அந்தப் புத்தகம் எப்படி இன்றுவரை நீடித்திருக்கிறது?
அந்தப் புத்தகம் எப்படி இன்றுவரை நீடித்திருக்கிறது?
தீ, ஈரப்பதம், பூஞ்சை போன்ற இயற்கை எதிரிகள் பண்டைய புத்தகங்களுக்கு இருந்தன. இத்தகைய ஆபத்துகளுக்கு பைபிள் ஒன்றும் விதிவிலக்கல்ல. உலகிலேயே அதிக பரவலாக கிடைக்கும் ஒரு புத்தகமாக ஆவதற்குமுன் அது காலத்தின் சிதைவிலிருந்து எப்படி தப்பியது என்ற உண்மை பதிவு, மற்ற பண்டைய புத்தகங்களிலிருந்து இதனை தனித்து நிற்க செய்கிறது. மேலோட்டமாக படிப்பதைவிட அதிக ஆர்வத்தோடு படிப்பதற்கு இந்த வரலாறு தகுதியானதே.
பைபிள் எழுத்தாளர்கள் வார்த்தைகளை கல்லில் வடிக்கவில்லை. நீடித்திருக்கும் களிமண் பலகைகளிலும் (clay tablets) அவற்றை பொறிக்கவில்லை. கிடைத்துள்ள அத்தாட்சிகளின்படி பார்த்தால், அவர்கள் தங்கள் வார்த்தைகளை அழியக்கூடிய பொருட்களில், அதாவது பப்பைரஸ் என்னும் தாளிலும், (எகிப்தில், பப்பைரஸ் என்ற பெயரையுடைய ஒருவகை செடியிலிருந்து செய்யப்பட்டது) தோலிலும் (மிருகங்களின் தோல்களிலிருந்து செய்யப்பட்டது) எழுதிவைத்தனர்.
இந்த மூல எழுத்துக்களுக்கு என்ன நேர்ந்தது? அவற்றில் பெரும்பாலானவை ரொம்ப நாட்களுக்கு முன்பே பண்டைய இஸ்ரேலில் அநேகமாக சிதைந்துபோயிருக்கலாம். ஆஸ்கார் பாரட் என்னும் கல்விமான் விளக்கம் தருகிறார்: “எழுதுவதற்காக உபயோகிக்கப்பட்ட இவ்விரண்டு பொருட்களும் [பப்பைரைஸும் தோலும்] ஈரப்பதம், பூஞ்சை, வேறு பல பூச்சிகளின் முட்டைப்புழுக்கள் ஆகியவற்றால் ஒரேயளவில் பாதிக்கப்பட்டன. காகிதமும், உறுதியான தோலும்கூட திறந்தவெளியில் அல்லது ஓதமாக இருக்கும் அறையில் இருக்கையில் எவ்வளவு சுலபமாக கெட்டுவிடும் என்பது நமக்கு அன்றாட அனுபவத்திலிருந்தே தெரியும்.”
1இந்த அசல் பிரதிகள் எதுவும் இப்போது இல்லை. அப்படியென்றால், பைபிள் எழுத்தாளர்களின் வார்த்தைகள் எப்படி நம் நாள்வரை நிலைத்திருந்தன?
உன்னிப்பாக பிரதி எழுதியவர்களால் பாதுகாக்கப்பட்டது
அசல் பிரதிகள் எழுதப்பட்டதுமே, கையெழுத்து பிரதிகள் எடுப்பதும் ஆரம்பிக்கப்பட்டது. பண்டைய இஸ்ரவேலில் வேதாகமத்தை பிரதியெடுப்பது உண்மையில் ஒரு தொழிலாகவே ஆனது. (எஸ்றா 7:6; சங்கீதம் 45:1; NW) ஆனால், பிரதிகளும் அழியும் பொருட்களில்தான் எழுதப்பட்டன. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப்பின், மற்ற புதிய கையெழுத்துப் பிரதிகளை வைத்துவிட்டு, இந்தப் பழைய பிரதிகளை மாற்றிவிடுவார்கள். அசல் பிரதிகள் அழிந்துவிட, நகல் எடுக்கப்பட்ட இப்பிரதிகளே எதிர்காலத்தில் கையெழுத்துப் பிரதிகள் எடுக்க அடிப்படையாக அமைந்தன. இப்படியாக, நகலிலிருந்து நகல் எடுப்பது பல நூற்றாண்டுகளுக்குத் தொடர்ந்தன. பல நூற்றாண்டுகளாக பிரதி எழுதுவோர் செய்த பிழைகள் பைபிளின் மூல உரையை பெருமளவுக்கு மாற்றியிருக்குமா? இல்லை என்றே அத்தாட்சி காட்டுகிறது.
