுக்கு உதவிசெய்ய விரும்புவீர்கள். (1 யோவான் 3:18) அவர்கள் அவ்வப்போது குறைகூறலாம், ஆனால் அவர்களுடைய நலனில் நீங்கள் ஆழ்ந்த அக்கறையுடனிருப்பதை ஒருவேளை உணருவார்கள்.

14. ஆவிக்குரிய காரியங்களைப் பற்றி பருவவயது பிள்ளைகளிடம் உரையாடுகையில் உபாகமம் 11:19, 20 எவ்வாறு பொருத்தப்படலாம்?

14 ஆவிக்குரிய விதத்தில் முக்கியமாய் இருக்கும் விஷயங்களை கலந்து பேசுவதற்கு கிடைக்கக்கூடிய சந்தர்ப்பம் குடும்ப படிப்பு மட்டுமல்ல. யெகோவா பெற்றோருக்கு கொடுத்த கட்டளை உங்களுக்கு நினைவிருக்கிறதா? அவர் சொன்னார்: “நீங்கள் என் வார்த்தைகளை உங்கள் இருதயத்திலும் உங்கள் ஆத்துமாவிலும் பதித்து, அவைகளை உங்கள் கையின்மேல் அடையாளமாகக் கட்டி, உங்கள் கண்களின் நடுவே ஞாபகக்குறியாக வைத்து, அவைகளை உங்கள் பிள்ளைகளுக்கு உபதேசித்து, நீங்கள் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியிலே நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசுவீர்களாக.” (உபாகமம் 11:19, 20; உபாகமம் 6:6, 7-ஐயும் காண்க.) பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு எப்போதும் பிரசங்கித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதை இது அர்த்தப்படுத்துவதில்லை. ஆனால் ஒரு அன்பான குடும்பத் தலைவன் தன் குடும்பத்தின் ஆவிக்குரிய மனநிலையை முன்னேற்றுவிப்பதற்கான சந்தர்ப்பங்களுக்காக எப்போதும் விழிப்புள்ளவராய் இருக்க வேண்டும்.

சிட்சையும் மரியாதையும்

15, 16. (அ) சிட்சை என்றால் என்ன? (ஆ) சிட்சை கொடுப்பது யாருடைய பொறுப்பு, சிட்சைக்கு செவிகொடுக்கப்படும் என்பதை உறுதிசெய்வது யாருடைய பொறுப்பு?

15 திருத்தம் செய்யும் பயிற்றுவிப்பே சிட்சை, அது கருத்து பரிமாற்றத்தை உட்படுத்துகிறது. தண்டனை ஒருவேளை அவசியமாயிருந்தாலும்கூட, சிட்சை என்பது தண்டனை என்ற கருத்தைக் காட்டிலும் திருத்தம் என்ற கருத்தைக் கொடுக்கிறது. உங்கள் பிள்ளைகள் சிறுவர்களாய் இருக்கையில் அவர்களுக்கு சிட்சை தேவைப்பட்டது, இப்போது அவர்கள் பருவவயது பிள்ளைகளாய் இருக்கின்றனர், அவர்களுக்கு இப்போதும் ஏதோவொரு வடிவில் சிட்சை தேவைப்படுகிறது, ஒருவேளை இன்னும் அதிகம் தேவைப்படலாம். இது உண்மை என்பதை ஞானமுள்ள பருவவயது பிள்ளைகள் அறிந்திருக்கின்றனர்.

