Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அர்மகெதோன் என்றால் என்ன?

அர்மகெதோன் என்றால் என்ன?

அர்மகெதோன் என்றால் என்ன?

“பேய்கள் . . . பூமியெங்கும் உள்ள ராஜாக்களைக் கூட்டிச்சேர்ப்பதற்கு அவர்களிடம் புறப்பட்டுப் போயின. எபிரெய மொழியில் அர்மகெதோன் என்றழைக்கப்பட்ட இடத்தில் அந்தப் பேய்கள் அவர்களைக் கூட்டிச்சேர்த்தன.”—வெளிப்படுத்துதல் 16:14, 16.

அர்மகெதோன் என்பது ஓர் இடத்தின் பெயர். ஆனால், அது பூமியில் இருக்கும் நிஜமான ஓர் இடத்தைக் குறிக்கவில்லை.

அப்படியென்றால், “அர்மகெதோன்” என்ற வார்த்தையின் முக்கியத்துவம் என்ன? அது ஏன் பெரும்பாலும் போர் போன்ற சம்பவங்களோடு சம்பந்தப்படுத்தி பேசப்படுகிறது?

அர்மகெதோன் என்ற இடத்தில் கூட்டிச்சேர்த்தன

“அர்மகெதோன்” என்ற வார்த்தை “ஹார்-மெகதோன்” என்ற எபிரெய வார்த்தையிலிருந்து வந்தது. அதன் அர்த்தம் “மெகிதோ மலை.” ஆனால், உண்மையில் மெகிதோ ஒரு மலை அல்ல. பூர்வ இஸ்ரவேல் தேசத்தின் வடமேற்குப் பகுதியில் இருந்த ஓர் இடம். அது இரண்டு முக்கியமான சாலைகளின் சந்திப்பில் அமைந்திருந்தது. முக்கியமான போர்கள் அங்கே நடந்தன. எனவே, மெகிதோ என்றதும் போர்தான் மக்களின் நினைவுக்கு வந்தது. *

ஆனால், மெகிதோவில் எப்படிப்பட்ட போர் நடந்தது என்பது முக்கியமல்ல ஏன் அங்கே போர் நடந்தது என்பதுதான் முக்கியம். இஸ்ரவேல் மக்களுக்கு யெகோவா தேவன் கொடுத்த தேசத்தில்தான் மெகிதோ இருந்தது. (யாத்திராகமம் 33:1; யோசுவா 12:7, 21) தம் மக்களை எதிரிகளிடமிருந்து காப்பாற்றுவதாக யெகோவா வாக்குக் கொடுத்தார், கொடுத்த வாக்கை காப்பாற்றினார். (உபாகமம் 6:18, 19) ஒருசமயம், கானான் தேசத்து ராஜாவான யாபீனும் அவனுடைய படைத் தளபதி சிசெராவும் தம் மக்களைத் தாக்கவந்தபோது மெகிதோவில்தான் யெகோவா அவர்களுக்காகப் போர் செய்தார். அவர்களை அற்புதமாகக் காப்பாற்றினார்.—நியாயாதிபதிகள் 4:14-16.

அப்படியென்றால், “அர்மகெதோன்” அல்லது “ஹார்-மெகதோன்” என்ற வார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. ஆம், அது இரு சக்திவாய்ந்த படைகளுக்கு இடையே நடக்கும் போரை அடையாளப்படுத்துகிறது.

வெளிப்படுத்துதல் புத்தகத்தில் உள்ள தீர்க்கதரிசனத்தின்படி சீக்கிரத்தில் சாத்தானும் அவனுடைய பேய்களும் மனித அரசாங்கங்களையும் அவர்களுடைய ராணுவத்தையும் யெகோவாவுடைய மக்களுக்கு எதிராகப் போர்செய்யத் தூண்டிவிடுவார்கள். அப்போது யெகோவா தம் மக்களுக்காகப் போர் செய்து அவர்களைக் காப்பாற்றுவார். அவருடைய ஜனங்களை எதிர்க்கும் எல்லாரும் அழிந்துபோவார்கள்.—வெளிப்படுத்துதல் 19:11-18.

