அதிகாரம் 57
ஒரு சிறுமியையும் காது கேட்காதவனையும் குணமாக்குகிறார்
மத்தேயு 15:21-31 மாற்கு 7:24-37
-
பெனிக்கேயப் பெண்ணின் மகளை இயேசு குணமாக்குகிறார்
-
காது கேட்காதவனும், பேச்சுக் குறைபாடு உள்ளவனுமான ஒருவனைக் குணமாக்குகிறார்
சொந்த லாபத்துக்காகப் பாரம்பரியங்களைக் கடைப்பிடித்த பரிசேயர்களைக் கண்டித்த பிறகு, இயேசு தன்னுடைய சீஷர்களோடு அங்கிருந்து புறப்படுகிறார். பெனிக்கேயில் இருக்கிற தீரு, சீதோன் பகுதிகளுக்குப் போவதற்காக, வடமேற்கு திசையை நோக்கி பல கிலோமீட்டர் பயணம் செய்கிறார்.
அங்கே ஒரு வீட்டில் இயேசு தங்குகிறார். தான் அங்கே இருப்பது யாருக்கும் தெரிய வேண்டாம் என்று நினைக்கிறார். ஆனாலும், தெரிந்துவிடுகிறது! பெனிக்கேயில் பிறந்த ஒரு கிரேக்கப் பெண் இயேசு வந்திருப்பதைக் கேள்விப்பட்டு அவரிடம் வருகிறாள். “எஜமானே, தாவீதின் மகனே, எனக்கு இரக்கம் காட்டுங்கள்; என்னுடைய மகளைப் பேய் பிடித்து ஆட்டுகிறது” என்று கெஞ்சுகிறாள்.—மத்தேயு 15:22; மாற்கு 7:26.
கொஞ்ச நேரத்துக்குப் பிறகு சீஷர்கள் அவரிடம், “இவள் நம் பின்னால் கதறிக்கொண்டே வருகிறாள், இவளை அனுப்பிவிடுங்கள்” என்று சொல்கிறார்கள். அவளுக்கு ஏன் பதில் சொல்லவில்லை என்பதற்கான காரணத்தை இயேசு தன் சீஷர்களிடம் சொல்கிறார். “கடவுள் என்னை எல்லா மக்களிடமும் அனுப்பவில்லை, வழிதவறிப்போன ஆடுகளைப் போல் இருக்கிற இஸ்ரவேல் மக்களிடம்தான் அனுப்பியிருக்கிறார்” என்கிறார். அப்போதும் அந்தப் பெண் அவரை விடுவதாக இல்லை. அவள் இயேசுவின் காலடியில் விழுந்து, “ஐயா, எனக்கு உதவி செய்யுங்கள்!” என்று கெஞ்சுகிறாள்.—மத்தேயு 15:23-25.
அப்போது இயேசு, “பிள்ளைகளின் ரொட்டியை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது சரியல்ல” என்று சொல்கிறார். (மத்தேயு 15:26) மற்ற தேசத்து மக்கள்மீது யூதர்களுக்கு இருந்த தப்பான எண்ணத்தை இயேசு இங்கே மறைமுகமாகக் குறிப்பிடுகிறார். அவளுக்கு எந்தளவு விசுவாசம் இருக்கிறது என்று பார்ப்பதற்காக இயேசு இதைச் சொல்லியிருக்கலாம். ஆனால், ‘நாய்க்குட்டிகள்’ என்று சொல்வதன் மூலம் யூதராக இல்லாதவர்கள்மீது பாசம் வைத்திருப்பதை இயேசு காட்டுகிறார். அவருடைய கனிவான முகத்திலும் அன்பான குரலிலும் அந்தப் பாசம் கண்டிப்பாகத் தெரிந்திருக்கும்.