16 பைபிள் சொல்கிறது: “மூடன் தன் தகப்பன் புத்தியை அலட்சியம்பண்ணுகிறான்; கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ விவேகி.” (நீதிமொழிகள் 15:5) நாம் இந்த வசனத்திலிருந்து அதிகத்தைக் கற்றுக்கொள்கிறோம். சிட்சை கொடுக்கப்படும் என்று இது குறிப்பாக தெரிவிக்கிறது. ‘கடிந்துகொள்ளுதல்’ கொடுக்கப்படவில்லை என்றால் ஒரு பருவவயது பிள்ளை அதைக் ‘கவனித்து நடக்க முடியாது.’ சிட்சை கொடுக்கும் பொறுப்பை யெகோவா பெற்றோருக்கு, குறிப்பாக தந்தைக்கு அளித்திருக்கிறார். இருப்பினும், அந்தச் சிட்சைக்கு செவிகொடுப்பதன் பொறுப்பு பருவவயது பிள்ளையைச் சார்ந்திருக்கிறது. தந்தை மற்றும் தாயின் ஞானமான சிட்சைக்கு செவிகொடுத்தால் அவன் அதிகத்தைக் கற்றுக்கொள்வான், குறைவாக தவறுகளை செய்வான். (நீதிமொழிகள் 1:8) பைபிள் சொல்கிறது: “புத்திமதிகளைத் தள்ளுகிறவன் தரித்திரத்தையும் இலச்சையையும் அடைவான்; கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ கனமடைவான்.”—நீதிமொழிகள் 13:18.

17. சிட்சை கொடுக்கும்போது என்ன சமநிலையை பெற்றோர் இலக்காக வைக்க வேண்டும்?

17 பருவவயது பிள்ளைகளை சிட்சிக்கையில் பெற்றோர் சமநிலையுள்ளவர்களாய் இருக்க வேண்டும். பிள்ளைகளை கோபப்படுத்தி, ஒருவேளை பிள்ளைகள் தன்னம்பிக்கையையும்கூட இழந்துவிடும் அளவுக்கு கண்டிப்பாயிருப்பதை பெற்றோர் தவிர்க்க வேண்டும். (கொலோசெயர் 3:21) இருப்பினும், பெற்றோர் தங்கள் இளைஞர் அடிப்படை பயிற்றுவிப்புகூட இல்லாமல் போகும் அளவுக்கு கண்டிக்காமலும் விடக்கூடாது. அப்படி கண்டிப்பில்லாமல் விடுவது அழிவுண்டாக்குவதாய் இருக்கக்கூடும். நீதிமொழிகள் 29:17 சொல்கிறது: “உன் மகனைச் சிட்சைசெய், அவன் உனக்கு ஆறுதல்செய்வான், உன் ஆத்துமாவுக்கு ஆனந்தத்தையும் உண்டாக்குவான்.” இருப்பினும் வசனம் 21 (NW) சொல்கிறது: “ஒருவன் தன் அடிமையைச் சிறுபிராயமுதல் இளக்காரமாக வளர்த்தால், முடிவிலே அவன் நன்றியுணர்வற்றனாகவும்கூட ஆகிவிடுவான்.” இந்த வசனம் வேலைக்காரனைப் பற்றி பேசினாலும், வீட்டிலுள்ள எந்த இளைஞனுக்கும் சமமான அளவில் பொருந்தும்.

18. சிட்சை எதற்கு அத்தாட்சியாய் இருக்கிறது, பெற்றோர் நிலையான சிட்சை அளிக்கும்போது எது தவிர்க்கப்படுகிறது?

18 உண்மையில், சரியான சிட்சை பெற்றோர் தன் பிள்ளையிடமாகக் கொண்டுள்ள அன்புக்கு அத்தாட்சியாய் இருக்கிறது. (எபிரெயர் 12:6, 11) நீங்கள் ஒரு பெற்றோராக இருந்தால், நிலையான, நியாயமான சிட்சை கொடுப்பது கடினம் என்பதை அறிந்திருப்பீர்கள். சமாதானத்துக்காக, அடங்காத பருவவயது பிள்ளையை அவன் விரும்பும் காரியத்தைச் செய்யும்படி அனுமதிப்பது சுலபமானதாக தோன்றலாம். எனினும், பின்கூறப்பட்ட போக்கை பின்பற்றும் பெற்றோர் இறுதியில் கட்டுப்பாடற்ற குடும்பத்தை கொண்டிருக்கும் விளைவை அனுபவிப்பர்.—நீதிமொழிகள் 29:15; கலாத்தியர் 6:9.

