Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அர்மகெதோன் யுத்தம் எப்போது வரும்?

அர்மகெதோன் யுத்தம் எப்போது வரும்?

அர்மகெதோன் யுத்தம் எப்போது வரும்?

“எந்த மனிதனும் எண்ண முடியாதளவுக்குத் திரள் கூட்டமான மக்கள் . . . நிற்பதைப் பார்த்தேன்; அவர்கள் எல்லாத் தேசங்களையும் கோத்திரங்களையும் இனங்களையும் மொழிகளையும் சேர்ந்தவர்கள்; . . . இவர்கள் மிகுந்த உபத்திரவத்தில் தப்பிப்பிழைத்தவர்கள்.”—வெளிப்படுத்துதல் 7:9, 14.

அர்மகெதோன் யுத்தம் அரங்கேறும் நேரம் வந்துவிட்டது. எப்படிச் சொல்கிறோம்?

உலகெங்கும் ஒரு தொகுதியான மக்கள் ஏற்கெனவே யெகோவாவை வழிபட்டு வருகிறார்கள், அவர்கள் பைபிளிலுள்ள உயர்ந்த நெறிகளின்படி வாழ்கிறார்கள். வித்தியாசப்பட்ட தேசம், இனம், மொழியைச் சேர்ந்த மக்கள் கடவுளுடைய சக்தியின் உதவியால் கூட்டிச்சேர்க்கப்படுகிறார்கள்; இவர்கள் மத்தியில் சமாதானமும் சகோதர பாசமும் நிலவுகிறது. ஆம், இவர்களே யெகோவாவின் சாட்சிகள்.—யோவான் 13:35.

சீக்கிரத்தில் சாத்தான் தன் கூட்டாளிகளைச் சேர்த்துக்கொண்டு முழுமூச்சோடும் முழுவேகத்தோடும் இந்த மக்களைத் தாக்கப்போகிறான். நிராதரவாக இருப்பதுபோல் தோன்றும் இந்த மக்களை ஒழித்துக்கட்ட பார்ப்பான். (எசேக்கியேல் 38:8-12; வெளிப்படுத்துதல் 16:13, 14, 16) சரி, இதெல்லாம் நடக்கும் என்று எப்படி நம்புவது? அர்மகெதோன் போர் வருவதற்கு முன் என்ன நடக்கும் என்று பைபிள் தெளிவாக விளக்குகிறது. அவற்றில் பெரும்பாலான சம்பவங்கள் ஏற்கெனவே நிறைவேறிவிட்டன.

கண்முன் நிறைவேறும் சம்பவங்கள்

‘இந்தச் சகாப்தத்தின் இறுதிக்கட்டத்தை’ மக்கள் எப்படித் தெரிந்துகொள்ள முடியும் என்று இயேசுவின் சீடர்கள் அவரிடம் கேட்டார்கள். (மத்தேயு 24:3) அதற்கு இயேசு, அந்தச் சமயத்தில் “தேசத்திற்கு விரோதமாகத் தேசமும் அரசாங்கத்திற்கு விரோதமாக அரசாங்கமும் எழும்பும், பஞ்சங்கள் உண்டாகும், அடுத்தடுத்து பல இடங்களில் பூகம்பங்கள் ஏற்படும். இவையெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பமே” என்று சொன்னார். (மத்தேயு 24:7, 8) அந்தக் காலக்கட்டத்தையே ‘கடைசிநாட்கள்’ என்று அப்போஸ்தலன் பவுல் அழைத்தார். அது ‘சமாளிப்பதற்குக் கடினமான கொடிய காலம்’ என்றும் சொன்னார். (2 தீமோத்தேயு 3:1) இவை எல்லாம் நம் காலத்தில் நடப்பதை உங்களால் பார்க்க முடிகிறதா?

