கடவுளிடம் நெருங்கி வாருங்கள்
“நான், உன் கடவுளாகிய யெகோவா, உன் வலதுகையை உறுதியாகப் பிடித்திருக்கிறேன்”
ஒ ரு சிறு பையனும் அப்பாவும் சாலையைக் கடக்கப் போகிறார்கள். “என் கையை கெட்டியா பிடிச்சுக்கோ” என்று அப்பா சொல்கிறார். தன் பிஞ்சுக் கைகளால் அப்பாவின் உறுதியான கைகளைப் பிடித்துக்கொண்டு நடக்கும்போது அவனுக்குப் பயமெல்லாம் பறந்துவிடும், பாதுகாப்பாக உணருவான். இதேபோல், கஷ்டம் நிறைந்த வாழ்க்கைப் பாதையில் யாராவது உங்கள் கையைப் பிடித்து பத்திரமாக வழிநடத்திச் சென்றால் எப்படி இருக்கும்? பைபிளில் ஏசாயா தீர்க்கதரிசி எழுதி வைத்திருக்கும் வார்த்தைகளைப் படித்தால் உங்களுக்கு நிச்சயம் ஆறுதலாக இருக்கும்.—ஏசாயா 41:10, 13-ஐ வாசியுங்கள்.
ஏசாயா அந்த வார்த்தைகளை இஸ்ரவேல் மக்களுக்காக எழுதினார். இஸ்ரவேலர்கள் யெகோவாவின் ‘சொந்த சம்பத்தாக,’ அதாவது விசேஷ சொத்தாக, இருந்தார்கள். ஆனால், அவர்களைச் சுற்றியும் எதிரிகள் வாழ்ந்து வந்தார்கள். (யாத்திராகமம் 19:5) இதை நினைத்து அவர்கள் பயப்பட வேண்டுமா? ஏசாயா மூலம் அவர்களுக்கு யெகோவா நம்பிக்கை அளித்தார். அந்த வசனங்களை நாம் படிக்கும்போது, இன்று யெகோவாவை வழிபடுவோருக்கும் இது பொருந்தும் என்பதை மனதில் வையுங்கள்.—ரோமர் 15:4.
“நீ பயப்படாதே” என்று யெகோவா சொல்கிறார். (வசனம் 10) அதோடு விட்டுவிடாமல், அதற்கான காரணத்தையும் சொல்கிறார்; “நான் உன்னுடனே இருக்கிறேன்” என்று சொல்கிறார். அவர் தூரத்தில் இருந்துகொண்டு ஆபத்து வரும்போது மட்டும் வந்து உதவி செய்வதாகச் சொல்லவில்லை. எப்போதும் கூடவே இருந்து, எந்த நேரத்திலும் தம் ஜனங்களுக்கு உதவி செய்யத் தயாராய் இருப்பதாகச் சொல்கிறார். இதைக் கேட்கும்போதே மனதுக்கு எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது!
“திகையாதே” என்றும் யெகோவா தம் மக்களுக்கு வாக்குக் கொடுக்கிறார். (வசனம் 10) இந்த வார்த்தைக்கு எபிரெய மொழியில் பயன்படுத்தப்பட்ட வினைச்சொல் “ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என்ற பயத்தில் சுற்றும் முற்றும் பார்ப்பதை” குறிக்கிறது. தம்முடைய ஜனங்கள் அப்படிப் பார்க்க வேண்டியதில்லை என்று யெகோவா ஏன் சொல்கிறார்? ஏனென்றால், “நான் உன் தேவன்” என்று அவர் உறுதியளிக்கிறார். எந்தளவுக்கு நம்பிக்கையூட்டும் வார்த்தைகள் இவை! யெகோவா ‘உன்னதமானவர், சர்வவல்லவர்.’ (சங்கீதம் 91:1) சர்வ சக்தி படைத்த யெகோவா அவர்களுடைய கடவுளாக இருக்கும்போது அவர்கள் எதை நினைத்தாவது பயப்பட வேண்டுமா?
நம்பிக்கையளிக்கும் இன்னொரு வாக்கையும் யெகோவா தம் மக்களுக்குக் கொடுக்கிறார். “நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்,” அதாவது, உறுதியாகப் பிடித்துக்கொள்வேன். (வசனம் 10) அதோடு, “நான், உன் கடவுளாகிய யெகோவா, உன் வலதுகையை உறுதியாகப் பிடித்திருக்கிறேன்” என்றும் சொல்கிறார். (வசனம் 13, NW ) இதைக் கேட்கும்போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது? ஒரு புத்தகம் சொல்கிறது: “இந்த இரண்டு வசனங்களையும் சேர்த்துப் படிக்கும்போது, ஒரு அப்பாவும் மகனும் கண்முன் வருகிறார்கள். அப்பா தன் மகனுக்கு வெறுமனே துணையாக நிற்கவில்லை. மகனைவிட்டு கொஞ்சம்கூட பிரியாமல், கூடவே இருக்கிறார். தன்னிடமிருந்து மகனைப் பிரிக்க யாரையும் விடமாட்டார்.” அதேபோல, யெகோவாவும் தம்முடைய மக்களைவிட்டுப் பிரிய மாட்டார், யாரையும் பிரிக்கவிட மாட்டார். வாழ்க்கையில் மிக கஷ்டமான தருணங்களிலும் கூடவே இருப்பார்.—எபிரெயர் 13:5, 6.
ஏசாயா எழுதி வைத்த இந்த வசனங்கள் இன்று யெகோவாவை வழிபடுகிறவர்களுக்கு ஆறுதலின் ஊற்றாக இருக்கின்றன. ‘சமாளிப்பதற்குக் கடினமான கொடிய காலங்களில்’ நாம் வாழ்வதால் சில நேரங்களில் துன்பப் புயலில் சிக்கித் தவிக்கலாம். (2 தீமோத்தேயு 3:1) ஆனால், யெகோவா நம்மை அம்போவென விட்டுவிடுவதில்லை. “ஓடிவந்து” நம்முடைய கையை இறுகப் பிடித்துக்கொள்ள தயாராயிருக்கிறார். அப்பாவை முழுவதுமாக நம்பும் பிள்ளையைப் போல, நாமும் யெகோவாவின் உறுதியான கையைப் பிடித்துக்கொண்டு, நம்பிக்கையோடு நடக்கலாம். நம்மைச் சரியான பாதையில் வழிநடத்தி, தக்க சமயத்தில் உதவுவார் என்பதில் சந்தேகமே வேண்டாம்.—சங்கீதம் 63:7, 8. (w12-E 01/01)