அதிகாரம் 8
உங்கள் குடும்பத்தை தீங்கு விளைவிக்கும் செல்வாக்குகளிலிருந்து பாதுகாத்திடுங்கள்
1-3. (அ) குடும்பத்தை அச்சுறுத்தும் தீங்கு விளைவிக்கும் செல்வாக்குகள் எந்த ஊற்றுமூலங்களிலிருந்து வருகின்றன? (ஆ) தங்கள் குடும்பத்தை பாதுகாப்பதற்கு பெற்றோருக்கு என்ன சமநிலை தேவைப்படுகிறது?
நீங்கள் உங்கள் சிறு பையனை பள்ளிக்கு அனுப்ப தயாராயிருக்கிறீர்கள், கடும் மழை கொட்டிக்கொண்டிருக்கிறது. அந்தச் சூழ்நிலையை எவ்வாறு கையாளுவீர்கள்? மழைக்குத் தேவையான ஆடைகள் எதுவுமில்லாமல் அவன் கதவைத் திறந்து வெளியே குதித்தோட நீங்கள் அனுமதிப்பீர்களா? அல்லது நடந்து செல்லவே முடியாத அளவுக்கு அவன்மீது பாதுகாப்பளிக்கிற ஆடைகளை ஒன்றன்மீது ஒன்று போட்டு அனுப்புவீர்களா? இந்த இரண்டையுமே நீங்கள் நிச்சயமாக செய்யமாட்டீர்கள். அவன் நனைந்து விடாமல் இருப்பதற்குத் தேவையானதை மட்டுமே நீங்கள் அவனுக்கு அளிப்பீர்கள்.
2 அதேபோல், பொழுதுபோக்கு துறை, தகவல்தொடர்பு சாதனம், சகாக்கள், சில சமயங்களில் பள்ளிகள் போன்ற அநேக ஊற்றுமூலங்களிலிருந்து குடும்பத்தின்மீது பொழியும் தீங்கு விளைவிக்கும் பாதிப்புகளிலிருந்து பிள்ளைகளை பாதுகாப்பதற்கு பெற்றோர் ஒரு சமநிலையான வழியை கண்டுபிடிக்க வேண்டும். சில பெற்றோர் தங்கள் குடும்பத்தை பாதுகாப்பதற்கென்று அதிகமாக எதுவும் செய்வதில்லை அல்லது ஒன்றுமே செய்வதில்லை. மற்றவர்கள், எல்லா வெளியுலக செல்வாக்குகளும் தீங்கானவை என்று கருதி பிள்ளைகள் திக்குமுக்காடிப் போவதைப் போல் உணரும் அளவுக்கு மிகவும் கண்டிப்பாக இருக்கின்றனர். ஒரு சமநிலை சாத்தியமா?
3 ஆம், சாத்தியம். மிதமிஞ்சி கண்டிப்பாய் இருப்பது பயனற்றதாயும் ஆபத்தை விளைவிக்கக்கூடியதாயும் இருக்கிறது. (பிரசங்கி 7:16, 17) ஆனால் கிறிஸ்தவ பெற்றோர் தங்கள் குடும்பத்தை பாதுகாத்துக் கொள்வதற்கு சரியான சமநிலையை எவ்வாறு கண்டடைகின்றனர்? மூன்று அம்சங்களை சிந்தித்துப் பாருங்கள்: கல்வி, கூட்டுறவு, பொழுதுபோக்கு.
உங்கள் பிள்ளைகளுக்கு யார் போதிப்பது?
4. கிறிஸ்தவ பெற்றோர் கல்வியை எவ்வாறு கருத வேண்டும்?
4 கிறிஸ்தவ பெற்றோர் கல்வியின் பேரில் உயர்வான மதிப்பை வைக்கின்றனர். வாசிப்பதற்கும், எழுதுவதற்கும், கருத்துக்களை பரிமாறிக்கொள்வதற்கும், அதோடுகூட பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் பள்ளிப் படிப்பு உதவுகிறது என்பதை அவர்கள் அறிந்திருக்கின்றனர். எவ்வாறு கற்றுக்கொள்வது என்பதையும்கூட பள்ளிப்படிப்பு பிள்ளைகளுக்கு போதிக்க வேண்டும். பள்ளியில் பிள்ளைகள் பெற்றுக்கொள்ளும் திறமைகள் இன்றைய உலகின் சவால்கள் மத்தியிலும் அவர்கள் வெற்றிகாண உதவும். கூடுதலாக, நல்ல கல்வி அவர்கள் உயர்ந்த தரமுள்ள வேலை செய்ய அவர்களுக்கு உதவலாம்.—நீதிமொழிகள் 22:29.
5, 6. பாலின விஷயங்களின் பேரில் திரித்துக்கூறப்பட்ட தகவலுக்கு பள்ளியில் உள்ள பிள்ளைகள் எவ்வாறு வெளிப்படுத்தப்படுகின்றனர்?
5 இருப்பினும், பிள்ளைகள் மற்ற பிள்ளைகளோடு சேர்ந்து இருக்கும்படியும்கூட பள்ளி செய்விக்கிறது, அவர்களில் பெரும்பாலானோர் மாறுபாடான கருத்துக்களை உடையவர்களாய் இருக்கின்றனர். உதாரணமாக, பாலினம் மற்றும் ஒழுக்கநெறிகளின் பேரில் அவர்களுடைய கருத்துக்களை சிந்தித்துப் பாருங்கள். நைஜீரியாவில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில், வரையறையற்ற பாலின கூட்டுறவு கொண்டிருந்த பெண் தன் உடன் மாணவிகளுக்கு பாலினத்தைக் குறித்து ஆலோசனை கூறிவந்தாள். அவளுடைய கருத்துக்கள் ஆபாச இலக்கியங்களிலிருந்து திரட்டி எடுக்கப் பட்ட அபத்தங்கள் நிரம் பியதாக இருந்தபோதிலும், அவர்கள் ஆர்வத்தோடு அவள் சொல்வதை செவிகொடுத்து கேட்டனர். சில பெண்கள் அவள் கொடுத்த ஆலோசனையை சோதனை செய்து பார்த்தனர். அதன் விளைவாக, ஒரு பெண் திருமணம் ஆகாமலேயே கருத்தரித்து, தானே செய்துகொண்ட கருக்கலைப்பினால் இறந்து போனாள்.