வேலையும் விளையாட்டும்

19, 20. பெற்றோர் தங்கள் பருவவயது பிள்ளைகளின் பொழுதுபோக்கு விஷயத்தை எவ்வாறு ஞானமாக கையாளலாம்?

19 முற்காலங்களில் பிள்ளைகள் பொதுவாக வீட்டிலோ அல்லது பண்ணையிலோ உதவிசெய்யும்படி எதிர்பார்க்கப்பட்டனர். இன்று பெரும்பாலான பருவவயது பிள்ளைகளுக்கு மேற்பார்வையில்லாத ஓய்வுநேரம் அதிகம் உள்ளது. அந்த ஓய்வுநேரத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்வதற்கு, வியாபார உலகம் மிகவும் ஏராளமான காரியங்களை அளிக்கிறது. இந்த உண்மையோடுகூட, இவ்வுலகம் பைபிளின் ஒழுக்க தராதரங்களின் பேரில் மிகவும் குறைவான மதிப்பையே வைக்கிறது என்பதை நீங்கள் சேர்த்துக்கொண்டால், ஒரு பேராபத்து நேரிடுவதற்கான அத்தியாவசியமான சாத்தியக்கூறு அனைத்தும் இப்போது உங்களிடம் இருக்கிறது.

20 எனவே, நன்கு சீர்தூக்கிப் பார்க்கும் திறமையுள்ள பெற்றோர் பொழுதுபோக்கைக் குறித்து முடிவான தீர்மானங்களைச் செய்வதற்கு உரிமை உடையவர்களாய் இருக்கின்றனர். ஆனால் பருவவயது பிள்ளை வளர்ந்துகொண்டிருக்கிறான் என்பதை மறந்துவிடாதீர்கள். ஒவ்வொரு வருடமும் கடந்துசெல்கையில், அவனோ அல்லது அவளோ தன்னை வயதுவந்த ஒரு நபரைப் போல் நடத்த வேண்டும் என்று அதிகமாக விரும்புவர். ஆகையால், பருவவயது பிள்ளை பெரியவனாக வளருகையில், பொழுதுபோக்கை தேர்ந்தெடுக்கும்போது, பெற்றோர் அவனுக்கு கூடுதலான உரிமை அளிப்பது ஞானமானது—அத்தெரிவுகள் ஆவிக்குரிய முதிர்ச்சியை பிரதிபலிப்பவையாய் இருந்தால் அவ்வாறு செய்யலாம். சில சமயங்களில், பருவவயது பிள்ளை இசை, நண்பர்கள் போன்ற விஷயங்களில் ஞானமற்ற தெரிவுகளை செய்யலாம். அவ்வாறு சம்பவித்தால், அதைப் பருவவயது பிள்ளையோடு கலந்து பேச வேண்டும், அப்படி செய்தால் அவன் எதிர்காலத்தில் மேலான தெரிவுகளைச் செய்வான்.

21. பொழுதுபோக்குகளில் செலவிடும் நேரத்தின் அளவில் நியாயமானத்தன்மை இருப்பது எவ்வாறு ஒரு பருவவயது பிள்ளையை பாதுகாக்கும்?

21 எவ்வளவு நேரம் பொழுதுபோக்குக்காக ஒதுக்கி வைக்க வேண்டும்? தாங்கள் பொழுதுபோக்குகளில் தொடர்ச்சியாக ஈடுபடுவதற்கு உரிமைபெற்றிருக்கின்றனர் என்று சில தேசங்களில் உள்ள பருவவயது பிள்ளைகள் நம்பும்படி செய்யப்படுகின்றனர். எனவே, வளரிளமைப் பருவத்திலுள்ள ஒருவர் அடுத்தடுத்து “நல்ல பொழுதுபோக்கு நேரங்களை” அனுபவிப்பதற்கு ஏற்றபடி தன் அட்டவணையை திட்டமிடலாம். குடும்பம், தனிப்பட்ட படிப்பு, ஆவிக்குரிய முதிர்ச்சியுள்ள நபர்களோடு கூட்டுறவுகொள்ளுதல், கிறிஸ்தவ கூட்டங்கள், வீட்டு வேலைகள் ஆகியவற்றுக்காகவும்கூட நேரத்தை செலவிட வேண்டும் என்ற பாடத்தை கற்றுக்கொடுப்பது பெற்றோருடைய பொறுப்பு. ‘இந்த வாழ்க்கையின் சிற்றின்பங்கள்’ கடவுளுடைய வார்த்தையை நெருக்கிப்போடாதபடிக்கு இது தடைசெய்யும்.—லூக்கா 8:11-15.

