தீர்க்கதரிசனங்களுக்கு யாரால் விளக்கமளிக்க முடியும்?
தீர்க்கதரிசனங்களுக்கு யாரால் விளக்கமளிக்க முடியும்?
கார்டியஸ் என்பவர் போட்ட முடிச்சு படு சிக்கலான முடிச்சு என்ற கருத்து மகா அலெக்ஸான்டர் காலத்தில் நிலவியதாக ஒரு புராணக் கதை சொல்கிறது. ஒரு ஞானியால், மாவீரனால் மட்டுமே அந்த முடிச்சை அவிழ்க்க முடியும் என்று அநேகர் நம்பினார்களாம். * அலெக்ஸான்டர் தன் வாளால் அந்த முடிச்சை ஒரே வெட்டாக வெட்ட அது சட்டென அவிழ்ந்தது.
பல நூற்றாண்டுகளாக, ஞானிகள் பலர் இதுபோன்ற சிக்கலான முடிச்சுகளை அவிழ்க்க முயன்றிருக்கிறார்கள். அதுமட்டுமா, விடுகதைகளுக்கு விடை சொல்ல... தீர்க்கதரிசனங்களுக்கு விளக்கமளிக்க... ஏன், எதிர்காலத்தை கணிக்கக்கூட முயன்றிருக்கிறார்கள்.
ஆனால், அவர்களுடைய முயற்சிகளெல்லாம் பெரும்பாலும் தோல்வியையே தழுவின. ஒருசமயம், பாபிலோனில் இருந்த ஞானிகளுக்கும் இதே நிலை ஏற்பட்டது. அங்கே பெல்ஷாத்சார் என்ற ராஜாவின் மாளிகையில் தடபுடலான ஒரு விருந்து நடந்துகொண்டிருக்க, திடீரென்று ஒரு கை தோன்றி சுவரில் எழுத ஆரம்பித்தது. அதன் அர்த்தத்தை எந்த ஞானியாலும் விளக்க முடியவில்லை. ஆனால், வயதான தானியேலால்தான், ஆம் யெகோவா தேவனுடைய தீர்க்கதரிசியால்தான் அதற்கு விளக்கமளிக்க முடிந்தது. ‘சிக்கல்களைத் தீர்க்கும் திறமை வாய்ந்தவர்’ என அவர் ஏற்கெனவே பெயரெடுத்திருந்தார். (தானியேல் 5:12, பொது மொழிபெயர்ப்பு.) பாபிலோன் சாம்ராஜ்யம் வீழ்ச்சியடையும் என்று அவர் விளக்கம் சொன்ன அந்தத் தீர்க்கதரிசனம் அன்றிரவே அரங்கேறியது!—தானியேல் 5:1, 4-8, 25-30.
தீர்க்கதரிசனம் என்றால் என்ன?
தீர்க்கதரிசனம் என்றால் எதிர்காலத்தில் நடக்கப்போவதை முன்கூட்டியே சொல்வது, அல்லது முன்கூட்டியே பதிவு செய்து வைப்பதாகும். தீர்க்கதரிசனத்தை கடவுளால் மட்டுமே சொல்ல முடியும். அதைத் தம்முடைய ஊழியர்கள் மூலம் அறிவிக்கிறார் அல்லது பதிவு செய்கிறார்; அது முக்கியமாக கடவுளுடைய சித்தத்தையும் நோக்கத்தையும் வெளிப்படுத்தும். உதாரணத்திற்கு, பைபிளில் மேசியா யார், அவர் எப்போது வருவார் என்பதைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள் இருக்கின்றன; அதோடு, ‘இந்தச் சகாப்தத்தின் இறுதிக்கட்டத்தை’ அடையாளம் காட்டும் தீர்க்கதரிசனங்களும் கடவுளுடைய நியாயத்தீர்ப்பை பற்றிய தீர்க்கதரிசனங்களும் இருக்கின்றன.—மத்தேயு 24:3; தானியேல் 9:25.