பிரதி எழுதுவதை தொழிலாக கொண்டவர்கள் அத்தொழிலுக்காக தங்களையே அர்ப்பணித்தார்கள். அவர்கள் நகல் எடுத்த வார்த்தைகளிடமாக ஆழ்ந்த பக்தி வைத்திருந்தார்கள். அவர்கள் மிக உன்னிப்பாக கவனித்து எழுதினார்கள். “பிரதி எழுதுபவர்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள எபிரெய வார்த்தை சோஃபெர் (so·pherʹ) என்பதாகும். இது எண்ணுவதையும் பதிவு செய்வதையும் குறிப்பிடுகிறது. பிரதி எழுதியவர்கள் எவ்வளவு திருத்தமாக எழுதினார்கள் என்பதை தெளிவாக தெரிந்துகொள்வதற்கு மஸோரெட்டுகளை கொஞ்சம் எண்ணிப்பாருங்கள். a அவர்களைப் பற்றி, கல்விமான் தாமஸ் ஹார்ட்வெல் ஹார்ன் விளக்கம் தருகிறார்: “அவர்கள் பைபிளின் முதல் ஐந்து புத்தகங்களில் நடுவில் வரும் எழுத்துக்கள் எவை என்றும், ஒவ்வொரு புத்தகத்திலும் நடுவில் வரும் எழுவாய், பயனிலையுடைய வாக்கிய உறுப்புக்கள் எவை என்றும், முழு எபிரெய வேதாகமங்களிலும் [எபிரெய] எழுத்துக்கள் ஒவ்வொன்றும் எத்தனை தடவை வருகின்றன என்றும் ஒவ்வொன்றாக எண்ணினார்கள்.”
3இவ்வாறாக, திறம்பட்ட பிரதியெடுப்பாளர்கள், குறுக்காக-சரிபார்க்கும் பல்வேறு முறைகளை உபயோகித்தார்கள். பைபிள் மூல உரையிலிருந்து ஒரு எழுத்தையும் விடக்கூடாது என்பதற்காக, அவர்கள் பதிவு செய்த வார்த்தைகளை மட்டுமல்ல, ஆனால் எழுத்துக்களையும் ஒவ்வொன்றாக எண்ணினார்கள். இதில் அடங்கியிருக்கும் சிரமத்தை சற்று யோசித்துப்பாருங்கள்: எபிரெய வேதாகமங்களில் இருந்த 8,15,140 தனி எழுத்துகள் ஒவ்வொன்றும் இருக்கின்றனவா என்று சரிபார்த்தார்கள்! 4எவ்வளவு அதிக திருத்தமாக இருக்கிறது என்பதை இத்தகைய தளராத முயற்சி உத்தரவாதம் அளிக்கிறது.
இருந்தாலும், பிரதி எழுதியவர்கள் பிழைகளே இன்றி எழுதினார்கள் என்று சொல்ல முடியாது. பல நூற்றாண்டுகளாக மறுபடியும் மறுபடியும் பிரதிகள் எடுத்தபோதிலும்,
பைபிளின் மூல உரை நம்பத்தகுந்த விதத்தில் நிலைத்திருக்கிறது என்பதற்கு ஏதாவது அத்தாட்சி இருக்கிறதா?நம்புவதற்கு ஓர் உறுதியான ஆதாரம்
பைபிள் திருத்தமாக நம் நாள்வரையாக கைமாறி வந்திருக்கிறது என்று நம்புவதற்கு நல்ல காரணம் இருக்கிறது. இதை நிரூபிக்க கையால் எழுதப்பட்ட நகல்கள் இருக்கின்றன. அதாவது முழுமையாக அல்லது ஒருசில பகுதிகளாக உள்ள எபிரெய வேதாகமங்களில் 6,000 பிரதிகளும், கிறிஸ்தவ கிரேக்க வேதாகமங்களில் கிட்டத்தட்ட 5,000 பிரதிகளும் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்றுதான் 1947-ல் கண்டெடுக்கப்பட்ட எபிரெய வேதாகமத்தின் கையெழுத்துப் பிரதி. வேதவசனங்கள் எவ்வளவு திருத்தமாக நகல் எடுக்கப்பட்டன என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. அன்றுமுதல் இதனை, “நவீன காலத்தில் கண்டெடுக்கப்பட்ட மாபெரும் கையெழுத்துப் பிரதி” என்று அழைக்கிறார்கள்.