22. ஒரு பருவவயது பிள்ளையின் வாழ்க்கையில் பொழுதுபோக்கு எதோடு சமநிலைப்படுத்தப்பட வேண்டும்?

22 சாலொமோன் ராஜா சொன்னார்: “மகிழ்ச்சியாயிருப்பதும், உயிரோடிருக்கையில் நன்மைசெய்வதுமேயல்லாமல், வேறொரு நன்மையும் மனுஷனுக்கு இல்லையென்று அறிந்தேன். அன்றியும் மனுஷர் யாவரும் புசித்துக் குடித்துத் தங்கள் சகலப் பிரயாசத்தின் பலனையும் அநுபவிப்பது தேவனுடைய அநுக்கிரகம்.” (பிரசங்கி 3:12, 13) ஆம், மகிழ்ச்சியோடிருப்பது ஒரு சமநிலையான வாழ்க்கையின் பாகமாயிருக்கிறது. கடினமான வேலையும் அப்படித்தான் இருக்கிறது. கடின உழைப்பினால் வரும் திருப்தியையோ அல்லது ஒரு பிரச்சினையை சமாளித்து அதற்கு தீர்வு காண்பதினால் வரும் சுயமரியாதை உணர்வையோ இன்றுள்ள பெரும்பாலான பருவவயது பிள்ளைகள் கற்றுக்கொள்வதில்லை. பிற்காலத்தில் தங்களைத் தாங்களே காப்பாற்றிக்கொள்வதற்கு தனித்திறமையையோ அல்லது தொழிலையோ கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு சிலருக்கு கொடுக்கப்படுவதில்லை. இந்த விஷயத்தில் பெற்றோர் ஒரு சவாலை எதிர்ப்படுகின்றனர். உங்கள் வாலிபப் பிள்ளை அப்படிப்பட்ட வாய்ப்புகளை பெற்றிருக்கிறான் என்பதை நீங்கள் நிச்சயப்படுத்திக்கொள்வீர்களா? கடினமான வேலையை உயர்வாகக் கருதவும், அதை மகிழ்ந்து அனுபவிக்கவும்கூட உங்கள் பருவவயது பிள்ளைக்கு கற்றுக்கொடுப்பதில் நீங்கள் வெற்றியடைந்தால், உங்கள் மகனோ அல்லது மகளோ ஒரு ஆரோக்கியமான மனநிலையை வளர்த்துக்கொள்வர், அது வாழ்நாள் முழுவதும் நன்மைகளைக் கொண்டுவரும்.

பருவவயது பிள்ளையிலிருந்து வயதுவந்தவராகும்வரை

உங்கள் பிள்ளைகள் பேரில் அன்பையும் போற்றுதலையும் வெளிக்காட்டுங்கள்

23. பெற்றோர் எவ்வாறு தங்கள் பருவவயது பிள்ளைகளை உற்சாகப்படுத்தலாம்?