இன்றும்கூட சில ‘ஞானிகள்,’ அதாவது அறிவியல், பொருளாதாரம், மருத்துவம், அரசியல், சுற்றுச்சூழல் போன்ற துறைகளில் கரைகண்டவர்கள், எதிர்காலத்தைக் கணிக்க முயல்கிறார்கள். அவர்களுடைய கணிப்புகளெல்லாம் படாடோபமாக விளம்பரம் செய்யப்படுகின்றன, பொதுமக்களால் இருகரம் நீட்டி வரவேற்கப்படுகின்றன. என்றாலும் அவை அதிபுத்திசாலிகளின் அனுமானங்களாகவும் சொந்தக் கருத்துக்களாகவும்தான் இருக்கின்றன. அதுமட்டுமல்ல, அவர்களுடைய ஒவ்வொரு கருத்துக்கும் எதிராக எக்கச்சக்கமான எதிர்கருத்துகள் எறியப்படுகின்றன. அதோடு, எதிர்காலத்தைப் பற்றி முழுமையாகத் தெரியாமல் அதைக் கணிப்பது ஆபத்தானது.
நம்பகமான தீர்க்கதரிசனத்தின் பிறப்பிடம்
நம்பகமான தீர்க்கதரிசனங்களை யாரால் சொல்ல முடியும்? அதற்கு யாரால் விளக்கமளிக்க முடியும்? வேதாகமத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் “எவரது சொந்த விளக்கத்திற்கும் உட்பட்டதல்ல” என்று அப்போஸ்தலன் பேதுரு எழுதினார். (2 பேதுரு 1:20, பொது மொழிபெயர்ப்பு) ‘விளக்கம்’ சொல்வது என்பதற்கான கிரேக்க வார்த்தைக்கு “தீர்வளிப்பது, வெளிப்படுத்துவது” என்று அர்த்தம். “கட்டப்பட்டிருந்த ஒன்றை அவிழ்ப்பது அல்லது விடுவிப்பது” என்ற கருத்தில் இது சொல்லப்படுகிறது. அதனால்தான் தி ஆம்ப்ளிஃபைட் நியூ டெஸ்டமென்ட் பைபிள் பேதுருவின் வார்த்தைகளை இவ்வாறு மொழிபெயர்க்கிறது: ‘வேதாகமத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் எவராலும் அவிழ்க்க முடிந்த ஒன்றல்ல.’
ஓர் உதாரணத்தைக் கவனியுங்கள்: ஒரு படகோட்டி தன் படகை கரையோரமாகக் கட்டுகிறார்; யாராலும் எளிதில் அவிழ்க்க முடியாதபடி சிக்கலான ஒரு முடிச்சை போடுகிறார். ஒரு சாதாரண ஆள் அதைப் பார்த்தால், அந்த முடிச்சில் கயிறு பின்னிப்பிணைந்திருப்பது மட்டுமே தெரியும், ஆனால் அதை எப்படி அவிழ்ப்பதென அவருக்குத் தெரியாது. அதுபோல, இன்று நடக்கும் சம்பவங்களைப் பார்க்கிற மக்களுக்கு, இது ஏதோ சிக்கலில் முடியப்போகிறது என்று புரியுமே தவிர, அந்தச் சிக்கலை எப்படி தீர்ப்பது என்று தெரியாது.
பழங்காலத்தில் வாழ்ந்த, தானியேலைப் போன்ற கடவுளுடைய தீர்க்கதரிசிகள், தங்களுடைய நாளில் நடந்த சம்பவங்களை அலசிப் பார்த்து எதிர்காலத்தில் இப்படித்தான் நடக்கும் என்று அவர்களாகவே சொல்லவில்லை. ஒருவேளை அவர்கள் அப்படிச் சொல்லியிருந்தால் அது அவர்களுடைய சொந்த கற்பனையில் பிறந்த தீர்க்கதரிசனமாக இருந்திருக்கும். அதுமட்டுமல்ல, அது நிறைவேறுவதற்காக அவர்களாகவே ஏதாவது செய்ய வேண்டியிருந்திருக்கும். அப்படிச் செய்வது, ஆட்டம்காணும் அஸ்திவாரத்தின்மீது வீடு கட்டுவதுபோல் இருக்கும். ஆனால், பேதுரு சொன்னார்: “மனிதர்கள் ஒருகாலத்திலும் தங்களுடைய விருப்பத்தினால் தீர்க்கதரிசனம் சொல்லவில்லை; கடவுள் அருளிய வார்த்தைகளை அவருடைய சக்தியினால் உந்துவிக்கப்பட்டே சொன்னார்கள்.”—“சொப்பனத்துக்கு அர்த்தம் சொல்லுதல் தேவனுக்குரியதல்லவா?”
