Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 03

வேத புத்தகத்தை நம்ப முடியுமா?

வேத புத்தகத்தை நம்ப முடியுமா?

வேத புத்தகமான பைபிளில் நிறைய வாக்குறுதிகளும் ஆலோசனைகளும் இருக்கின்றன. அதையெல்லாம் தெரிந்துகொள்ள உங்களுக்கு ஒருவேளை ஆர்வமாக இருக்கலாம். ஆனால், அதை நம்புவதா வேண்டாமா என்று நீங்கள் யோசிக்கலாம். இவ்வளவு பழமையான புத்தகம் சொல்கிற வாக்குறுதிகளையும் ஆலோசனைகளையும் நீங்கள் நம்ப முடியுமா? பைபிள் சொல்வதுபோல் நாம் உண்மையிலேயே இன்றும் என்றும் சந்தோஷமாக வாழ முடியுமா? லட்சக்கணக்கான பேர் இதை நம்புகிறார்கள். நீங்களும் ஏன் நம்பலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

1. கடவுள் தந்த வேதம் சொல்வது உண்மையா கட்டுக்கதையா?

பைபிளில் “உண்மையான வார்த்தைகள் திருத்தமாக” எழுதப்பட்டிருக்கின்றன. இதை பைபிளே சொல்கிறது. (பிரசங்கி 12:10) அதில் சொல்லியிருக்கிற சம்பவங்களெல்லாம் உண்மையிலேயே நடந்தன. அதில் சொல்லியிருக்கிற ஆட்களெல்லாம் உண்மையிலேயே வாழ்ந்தார்கள். (லூக்கா 1:3; 3:1, 2-ஐ வாசியுங்கள்.) பைபிளில் சொல்லியிருக்கிற முக்கியமான தேதிகள், மக்கள், இடங்கள், சம்பவங்கள் எல்லாமே உண்மை என்று நிறைய சரித்திர வல்லுநர்களும், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் உறுதி செய்திருக்கிறார்கள்.

2. வேத புத்தகம் நம் காலத்துக்கு ஒத்துவராது என்று ஏன் சொல்ல முடியாது?

மனிதர்கள் பிற்பாடு கண்டுபிடித்த உண்மைகளை பைபிள் அன்றைக்கே சொல்லிவிட்டது. அறிவியல் விஷயங்களை ஒரு உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். பைபிள் சொன்ன அறிவியல் விஷயங்களை அப்போது வாழ்ந்த நிறைய பேர் நம்பவில்லை. ஆனால், அவையெல்லாம் உண்மைதான் என்பதை இன்று அறிவியல் ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. இதிலிருந்து என்ன தெரிகிறது? பைபிளை நாம் “எப்போதுமே நம்பலாம், இன்றும் என்றும் நம்பலாம்” என்று தெரிகிறது.​—சங்கீதம் 111:8.

3. எதிர்காலத்தைப் பற்றி வேதம் சொல்வதை நாம் ஏன் நம்பலாம்?

வேத புத்தகமான பைபிள் நிறைய தீர்க்கதரிசனங்களை * சொல்லியிருக்கிறது. அதாவது, எதிர்காலத்தில் “நடக்கப்போகும் விஷயங்களை” ரொம்ப வருஷத்துக்கு முன்பே சொல்லியிருக்கிறது. (ஏசாயா 46:10) நம் காலத்தில் என்னென்ன நடக்கும் என்றுகூட அது விவரமாகச் சொல்லியிருக்கிறது. இப்படிப்பட்ட சில தீர்க்கதரிசனங்களை இந்தப் பாடத்தில் பார்ப்போம். அதெல்லாம் அப்படியே நடந்ததைப் பற்றித் தெரிந்துகொள்ளும்போது நீங்கள் அசந்துபோய்விடுவீர்கள்!

ஆராய்ந்து பார்க்கலாம்!

அறிவியலும் கடவுள் தந்த வேதமும் எப்படி ஒத்துப்போகின்றன என்று பார்க்கலாம். வேத புத்தகத்தில் இருக்கும் ஆச்சரியமான சில தீர்க்கதரிசனங்களைப் பற்றியும் பார்க்கலாம்.

4. அறிவியலும் வேதமும் ஒத்துப்போகின்றன

முன்பெல்லாம் பூமியை ஏதோ ஒன்று தாங்கிப் பிடித்துக்கொண்டு இருப்பதாக நிறைய பேர் நம்பினார்கள். வீடியோவைப் பாருங்கள்.

சுமார் 3,500 வருஷங்களுக்கு முன்பு யோபு புத்தகத்தில் என்ன சொல்லப்பட்டது என்று பாருங்கள். யோபு 26:7-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.

  • பூமி “அந்தரத்தில் தொங்குகிறது” என்று பைபிள் அன்றைக்கே சொன்னதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

கிட்டத்தட்ட 200 வருஷங்களுக்கு முன்புதான் நீர் சுழற்சியை (water cycle) பற்றி நாம் முழுமையாகப் புரிந்துகொண்டோம். ஆனால், ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன்பே இதைப் பற்றி பைபிள் என்ன சொல்லியிருக்கிறது என்று பாருங்கள். யோபு 36:27, 28-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • நீர் சுழற்சியைப் பற்றி பைபிள் இவ்வளவு எளிமையாகச் சொல்லியிருப்பதைப் படிக்கும்போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

  • இந்த வசனங்களைப் படிக்கும்போது பைபிள்மேல் உங்களுக்கு இன்னும் அதிக நம்பிக்கை வருகிறதா?

