அதிகாரம் 42
பரிசேயர்களை இயேசு கண்டிக்கிறார்
மத்தேயு 12:33-50 மாற்கு 3:31-35 லூக்கா 8:19-21
-
‘யோனாவின் அடையாளத்தை’ பற்றி இயேசு சொல்கிறார்
-
குடும்பத்தாரைவிட சீஷர்கள்தான் நெருக்கமானவர்கள்
இயேசு, கடவுளின் சக்தியால் பேய்களைத் துரத்துகிறார் என்பதை வேத அறிஞர்களும் பரிசேயர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. இப்படி, கடவுளுடைய சக்தியையே நிந்திக்கும் அளவுக்குப் போய்விட்டார்கள். அதனால் இயேசு, “நீங்கள் நல்ல மரமாக இருந்தால் நல்ல கனியைக் கொடுப்பீர்கள்; கெட்ட மரமாக இருந்தால் கெட்ட கனியைக் கொடுப்பீர்கள்; ஒரு மரம் எப்படிப்பட்டது என்பதை அதன் கனியை வைத்தே தெரிந்துகொள்ளலாம்” என்கிறார்.—மத்தேயு 12:33.
பேய்களைத் துரத்துவதன் மூலம் இயேசு நல்ல கனியைக் கொடுத்தார். அப்படியிருக்கும்போது, அவர் சாத்தானின் துணையோடுதான் அதைச் செய்தார் என்று சொல்வது முட்டாள்தனம். நல்ல மரத்தால்தான் நல்ல கனியைக் கொடுக்க முடியும் என்று மலைப்பிரசங்கத்தில் இயேசு ஏற்கெனவே சொல்லியிருந்தார். இயேசுவுக்கு எதிராகப் பரிசேயர்கள் அள்ளி வீசிய குற்றச்சாட்டுகள் எல்லாம் கேலிக்கூத்தாக இருக்கின்றன. இவர்களுடைய கனிகளை வைத்து இவர்களைப் பற்றி என்ன தெரிந்துகொள்கிறோம்? இவர்கள் கெட்ட மரங்களைப் போல இருக்கிறார்கள். அதனால்தான் இயேசு, “விரியன் பாம்புக் குட்டிகளே, பொல்லாதவர்களான உங்களால் எப்படி நல்ல விஷயங்களைப் பேச முடியும்? இதயத்தில் நிறைந்திருப்பதையே வாய் பேசுகிறது” என்று இவர்களிடம் சொல்கிறார்.—மத்தேயு 7:16, 17; 12:34.
நம்முடைய இதயத்தில் என்ன இருக்கிறது என்பதை நம்முடைய வார்த்தைகள் காட்டுகின்றன. அவற்றை வைத்துதான் யெகோவாவும் இயேசுவும் நம்மை நியாயந்தீர்ப்பார்கள். அதனால்தான், “நான் உங்களுக்குச் சொல்கிறேன், மனுஷர்கள் தாங்கள் பேசுகிற ஒவ்வொரு வீணான வார்த்தைக்கும் நியாயத்தீர்ப்பு நாளில் கணக்குக் கொடுக்க வேண்டும்; ஏனென்றால், உங்களுடைய வார்த்தைகளை வைத்தே நீங்கள் நீதிமான்களா குற்றவாளிகளா என்பதைக் கடவுள் நியாயந்தீர்ப்பார்” என்று சொல்கிறார்.—மத்தேயு 12:36, 37.
இயேசு ஏற்கெனவே நிறைய அற்புதங்களைச் செய்திருந்தார். ஆனால், வேத அறிஞர்களுக்கும் பரிசேயர்களுக்கும் அது போதுமானதாக இருக்கவில்லை. அவர்கள் இயேசுவிடம் வந்து, “போதகரே, எங்களுக்கு ஒரு அடையாளத்தைக் காட்டுங்கள்” என்கிறார்கள். அவர் அற்புதங்கள் செய்வதை அவர்கள் நேரில் பார்த்திருந்தாலும் சரி, பார்க்கவில்லையென்றாலும் சரி, அதற்கெல்லாம் கண்கண்ட சாட்சிகள் பலர் இருக்கிறார்கள். அதனால் இயேசு அந்த யூதத் தலைவர்களிடம், “விசுவாசதுரோகம் செய்கிற பொல்லாத தலைமுறையினர் ஒரு அடையாளத்தை எதிர்பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்; ஆனால், யோனா தீர்க்கதரிசியின் அடையாளத்தைத் தவிர வேறெந்த அடையாளமும் அவர்களுக்குக் கொடுக்கப்படாது” என்கிறார்.—மத்தேயு 12:38, 39.