கிட்டத்தட்ட 3,700 வருடங்களுக்குமுன் எகிப்து நாட்டு சிறையில் இருந்த இரண்டு கைதிகள் கனவு கண்டார்கள். அவர்களுக்கு அந்தக் கனவின் அர்த்தம் புரியவில்லை. அந்த நாட்டு ஞானிகளிடம் சென்று அவர்களால் அந்தக் கனவுக்கு அர்த்தம் கேட்க முடியவில்லை. எனவே, மற்றொரு கைதியான யோசேப்பிடம் “[நாங்கள்] சொப்பனம் கண்டோம், அதற்கு அர்த்தம் சொல்லுகிறவன் ஒருவனும் இல்லை” என்று சொன்னார்கள். கடவுளுடைய ஊழியனான யோசேப்பு அந்தச் சொப்பனங்களைத் தன்னிடம் சொல்லும்படி கேட்டதோடு, “சொப்பனத்துக்கு அர்த்தம் சொல்லுதல் தேவனுக்குரியதல்லவா?” என்றார். (ஆதியாகமம் 40:8) அந்தப் படகோட்டி போட்ட சிக்கலான முடிச்சை எப்படி அவரால் மட்டுமே அவிழ்க்க முடியுமோ அதேபோல் யெகோவா தேவனால் மட்டுமே தீர்க்கதரிசனங்களுக்கு விளக்கம் சொல்ல முடியும். சொல்லப்போனால், தீர்க்கதரிசனங்களைச் சொல்வதே கடவுள்தானே, அப்படியென்றால் அதற்கு விடையும் அவரால்தானே சொல்ல முடியும்? அப்படியானால், தீர்க்கதரிசனங்களின் விளக்கத்தை அறிய நாமும் அவரையே சார்ந்திருக்க வேண்டும். யோசேப்பும் அதையே செய்தார்.
‘சொப்பனத்துக்கு அர்த்தம் சொல்லுதல் தேவனுக்குரியது’ என்றால் என்ன? இதைப் பல வழிகளில் விளக்கலாம். பைபிளில் சில தீர்க்கதரிசனங்கள் அவற்றின் நிறைவேற்றத்தோடு சேர்த்து பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றைப் புரிந்துகொள்வது சுலபம். அந்தப் படகோட்டி போட்ட சில முடிச்சுகளை எப்படி அவிழ்ப்பதென அவரே சொல்லிக்கொடுப்பது போல் இது இருக்கும்.—ஆதியாகமம் 18:14; 21:2.
இன்னும் சில தீர்க்கதரிசன வசனங்களை, அவற்றிற்கு முன்பும் பின்பும் உள்ள வசனங்களை வைத்துதான் புரிந்துகொள்ள முடியும். உதாரணமாக, தானியேல் தீர்க்கதரிசி கண்ட ஒரு தரிசனத்தில், ‘இரண்டு கொம்புகளுள்ள ஒரு ஆட்டுக்கடாவை’ ‘ரோமமுள்ள ஒரு வெள்ளாட்டுக்கடா’ முட்டி கீழே தள்ளி மிதித்துப் போட்டது; அந்த வெள்ளாட்டுக்கடாவின் “கண்களுக்கு நடுவே விசேஷித்த ஒரு கொம்பு இருந்தது.” இந்த வசனங்களின் சூழமைவைக் கவனித்தால், அந்த ஆட்டுக்கடாவின் இரண்டு கொம்புகள், “மேதியா பெர்சியா தேசங்களின் ராஜாக்கள்” என்றும் வெள்ளாட்டுக்கடா, “கிரேக்கு தேசத்தின் ராஜா” என்றும் புரிகிறது. (தானியேல் 8:3-8, 20-22) சுமார் 200 வருடங்கள் உருண்டோடிய பிறகு, “அந்தப் பெரிய கொம்பு,” அதாவது மகா அலெக்ஸான்டர், பெர்சிய சாம்ராஜ்யத்திற்கு எதிராக படையெடுத்தார். ஒரு சமயம் அலெக்ஸான்டரின் படைகள் எருசலேமுக்கு அருகில் குழுமியிருந்தபோது, இந்தத் தீர்க்கதரிசனம் அலெக்ஸான்டருக்குக் காட்டப்பட்டதாகவும், அது தன்னையே குறிப்பதாக அவர் ஏற்றுக்கொண்டதாகவும் யூத சரித்திராசியர் ஜொஸிஃபஸ் குறிப்பிட்டார்.