5. முக்கியமான சம்பவங்களைப் பற்றி வேதம் முன்கூட்டியே சொல்லிவிட்டது

ஏசாயா 44:27–45:2-ஐப் படித்துவிட்டு, வீடியோவைப் பாருங்கள். பிறகு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • பாபிலோன் நகரத்தின் அழிவைப் பற்றி 200 வருஷங்களுக்கு முன்பே பைபிள் என்ன சொன்னது?

கி.மு. 539-ல் பெர்சிய நாட்டின் ராஜாவான கோரேசு தன் படையோடு வந்து பாபிலோன் நகரத்தைக் கைப்பற்றினார். இதைச் சரித்திரம் உறுதிப்படுத்துகிறது. அந்த நகரத்தைச் சுற்றி ஓடிய ஆற்றின் தண்ணீரை அவர்கள் வேறு பக்கமாகத் திருப்பிவிட்டார்கள். அந்த நகரத்தின் கதவுகள் திறந்தே கிடந்தன. அவர்கள் அந்தக் கதவுகள் வழியாகப் போய், போர் செய்யாமலேயே அந்த நகரத்தைக் கைப்பற்றினார்கள். அது நடந்து 2,500 வருஷங்களுக்குமேல் ஆகிவிட்டது. இன்னமும் பாபிலோன் இடிபாடுகளாகத்தான் கிடக்கிறது. அதைப் பற்றி பைபிள் என்ன சொன்னது என்று பாருங்கள்.

ஏசாயா 13:19, 20-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • பாபிலோனுக்கு ஏற்பட்ட கதி, பைபிள் சொல்வதெல்லாம் உண்மை என்பதை எப்படி நிரூபிக்கிறது?

இன்று ஈராக்கில் இடிபாடுகளாகக் கிடக்கும் பாபிலோன்

6. இன்று நடப்பதை வேதம் அன்றே சொன்னது

இது “கடைசி நாட்கள்” என்று வேத புத்தகமான பைபிள் சொல்கிறது. (2 தீமோத்தேயு 3:1) நம் காலத்தைப் பற்றி பைபிள் அன்றே என்ன சொன்னது என்று பாருங்கள்.

மத்தேயு 24:6, 7-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • கடைசி நாட்களில் என்னென்ன நடக்கும் என்று பைபிள் சொல்லியிருக்கிறது?

2 தீமோத்தேயு 3:1-5-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • கடைசி நாட்களில் எப்படிப்பட்ட ஆட்கள் இருப்பார்கள் என்று பைபிள் சொல்லியிருக்கிறது?

  • இப்படிப்பட்ட ஆட்களில் யாரையெல்லாம் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்?

சிலர் இப்படிச் சொல்கிறார்கள்: “பைபிள்ல இருக்குறதெல்லாம் வெறும் கதைதான், அதையெல்லாம் நம்ப முடியாது.”

  • பைபிளில் இருப்பதெல்லாம் உண்மை என்பதற்கு எது ரொம்ப பலமான ஆதாரம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

சுருக்கம்

சரித்திரமும் அறிவியலும் தீர்க்கதரிசனமும், கடவுள் தந்த வேதத்தை நீங்கள் நம்பலாம் என்று காட்டுகின்றன.

ஞாபகம் வருகிறதா?

  • பைபிளில் இருப்பது உண்மையா கட்டுக்கதையா?

  • பைபிள் சொல்வதெல்லாம் உண்மை என்பதை அறிவியல் எப்படிக் காட்டுகிறது?

  • எதிர்காலத்தைப் பற்றி பைபிள் சொல்வது நடக்கும் என்று உங்களால் நம்ப முடிகிறதா? ஏன்?

குறிக்கோள்

அலசிப் பாருங்கள்

அறிவியல் சம்பந்தமாக பைபிள் சொல்கிற விவரங்கள் தவறா?

“அறிவியலோடு பைபிள் ஒத்துப்போகிறதா?” (ஆன்லைன் கட்டுரை)

‘கடைசி நாட்களை’ பற்றி பைபிள் சொல்லும் உண்மைகள் என்ன?

“இன்று நிறைவேறிவரும் 6 பைபிள் தீர்க்கதரிசனங்கள்” (ஆன்லைன் கட்டுரை)

கிரேக்க சாம்ராஜ்யத்தைப் பற்றி பைபிள் சொன்ன தீர்க்கதரிசனங்கள் எப்படி அப்படியே நடந்தன என்று பாருங்கள்.

“தீர்க்கதரிசன வார்த்தைகள்” நம்மைப் பலப்படுத்துகின்றன (5:22)

பைபிள் தீர்க்கதரிசனங்களைப் பற்றித் தெரிந்துகொண்ட பிறகு ஒருவர் எப்படி பைபிளை நம்ப ஆரம்பித்தார் என்று பாருங்கள்.

“கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதை நான் நம்பவில்லை” (காவற்கோபுரம் எண் 5 2017)

^ எதிர்காலத்தைப் பற்றி முன்கூட்டியே கடவுள் சொல்கிற செய்திதான் தீர்க்கதரிசனம்.