5அந்த வருடத்தின் ஆரம்பத்தில் ஓர் இளம் அரேபிய நாடோடி மேய்ப்பன் தன் மந்தைகளை மேய்த்துக்கொண்டிருக்கையில், சவக்கடல் பக்கத்தில் ஒரு குகையைக் கண்டான். அதில் நிறைய மண் ஜாடிகள் இருந்தன, பெரும்பாலான ஜாடிகள் காலியாக இருந்ததைக் கண்டான். ஆனால், ஒரு ஜாடி இறுக்கமாக சீல் போடப்பட்டிருந்தது. தோலால் ஆன ஒரு புத்தகச் சுருள், ஒரு துணியில் கவனமாக சுற்றப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்ததை அவன் பார்த்தான். அது பைபிள் புத்தகமாகிய ஏசாயாவின் முழு புத்தகம். நன்கு பாதுகாக்கப்பட்ட ஆனால் தேய்ந்துபோன இந்தச் சுருளின் தோற்றம் ஜாடிக்குள் வைத்து மூடும்முன் இதை பலரும் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்பதை காட்டியது. பழுது பார்த்த அடையாளங்களும் அதில் காணப்பட்டன. தன் கையில் பிடித்திருந்த அந்தப் பழங்காலத்து சுருளுக்கு ஒரு நாள் உலக அளவில் கவனம் ஈர்க்கப்படும் என்பதை அந்த இளம் மேய்ப்பன் கொஞ்சமும் உணரவில்லை.
இந்தக் குறிப்பிட்ட கையெழுத்துப் பிரதி ஏன் அவ்வளவு முக்கியத்துவம் உடையது? 1947-ல் கைவசம் இருந்த மிக பழமையான எபிரெய கையெழுத்துப் பிரதிகள் மொத்தமும் சுமார் பொ.ச. பத்தாம் நூற்றாண்டை சேர்ந்தவை. ஆனால் இந்தச் சுருள் பொ.ச.மு. b இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்தது, அதாவது ஆயிரம் வருடத்திற்கு மேல் பழமையானது. c இந்தச் சுருள், அநேக வருடங்களுக்குப் பின் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதிகளோடு எவ்வாறு ஒப்பிடப்படுகிறது என்பதை காண அறிஞர்கள் அதிக ஆர்வத்தோடு இருந்தார்கள்.
ஓர் ஆய்வின்போது, சவக்கடல் சுருளிலிருந்த ஏசாயாவின் 53-ம் அதிகாரத்தை, ஓராயிரம் வருடத்திற்குப்பின் எழுதப்பட்ட மஸோரெட்டு மூல உரையுடன் அறிஞர்கள் ஒப்பிட்டார்கள். பைபிளுக்கு ஒரு பொது முன்னுரை என்ற ஆங்கில புத்தகம் இந்த ஆய்வின் முடிவை இவ்வாறு விளக்குகிறது: “ஏசாயா 53-ம் அதிகாரத்தில் இருக்கும் 166 வார்த்தைகளில், வெறும் பதினேழு எழுத்துக்களே கேள்விக்கிடமானவை. இவற்றுள், பத்து எழுத்துக்கள் வெறும் எழுத்துப்பிழைகள், அவை அர்த்தத்தை பாதிப்பதில்லை. மற்ற நான்கு எழுத்துக்கள், இணைக்கும் சொற்கள் போன்றவை, அதாவது எழுத்து நடையில் ஏற்பட்ட சிறிய மாற்றங்களே. மீதமுள்ள மூன்று எழுத்துக்கள் “வெளிச்சம்” என்ற வார்த்தையை உள்ளடக்கி உள்ளன. அது வசனம் 11-ல் சேர்க்கப்பட்டுள்ளது, அர்த்தத்தை பெரிதாக மாற்றிவிடவில்லை. . . . இவ்வாறாக, ஆயிரம் வருடத்திற்கு வழிவழியாக கடத்தப்பட்ட பின்பும், 166 வார்த்தைகளைக் கொண்ட ஓர் அதிகாரத்தில் ஒரேவொரு வார்த்தை (மூன்று எழுத்துக்கள்) மாத்திரம் கேள்விக்கிடமானது. இந்த வார்த்தை புத்தகத்திலுள்ள இப்பகுதியின் அர்த்தத்தைப் பெரிதாக ஒன்றும் மாற்றிவிடவில்லை.”
