அட்டைப்படக் கட்டுரை | பைபிளை நன்றாகப் புரிந்துகொள்வது எப்படி?
பைபிளை ஏன் படிக்க வேண்டும்?
“பைபிள புரிஞ்சிக்கிறது ரொம்ப கஷ்டம்னு நினைச்சேன்.”—ஜூவி
“பைபிள படிக்கிறது சுவாரஸ்யமா இருக்காதுனு நினைச்சேன்.”—குவீனீ
“பைபிள் ரொம்ப பெருசா இருக்குறதுனால, அத படிக்கணுங்குற ஆசையே வரல.”—எசெக்யேல்
இவர்களைப் போலவே நீங்களும் எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா? அதனால், பைபிளை வாசிக்காமல் இருந்திருக்கிறீர்களா? பைபிளை படிப்பது ரொம்ப கஷ்டம் என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். ஆனால், பைபிளை படித்தால் சந்தோஷமாகவும் திருப்தியாகவும் வாழ முடியும். பைபிளை சுவாரஸ்யமாக படிக்க முடியும். பைபிளை படிப்பதால் நிறைய நன்மைகளும் கிடைக்கும்.
பைபிளை வாசித்ததால், நன்மை அடைந்த சிலர் சொல்வதைப் பாருங்கள்:
சுமார் 20 வயதுள்ள எசெக்யேல் இப்படிச் சொல்கிறார்: “முன்னாடில்லாம், என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமே இல்லனு நினைச்சேன். எங்க போறோம்னு தெரியாம வண்டி ஓட்ற ஒருத்தர மாதிரி இருந்தேன். ஆனா, பைபிள படிச்சதுக்கு அப்புறம் குறிக்கோளோட வாழ ஆரம்பிச்சேன். என் வாழ்க்கைக்கு தேவையான நிறைய நல்ல விஷயங்கள அதுலயிருந்து படிச்சு தெரிஞ்சிக்கிட்டேன்.”
சுமார் 25 வயதுள்ள ஃப்ரீடா இப்படிச் சொல்கிறார்: “முன்னாடில்லாம் எனக்கு ரொம்ப கோவம் வரும். ஆனா, பைபிள் படிக்குறதுனால என் கோவத்த கட்டுப்படுத்த முடியுது. இப்போ எல்லார்கிட்டயும் நல்லா பழகுறேன். அதனால, எனக்கு நிறைய ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க.”
சுமார் 55 வயதுள்ள யூனிஸ் இப்படிச் சொல்கிறார்: “பைபிள படிக்குறதுனால என்கிட்ட இருக்கிற சில கெட்ட குணங்கள மாத்திக்கிட்டு, ஒரு நல்ல நபரா இருக்க முடியுது.”
இவர்களைப் போலவே லட்சக்கணக்கான மக்களும் உணருகிறார்கள். பைபிளை படித்தால் நீங்களும் சந்தோஷமாக வாழ முடியும். (ஏசாயா 48:17, 18) அதோடு (1) நல்ல தீர்மானங்களை எடுக்க, (2) நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுக்க, (3) கவலைகளைச் சமாளிக்க, (4) முக்கியமாக, கடவுளைப் பற்றிய உண்மைகளைத் தெரிந்துகொள்ள பைபிள் உங்களுக்கு உதவும். கடவுள் சொன்ன விஷயங்கள்தான் பைபிளில் இருக்கின்றன. அதன்படி நடந்தால், நீங்கள் கெட்ட வழியில் போக மாட்டீர்கள். ஏனென்றால், கடவுள் தவறான அறிவுரைகளை ஒருபோதும் கொடுக்கமாட்டார்.
பைபிளை படிக்க ஆரம்பிப்பதற்கு முன்பு சில விஷயங்களைச் செய்ய வேண்டும். அதைச் செய்வது ரொம்ப சுலபம். அப்படிச் செய்தால் பைபிளை உங்களால் சுவாரஸ்யமாக படிக்க முடியும்.