‘சொப்பனத்துக்கு அர்த்தம் சொல்லுதல் தேவனுக்குரியது’ என்ற சொற்றொடரின் இன்னொரு அர்த்தத்தைப் பார்க்கலாமா? இப்போது யோசேப்பின் விஷயத்தை எடுத்துக்கொள்ளலாம். சிறையில் இருந்தவர்கள் கண்ட சொப்பனங்களின் அர்த்தத்தை அவர் யெகோவாவுடைய சக்தியின் உதவியால்தான் புரிந்துகொண்டார். (ஆதியாகமம் 41:38) இன்றும்கூட, யெகோவாவுடைய ஊழியர்களுக்கு ஒரு தீர்க்கதரிசனத்தின் அர்த்தம் புரியவில்லை என்றால், அவருடைய சக்தியைக் கொடுத்து தங்களுக்கு உதவும்படி மன்றாடுகிறார்கள். பிறகு, கடவுளுடைய சக்தியின் வழிநடத்துதலால் எழுதப்பட்ட பைபிளை கருத்தூன்றி படிக்கிறார்கள். கடவுளுடைய உதவியோடு தீர்க்கதரிசனத்துக்கு விளக்கம் தரும் பைபிள் வசனங்களை அவர்களால் கண்டுபிடிக்க முடிகிறது. அந்தத் தீர்க்கதரிசனங்களுக்கு எந்த மனிதனாலும் அற்புதமாக விளக்கமளிக்க முடியாது. கடவுளுடைய உதவியால்தான் அதைப் புரிந்துகொள்ள முடியும். ஏனென்றால், அவருடைய சக்தியும், அவருடைய வார்த்தையுமே அதன் அர்த்தத்தை விளக்கும். ஆக, பைபிளின் உதவியில்லாமல் எந்த மனிதனாலும் தீர்க்கதரிசனங்களுக்கு விளக்கம் அளிக்க முடியாது.—அப்போஸ்தலர் 15:12-21.
பூமியில் இருக்கும் தம் உண்மையுள்ள ஊழியர்கள், ஒரு தீர்க்கதரிசனத்தின் விளக்கத்தை எப்போது புரிந்துகொள்ள வேண்டும் எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது கடவுள்தான். இந்த அர்த்தத்திலும் ‘சொப்பனத்துக்கு அர்த்தம் சொல்லுதல் தேவனுக்குரியது’ என்று சொல்லலாம். ஒரு தீர்க்கதரிசனம் நிறைவேறுவதற்கு முன்போ, பின்போ அல்லது நிறைவேறும்போதோ விளக்கமளிக்கப்படலாம். தீர்க்கதரிசனங்களை கடவுளே சொல்லியிருப்பதால் தக்க சமயத்தில் ஆம், அவர் தீர்மானிக்கும் சமயத்தில் அவரே அதற்கு விளக்கத்தையும் அளிப்பார்.
மீண்டும் யோசேப்பின் விஷயத்தை எடுத்துக்கொள்வோம்; அந்த கைதிகளின் கனவுகள் நிறைவேறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்புதான் யோசேப்பு அதன் அர்த்தத்தைச் ஆதியாகமம் 40:13, 19) பின்பு, பார்வோனின் கனவுக்கு அர்த்தம் சொல்வதற்காக யோசேப்பு அழைத்து செல்லப்பட்டார்; அப்போது அவர் சொன்ன அந்த ஏழு வருட அமோக விளைச்சல் கொஞ்ச நாட்களிலேயே தொடங்கியது. கடவுளுடைய உதவியோடு பார்வோனின் கனவுக்கு யோசேப்பு அர்த்தம் சொன்னதால்தான், அமோக விளைச்சலை சேமித்து வைப்பதற்கான எல்லா ஏற்பாடுகளையும் முன்னதாகச் செய்ய முடிந்தது.—ஆதியாகமம் 41:29, 39, 40.