7சவக்கடல் சுருள்களை பலவருடங்களாக கையாண்டவரும், அவற்றில் அடங்கியிருந்த தகவல்களை பகுத்து ஆராய்ந்தவருமான பேராசிரியர் மில்லர் பர்ரோஸும் இதே முடிவுக்குத்தான் வந்தார்: “ஏசாயாவின் சுருளுக்கும் மஸோரெட்டுக்களின் மூல உரைக்கும் உள்ள வித்தியாசங்களில் பல, நகல் எடுக்கும்போது நிகழ்ந்த பிழைகள் என்றே சொல்லலாம். இதைத்தவிர, மொத்தத்தில் பார்க்கப்போனால், இடைக்காலத்து கையெழுத்துப் பிரதிகளுக்கும் இதற்கும் வியக்கத்தக்க அளவுக்கு ஒத்திசைவு உள்ளது. இவ்வளவு பழமையான கையெழுத்துப் பிரதியில் இருந்த இத்தகைய ஒத்திசைவானது, பழைய மூல உரை எவ்வளவு திருத்தமாக இருக்கிறது என்பதற்கு நம்பகமான சான்றை அளிக்கிறது.”
8“நம்பகமான சான்றை” கிறிஸ்தவ கிரேக்க வேதாகம நகல்களுக்கும் அளிக்கலாம். உதாரணத்திற்கு, மென்மையான
தோலில் எழுதப்பட்ட கோடெக்ஸ் சைனாட்டிக்கஸ் (Codex Sinaiticus) என்ற கையெழுத்துப் பிரதி ஒன்று 19-ம் நூற்றாண்டில் கண்டெடுக்கப்பட்டது. இதன் காலப்பகுதி பொ.ச. நான்காம் நூற்றாண்டு. இது எழுதப்பட்டு, பல நூற்றாண்டுகளுக்குப்பின் தயாரிக்கப்பட்ட கிறிஸ்தவ கிரேக்க வேதாகம கையெழுத்துப் பிரதிகள் எவ்வளவு துல்லியமாக இருக்கின்றன என்பதை உறுதிசெய்ய இது உதவியது. பப்பைரைஸில் எழுதப்பட்டிருந்த யோவான் சுவிசேஷத்தின் ஒரு சிறிய துண்டு, எகிப்திலுள்ள எல் ஃப்யூம் என்ற மாவட்டத்தில் கிடைத்தது. இதன் காலப்பகுதி பொ.ச. இரண்டாம் நூற்றாண்டின் முற்பாதி ஆகும். அதாவது அசல் பிரதி எழுதப்பட்டு, 50 வருடங்களுக்கும் குறைவான காலப்பகுதியைச் சேர்ந்தது. இது பல நூற்றாண்டுகளாக உலர்ந்த மண்ணில் பாதுகாக்கப்பட்டிருந்திருக்கிறது. இதிலுள்ள மூல உரை, இதனையடுத்து ரொம்ப காலம் சென்றபின் வெளிவந்த கையெழுத்துப் பிரதிகளோடு ஒத்துப்போகிறது.9இவ்வாறாக, நகல் எடுத்தவர்கள் உண்மையில் அதிக திருத்தமாக நகல் எடுத்தார்கள் என்பதை அத்தாட்சி உறுதிசெய்கிறது. இருப்பினும், அவர்களும் பிழைகள் செய்தனர். பிழையின்றி ஒரு கையெழுத்துப் பிரதியும் இல்லை. பார்க்கப்போனால், சவக்கடல் அருகே கண்டெடுக்கப்பட்ட ஏசாயாவின் சுருளும் இதற்கு விதிவிலக்கல்ல. அப்படி இருந்தும்கூட, அசல் பிரதியிலிருந்து எங்கெல்லாம் வேறுபடுகின்றன என்பதை அறிஞர்கள் கண்டுபிடித்து, திருத்தி விட்டார்கள்.