6 பாலினத்தைக் குறித்து பள்ளியில் பெறப்படும் சில தவறான தகவல் பிள்ளைகளிடமிருந்து அல்ல, ஆசிரியர்களிடமிருந்தே வருகிறது என்பது சொல்வதற்கு வருந்தத்தக்கதாய் இருக்கிறது. ஒழுக்க தராதரங்கள் மற்றும் பொறுப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் தகவல் அளிக்கப்படாமலேயே பாலினத்தைக் குறித்து பள்ளிகள் பிள்ளைகளுக்கு கற்றுத் தருவதைக் குறித்து அநேக பெற்றோர் கலக்கமடைகின்றனர். ஒரு 12 வயது பெண்ணின் தாய் சொன்னாள்: “நாங்கள் அதிக மதப்பற்றுள்ள பாரம்பரிய பழக்கவழக்கங்களையுடைய ஒரு பகுதியில் வசிக்கிறோம், இருப்பினும், உள்ளூர் மேல்நிலைப் பள்ளியிலேயே மாணவர்களுக்கு கருத்தடை உறைகளை கொடுக்கின்றனர்!” பாலின உறவு கொள்ளும்படி தங்கள் மகளிடம் சமவயது பையன்கள் கேட்டுக்கொண்டதை அவளும் அவளுடைய கணவனும் கேள்விப்பட்டபோது கவலைப்பட்டனர். பெற்றோர் எவ்வாறு தங்கள் குடும்பத்தை அப்படிப்பட்ட தவறான செல்வாக்குகளிலிருந்து பாதுகாக்கலாம்?
7. பாலினத்தைப் பற்றிய தவறான தகவலை எவ்வாறு எதிர்க்கலாம்?
7 பாலின விஷயங்களைப் பற்றி குறிப்பிடாமலேயே பிள்ளைகளை பாதுகாப்பது சிறந்ததா? இல்லை. நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு பாலினத்தைக் குறித்து கற்பிப்பது நல்லது. (நீதிமொழிகள் 5:1) ஐரோப்பாவின் சில பகுதிகளிலும் வட அமெரிக்காவின் சில பகுதிகளிலும் அநேக பெற்றோர் இந்தப் பொருளின் பேரில் பேசுவதை தவிர்க்கின்றனர். அதேபோல், சில ஆப்பிரிக்க தேசங்களில், பெற்றோர் தங்கள் பிள்ளைகளிடம் பாலினத்தைக் குறித்து அபூர்வமாகவே கலந்து பேசுகின்றனர். “அவ்வாறு கலந்து பேசுவது ஆப்பிரிக்க பண்பாட்டின் பாகமல்ல” என்று சியர்ரா லியோனில் வசிக்கும் ஒரு தந்தை சொல்கிறார். பாலினத்தைக் குறித்து பிள்ளைகளுக்குக் கற்பிப்பது, பிள்ளைகள் ஒழுக்கக்கேடான நடத்தையில் ஈடுபடுவதற்கு வழிநடத்தக்கூடிய கருத்துக்களை அளிப்பதாக இருக்கும் என்று சில பெற்றோர் உணருகின்றனர். ஆனால் கடவுளுடைய நோக்குநிலை என்ன?
பாலினத்தைக் குறித்து கடவுளுடைய நோக்குநிலை
8, 9. பாலின விஷயங்கள் பேரில் என்ன சிறப்பான தகவல் பைபிளில் காணப்படுகிறது?
8 தகுதியான சூழமைவில் பாலினத்தைக் குறித்து கலந்து பேசுவது வெட்கத்துக்குரிய காரியமல்ல என்பதை பைபிள் தெளிவாக்குகிறது. இஸ்ரவேலில் மோசேயின் நியாயப்பிரமாணம் சப்தமாக வாசிக்கப்படும்போது, ‘பிள்ளைகள்’ உட்பட எல்லாரும் ஒன்றுகூடி அதைச் செவிகொடுத்துக் கேட்க வேண்டும் என்று கடவுளுடைய ஜனங்களுக்கு சொல்லப்பட்டது. (உபாகமம் 31:10-12; யோசுவா 8:35) மாதவிடாய், விந்து வெளிவருதல், வேசித்தனம், விபச்சாரம், ஒத்த பாலினப்புணர்ச்சி, முறைதகாப்புணர்ச்சி, மிருகப்புணர்ச்சி ஆகியவை உட்பட அநேக பாலின விஷயங்களைப் பற்றி நியாயப்பிரமாணம் ஒளிவுமறைவின்றி குறிப்பிட்டது. (லேவியராகமம் 15:16, 19; 18:6, 22, 23; உபாகமம் 22:22) அப்படிப்பட்ட வாசிப்புகளுக்குப் பிறகு, தெரிந்துகொள்வதற்காக ஆவலோடிருந்த தங்கள் வாலிப பிள்ளைகளுக்கு விளக்குவதற்கென பெற்றோர் அதிகத்தை செய்திருப்பர் என்பதில் சந்தேகமில்லை.
