2. பஞ்சம்
2. பஞ்சம்
“பஞ்சங்களும் உண்டாகும்.”—மாற்கு 13:8.
● பசியில் வாடுகிற ஒருவர், நைஜரில் இருக்கிற குவாராதஜி கிராமத்தில் தஞ்சம் அடைகிறார். பஞ்சத்தின் பிடியிலிருந்து எப்படியாவது விடுபடவேண்டும் என்பதற்காக ஒதுக்குப்புறமான இடங்களிலிருந்து இவருடைய சொந்தக்காரர்களும், தம்பி தங்கைகளும் வந்திருக்கிறார்கள். ஆனால், இங்கு வந்த பிறகு, அவர் ஒரு பாயில் தனியாகப் படுத்திருக்கிறார். ஏன் அப்படித் தனியாக இருக்கிறார்? ஏனென்றால், “அவரால் [தன்னுடைய குடும்பத்தினருக்கு] சாப்பாடு கொடுக்க முடியவில்லை. அவர்களுடைய முகத்தை பார்க்கவே அவருக்கு ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது,” என்று அந்தக் கிராமத்தின் தலைவர் ஸிடி சொல்கிறார்.
உண்மைத் தகவல்கள் எதைக் காட்டுகின்றன? உலகளவில் பார்த்தால், ஒவ்வொரு நாளும் பெரும்பாலும் ஏழு பேரில் ஒருவருக்கு போதுமான சாப்பாடு கிடைப்பதில்லை. சஹாராவுக்குத் தெற்கே உள்ள ஆப்பிரிக்க நாடுகளில் நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. அங்கு மூன்றில் ஒருவருக்கு வாழ்க்கையே பசி பட்டினியில்தான் ஓடுகிறது. இதைப் புரிந்துகொள்வதற்கு அப்பா, அம்மா, ஒரு பிள்ளை இருக்கிற குடும்பத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அவர்களில் இரண்டு பேருக்குத் தேவையான உணவு மட்டும்தான் இருக்கிறது என்றால், அந்த அப்பா அம்மா தங்களுடைய பிள்ளைக்குப் போதுமான அளவுக்கு சாப்பாடு கொடுப்பார்கள். அப்படியானால்,, பட்டினி கிடக்கப்போவது யார்? அப்பாவா? அம்மாவா? இதுபோன்ற குடும்பங்கள் ஒவ்வொரு நாளும் இந்த முடிவை எடுக்க வேண்டியிருக்கிறது.
பொதுவாகத் தெரிவிக்கப்படும் ஆட்சேபணை என்ன? இந்தப் பூமி ஒவ்வொருவருடைய தேவைக்கும் அதிகமான விளைச்சலைத் தருகிறது. பூமியில் இருக்கிற இயற்கை வளங்களை நன்றாகப் பராமரித்தாலே போதும்.
இந்த ஆட்சேபணை நியாயமானதா? உண்மைதான், விவசாயிகளால் முன்பைவிட இப்போது அதிகமாக உற்பத்தி செய்ய முடிகிறது. உணவுப் பொருள்களை மற்ற இடங்களுக்கு அனுப்பி வைக்கவும் முடிகிறது. மனித அரசாங்கங்கள் பூமியில் விளைகிற உணவுப் பொருள்களைச் சரியாகப் பகிர்ந்துகொடுத்தார்கள் என்றால், பசி, பட்டினியை ஒழித்துக்கட்ட முடியும். ஆனால், பல வருஷங்களாக முயற்சி செய்தும் இன்றுவரை இதைச் சாதிக்க முடியவில்லை.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? மாற்கு 13:8-ல் சொல்லப்பட்டுள்ள தீர்க்கதரிசனம் நிறைவேறி வருகிறதா? தொழில்நுட்பம் ஒரு பக்கம் முன்னேறிக்கொண்டே இருந்தாலும், பஞ்சம் உலகளவில் மக்களை வாட்டியெடுக்கிறதா?
நிலநடுக்கங்களையும் பஞ்சத்தையும் தொடர்ந்து, கடைசி நாட்களுக்கு அடையாளமாக இருக்கிற இன்னொரு விஷயமும் தலைதூக்கும்.
[பக்கம் 5-ன் சிறு குறிப்பு]
“போதுமான ஊட்டச்சத்து கிடைத்திருந்தால், நிமோனியா, வயிற்றுப்போக்கு போன்ற நோய்களிலிருந்து மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமான குழந்தைகளுடைய உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும்.”—ஆன் எம். வெனமன், ஐ.நா குழந்தைகள் நிதி நிறுவனத்தின் முன்னாள் செயற்குழு இயக்குனர்.
[பக்கம் 5-ன் படத்திற்கான நன்றி]
© Paul Lowe/Panos Pictures