பிரதி எழுதியவர்களின் பிழைகளை திருத்துதல்
100 பேரிடம் ஒரு நீளமான பத்திரத்தைக் கொடுத்து, கையெழுத்துப் பிரதி எடுக்கும்படி சொன்னதாக வைத்துக்கொள்வோம். சந்தேகத்திற்கிடமின்றி, பிரதி எழுதியவர்களில் எப்படியும் ஒருசிலராவது பிழை செய்வார்கள். ஆனால், அவர்கள் எல்லாரும் ஒரேமாதிரியான பிழைகளை செய்யமாட்டார்கள். அந்த அசல் பத்திரத்தை நீங்கள் முன்பின் பார்த்ததில்லை என்றாலும்கூட, அந்த 100 பிரதிகளையும் கவனமாக ஒப்பிட்டு பார்த்தீர்கள் என்றால், உங்களால் பிழையைக் கண்டுபிடிக்க முடியும். அசல் பத்திரத்தில் அது என்ன வாக்கியம் என்பதை தீர்மானிக்க முடியும்.
அதேபோல், பைபிள் பிரதி எழுதிய எல்லாரும் ஒரே மாதிரியான பிழையைச் செய்யவில்லை. ஒப்பிட்டு ஆய்வு செய்வதற்கு இன்று ஆயிரக்கணக்கான பைபிள் கையெழுத்துப் பிரதிகள் கிடைப்பதால், எழுத்து அறிஞர்களால் (textual scholars) பிழைகளைத் தனியே பிரிக்க முடிந்திருக்கிறது. எது அசல் உரை என்றும் அவர்களால் தீர்மானிக்க முடிவதோடு, தேவையான திருத்தத்தை பக்கத்திலேயே குறித்துவைத்து விடுகிறார்கள். இத்தகைய கவனமான ஆய்வின் விளைவாக, எழுத்து அறிஞர்கள் மூல மொழிகளில் மூல உரைகளை (master texts) தயாரித்துவிட்டார்கள். இவ்வாறு திருத்தம் செய்யப்பட்ட எபிரெய மற்றும் கிரேக்க மூல உரைகளின் பதிப்புகளில், மூலப் பிரதியின் வார்த்தைகள் என்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வார்த்தைகள் புகுத்தப்பட்டன. சில கையெழுத்துப் பிரதிகளில் ஒருவேளை வேறுபாடுகள் இருந்தாலோ வேறுவிதத்தில் எழுதப்பட்டிருந்தாலோ அவை பெரும்பாலும் அடிக்குறிப்பில் பட்டியலிடப்படும். எழுத்து அறிஞர்களால் திருத்தம் செய்யப்பட்டு தயாரிக்கப்பட்ட பதிப்புகளையே நவீன மொழிகளில் பைபிளை மொழிபெயர்ப்பதற்காக பைபிள் மொழிபெயர்ப்பாளர்கள் உபயோகிக்கிறார்கள்.