9 நீதிமொழிகள் புத்தகத்தின் ஐந்தாம், ஆறாம், ஏழாம் அதிகாரங்களில் பாலின ஒழுக்கக்கேட்டினால் ஏற்படும் ஆபத்துக்களின் பேரில் உள்ள பெற்றோரின் அன்பான புத்திமதியை வெளிப்படுத்தும் பகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. சில சமயங்களில் ஒழுக்கக்கேடு கவர்ச்சியூட்டுவதாக இருக்கலாம் என்று இந்த வசனங்கள் காண்பிக்கின்றன. (நீதிமொழிகள் 5:3; 6:24, 25; 7:14-21) ஆனால் அது தவறு என்றும் துக்கமான விளைவுகளை உண்டாக்கும் என்றும் அவர்கள் கற்பித்துக் கொடுக்கின்றனர், மேலும் இளைஞர்கள் ஒழுக்கக்கேடான வழிகளைத் தவிர்ப்பதற்கு வழிநடத்துதலை அளித்து உதவுகின்றனர். (நீதிமொழிகள் 5:1-14, 21-23; 6:27-35; 7:22-27) கூடுதலாக, பாலின இன்பத்தை அதற்குரிய பொருத்தமான சூழலில், அதாவது திருமண ஏற்பாட்டிற்குள் வைத்து அதிலிருந்து பெறும் திருப்தியோடு ஒழுக்கக்கேடு வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளது. (நீதிமொழிகள் 5:15-20) பெற்றோர் பின்பற்றுவதற்கு போதனைக்குரிய என்னே ஒரு சிறப்பான எடுத்துக்காட்டு!
10. ஏன் பாலினத்தைக் குறித்த தெய்வீக அறிவை பிள்ளைகளுக்கு கொடுப்பது அவர்கள் ஒழுக்கக்கேடான காரியங்களைச் செய்வதற்கு வழிநடத்துவதில்லை?
10 பிள்ளைகள் ஒழுக்கக்கேடாய் நடப்பதற்கு அப்படிப்பட்ட போதனை வழிநடத்துகிறதா? இல்லை, அதற்கு மாறாக பைபிள் கற்பிக்கிறது: “நீதிமானோ அறிவினால் தப்புகிறான்.” (நீதிமொழிகள் 11:9) நீங்கள் உங்கள் பிள்ளைகளை இந்த உலக செல்வாக்குகளிலிருந்து மீட்டுக்கொள்ள விரும்புகிறீர்களா? ஒரு தகப்பன் சொன்னார்: “பிள்ளைகள் மிகவும் சிறியவர்களாய் இருக்கும்போதே நாங்கள் அவர்களிடம் பாலினத்தைக் குறித்து முற்றிலும் ஒளிவுமறைவின்றி இருக்க முயற்சி செய்திருக்கிறோம். அதனால் மற்ற பிள்ளைகள் பாலினத்தைக் குறித்து பேசுவதை கேட்கும்போது அவர்கள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. அதில் பெரிய இரகசியம் ஒன்றுமில்லை.”
11. வாழ்க்கையின் அந்தரங்கமான விஷயங்களைப் பற்றி பிள்ளைகளுக்கு எப்படி படிப்படியாக கற்றுக்கொடுக்கலாம்?
11 முந்தின அதிகாரங்களில் குறிப்பிட்டபடி, பாலின கல்வியை முன்கூட்டியே ஆரம்பித்துவிட வேண்டும். சிறு பிள்ளைகளுக்கு உடலின் பல்வேறு உறுப்புகளின் பெயர்களை கற்றுக்கொடுக்கையில், அந்தரங்க உறுப்புகள் வெட்கத்துக்குரியவை போல் அவற்றை விட்டுவிடாதீர்கள். அவற்றுக்கான சரியான பெயர்களை அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள். காலம் செல்ல செல்ல, பிறர் பார்வையில் படா நிலையைப் பற்றியும் வரம்புகளைப் பற்றியும் அறிவுரைகள் இன்றியமையாதவை. உடலின் இந்த உறுப்புகள் விசேஷமானவை, பொதுவாக பிறர் அவற்றைத் தொடுவதும் அல்லது பிறருக்கு அதை காண்பிப்பதும் கூடாது, மேலும் கெட்ட விதத்தில் அதைப் பற்றி ஒருபோதும் கலந்து பேசக்கூடாது என்பதை பெற்றோர் இருவருமே பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுப்பது மேலானது. பிள்ளைகள் பெரியவர்களாக வளருகையில், ஒரு பிள்ளையை கருத்தரிப்பதற்கு ஒரு ஆணும் ஒரு பெண்ணும் எவ்வாறு ஒன்றுசேருகின்றனர் என்பதைக் குறித்து அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். அவர்களுடைய சொந்த உடல்களே பூப்புப்பருவத்தை அடைய ஆரம்பிப்பதற்குள், எதிர்பார்க்கப்படும் மாற்றங்களைக் குறித்து அவர்கள் முன்கூட்டியே நன்றாக அறிந்திருக்க வேண்டும். ஐந்தாம் அதிகாரத்தில் கலந்தாராய்ந்தபடி, அப்படிப்பட்ட கல்வி பிள்ளைகளை பாலின துர்ப்பிரயோகத்திலிருந்து பாதுகாக்கவும்கூட உதவக்கூடும்.—நீதிமொழிகள் 2:10-14.
பெற்றோர் செய்யவேண்டிய வீட்டுப்பாடம்
12. என்ன தவறாகக்கூறப்பட்ட கருத்துக்கள் பள்ளிகளில் பெரும்பாலும் கற்பிக்கப்படுகின்றன?