இதைப் புரிந்துகொள்வதற்கு உதவியாக கூடுதல் விவரங்களையும் அவர் சொல்கிறார். “ராத்திரி பகலாக மூன்று நாட்களுக்கு யோனா ஒரு பெரிய மீனின் வயிற்றுக்குள் இருந்தது போலவே மனிதகுமாரனும் ராத்திரி பகலாக மூன்று நாட்களுக்குக் கல்லறைக்குள் இருப்பார்” என்கிறார். யோனாவை ஒரு பெரிய மீன் விழுங்கியது. பிறகு, இறந்து உயிர்த்தெழுந்தது போல அதன் வயிற்றிலிருந்து யோனா வெளியே வந்தார். அதேபோல, தானும் இறந்து, மூன்றாம் நாளில் உயிரோடு எழுப்பப்படப்போவதாக இயேசு சொல்கிறார். இயேசு பிற்பாடு உயிர்த்தெழுந்தபோது, இந்த ‘யோனாவின் அடையாளத்தை’ யூதத் தலைவர்கள் ஒதுக்கித்தள்ளினார்கள். அவர்கள் மனம் திருந்தி, தங்களை மாற்றிக்கொள்ளவில்லை. (மத்தேயு 27:63-66; 28:12-15) ஆனால், “நினிவே மக்கள்” யோனா பிரசங்கித்த செய்தியைக் கேட்டு மனம் திருந்தினார்கள். அதனால், அவர்கள் இந்தத் தலைமுறையைக் கண்டனம் செய்வார்கள். சேபா தேசத்து ராணியும் தன்னுடைய நல்ல முன்மாதிரியின் மூலம் இவர்களைக் கண்டனம் செய்வாள். ஏனென்றால், சாலொமோனின் ஞானத்தைக் கேட்க அவள் ஆசைப்பட்டாள்; அதைக் கேட்டு மலைத்துப்போனாள். ஆனால் இப்போது, “சாலொமோனைவிட பெரியவர் ஒருவர் இங்கே இருக்கிறார்” என்று இயேசு சொல்கிறார்.—மத்தேயு 12:40-42.
தன்னைப் பிடித்திருந்த பேயிடமிருந்து விடுதலை பெற்ற ஒரு மனிதனுக்கு இந்தப் பொல்லாத தலைமுறையை இயேசு ஒப்பிடுகிறார். (மத்தேயு 12:45) அந்தப் பேய் அவனைவிட்டுப் போன பிறகு, அந்த வெற்றிடத்தை நல்ல காரியங்களால் அவன் நிரப்பவில்லை. அதனால், அந்தப் பேய் தன்னைவிட பொல்லாத ஏழு பேய்களைக் கூட்டிக்கொண்டு வருகிறது. அந்த எல்லா பேய்களும் அவனுக்குள் மறுபடியும் புகுந்துவிடுகின்றன. பேயிடமிருந்து விடுதலை பெற்ற மனிதனைப் போல இஸ்ரவேல் தேசம் இருக்கிறது. ஏனென்றால், ஆரம்பத்தில் அது சுத்தப்படுத்தப்பட்டது, சீர்திருத்தப்பட்டது. ஆனால், அந்தத் தேசம் கடவுளுடைய தீர்க்கதரிசிகளை ஒதுக்கித்தள்ளியது. கடைசியில், கடவுளுடைய சக்தியின் உதவியோடு செயல்படுகிற இயேசுவையே எதிர்க்கும் அளவுக்குப் போய்விட்டது. இதிலிருந்து, அந்தத் தேசம் முன்பைவிட இப்போது படுமோசமான நிலைக்கு வந்துவிட்டது என்று தெரிகிறது.
இயேசு பேசிக்கொண்டிருக்கும்போது, அவருடைய அம்மாவும் சகோதரர்களும் அங்கே வந்து, கூட்டத்தின் பின்னால் நிற்கிறார்கள். அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறவர்கள் அவரிடம், “உங்கள் அம்மாவும் உங்கள் சகோதரர்களும் உங்களைப் பார்க்க வெளியே நின்றுகொண்டிருக்கிறார்கள்” என்று சொல்கிறார்கள். அப்போது இயேசு தன் சீஷர்கள் பக்கமாகக் கையை நீட்டி, “கடவுளுடைய வார்த்தையைக் கேட்டு அதன்படி செய்கிற இவர்கள்தான் என் அம்மா, என் சகோதரர்கள்” என்று சொல்கிறார். (லூக்கா 8:20, 21) சீஷர்கள்மீது இயேசு எந்தளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதை இந்த வார்த்தைகள் காட்டுகின்றன. அவர்கள்தான் அவருக்குச் சொந்த சகோதரர்களைப் போலவும், சகோதரிகளைப் போலவும் அம்மாவைப் போலவும் இருக்கிறார்கள். தன் குடும்பத்தாரைவிட, தன் சீஷர்களைத்தான் இயேசு அதிக முக்கியமாக நினைக்கிறார். யெகோவாவின் சாட்சிகளாக இருக்கிற நம்முடைய சகோதர சகோதரிகளுடன் நமக்கு இருக்கிற பந்தம் சந்தோஷத்தைத் தருகிறது. அதுவும், மற்றவர்கள் நம்மைச் சந்தேகப்படும்போதும், நம்மையும் நாம் செய்கிற வேலையையும் பழித்துப் பேசும்போதும் இந்த ஆன்மீக சொந்தங்களால் நமக்குப் புத்துணர்ச்சி கிடைக்கிறது.