சொன்னார். (இன்னும் சில தீர்க்கதரிசனங்களோ அவை நிறைவேறிய பின்புதான் கடவுளுடைய ஊழியர்களால் அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது. இயேசுவின் வாழ்க்கையில் நடந்த அநேக சம்பவங்கள் அவர் பிறப்பதற்கு பல நூறு வருடங்களுக்கு முன்பே பைபிளில் பதிவு செய்யப்பட்டன; என்றாலும் இயேசு இறந்து உயிர்த்தெழுந்த பிறகுதான் அவருடைய சீடர்களால் அவற்றின் அர்த்தத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள முடிந்தது. (சங்கீதம் 22:18; 34:20; யோவான் 19:24, 36) அதுமட்டுமல்ல, சில தீர்க்கதரிசனங்கள் தானியேல் 12:4-ல் சொல்லப்பட்ட விதமாக “முடிவுகாலமட்டும்,” அதாவது ‘அறிவு பெருகிப்போகும்’ காலமட்டும், “புதைபொருளாக” வைக்கப்பட்டன. இப்போது நாம் அந்தக் காலத்தில்தான் வாழ்கிறோம். ஆம், அந்தத் தீர்க்கதரிசனங்கள் நிறைவேறும் காலத்தில்தான் வாழ்கிறோம்.
பைபிள் தீர்க்கதரிசனங்கள் உங்களை எப்படிப் பாதிக்கின்றன
யோசேப்பும் சரி தானியேலும் சரி, ராஜாக்களுக்கு முன் நின்று தீர்க்கதரிசனங்களுக்கு விளக்கம் அளித்தார்கள். அந்தத் தீர்க்கதரிசனங்கள் அந்த நாட்டையும் அதன் மக்களையும் பாதித்தன. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவர்களும்கூட தீர்க்கதரிசனங்களை சொல்லும் கடவுளான யெகோவாவுக்கு பிரதிநிதிகளாகச் செயல்பட்டார்கள்; அவர் சொன்ன தீர்க்கதரிசனங்களை அறிவித்தார்கள். அதைக் கேட்டு நடந்தவர்கள் அருமையான பலன்களைப் பெற்றார்கள்.
இன்றும்கூட, யெகோவாவின் சாட்சிகள் ஒரு தீர்க்கதரிசன செய்தியை உலகெங்கும் அறிவிக்கிறார்கள். கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்திதான் அது. அதோடு, ‘இந்தச் சகாப்தத்தின் இறுதிக்கட்டத்தை’ பற்றி இயேசு சொன்ன தீர்க்கதரிசனம் நிறைவேறி வருவதையும் அறிவிக்கிறார்கள். (மத்தேயு 24:3, 14) அந்தத் தீர்க்கதரிசனத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அது உங்களை எப்படிப் பாதிக்க போகிறது என்று தெரியுமா? பைபிளிலுள்ள இந்த மிக முக்கியமான தீர்க்கதரிசனத்தைப் புரிந்துகொள்ளவும் அதிலிருந்து பயனடையவும் உங்களுக்கு உதவ யெகோவாவின் சாட்சிகள் ஆவலாய் இருக்கிறார்கள். (w11-E 12/01)
[அடிக்குறிப்பு]
^ பாரா. 2 இது ஒரு கிரேக்க புராணக் கதை. பிரிகியாவின் தலைநகரான கார்டியம் என்ற நகரைத் தோற்றுவித்த கார்டியஸ் தன்னுடைய ரதத்தை ஒரு கம்பத்தில் கட்டி வைத்தாராம். ஆசியாவை அடுத்ததாக யார் கைப்பற்றுவாரோ அவரைத் தவிர வேறு யாராலும் அதை அவிழ்க்க முடியாதாம். ஏனென்றால், அது அவ்வளவு சிக்கலான முடிச்சாம்.
[பக்கம் 12, 13-ன் படங்கள்]
யோசேப்பும் சரி தானியேலும் சரி, தீர்க்கதரிசனத்திற்கு விளக்கம் அளிப்பவர் யெகோவா என்று சொல்லி அவருக்கே புகழ் சேர்த்தார்கள்