எபிரெய மற்றும் கிரேக்க மூல உரைகளை அடிப்படையாக கொண்டே நவீன மொழியில் பைபிள் மொழிபெயர்க்கப்படுகிறது. அதனால், பைபிள் எழுத்தாளர்களின் வார்த்தைகளை பெருமளவு அப்படியே திருத்தமாக பின்பற்றுகிறது. d எனவே ஒரு நவீன மொழியில் உள்ள பைபிளை நீங்கள் படிப்பதற்காக கையில் எடுத்தால், அதன் நம்பகத்தன்மைக்கு போதுமான காரணம் இருக்கிறது. ஆயிரக்கணக்கான வருடங்களாக கையால் நகல் எடுக்கப்பட்டு, நகலிலிருந்து நகல் எடுக்கப்பட்டபோதிலும் எப்படி இன்றுவரையாக பைபிள் நிலைத்திருக்கிறது என்ற பதிவு உண்மையில் வியப்புக்குரியது. ஆகவே, நீண்டகாலமாக பிரிட்டிஷ் மியூசியத்தின் பொறுப்பாளராக இருந்த சர் பிரட்ரிக் கென்யான் என்பவரால் இவ்வாறு குறிப்பிட முடிந்தது: “பைபிளை மாத்திரம் திருத்தமானது என்று ஐயத்திற்கிடமின்றி சொல்லலாம். . . . உலகிலுள்ள மற்ற பழமையான புத்தகங்களைப் பற்றி இவ்வாறு சொல்ல முடியாது.”10
[அடிக்குறிப்புகள்]
a எபிரெய வேதாகமங்களை பிரதி எடுத்தவர்களே மஸோரெட்டுகள் (“பாரம்பரிய வல்லுநர்கள்” என்று அர்த்தம்), பொ.ச. ஆறுக்கும் பத்துக்கும் இடைப்பட்ட நூற்றாண்டுகளில் வாழ்ந்தார்கள். அவர்கள் எழுதிய கையெழுத்துப் பிரதிகள் மஸோரெட்டிக் மூல உரைகள் என்று குறிப்பிடப்படுகின்றன.2
b பொ.ச.மு. என்பது “பொது சகாப்தத்துக்கு முன்” என்று அர்த்தம். பொ.ச. என்பது “பொது சகாப்தம்” என்பதைக் குறிக்கிறது. இது பெரும்பாலும் கி.பி. என்று அழைக்கப்படுகிறது. “கிறிஸ்துவுக்குப் பின்” என்பது இதன் அர்த்தம்.
c எபிரெய பைபிளின் எழுத்து திறனாய்வு என்ற ஆங்கில புத்தகத்தில் இமானுவேல் டொவ் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “கார்பன் 14 என்ற சோதனையின் உதவியால், 1QIsaa [ஏசாயா புத்தகத்தின் சவக்கடல் சுருள்] பொ.ச.மு. 202-க்கும் 107-க்கும் இடைப்பட்ட காலப்பகுதியை சேர்ந்தது என்று இப்போது கணிக்கப்பட்டுள்ளது. (பண்டைய எழுத்துக்களின் காலம்: பொ.ச.மு. 125-100) . . . பண்டைய எழுத்துக்களின் காலத்தைக் கண்டுபிடிக்க பயன்படும் மேற்சொல்லப்பட்ட முறை, நவீன காலங்களில் இன்னும் நன்கு முன்னேறி உள்ளது. இம்முறையில், எழுத்துக்களின் வடிவம், எழுத்துக்கள் அமைக்கப்பட்டிருக்கும் விதம் ஆகியவற்றை பழங்காலத்து நாணயம், கல்வெட்டுகள் போன்ற வெளி மூலங்களோடு ஒப்பிட்டு, அதன் அடிப்படையில் திருத்தமான காலத்தை கணிக்க முடிகிறது. இது ஓரளவுக்கு நம்பகமான முறையாக நிரூபித்துள்ளது.”6
d உண்மையில், தனி மொழிபெயர்ப்பாளர்கள் எபிரெய மற்றும் கிரேக்க மூல உரைகளை எவ்வளவு நெருக்கமாக பின்பற்ற முடியும் என்பதை தெரிவுசெய்வார்கள்.
[பக்கம் 8-ன் படம்]
திறம்பட்ட பிரதியெடுப்பாளரின் உதவியால் பைபிள் பாதுகாக்கப்பட்டது
[பக்கம் 9-ன் படம்]
ஏசாயாவின் சவக்கடல் சுருளும் (அசல் பிரதி காட்டப்பட்டுள்ளது) ஆயிரவருடங்களுக்குப்பின் தயாரிக்கப்பட்ட மஸோரெட்டிக் மூல உரையும் கிட்டத்தட்ட ஒரேமாதிரி இருக்கின்றன