இது ஏன் சமாளிப்பதற்கு கடினமான காலம்? அதற்கான பதிலை அப்போஸ்தலன் யோவான் பல வருடங்களுக்கு முன்பே சொல்லிவிட்டார். சாத்தானும் அவனுடைய பேய்களும் பூமிக்குத் தள்ளப்பட்டார்கள். அவர்களுக்கு இன்னும் “கொஞ்சக் காலமே இருக்கிறதென்று” அறிந்திருக்கிறார்கள். அதனால் சாத்தான் “மிகுந்த கோபத்தோடு” இருக்கிறான். (வெளிப்படுத்துதல் 12:7-12) இன்று மக்கள் ஏன் கோபத்தைக் கொப்பளிக்கிறார்கள், வன்முறையைக் கையில் எடுக்கிறார்கள் என்று இப்போது புரிகிறதா?

இந்தக் கொடிய காலக்கட்டத்தில் மிகப் பிரமாண்டமான ஒரு வேலையும் நடைபெறும் என்று இயேசு சொன்னார். “கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய இந்த நற்செய்தி உலகமெங்கும் உள்ள எல்லாத் தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; பின்பு முடிவு வரும்.” (மத்தேயு 24:14) இன்று 235-க்கும் அதிகமான நாடுகளில் 500-க்கும் மேற்பட்ட மொழிகளில் யெகோவாவின் சாட்சிகள் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை அறிவித்துவருகிறார்கள். பைபிள் அடிப்படையில் தயாரிக்கப்படும் காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! என்ற இரண்டு பத்திரிகைகளைப் பிரசுரிக்கிறார்கள். உலகத்திலேயே அதிகமாக விநியோகிக்கப்படும் பிரசுரங்கள் இவைதான். சுமார் 100 மொழிகளில் பைபிளை மொழிபெயர்த்திருக்கிறார்கள். அவர்கள் யாரும் இதைச் சம்பளத்திற்காகச் செய்வதில்லை. இந்த வேலைகள் எல்லாம் முழுக்க முழுக்க நன்கொடையினால் நடைபெறுகின்றன. அப்படியென்றால், இந்தப் பிரமாண்டமான பிரசங்க வேலை இயேசு சொன்ன தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாகத்தானே இருக்கும்?

யெகோவா தேவனுக்கும் அவருடைய எதிரிகளுக்கும் நடக்கப்போகும் போருக்கு முன்பு அடுத்தடுத்து என்னென்ன சம்பவங்கள் நடக்கும் என்று பைபிள் சொல்கிறது. இனி நிறைவேறப்போகும் மூன்று தீர்க்கதரிசனங்களை மட்டும் இப்போது பார்க்கலாம்.

சீக்கிரத்தில் நிறைவேறப்போகும் சம்பவங்கள்

முதல் தீர்க்கதரிசனம். “இதோ! சமாதானம், பாதுகாப்பு!” என்று உலக அரசாங்கங்கள் பெரியளவில் அறிவிப்பார்கள் என பைபிள் சொல்கிறது. உலகை உலுக்கும் பெரிய பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்துவிட்டதுபோல் அவர்கள் நினைத்துக்கொள்வார்கள். ஆனால், அதற்கு பின் நடக்கப்போகும் சம்பவங்கள் எல்லாம் அவர்கள் நினைப்பதற்கு எதிர்மாறாக இருக்கும்.—1 தெசலோனிக்கேயர் 5:1-3.

இரண்டாம் தீர்க்கதரிசனம். அடுத்ததாக, எல்லா அரசாங்கங்களின் பார்வையும் உலகத்திலுள்ள மதங்கள்மீது திரும்பும். அவற்றை ஒழித்துக்கட்ட தீர்மானிக்கும். பைபிளில் இந்த அரசாங்கங்கள் எல்லாம் ஒரு மூர்க்க மிருகத்திற்கு ஒப்பிடப்படுகிறது; உலகத்திலுள்ள பொய் மதங்கள் எல்லாம் ஒரு பெண்ணுக்கு ஒப்பிடப்படுகிறது. இந்தப் பெண் அந்த மூர்க்க மிருகத்தின்மீது சவாரி செய்வதுபோல் சித்தரிக்கப்படுகிறாள். (வெளிப்படுத்துதல் 17:3, 15-18) உண்மை கடவுளைப் பற்றிக் கற்பிப்பதாக உரிமை பாராட்டும் பொய் மதங்களை இந்த மூர்க்க மிருகம் சின்னாபின்னமாக்கும். இப்படித் தன்னை அறியாமலேயே கடவுளுடைய விருப்பத்தை நிறைவேற்றும்.

