பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது
“நான் மூர்க்கமானவனாக இருந்தேன்”
-
பிறந்த வருடம்: 1960
-
சொந்த நாடு: பின்லாந்து
-
முன்பு: ஹெவி-மெட்டல் இசைக் கலைஞர்
என் கடந்த காலம்:
நான் பிறந்து வளர்ந்தது டுர்கு என்ற துறைமுக நகரிலிருந்த ஓர் ஏழ்மையான பகுதியில். என்னுடைய அப்பா குத்துச் சண்டை வீரர். அப்பாவுக்குத் தப்பாத பிள்ளைகளாக நானும் என் தம்பியும் குத்துச் சண்டையில் ஆர்வமாக ஈடுபட்டோம். பள்ளியில் ஏதாவது சண்டை என்றால் நான்தான் முதல் ஆளாக வரிந்து கட்டிக்கொண்டு நிற்பேன். நான் டீனேஜ் பருவத்தைத் தொட்டபோது ஒரு ரவுடி கும்பலோடு சேர்ந்தேன், அடிதடியில் தீவிரமாக இறங்கினேன். ஹெவி-மெட்டல் என்ற ஒருவகை இசையைக் கற்றுக்கொண்டேன். ராக் இசை நட்சத்திரமாக ஜொலிப்பதே என் கனவாக இருந்தது.
நான் சில டிரம்ஸ் இசைக் கருவிகளை வாங்கினேன், இசைக் குழு ஒன்றைத் தொடங்கினேன். சீக்கிரத்திலேயே அதில் முன்னணிப் பாடகன் ஆனேன். மேடையில் வெறித்தனமாக ஆடிப் பாடினேன். இசை நிகழ்ச்சிகளில் எங்கள் இசைக் குழு முரட்டுத்தனமாகவும், பார்ப்பதற்கு விசித்திரமாகவும் இருந்ததால் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தோம். பெரிய பெரிய மேடைகளிலும் நிகழ்ச்சி நடத்த வாய்ப்பு கிடைத்தது. நாங்கள் சில பாடல்களைப் பதிவு செய்தோம். அதில் கடைசியாகப் பதிவு செய்தது நல்ல வரவேற்பைப் பெற்றது. 1980-களின் முடிவில் எங்கள் இசைக் குழுவின் வளர்ச்சிக்காக அமெரிக்காவுக்குப் பயணித்தோம். நியு யார்க்கிலும் லாஸ் ஏஞ்சல்ஸிலும் சில நிகழ்ச்சிகளை நடத்தினோம். பின்லாந்துக்குத் திரும்புவதற்குமுன் சில இசைத் துறை வல்லுநர்களோடு நட்புறவை ஏற்படுத்திக்கொண்டோம்.
இந்த இசைக் குழுவில் இருந்தது எனக்குச் சந்தோஷத்தைத் தந்தாலும் ஆழ்மனதில் ஒருவித வெறுமையே படர்ந்திருந்தது. போட்டி பொறாமை நிறைந்த இசை உலகை நான் வெறுத்தேன். அர்த்தமில்லாத என் வாழ்க்கையை நினைத்து விரக்தி அடைந்தேன். நான் ரொம்ப மோசமானவன் என்று என் மனம் சொல்லியதால் எனக்கு நரகம்தான் மிஞ்சும் என்று பயந்தேன். என் கேள்விகளுக்குப் பதில் கண்டுபிடிக்க நான் தேடாத ஆன்மீகப் புத்தகங்களே இல்லை. கடவுள் என்னை ஏற்றுக்கொள்ளவே மாட்டார் என்று தோன்றினாலும் எனக்கு உதவும்படி அவரிடம் கெஞ்சினேன்.
பைபிள் என்னை மாற்றிய விதம்:
வயிற்றுப் பிழைப்புக்காக உள்ளூர் அஞ்சல் அலுவலகத்தில் வேலை செய்தேன். என்னோடு வேலை பார்த்த ஒருவர் யெகோவாவின் சாட்சி என்று ஒருநாள் எனக்குத் தெரிய வந்தது. அவரிடம் கேள்விக்குமேல் கேள்வி கேட்டேன். பைபிளிலிருந்து அவர் கொடுத்த நியாயமான பதில்கள் என் ஆர்வத்தைத் தூண்டின. அவரோடு பைபிள் படிக்க ஒத்துக்கொண்டேன். இப்படிச் சில வாரங்களாக நான் படித்துக்கொண்டிருந்தபோது, எங்கள் இசைக் குழுவிற்கு ஒரு பெரிய ஒப்பந்தம் கிடைத்தது—பாடல் பதிவு செய்வதற்கு! அமெரிக்காவில் ஆல்பமாக வெளியிடுவதற்கான வாய்ப்பும்
இருந்தது. இது என் வாழ்க்கையில் கிடைத்த ஒரு பொன்னான வாய்ப்பாகக் கருதினேன்.எனக்கு பைபிளைக் கற்றுக்கொடுத்த யெகோவாவின் சாட்சியிடம் நான், “இந்த ஒரேயொரு ஆல்பம்தான், அதுக்கப்புறம் பைபிள் சொல்றபடியெல்லாம் நிச்சயமா செய்றேன்” என்று சொன்னேன். அப்போது அவர் தன்னுடைய கருத்தைச் சொல்லாமல், மத்தேயு 6:24-ஐ மட்டும் வாசிக்கச் சொன்னார். “ஒருவனாலும் இரண்டு எஜமான்களுக்கு அடிமையாக இருக்க முடியாது” என்று அதில் இருந்தது. இயேசுவின் வார்த்தைகளை வாசித்தபோது வாயடைத்துப் போனேன். சில நாட்கள் கழித்து, எனக்கு பைபிள் படிப்பு நடத்தியவரும் வாயடைத்துப் போனார். ஏன் தெரியுமா? இயேசுவைப் பின்பற்ற விரும்பிய நான் இசைக் குழுவை விட்டுவிட்டேன் என்று சொன்னதால்!
பைபிள் ஒரு கண்ணாடியைப் போல் என் குறைகளைப் பளிச்செனக் காட்டியது. (யாக்கோபு 1:22-25) நான் மூர்க்கமானவனாக இருந்தேன் என்பதை என்னால் உணர முடிந்தது. ஆம், எனக்குள் பெருமையும் லட்சிய வெறியும் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது. வாயைத் திறந்தால் கெட்ட வார்த்தைதான் வந்தது, எதற்கெடுத்தாலும் சண்டை போட்டேன், வெறிக்க வெறிக்கக் குடித்தேன், புகை பிடித்தேன். எந்தளவு பைபிள் நெறிகளுக்கு விரோதமாக நடந்துவந்தேன் என்பதை உணர்ந்தபோது என்மீதே எனக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது. என்றாலும், என்னை மாற்றிக்கொள்ள நான் தயாராக இருந்தேன்.—எபேசியர் 4:22-24.
“நம்முடைய பரலோக அப்பா உண்மையிலேயே இரக்கமுள்ளவர், மனந்திரும்புகிறவர்களின் மனக்காயங்களை ஆற்றுகிறவர்”
நான் செய்த குற்றங்களை நினைத்து ஆரம்பத்தில் ரொம்பவே துவண்டுபோனேன். ஆனால், எனக்கு பைபிளைக் கற்றுக்கொடுத்த யெகோவாவின் சாட்சி பேருதவியாக இருந்தார். அவர் எனக்கு ஏசாயா 1:18-ஐ காட்டினார். அது சொல்கிறது: “உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப் போல் வெண்மையாகும்.” நம்முடைய பரலோக அப்பா உண்மையிலேயே இரக்கமுள்ளவர், மனந்திரும்புகிறவர்களின் மனக்காயங்களை ஆற்றுகிறவர் என்பதை இந்த வசனமும் மற்ற வசனங்களும் எனக்குத் தெளிவாகக் காட்டின.
யெகோவாவைப் பற்றி நன்கு தெரிந்துகொண்டு அவரை நேசிக்க ஆரம்பித்தேன், என் வாழ்க்கையை அவருக்கு அர்ப்பணிக்க ஆசைப்பட்டேன். (சங்கீதம் 40:8) எனவே, ரஷ்யாவிலுள்ள செ. பீட்டர்ஸ்பர்க்கில் 1992-ல் நடைபெற்ற யெகோவாவின் சாட்சிகளுடைய சர்வதேச மாநாட்டில் ஞானஸ்நானம் எடுத்தேன்.
நான் பெற்ற பலன்கள்:
யெகோவாவின் சாட்சிகளில் எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். அவ்வப்போது நாங்கள் ஒன்று சேர்ந்து தரமான பாடல்களைப் பாடி மகிழ்கிறோம். கடவுள் கொடுத்த பரிசான இசையைச் சந்தோஷமாக அனுபவிக்கிறோம். (யாக்கோபு 1:17) என் ஆருயிர் மனைவி கிரிஸ்டீனாவும் எனக்குக் கிடைத்த ஒரு பெரிய பரிசு. என் சுக துக்கங்களுக்கு அவள்தான் வடிகால். என் மனதில் உள்ளதையெல்லாம் அவளிடம் கொட்டிவிடுவேன்.
நான் ஒரு யெகோவாவின் சாட்சியாய் ஆகியிருக்காவிட்டால் இந்நேரம் உயிரோடு இருந்திருப்பேனா என்பதுகூட சந்தேகம்தான். முன்பு என் வாழ்க்கை குழம்பிய குட்டை போல் இருந்தது, இப்போதோ தெளிந்த நீரோடை போல் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆம், வாழ்க்கைக்கு உண்மையான அர்த்தம் கிடைத்திருக்கிறது. ▪ (w13-E 04/01)