12 பள்ளியில் கற்பிக்கப்படும் மற்ற தவறான கருத்துக்களை, அதாவது, பரிணாமம், தேசப்பற்று அல்லது எந்த சத்தியமும் முழுமையானது அல்ல என்ற கருத்து போன்ற உலகப்பிரகாரமான தத்துவங்களை எதிர்ப்பதற்கு பெற்றோர் தயாராய் இருக்க வேண்டும். (1 கொரிந்தியர் 3:19; ஒப்பிடுக: ஆதியாகமம் 1:27; லேவியராகமம் 26:1; யோவான் 4:24; 17:17.) அநேக உண்மைமனதுள்ள பள்ளி அதிகாரிகள் மேல்படிப்புக்கு அளவுக்குமீறி முக்கியத்துவம் கொடுக்கின்றனர். உயர் கல்வி பயிலும் விஷயம் ஒருவருடைய தனிப்பட்ட தெரிவாக இருந்தாலும்கூட, எந்தத் தனிப்பட்ட வெற்றிக்கும் ஒரே வழி அதுவே என்று சில ஆசிரியர்கள் எண்ணுகின்றனர். *—சங்கீதம் 146:3-6.
13. பள்ளிக்கு செல்லும் பிள்ளைகள் எவ்வாறு தவறான கருத்துக்களிலிருந்து பாதுகாக்கப்படலாம்?
13 பெற்றோர் தவறான அல்லது மாறுபாடான போதனைகளை எதிர்த்துத் தடைசெய்ய வேண்டுமென்றால், பிள்ளைகள் என்ன போதனையை பெற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும். ஆகையால் பெற்றோரே, உங்களுக்குக்கூட வீட்டுபாடம் இருக்கிறது என்பதை மனதில் வையுங்கள்! உங்கள் பிள்ளையின் பள்ளிப்படிப்பில் மெய்யான அக்கறை காண்பியுங்கள். பள்ளி முடிந்த பின்பு அவர்களோடு பேசுங்கள். அவர்கள் என்ன கற்றுக்கொண்டிருக்கிறார்கள், அவர்களுக்கு எது மிகவும் பிரியம், எது அதிக சவாலளிப்பதாக அவர்கள் காண்கிறார்கள் போன்ற விஷயங்களை அவர்களிடம் கேளுங்கள். கொடுக்கப்படுகிற வீட்டுப்பாடங்கள், குறிப்புரைகள், தேர்வு முடிவுகள் ஆகியவற்றை ஆராய்ந்து பாருங்கள். அவர்களுடைய ஆசிரியர்களை அறிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். ஆசிரியர்களுடைய வேலையை நீங்கள் போற்றுகிறீர்கள் என்பதையும் உங்களாலான உதவியை செய்ய விரும்புகிறீர்கள் என்பதையும் ஆசிரியர்கள் அறிந்துகொள்ளட்டும்.
உங்கள் பிள்ளைகளின் நண்பர்கள்
14. தேவபக்தியுள்ள பிள்ளைகள் நல்ல நண்பர்களை தேர்ந்தெடுப்பது ஏன் முக்கியமானது?
14 “நீ எங்கிருந்துதான் அதையெல்லாம் கற்றுக்கொண்டாயோ?” தங்கள் பிள்ளை சூழலுக்கு முற்றிலும் பொருந்தாமல் சொன்னதை அல்லது செய்ததை கேள்விப்பட்டு, அதிர்ச்சியடைந்து எத்தனை பெற்றோர் அந்தக் கேள்வியை கேட்டிருக்கின்றனர்? அது பெரும்பாலும் பள்ளியில் அல்லது சுற்றுவட்டாரத்தில் உள்ள புதிய நண்பனிடமிருந்து கற்றுக்கொண்டது என்பதை அவர்கள் சொல்லும் பதில் காண்பிக்கிறதல்லவா? ஆம், நாம் இளைஞராயிருந்தாலும் வயோதிபராயிருந்தாலும் நண்பர்கள் நம்மை வெகுவாக பாதிக்கின்றனர். அப்போஸ்தலனாகிய பவுல் எச்சரித்தார்: “ஆகாத சம்பாஷணைகள் [“கெட்ட கூட்டுறவுகள்,” NW] நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்.” (1 கொரிந்தியர் 15:33; நீதிமொழிகள் 13:20) இளைஞர் குறிப்பாக சகாக்களிடமிருந்து வரும் அழுத்தங்களினால் எளிதில் பாதிக்கப்பட்டு விடுகிறார்கள். அவர்கள் தங்களைக் குறித்தே நிச்சயமற்று இருக்கும் இயல்புள்ளவர்களாய் இருக்கிறார்கள், சில சமயங்களில் தங்கள் கூட்டாளிகளை பிரியப்படுத்துவதற்கும் கவருவதற்கும் மட்டுக்குமீறி விருப்பமுள்ளவர்களாய் இருக்கிறார்கள். அப்படியென்றால் அவர்கள் நல்ல நண்பர்களை தேர்ந்தெடுப்பது எவ்வளவு முக்கியம்!
15. நண்பர்களை தேர்ந்தெடுப்பதில் பெற்றோர் எவ்வாறு தங்கள் பிள்ளைகளை வழிநடத்தலாம்?