இந்தச் சம்பவத்தை அப்போஸ்தலன் யோவான் இப்படித் தத்ரூபமாக விவரிக்கிறார்: “நீ பார்த்த பத்துக் கொம்புகளும் மூர்க்க மிருகமும், அந்த விலைமகள்மீது வெறுப்படைந்து அவளிடமிருந்து அனைத்தையும் பறித்துவிட்டு அவளை நிர்வாணமாக்கிவிடும்; பின்பு, அவளுடைய சதையைத் தின்று, அவளை நெருப்பினால் முழுவதுமாகச் சுட்டெரித்துவிடும். கடவுள் தமது எண்ணத்தை அவர்களுடைய இருதயங்களில் வைத்தார்.”—வெளிப்படுத்துதல் 17:16, 17.

மூன்றாம் தீர்க்கதரிசனம். பொய் மதங்களை எல்லாம் ஒழித்துக்கட்டிய பிறகு, யெகோவா தேவனை வணங்கும் மக்களைத் தாக்க சாத்தான் தேசங்களை எல்லாம் கூட்டிச்சேர்ப்பான்.—வெளிப்படுத்துதல் 7:14; மத்தேயு 24:21.

அர்மகெதோன் போரில் நீங்கள் தப்பிக்க...

பைபிளை ஆழமாகப் படிக்கவில்லை என்றால் இந்தத் தீர்க்கதரிசனங்கள் எல்லாம் நிறைவேறுமா என்ற சந்தேகம் வரலாம். ஆனால், இந்தத் தீர்க்கதரிசனங்களின் ஒரு எழுத்துக்கூட நிறைவேறாமல் போகாது, நிச்சயம் நடக்கும், அதுவும் சீக்கிரத்தில் நடக்கும் என்பதற்கு ஆணித்தரமான ஆதாரங்கள் இருக்கின்றன. ஆம், பைபிளிலுள்ள எத்தனையோ தீர்க்கதரிசனங்கள் ஏற்கெனவே நிறைவேறியிருப்பது இதற்கு மறுக்க முடியாத ஆதாரம். *

‘சர்வ வல்லமையுள்ள கடவுளின் மகா நாளில் நடக்கப்போகும் போர்’ சீக்கிரம் வரும் என்று யெகோவாவின் சாட்சிகள் ஏன் உறுதியாக நம்புகிறார்கள்? அந்தப் போரை நினைத்து ஏன் பயப்பட வேண்டியதில்லை? இதற்குப் பதில் தெரிந்துகொள்ள சாட்சிகளிடம் பேசிப் பாருங்களேன்? யெகோவா காப்பாற்றப் போகும் மக்களில் நீங்களும் ஒருவராக இருக்க என்ன செய்ய வேண்டும் என்று அவர்கள் சொல்வார்கள். (வெளிப்படுத்துதல் 16:14) இதைப் பற்றி தெரிந்துகொண்டால் ஒளிமயமான எதிர்காலம் உங்கள் கண்முன் தெரியும்! (w12-E 02/01)

[அடிக்குறிப்பு]

^ பாரா. 17 பைபிள் தீர்க்கதரிசனங்கள் எல்லாம் நிறைவேறின என்பதற்கான ஆதாரங்கள் பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தில் அதிகாரம் 2 மற்றும் 9-ல் இருக்கின்றன. இது யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.

[பக்கம் 8-ன் சிறு குறிப்பு]

யெகோவாவின் சாட்சிகள் செய்யும் பிரசங்க வேலை பைபிள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமா?