Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அட்டைப்பட கட்டுரை

கடவுள் கொடூரமானவர் என்று ஏன் சிலர் சொல்கிறார்கள்?

கடவுள் கொடூரமானவர் என்று ஏன் சிலர் சொல்கிறார்கள்?

இந்தப் பத்திரிகையின் அட்டையிலுள்ள கேள்வியைப் பார்த்து நீங்கள் அதிர்ச்சி அடைந்தீர்களா? சிலர் அதிர்ச்சி அடைகிறார்கள், பலர் யோசிக்கிறார்கள், அல்லது அப்படித்தான் என்று நினைக்கிறார்கள். ஏன்?

இயற்கைப் பேரழிவுகளில் பாதிக்கப்பட்ட சிலர், “இதையெல்லாம் கடவுள் ஏன் அனுமதிக்கிறார்? அவருக்கு அக்கறை இல்லையா? அவர் கொடூரமானவரா?” என்று கேட்கிறார்கள்.

பைபிளை வாசிக்கிற சிலரும் அவ்வாறே கேட்கிறார்கள். உதாரணத்திற்கு, நோவா காலத்தில் வந்த பெரிய வெள்ளத்தைப் பற்றி வாசிக்கும்போது, ‘அன்பான ஒரு கடவுள் ஏன் உலக ஜனங்களையெல்லாம் அழித்துப்போட்டார்? அவர் அவ்வளவு கொடூரமானவரா?’ என்று யோசிக்கிறார்கள்.

இதுபோன்ற கேள்விகள் உங்கள் மனதில் வந்திருக்கிறதா? அல்லது இதுபோன்ற கேள்விகளைக் கேட்பவர்களுக்குப் பதில் சொல்ல முடியாமல் திணறியிருக்கிறீர்களா? எதுவாக இருந்தாலும் சரி, அதற்கான பதிலைப் பெற இப்போது ஒரு கேள்வியைச் சிந்திக்கலாம்.

கொடூர குணத்தை நாம் ஏன் வெறுக்கிறோம்?

எளிய வார்த்தைகளில் சொன்னால், நல்லது கெட்டதைப் பகுத்துணரும் திறன் நமக்கு இருப்பதால்தான் கொடூர குணத்தை நாம் வெறுக்கிறோம். இந்த விஷயத்தில் மிருகங்களிலிருந்து நாம் பெரிதும் வேறுபடுகிறோம். நம் படைப்பாளர் ‘தம்முடைய சாயலில்’ நம்மைப் படைத்திருக்கிறார். (ஆதியாகமம் 1:27) இதற்கு என்ன அர்த்தம்? தம்முடைய குணங்களையும், நெறிமுறைகளையும், நல்லது கெட்டதைப் பகுத்துணருகிற திறனையும் அவர் நமக்குக் கொடுத்திருக்கிறார் என்று அர்த்தம். இதைச் சிந்தித்துப் பாருங்கள்: நல்லது கெட்டதைப் பகுத்துணரும் திறனைக் கடவுள் நமக்குத் தந்திருப்பதால்தான் கொடூர குணத்தை நாம் வெறுக்கிறோம். அப்படியானால், இந்தத் திறனைக் கொடுத்த கடவுள் அதை இன்னும் எந்தளவுக்கு வெறுப்பார்!

இந்தக் கருத்தை பைபிளும் உறுதிப்படுத்துகிறது; “உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது” என்று கடவுள் சொல்கிறார். (ஏசாயா 55:9) கடவுள் கொடூரமானவர் என்று நாம் நினைத்தால், அது பைபிளின் கருத்துக்கு நேர்மாறானதாய் இருக்கும். நம்முடைய வழிகள் அவருடைய வழிகளைவிட உயர்ந்தது எனச் சொல்வதுபோல் ஆகிவிடும். எனவே, அப்படியொரு முடிவுக்கு வரும்முன் நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்வது ஞானமானதாக இருக்கும். கடவுள் கொடூரமானவரா எனக் கேட்பதற்குப் பதிலாக, அவருடைய சில செயல்கள் ஏன் கொடூரமானதுபோல் தெரிகிறது என்று நாம் கேட்க வேண்டும். பதிலைத் தெரிந்துகொள்ள, “கொடூரம்” என்ற வார்த்தை உண்மையிலேயே எதை அர்த்தப்படுத்துகிறது என நாம் பார்க்க வேண்டும்.

ஒருவரைக் கொடூரக்காரர் என்று சொல்லும்போது, அவருடைய உள்நோக்கத்தை நாம் சந்தேகிக்கிறோம். பொதுவாக, பிறர் துன்பப்படுவதைப் பார்த்து ரசிக்கிறவர் அல்லது பிறர் வேதனையில் தவிப்பதைக் கண்டும்காணாமலும் இருப்பவர்தான் கொடூரக்காரர். உதாரணத்திற்கு, தன் மகன் புண்படுவதைப் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அவனைக் கண்டிக்கிற தகப்பன் கொடூரக்காரர். ஆனால், தன் மகன் திருந்தி, நல்வழியில் நடக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அவனைக் கண்டிக்கிற தகப்பன் நல்லவர், கொடூரர் அல்ல. என்றாலும், ஒருவருடைய உள்நோக்கம் பெரும்பாலும் தவறாகவே புரிந்துகொள்ளப்படுகிறது; உங்களை யாராவது தவறாகப் புரிந்திருந்தால் அந்த உண்மை உங்களுக்கே நன்றாகத் தெரிந்திருக்கும்.

கடவுள் கொடூரமானவர் எனச் சிலர் நினைப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, இயற்கைப் பேரழிவுகள். மற்றொன்று, கடவுளுடைய தண்டனைத் தீர்ப்புகளைப் பற்றிய பைபிள் பதிவுகள். கடவுள் கொடூரமானவர் என்றா அவை காட்டுகின்றன? பதிலை இப்போது சிந்திக்கலாம். (w13-E 05/01)