ஆனால், “இரக்கமும் மனஉருக்கமும், நீடிய சாந்தமும், மகா கிருபையுமுள்ள” நம் கடவுள் ஏன் இத்தனை அநேக மக்களைச் சாகடிக்கிறார்? (நெகேமியா 9:17) இதைப் புரிந்துகொள்வதற்கு இந்த மூன்று கேள்விகளுக்குப் பதில் தெரிந்துகொள்ள வேண்டும்: (1) இந்தப் போரை யார் ஆரம்பிப்பார்? (2) கடவுள் ஏன் அதில் தலையிடுகிறார்? (3) இதனால் என்ன நிரந்தர பலன்கள் கிடைக்கும்?

1. இந்தப் போரை யார் ஆரம்பிப்பார்?

இந்தப் போருக்குக் காரணம் கடவுளுடைய கோபம் அல்ல. மாறாக தம் மக்களைப் பூண்டோடு அழிக்க முயற்சிப்பவர்களிடமிருந்து அவர்களைக் காப்பாற்றத்தான் அவர் அதில் ஈடுபடுவார். ‘பூமியெங்கும் உள்ள ராஜாக்கள்,’ அதாவது அரசியல் தலைவர்கள்தான் இந்தப் போரை ஆரம்பித்து வைப்பார்கள். சரி, அவர்கள் ஏன் கடவுளுடைய மக்களைத் தாக்குகிறார்கள்? உண்மையில் அவர்கள் சாத்தானின் கைப்பாவைகளே. கடவுளுடைய மக்களைத் துடைத்தழிக்க அரசாங்கங்களையும் ராணுவத்தையும் சாத்தான்தான் தூண்டிவிடுவான்.—வெளிப்படுத்துதல் 16:13, 14; 19:17, 18.

இன்று பேச்சு சுதந்திரமும் மத சுதந்திரமும் மக்களுடைய உரிமை என்ற கருத்தை பல நாட்டு அரசாங்கங்கள் வரவேற்கின்றன. அந்த அரசாங்கங்களே மதத்தை ஒழித்துக்கட்ட முயற்சிக்கும் என்பதை அநேகரால் கற்பனைக்கூட செய்ய முடிவதில்லை. ஆனால், 20-ஆம் நூற்றாண்டிலும், ஏன் இன்றும்கூட அநேக இடங்களில் மதத்தினால் சண்டைகள் நடந்திருக்கின்றன. * இருந்தாலும், இந்தத் தாக்குதல்களுக்கும் அர்மகெதோன் சமயத்தில் நடக்கப்போகும் தாக்குதலுக்கும் இரண்டு பெரிய வித்தியாசம் இருக்கிறது. ஒன்று, இந்தத் தாக்குதல் உலகம் முழுவதும் நடக்கும். இரண்டாவது, யெகோவா தேவன் இதுவரை இல்லாத அளவுக்குத் தம் சக்தியை இந்தப் போரில் பயன்படுத்துவார். (எரேமியா 25:32, 33) அதனால்தான் பைபிள் இந்தப் போரை, ‘சர்வ வல்லமையுள்ள கடவுளின் மகா நாளில் நடக்கப்போகும் போர்’ என்று அழைக்கிறது.

2. கடவுள் ஏன் தலையிடுகிறார்?

தம்மை வழிபடுகிறவர்கள் சமாதானம் பண்ணுகிறவர்களாகவும் எதிரிகளைக்கூட நேசிப்பவர்களாகவும் இருக்க வேண்டும் என்று யெகோவா கற்பிக்கிறார். (மீகா 4:1-3; மத்தேயு 5:43, 44; 26:52) எனவே, இந்தப் பயங்கரமான தாக்குதலின்போது அவர்கள் ஆயுதங்களை எடுக்க மாட்டார்கள். கடவுள் அவர்களைக் காப்பாற்றவில்லை என்றால் அவர்கள் வேரோடு அழிக்கப்படுவார்களே! அப்படி நடந்தால், யெகோவாவுடைய பெயருக்கு என்னே ஓர் அவமானம். அதுமட்டுமா, யெகோவா அன்பற்றவர், அநியாயமாக நடப்பவர், தம் மக்களைக் காப்பாற்ற முடியாதவர் என்ற அபிப்பிராயம்தானே அவர்மீது ஏற்படும். கனவிலும் யெகோவாவை அப்படி நினைக்க முடியாது!—சங்கீதம் 37:28, 29.

