பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது
நான் துப்பாக்கி இல்லாம எங்கேயுமே போனதில்லை
பிறந்த வருடம்: 1958
சொந்த நாடு: இத்தாலி
முன்பு: பயங்கரமான ரவுடி கும்பலை சேர்ந்தவர்
என் கடந்த காலம்:
ரோம் நகரின் புறநகர் பகுதியில நான் பிறந்து வளர்ந்தேன். கஷ்டப்பட்டு வேலை செய்யுற ஏழை ஜனங்கதான் அங்க வாழ்ந்து வந்தாங்க. அங்க வாழ்க்கைய ஓட்டுறது ரொம்பவே கஷ்டமா இருந்தது. என்னை பெத்த தாய நான் பார்த்ததேயில்லை. அதோட, அப்பாவுக்கும் எனக்கும் ஒத்தே போகாது. நான் இருந்த இடத்துல போக்கிரிகளும் ரவுடிகளும்தான் இருந்தாங்க. அந்த மாதிரி ஆட்களோட எப்படி வாழ்றதுன்னு நான் கத்துக்கிட்டேன்.
பத்து வயசு ஆகிறதுக்குள்ளேயே நான் திருட ஆரம்பிச்சிட்டேன். எனக்கு 12 வயசு இருக்கும்போது முதல் முறையா வீட்டை விட்டு ஓடி போனேன். நிறைய சமயம் என்னை போலீஸ் ஸ்டேஷன்லயிருந்து என் அப்பாதான் வீட்டுக்கு கூட்டிட்டு வருவாரு. எல்லார்கிட்டேயும் எப்போவும் எரிஞ்சி விழுவேன், சண்டை போடுவேன். எனக்கு எதுவுமே பிடிக்காம போயிடுச்சு, அதனால இந்த உலகத்தையே வெறுத்தேன். 14 வயசு இருக்கும்போது நான் ஒரேடியாக வீட்டை விட்டு ஓடி வந்துட்டேன். போதைமருந்து எடுக்க ஆரம்பிச்சேன். தங்க இடமில்லாம தெருவில இருந்தேன். இராத்திரியில ஏதாவது கார் கதவை உடைச்சு அதுல படுத்துக்குவேன். காலையில தண்ணீ எங்கயிருக்கும்னு பார்த்து அங்க போய் குளிப்பேன்.
போகப் போக திருடுறதுல நான் கில்லாடி ஆயிட்டேன். பையை பிடுங்கிட்டு ஓடுறதுல இருந்து ராத்திரியில வீட்டுக் கதவை உடைச்சு திருடுறதுவரை எல்லாம் எனக்கு கைவந்தகலை. நான் ஒரு மோசமான ஆளுன்னு அங்க இருந்த எல்லாருக்கும் தெரியும். ஒரு பயங்கரமான ரவுடி கும்பல், அவங்களோட வந்து சேர்ந்துக்க சொல்லி என்னை கூப்பிட்டாங்க. நான் அவங்களோட சேர்ந்த பிறகு பேங்க்-லயும் திருட ஆரம்பிச்சேன். நான் முரடனா இருந்ததுனால அந்த ரவுடி கும்பல்ல இருந்தவங்க எனக்கு தனி மரியாதை கொடுத்தாங்க. நான் துப்பாக்கி இல்லாம எங்கேயுமே போனதில்லை, தூங்கும்போதுகூட தலைகாணிகீழ தூப்பாக்கி வைச்சிருப்பேன். அடிதடி, போதைமருந்து, திருட்டு, கெட்ட பேச்சு, ஒழுக்கங்கெட்ட வாழ்க்கை இதெல்லாம் எனக்கு சர்வசாதாரணமா ஆயிடுச்சு. நான் எப்போ சிக்குவேன்னு போலீஸ் பார்த்துட்டு இருந்தாங்க. பல வருஷமா, ஜெயிலுக்கு போறதும் வர்றதுமே எனக்கு வழக்கமா இருந்தது.
பைபிள் என்னை மாற்றிய விதம்:
ஒருசமயம் நான் ஜெயில்ல இருந்து விடுதலையானப்போ என் சித்தி வீட்டுக்கு போயிருந்தேன். அவங்களும் அவங்களோட இரண்டு பிள்ளைகளும் யெகோவாவின் சாட்சியா மாறியிருந்தாங்க. அவங்களோட கிறிஸ்தவ கூட்டத்துக்கு வர சொல்லி என்னை கூப்பிட்டாங்க. அங்க என்னதான் சொல்றாங்கன்னு பார்க்க நான் அவங்களோட போனேன். வரவங்க போறவங்க மேல ஒரு கண்ணு வைக்குறதுக்காக நான் கதவுகிட்டேயே உட்கார்ந்துகிறேன்னு சொன்னேன். அப்போ என்கிட்ட துப்பாக்கிக்கூட இருந்தது!
ஆனா, அங்க போனது என் வாழ்க்கையையே மாத்திடுச்சு. நான் இந்த உலகத்துலதான் இருக்கேனான்னு யோசிச்சேன். எல்லாரும் அன்பா, சிரிச்ச முகத்தோட வந்து என்கிட்ட பேசுனாங்க. அங்க எல்லாரும் கனிவா நடந்துகிட்டதும் உண்மையா பாசம் காட்டுனதும் இன்னும் என் கண்ணுக்குள்ளயே இருக்கு. நான் இருந்த சூழ்நிலைக்கும் இதுக்கும் எவ்வளவு பெரிய வித்தியாசம்!