இயேசு சொன்னதைக் கேட்டு அவள் கோபப்படவில்லை. யூதர்களின் தப்பெண்ணத்தைப் பற்றி இயேசு சொன்ன விஷயத்தை வைத்தே அவருக்குப் பதில் சொல்கிறாள். “உண்மைதான், ஐயா; ஆனால், எஜமானுடைய மேஜையிலிருந்து விழுகிற துணுக்குகளை நாய்க்குட்டிகள் சாப்பிடுமே” என்று பணிவாகச் சொல்கிறாள். அவளுடைய நல்ல மனதை இயேசு புரிந்துகொள்கிறார். அதனால், “பெண்ணே, உனக்கு எவ்வளவு விசுவாசம்! நீ விரும்புகிறபடியே நடக்கட்டும்” என்று சொல்கிறார். (மத்தேயு 15:27, 28) அந்த நொடியே, வீட்டிலிருக்கிற அவளுடைய மகள் குணமாகிறாள்! அவள் வீட்டுக்குத் திரும்பிப் போனபோது, அவளுடைய மகள் குணமாகி கட்டிலில் படுத்திருப்பதைப் பார்க்கிறாள். “அந்தப் பேய் அவளைவிட்டுப் போயிருந்தது.”—மாற்கு 7:30.
இதற்குப் பிறகு, இயேசுவும் அவருடைய சீஷர்களும் அங்கிருந்து புறப்படுகிறார்கள். அவர்கள் பெனிக்கே பகுதி வழியாகப் பயணம் செய்து, யோர்தான் ஆற்றின் அக்கரைக்குப் போகிறார்கள். அநேகமாக, கலிலேயா கடலுக்கு வடக்கில் இருக்கிற ஏதோவொரு இடத்தில் யோர்தானைக் கடந்து, தெக்கப்போலிக்குப் போகிறார்கள். அங்கே ஒரு மலையில் அவர்கள் ஏறிப் போகும்போது, மக்கள் அவர்களைப் பார்த்துவிடுகிறார்கள். நடக்க முடியாதவர்களையும், கைகால் ஊனமானவர்களையும், பார்வை இல்லாதவர்களையும், பேச முடியாதவர்களையும் அவரிடம் கூட்டிக்கொண்டு வருகிறார்கள். நோயாளிகளை இயேசுவின் காலடியில் கொண்டுவந்து விடுகிறார்கள். இயேசு அவர்கள் எல்லாரையும் குணமாக்குகிறார். மக்கள் பிரமித்துப்போய், இஸ்ரவேலின் கடவுளைப் புகழ்கிறார்கள்.
அங்கே காது கேட்காத, பேச்சுக் குறைபாடுள்ள ஒரு மனிதனிடம் இயேசு தனி அக்கறை காட்டுகிறார். அந்தப் பெரிய கூட்டத்தில் நிற்க அவனுக்கு ரொம்பப் பயமாக இருந்திருக்கும். இதை இயேசு கவனித்திருக்கலாம். அதனால், கூட்டத்தாரைவிட்டு அவனைத் தனியாகக் கூட்டிக்கொண்டு போகிறார். அவர்கள் இரண்டு பேர் மட்டும் இருக்கும்போது, தான் செய்யப்போவதை இயேசு அவனுக்குக் காட்டுகிறார். அவனுடைய காதுகளில் தன் விரல்களை வைத்து, உமிழ்ந்து, பிறகு அவனுடைய நாக்கைத் தொடுகிறார். வானத்தை அண்ணாந்து பார்த்து, “எப்பத்தா” என்று சொல்கிறார். அதற்கு “திறக்கப்படு” என்று அர்த்தம். இப்போது, அவனால் கேட்கவும், தெளிவாகப் பேசவும் முடிகிறது. இதை எல்லாருக்கும் விளம்பரப்படுத்த இயேசு விரும்பவில்லை. தாங்கள் நேரடியாகப் பார்ப்பதையும் கேட்பதையும் வைத்துதான் மக்கள் தன்மீது விசுவாசம் வைக்க வேண்டும் என்று இயேசு நினைக்கிறார்.—மாற்கு 7:32-36.
இயேசுவுக்கு இருக்கிற சக்தியைப் பார்த்து எல்லாரும் அசந்துபோகிறார்கள். “எல்லாவற்றையும் இவர் எவ்வளவு மாற்கு 7:37.
அருமையாகச் செய்கிறார்! காதுகேட்காதவர்களைக்கூட கேட்க வைக்கிறார், பேச முடியாதவர்களைக்கூட பேச வைக்கிறார்! என்று மிகுந்த ஆச்சரியத்தோடு சொல்கிறார்கள்.”—