மக்களை அழிக்க வேண்டுமென்று யெகோவா விரும்புவதில்லை, அதனால்தான் அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை எல்லாருக்கும் சொல்லுகிறார். (2 பேதுரு 3:9) பூர்வ காலங்களில் தம் மக்களைத் தாக்கியவர்களை யெகோவா சும்மாவிடவில்லை என்பதை எல்லாரும் புரிந்துகொள்வதற்காகத்தான் அந்தச் சம்பவங்களை பைபிளில் பதிவு செய்திருக்கிறார். (2 இராஜாக்கள் 19:35) அதுமட்டுமல்ல, எதிர்காலத்தில்கூட சாத்தானும் அவனுடைய கைப்பாவைகளாக இருப்பவர்களும் தம்முடைய மக்களைத் தாக்கும்போது யெகோவா மீண்டும் களத்தில் இறங்குவார். அவர்களைச் சுவடு தெரியாமல் அழிப்பார். பொல்லாதவர்களை யெகோவா அழிப்பார் என்று பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. (நீதிமொழிகள் 2:21, 22; 2 தெசலோனிக்கேயர் 1:6-9) சர்வசக்தி படைத்த கடவுளுக்கு எதிராக போர் செய்கிறார்கள் என்பதை எதிராளிகள் அந்தச் சமயத்தில்தான் உணருவார்கள்.—எசேக்கியேல் 38:21-23.

3. இதனால் என்ன நிரந்தர பலன்கள் கிடைக்கும்?

அர்மகெதோன் போரினால் நிறைய உயிர்கள் காப்பாற்றப்படும். சொல்லப்போனால், பூமி சமாதான பூங்காவாக மாறுவதற்கு இது முதல் படியே.—வெளிப்படுத்துதல் 21:3, 4.

எண்ண முடியாத “திரள் கூட்டமான மக்கள்” இந்தப் போரிலிருந்து தப்பிப்பார்கள் என்று பைபிள் சொல்கிறது. (வெளிப்படுத்துதல் 7:9, 14) கடவுளுடைய வழிநடத்துதலின் கீழ் அந்த மக்கள் இந்தப் பூமியைப் பூஞ்சோலையாக மாற்றுவார்கள். பூமியைக் கடவுள் படைத்ததற்கான நோக்கமே இதுதான்.

கடவுளுடைய மக்கள் எப்போது தாக்கப்படுவார்கள் என்று தெரியுமா? (w12-E 02/01)

[அடிக்குறிப்புகள்]

^ பாரா. 6 ஓர் இடத்தைப் போருடன் சம்பந்தப்படுத்துவது இன்றும் சர்வசாதாரணமாக இருக்கிறது. உதாரணத்திற்கு, ஜப்பான் நகரமான ஹிரோஷிமா சக்திவாய்ந்த அணுகுண்டினால் முற்றிலும் அழிக்கப்பட்டது. எனவே, ஹிரோஷிமா என்றதும் அந்தச் சமயத்தில் நடந்த போர்தான் மக்களின் நினைவுக்கு வரும்.

^ பாரா. 13 நாசி இனப்படுகொலை இதற்கு ஓர் உதாரணம். அந்தச் சமயத்தில் ஒரு குறிப்பிட்ட மதம் மற்றும் இனத்தைச் சேர்ந்த மக்களை ஒட்டுமொத்தமாக அழிக்க நாசி அரசாங்கம் முயற்சி செய்தது. அதோடு, சோவியத் ஆட்சிக் காலத்தில் சோவியத் யூனியன் பிராந்தியத்தில் இருந்த மதத் தொகுதிகளும் பயங்கரமாக அடக்கியாளப்பட்டன.

[பக்கம் 6-ன் படம்]

பூர்வ காலங்களில் யெகோவா தம்முடைய மக்களுக்காகப் போர் செய்தார்

[பக்கம் 7-ன் படம்]

யெகோவா தம்முடைய மக்களைக் காப்பாற்றுவதற்காக அர்மகெதோன் போரில் ஈடுபடுவார்