நான் சாட்சிகளோட சேர்ந்து பைபிள் படிக்க ஆரம்பிச்சேன். அதிகமா படிக்க படிக்க நான் நிறைய மாற்றம் செய்யணும்னு புரிஞ்சிக்கிட்டேன். “ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்”-ன்னு நீதிமொழிகள் 13:20-ல இருக்கிற வசனம் என் மனச தொட்டது. நான் அந்த ரவுடி கும்பல்ல இருந்து விலகுறதுதான் சரின்னு நல்லா புரிஞ்சிக்கிட்டேன். அந்த கும்பல்ல இருந்து விலகுறது கஷ்டமாதான் இருந்தது, ஆனா யெகோவாவின் உதவியோட என்னால அதை செய்ய முடிஞ்சுது.
முதல் முறையா என்னாலயே என்னை கட்டுப்படுத்த முடிஞ்சுது
நான் இன்னும் நிறைய மாற்றம் செஞ்சேன். ரொம்ப கஷ்டப்பட்டு சிகரெட்டையும் போதைமருந்தையும் விட்டேன், என்னுடைய நீளமான முடிய வெட்டுனேன், காதுல போட்டுகிட்டு இருந்த கடுக்கனை எடுத்தேன், கெட்ட பேச்சு பேசுறத நிறுத்துனேன். முதல் முறையா என்னாலயே என்னை கட்டுப்படுத்த முடிஞ்சுது!
சாதாரணமாவே எனக்கு புத்தகம் படிக்கிற பழக்கம் இல்லை, அது எனக்கு பிடிக்கவும் பிடிக்காது. பைபிள கவனமா படிக்கிறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தாலும், அதுக்காக நான் விடாம முயற்சி செஞ்சேன். அதனால, யெகோவா மேல எனக்கிருந்த அன்பு அதிகமானது. என் மனசாட்சியும் குத்த ஆரம்பிச்சுது. நான் செஞ்ச தப்பயெல்லாம் யெகோவா மன்னிக்கவே மாட்டார்ன்னு தோனும். அந்த சமயத்துல எல்லாம், தாவீது பத்தி பைபிள்ல படிச்சது எனக்கு ரொம்ப ஆறுதலா இருந்தது. அவரு ரொம்ப மோசமான பாவம் செஞ்சு இருந்தாலும் யெகோவா அவர தாராளமா மன்னிச்சாரு.—2 சாமுவேல் 11:1–12:13.
வீடு வீடா போய் பைபிளைப் பத்தி பேசுறதும் எனக்கு இன்னொரு சவாலா இருந்தது. (மத்தேயு 28:19, 20) ரவுடியா இருக்கும்போது நான் நிறைய பேர்கிட்ட திருடியிருக்கேன், நிறைய பேரோட சண்டைபோட்டு இருக்கேன்; அவங்கள யாரையாவது மறுபடியும் பார்த்திடுவேனோன்னு எனக்கு பயமா இருந்தது! ஆனா, போகப் போக அந்த பயமும் காணாம போயிடுச்சு. எல்லாரையும் அளவுக்கதிகமா மன்னிக்கும் நம் அன்பான யெகோவா அப்பாவ பத்தி மத்தவங்ககிட்ட பேசுறது எனக்கு ரொம்ப சந்தோஷமாவும் திருப்தியாவும் இருந்தது.
நான் பெற்ற பலன்கள்:
யெகோவாவ பத்தி தெரிஞ்சுகிட்டதுதான் நான் உயிரோட இருக்குறதுக்கு காரணம்! ரவுடி கும்பல்ல இருந்த என்னோட பழைய நண்பர்கள்ல நிறைய பேர் செத்துட்டாங்க, சிலர் ஜெயில்ல இருக்காங்க. ஆனா நான், மன நிம்மதியோடு வாழ்றேன். சந்தோஷமான எதிர்காலம் வரப்போகுதுன்ற நம்பிக்கையோடும் இருக்கேன். மனத்தாழ்மையா இருக்குறதுக்கும், மத்தவங்ககிட்ட அடங்கிப்போறதுக்கும், கோபத்த கட்டுப்படுத்துறதுக்கும் நான் இப்போ கத்துக்கிட்டேன். அதனால இப்ப எல்லார்கிட்டயும், என்னால நல்லா பழக முடியுது. கார்மென் என்ற அழகான பெண்ணை நான் கல்யாணம் செய்தேன். நாங்க ரெண்டு பேரும் இப்போ சந்தோஷமா இருக்கோம். பைபிள பத்தி மத்தவங்களுக்கு சொல்லிக்கொடுக்குறோம்!
இப்பெல்லாம், நான் நேர்மையா வேலை செய்றேன். வேலை விஷயமா நான் சில சமயம் பேங்க்-க்கு போக வேண்டியிருக்கும். திருடுறதுக்கு இல்லை, அதை சுத்தம் செய்றதுக்கு! ▪ (w14-E 07/01)