15 ஒவ்வொரு பெற்றோரும் அறிந்திருக்கிறபடி, பிள்ளைகள் எப்போதும் நல்ல நண்பர்களையே தேர்ந்தெடுப்பதில்லை; அதில் அவர்களுக்கு வழிநடத்துதல் தேவை. அது பிள்ளைகளுக்காக நாம் நண்பர்களை தேடிக்கொடுக்கும் விஷயமல்ல. மாறாக, பிள்ளைகள் வளர்ந்து வருகையில், அவர்களுக்கு பகுத்துணர்வை கற்றுக்கொடுங்கள், தங்கள் நண்பர்களில் உள்ள என்ன பண்புகளை அவர்கள் மதிக்க வேண்டும் என்பதை காண அவர்களுக்கு உதவிசெய்யுங்கள். யெகோவாவை நேசிப்பதும், அவருடைய பார்வையில் சரியானதைச் செய்வதற்கான பிரியமுமே முக்கியமான பண்புகளாகும். (மாற்கு 12:28-30) நேர்மை, தயவு, தாராள குணம், ஊக்கம் ஆகியவற்றைப் பெற்றிருக்கும் நபர்களை நேசிக்கவும் அவர்களுக்கு மரியாதை கொடுக்கவும் கற்றுக்கொடுங்கள். குடும்பப் படிப்பின்போது பைபிளில் உள்ள நபர்களில் அத்தகைய பண்புகளை அடையாளம் கண்டுகொள்ள பிள்ளைகளுக்கு உதவுங்கள், பின்பு சபையில் உள்ள மற்றவர்களிடமும் அதே பண்புகளை அவர்கள் கண்டுபிடிக்க உதவுங்கள். உங்களுடைய சொந்த நண்பர்களை தேர்ந்தெடுப்பதில் அதே அடிப்படையை உபயோகிப்பதன் மூலம் நல்ல முன்மாதிரியை வையுங்கள்.
16. பிள்ளைகள் தங்கள் நண்பர்களை தேர்ந்தெடுப்பதை பெற்றோர் எவ்வாறு கவனிக்கலாம்?
16 உங்களுடைய பிள்ளைகளின் நண்பர்கள் யார் என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்கள் பிள்ளைகள் தங்கள் நண்பர்களை வீட்டுக்கு அழைத்து வந்து அவர்களை நீங்கள் சந்திக்கும்படி ஏன் செய்யக்கூடாது? இந்த நண்பர்களைப் பற்றி மற்ற பிள்ளைகள் என்ன நினைக்கிறார்கள் என்பதையும்கூட நீங்கள் உங்கள் பிள்ளைகளிடம் கேட்கலாம். தனிப்பட்ட விதத்தில் உத்தமத்தன்மையை நடைமுறையில் வெளிப்படுத்திக் காண்பிப்பவர்கள் என்று அவர்கள் அறியப்பட்டிருக்கிறார்களா அல்லது இரட்டை வாழ்க்கை வாழ்பவர்கள் என்று அவர்கள் அறியப்பட்டிருக்கிறார்களா? இரண்டாவதாக சொல்லப்பட்டிருப்பது உண்மையென்றால், அப்படிப்பட்ட கூட்டுறவு அவர்களுக்கு ஏன் தீங்கிழைக்கும் என்பதை நியாயமான முறையில் காண உங்கள் பிள்ளைகளுக்கு உதவுங்கள். (சங்கீதம் 26:4, 5, 9-12) உங்கள் பிள்ளையின் நடத்தை, உடை, மனநிலை, அல்லது பேச்சு ஆகியவற்றில் நீங்கள் விரும்பத்தகாத மாற்றங்களை கவனித்தால், அவனுடைய அல்லது அவளுடைய நண்பர்களைப் பற்றி நீங்கள் பேச வேண்டியிருக்கும். எதிர்மறையான பாதிப்பை உண்டுபண்ணும் ஒரு நண்பனோடு உங்கள் பிள்ளை நேரத்தை செலவழித்துக் கொண்டிருக்கலாம்.—ஒப்பிடுக: ஆதியாகமம் 34:1, 2.
17, 18. கெட்ட நண்பர்களுக்கு எதிராக எச்சரிப்பது மட்டுமன்றி என்ன நடைமுறையான உதவியை பெற்றோர் கொடுக்கலாம்?
17 இருப்பினும், கெட்ட தோழர்களைத் தவிர்க்கும்படி உங்கள் பிள்ளைகளுக்கு வெறுமனே கற்றுக்கொடுப்பது மட்டும் போதுமானதல்ல. நல்ல நண்பர்களை கண்டுபிடிக்க அவர்களுக்கு உதவுங்கள். ஒரு தந்தை சொல்கிறார்: “நாங்கள் எப்போதும் வேறு ஏதாவது ஏற்பாடுகளை செய்ய முயற்சி செய்வோம். எங்கள் மகன் கால்பந்தாட்ட குழுவில் இருக்க வேண்டும் என்று பள்ளி விரும்பியபோது, அக்குழுவில் இருக்கப்போகும் புதிய நண்பர்களின் காரணமாக அது ஏன் நல்ல யோசனையாக இருக்காது என்பதை நானும் என் மனைவியும் அவனோடு உட்கார்ந்து கலந்து பேசினோம். ஆனால் சபையில் இருக்கும் மற்ற பிள்ளைகளை கூட்டிக்கொண்டு பூங்காவிற்கு சென்று அவர்கள் அனைவரோடும் சேர்ந்து கால்பந்து விளையாடலாம் என்று நாங்கள் ஆலோசனை கூறினோம். அது பிரச்சினையைத் தீர்த்து வைத்தது.”
18 தங்கள் பிள்ளைகள் நல்ல நண்பர்களை கண்டுபிடிக்கவும் பின்னர் அவர்களோடு ஆரோக்கியமான பொழுதுபோக்கை அனுபவிக்கவும் ஞானமான பெற்றோர் உதவி செய்கின்றனர். ஆனால் அநேக பெற்றோருக்கு இந்தப் பொழுதுபோக்கு விஷயம் அதற்கே உரியதான சவால்களை அளிக்கிறது.
என்ன வகையான பொழுதுபோக்கு?
19. குடும்பங்கள் கேளிக்கையை அனுபவிப்பது பாவமல்ல என்பதை என்ன பைபிள் உதாரணங்கள் காண்பிக்கின்றன?
19 கேளிக்கையை அனுபவிப்பதை பைபிள் கண்டனம் செய்கிறதா? நிச்சயமாகவே இல்லை! “நகைக்க ஒரு காலமுண்டு . . . நடனம்பண்ண ஒரு காலமுண்டு” என்று பைபிள் சொல்கிறது. * (பிரசங்கி 3:4) பண்டைய இஸ்ரவேலில் இருந்த கடவுளுடைய ஜனங்கள் இசை, நடனம், விளையாட்டுக்கள், விடுகதைகள் ஆகியவற்றை மகிழ்ந்து அனுபவித்தனர். இயேசு கிறிஸ்து ஒரு பெரிய கல்யாண விருந்துக்கும், மத்தேயு லேவி என்றழைக்கப்பட்டவர் அவருக்காக ஏற்பாடு செய்திருந்த “பெரிய விருந்து”க்கும் சென்றிருந்தார். (லூக்கா 5:29; யோவான் 2:1, 2) இயேசு மற்றவர்களுடைய மகிழ்ச்சியை எடுத்துப் போடுபவராய் இருக்கவில்லை என்பது தெளிவாயிருக்கிறது. உங்கள் வீட்டில் சிரிப்பும் கேளிக்கையும் ஒருபோதும் பாவங்களாக கருதப்படாமல் இருப்பதாக!
20. குடும்பத்துக்கு பொழுதுபோக்கை அளிக்கையில் பெற்றோர் எதை மனதில் வைக்க வேண்டும்?
20 யெகோவா ‘நித்தியானந்த தேவனாய்’ இருக்கிறார். (1 தீமோத்தேயு 1:11) ஆகையால் யெகோவாவை வணங்குவது மகிழ்ச்சிக்கு ஊற்றுமூலமாயிருக்க வேண்டும், அது வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லாமல் போகும்படி தடைசெய்யக்கூடிய ஒன்றாக இருக்கக்கூடாது. (ஒப்பிடுக: உபாகமம் 16:15.) பிள்ளைகள் இயல்பாகவே கட்டிலடங்கா மகிழ்ச்சிமிக்கவர்களாகவும் விளையாட்டிலும் பொழுதுபோக்கிலும் தங்கள் சக்தியை செலவிடுவதற்கு பலமுள்ளவர்களாகவும் இருக்கின்றனர். நன்றாக-தேர்ந்தெடுக்கப்பட்ட பொழுதுபோக்கு கேளிக்கையைக் காட்டிலும் அதிகத்தை குறிக்கிறது. பிள்ளை கற்றுக்கொண்டு முதிர்ச்சியடைய அது ஒரு வழியாக இருக்கிறது. பொழுதுபோக்கு உட்பட, ஒரு குடும்பத் தலைவன் தன் குடும்பத்தாரின் எல்லா தேவைகளையும் பூர்த்திசெய்வதற்கு பொறுப்புள்ளவராயிருக்கிறார். இருப்பினும், சமநிலை தேவைப்படுகிறது.
21. இன்று பொழுதுபோக்கில் என்ன இடறுகுழிகள் இருக்கின்றன?
21 பைபிளில் தீர்க்கதரிசனம் உரைத்துள்ளபடி, இந்தத் துயர்மிகுந்த “கடைசிநாட்களில்” மனித சமுதாயம் ‘தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயிருக்கும்’ ஆட்களால் நிரம்பியிருக்கிறது. (2 தீமோத்தேயு 3:1-5) அநேகருக்கு பொழுதுபோக்கே வாழ்க்கையில் முக்கியமான காரியமாய் இருக்கிறது. பொழுதுபோக்கு அவ்வளவு அதிகமாக இருப்பதால் அது எளிதில் அதிமுக்கியமான காரியங்களை நெருக்கித் தள்ளிவிடக்கூடும். கூடுதலாக, பெரும்பாலான நவீன பொழுதுபோக்கு அம்சங்கள் பாலின ஒழுக்கக்கேடு, வன்முறை, போதைப்பொருள் துர்ப்பிரயோகம், வேறு படுமோசமான தீங்கிழைக்கும் பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை சிறப்பித்துக் காண்பிக்கின்றன. (நீதிமொழிகள் 3:31) தீங்கிழைக்கும் பொழுதுபோக்கிலிருந்து இளைஞர்களை பாதுகாக்க என்ன செய்யலாம்?
22. பொழுதுபோக்கு சம்பந்தமாக ஞானமான தீர்மானங்கள் எடுப்பதற்கு பெற்றோர் எவ்வாறு தங்கள் பிள்ளைகளை பயிற்றுவிக்கலாம்?
22 பெற்றோர் வரம்புகளையும் கட்டுப்பாடுகளையும் வைக்க வேண்டும். ஆனால் அதற்கும் மேலாக, எந்தப் பொழுதுபோக்கு தீங்கிழைக்கிறது என்பதையும் எந்த அளவு பொழுதுபோக்கு அளவுக்கு மீறியது என்பதையும் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு கற்பிக்க வேண்டும். அப்படிப்பட்ட பயிற்றுவிப்பு நேரத்தையும் முயற்சியையும் தேவைப்படுத்துகிறது. ஒரு உதாரணத்தை சிந்தித்துப் பாருங்கள். ஒரு தகப்பனுக்கு இரண்டு பையன்கள் இருந்தனர், அதில் மூத்த மகன் வானொலியில் ஒரு புதிய ஒலிபரப்பை அடிக்கடி கேட்டுக்கொண்டிருப்பதை அவர் கவனித்தார். ஆகையால் ஒரு நாள் தன் டிரக்கை ஓட்டிக்கொண்டு வேலைக்கு செல்கையில், தகப்பன் அதே வானொலி அலைவரிசைக்கு திருப்பினார். அவ்வப்போது நிறுத்தி குறிப்பிட்ட பாடல்களின் வரிகளை எழுதிக்கொண்டார். பின்னர் அவர் தன் மகன்களோடு உட்கார்ந்து தான் கேட்டதை அவர்களோடு கலந்து பேசினார். “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று ஆரம்பித்து அவர் நோக்குநிலை கேள்விகளைக் கேட்டார், அவர்களுடைய பதில்களை பொறுமையோடு கேட்டார். பைபிளை உபயோகித்து அந்த விஷயத்தைக் குறித்து காரணங்களை விளக்கிய பிறகு, அந்த வானொலி ஒலிபரப்பை இனிகேட்பதில்லை என்று பையன்கள் ஒத்துக்கொண்டனர்.