23 உங்கள் பருவவயது பிள்ளையோடு நீங்கள் பிரச்சினைகளைக் கொண்டிருந்தாலும்கூட, பின்வரும் வேதவசனம் இன்னும் உண்மையாய் இருக்கிறது: “அன்பு ஒருக்காலும் ஒழியாது.” (1 கொரிந்தியர் 13:8) நிச்சயமாகவே, அன்பு காண்பிப்பதை நீங்கள் ஒருபோதும் நிறுத்திவிடாதீர்கள். உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள், ‘பிரச்சினைகளை சமாளித்து அல்லது இடையூறுகளை மேற்கொண்டு வெற்றிகளை அடைந்ததற்காக நான் ஒவ்வொரு பிள்ளையையும் பாராட்டுகிறேனா? நான் என் பிள்ளைகள் பேரில் அன்பையும் போற்றுதலையும் வெளிப்படுத்திக் காண்பிப்பதற்கான சந்தர்ப்பங்கள் கடந்துபோவதற்கு முன் ஆவலுடன் அவற்றை பயன்படுத்திக்கொள்கிறேனா?’ சில சமயங்களில் சொற்களை அல்லது செயல்களை தவறாக புரிந்துகொண்டாலும், உங்களுக்கு அவர்கள் பேரில் அன்பு உள்ளது என்பதை பருவவயதினர் நிச்சயமாக உணர்ந்தால், அவர்கள் அந்த அன்பை உங்கள்மீது திரும்பக் காண்பிப்பதற்கான சாத்தியம் அதிகம் உள்ளது.

24. பிள்ளைகளை வளர்ப்பதில் என்ன வேதப்பூர்வமான நியமம் பொதுவாய் உண்மையாயிருக்கிறது, ஆனால் எதை மனதில் வைக்க வேண்டும்?

24 பிள்ளைகள் பெரியவர்களாக வளர்ந்தபிறகு, கடைசியில் அதிக கனத்த தீர்மானங்களை தாங்களாகவே எடுப்பார்கள். சிலருடைய விஷயங்களில் பெற்றோர் அந்தத் தீர்மானங்களை விரும்பாமல் இருக்கலாம். தங்கள் பிள்ளை யெகோவா தேவனை தொடர்ந்து சேவிக்காமல் இருப்பதற்கு தீர்மானம் எடுத்தால் அப்போது என்ன செய்வது? இது நிகழக்கூடும். யெகோவாவின் சொந்த ஆவிக்குமாரர்களில் சிலரும்கூட அவருடைய புத்திமதியை தள்ளிவிட்டு கலகக்காரர்களாக நிரூபித்தார்கள். (ஆதியாகமம் 6:2; யூதா 6) பிள்ளைகள் கம்ப்யூட்டர்கள் அல்ல, நாம் விரும்பும் முறையில் செயல்படுவதற்கு நாம் அவர்களை புரோகிராம் செய்யமுடியாது. அவர்கள் சுயதெரிவை உடைய சிருஷ்டிகள், தாங்கள் செய்யும் தீர்மானங்களுக்காக யெகோவாவுக்கு முன்பு பொறுப்புள்ளவர்களாய் இருக்கின்றனர். இருப்பினும், நீதிமொழிகள் 22:6-ல் காணப்படும் நியமம் பொதுவாய் உண்மையாயிருக்கிறது: “பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.”

25. பெற்றோராயிருப்பதன் சிலாக்கியத்துக்காக யெகோவாவுக்கு நன்றி தெரிவிப்பதற்கு எது மிகச் சிறந்த வழி?

25 ஆகையால் உங்கள் பிள்ளைகளிடம் மிகுதியான அன்பை காண்பியுங்கள். அவர்களை வளர்த்து வருகையில் உங்களால் முடிந்த அளவு பைபிள் நியமங்களைப் பின்பற்ற முயற்சி செய்யுங்கள். தேவபக்தியுள்ள நடத்தைக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாய் இருங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் பொறுப்புள்ள, கடவுள்-பயமுள்ள பெரியவர்களாக வளருவதற்கு நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல வாய்ப்பை அளிப்பீர்கள். பெற்றோராயிருப்பதன் சிலாக்கியத்துக்காக யெகோவாவுக்கு நன்றி தெரிவிப்பதற்கு இதுவே மிகச் சிறந்த வழியாகும்.