23. ஆரோக்கியமற்ற பொழுதுபோக்கிலிருந்து பெற்றோர் எவ்வாறு தங்கள் பிள்ளைகளை பாதுகாக்கலாம்?
23 ஞானமான கிறிஸ்தவ பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு ஆர்வமாயிருக்கும் இசை, டிவி நிகழ்ச்சிகள், வீடியோ டேப்புகள், நகைச்சுவைப் புத்தகங்கள், வீடியோ விளையாட்டுக்கள், திரைப்படங்கள் ஆகியவற்றை நன்கு ஆராய்ந்து பார்க்க வேண்டும். அட்டையின் மீதுள்ள படம், பாடலின் வார்த்தைகள், பேக்கிங் போன்றவற்றை அவர்கள் பார்க்கின்றனர், செய்தித்தாள் விமர்சனங்களை அவர்கள் வாசிக்கின்றனர், அதன் சில பகுதிகளையும் கவனமாகப் பார்க்கின்றனர். இன்று பிள்ளைகளுக்கென்று தயாரிக்கப்படும் “பொழுதுபோக்கு” சிலவற்றை பார்த்து அநேகர் திகிலடைகின்றனர். அசுத்தமான செல்வாக்குகளிலிருந்து தங்கள் பிள்ளைகளை பாதுகாக்க விரும்புவோர் குடும்பத்தோடு உட்கார்ந்து பைபிளையும் பைபிள் சார்ந்த பிரசுரங்களாகிய இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் புத்தகம், காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளிலிருந்து கட்டுரைகள் போன்றவற்றையும் உபயோகித்து எதிர்ப்படும் ஆபத்துக்களை கலந்து பேசுகின்றனர். * பெற்றோர் உறுதியான வரம்புகளை வைத்து, ஒரே சீராகவும் நியாயமாகவும் இருக்கையில் அவர்கள் பொதுவாக நல்ல பலன்களைக் காண்பர்.—மத்தேயு 5:37; பிலிப்பியர் 4:5.
24, 25. குடும்பங்கள் ஒன்றாக சேர்ந்து மகிழக்கூடிய சில ஆரோக்கியமான பொழுதுபோக்கு வகைகள் யாவை?
24 தீங்கிழைக்கும் பொழுதுபோக்கு வகைகளைத் தடைசெய்வது போராட்டத்தின் வெறும் ஒரு பாகமே. நல்ல காரியங்களைக்கொண்டு மோசமானவற்றை சரியீடு செய்ய வேண்டும், அப்படி செய்யாவிட்டால் பிள்ளைகள் தவறான வழிக்கு விலகிச்சென்று விடலாம். பிக்னிக், நீண்ட நடைப்பிரயாணம், கூடாரங்களில் தங்குவது, விளையாடுவது, போட்டி பந்தயங்களில் பங்குகொள்வது, உறவினர் அல்லது நண்பர்களை காண்பதற்காக பிரயாணம் செய்வது போன்ற பொழுதுபோக்குகளை ஒன்றாக சேர்ந்து அனுபவித்ததைப் பற்றிய அனலான மகிழ்ச்சியான நினைவுகளை அநேக கிறிஸ்தவ குடும்பங்கள் பெற்றிருக்கின்றன. பொழுதுபோக்குக்காக ஒன்றாக சேர்ந்து வெறுமனே சப்தமாக வாசிப்பது பெரும் இன்பமும் ஆறுதலும் தருவதாய் இருப்பதாக சிலர் காண்கின்றனர். மற்றவர்கள் நகைச்சுவைமிக்க அல்லது ஆர்வமிக்க கதைகளை சொல்வதில் மகிழ்ச்சியடைகின்றனர். இன்னும் சிலர் ஒன்றாக சேர்ந்து தங்களுக்கு விருப்பமான வேலைகளைச் செய்ய கற்றுக்கொண்டிருக்கின்றனர். உதாரணமாக, மர வேலைப்பாடும் மற்ற கைவினைப்பொருட்களும் செய்வது, இசைக்கருவிகளை இசைப்பது, ஓவியம் தீட்டுவது, அல்லது கடவுளுடைய படைப்புகளை ஆராய்வது போன்றவற்றை கற்றுக்கொண்டிருக்கின்றனர். அப்படிப்பட்ட பொழுதுபோக்குகளை அனுபவிக்கக் கற்றுக்கொள்ளும் பிள்ளைகள் மிகுதியாய் இருக்கும் அசுத்தமான பொழுதுபோக்குகளிலிருந்து பாதுகாக்கப்பட்டிருக்கின்றனர். பொழுதுபோக்கு என்றால் வெறுமனே உட்கார்ந்துகொண்டு நிகழ்ச்சிகளை அனுபவிப்பதைக் காட்டிலும் அதிகம் உள்ளது என்பதை அவர்கள் அறிந்துகொள்கின்றனர். கவனிப்பதைவிட பங்குகொள்ளுதல் பெரும்பாலும் அதிக மகிழ்ச்சியை அளிக்கிறது.
25 தோழமைக் கூட்டங்களும்கூட பலன்தரும் பொழுதுபோக்கின் ஒரு வகையாக இருக்கக்கூடும். அக்கூட்டங்கள் நன்றாக மேற்பார்வையிடப்பட்டு, அளவுக்குமீறி பெரிதாகவோ அல்லது நேரத்தை அதிகம் எடுப்பதாகவோ இல்லாமல் இருந்தால், அவை உங்கள் பிள்ளைகளுக்கு வெறும் கேளிக்கையைக் காட்டிலும் அதிகத்தை அளிக்கக்கூடும். அவை சபையில் உள்ள அன்பின் கட்டுகளை ஆழமாக்க உதவக்கூடும்.—ஒப்பிடுக: லூக்கா 14:13, 14; யூதா 12.
உங்கள் குடும்பம் உலகத்தை வென்றிட முடியும்
26. ஆரோக்கியமற்ற செல்வாக்குகளிலிருந்து குடும்பத்தை பாதுகாக்கும் விஷயத்துக்கு வருகையில், அதிமுக்கியமான பண்பு என்ன?
26 கேள்விக்கிடமின்றி, இவ்வுலகத்தின் தீங்கு விளைவிக்கும் செல்வாக்குகளிலிருந்து உங்கள் குடும்பத்தை பாதுகாப்பதற்கு கடின உழைப்பு அவசியம். ஆனால் மற்ற எல்லாவற்றைக் காட்டிலும் ஒரு காரியம் வெற்றியை சாத்தியமாக்கும். அது அன்பு! நெருக்கமான, அன்பான குடும்ப பிணைப்புகள் உங்கள் வீட்டை ஒரு பாதுகாப்பான புகலிடமாக ஆகச் செய்து கருத்து பரிமாற்றத்தை முன்னேற்றுவிக்கும், அது கெட்ட செல்வாக்குகளிலிருந்து பெரும் பாதுகாப்பாக இருக்கிறது. மேலும், மற்றொரு வகையான அன்பை வளர்த்துக்கொள்வது அதைக்காட்டிலும் அதிமுக்கியமானது—யெகோவாவின் பேரில் அன்பு. அப்படிப்பட்ட அன்பு குடும்பத்தில் எங்கும் பரவியிருந்தால், பிள்ளைகள் உலகப்பிரகாரமான செல்வாக்குகளுக்கு அடிபணிந்து விடுவதன் மூலம் கடவுளை விசனப்படுத்தும் எண்ணத்தையே வெறுத்துவிட்டு வளரும் சாத்தியம் அதிகமாக இருக்கும். இதயப்பூர்வமாக யெகோவாவை நேசிக்கும் பெற்றோர், அவருடைய அன்பான, நியாயமான, சமநிலையான ஆளுமையை பார்த்துப் பின்பற்ற நாடுவர். (எபேசியர் 5:1; யாக்கோபு 3:17) பெற்றோர் அதைச் செய்தார்களென்றால், யெகோவாவை வணங்குவது என்பது, தடைகள் அடங்கிய பட்டியல் என்றோ அல்லது கேளிக்கையோ நகைச்சுவையோ இல்லாத வாழ்க்கைமுறையாதலால் அதைவிட்டு முடிந்த அளவு சீக்கிரம் ஓடிவிடலாம் என்றோ அவர்கள் நோக்குவதற்கு எந்தக் காரணமும் இருக்காது. மாறாக, கடவுளை வணங்குவதே அதிக மகிழ்ச்சியுள்ள, அதிக அர்த்தமுள்ள திருப்தியளிக்கும் வாழ்க்கைமுறை என்பதை அவர்கள் காண்பர்.
27. ஒரு குடும்பம் எவ்வாறு உலகத்தை ஜெயிக்கலாம்?
27 மகிழ்ச்சியோடும் சமநிலையோடும் கடவுளுக்கு சேவை செய்வதில் ஐக்கியப்பட்டிருந்து இந்த உலகத்தின் இழிவான செல்வாக்குகளிலிருந்து “கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்” இருக்க இதயப்பூர்வமாய் முயற்சிசெய்யும் குடும்பங்கள் யெகோவாவுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவருபவையாய் இருக்கின்றன. (2 பேதுரு 3:14; நீதிமொழிகள் 27:11) அப்படிப்பட்ட குடும்பங்கள் இயேசு கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகின்றன. சாத்தானின் உலகம் அவரை கறைப்படுத்துவதற்கு எடுத்த ஒவ்வொரு முயற்சியையும் அவர் எதிர்த்தார். தம்முடைய மானிட வாழ்க்கையின் முடிவின் சமயத்தில் இயேசு இவ்வாறு சொல்ல முடிந்தது: “நான் உலகத்தை ஜெயித்தேன்.” (யோவான் 16:33) உங்கள் குடும்பமும்கூட உலகத்தை ஜெயித்து வாழ்க்கையை என்றென்றும் மகிழ்ந்து அனுபவிப்பதாக!
^ உயர் கல்வியின் பேரில் கலந்தாராய்வதற்கு உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி பிரசுரித்திருக்கும் யெகோவாவின் சாட்சிகளும் கல்வியும் (ஆங்கிலம்) என்ற சிற்றேட்டில் பக்கங்கள் 4-7-ஐப் பாருங்கள்.
^ இங்கு “நகைக்க” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் எபிரெய சொல், பிற வடிவங்களில், “விளையாட,” “மகிழ்ச்சியளிக்க,” “கொண்டாட,” அல்லது “கேளிக்கை அனுபவிக்க” என்றும் மொழிபெயர்க்கப்படலாம்.
^ உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியா பிரசுரித்தது.