முதுமை போய் இளமை!!
கடவுளிடம் நெருங்கி வாருங்கள்
முதுமை போய் இளமை!!
முதுமை—இந்த வார்த்தையைக் கேட்டதும் நம் மனதுக்கு வருவது, சுருக்கங்கள் வரைந்த முகம்... இடுங்கிய கண்கள்... ஒடுங்கிய கன்னம்... மந்தமான காது... தள்ளாடும் கால்கள். ஆனால், இப்படி அவதிப்பட யாருக்குத்தான் ஆசை? நீங்கள் ஒருவேளை இப்படி யோசிக்கலாம்: ‘ஒரு பக்கம் இளமையை ரசித்து ருசித்து கொண்டாடும் விதத்தில் கடவுள் நம்மைப் படைத்துவிட்டு, இன்னொரு பக்கம் முதுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கவும் விட்டிருக்கிறாரே, ஏன்?’ ஆனால் உங்களுக்கு ஒரு ஆறுதலான செய்தி, நாம் இப்படி அவதிப்பட வேண்டுமென்ற எண்ணம் கடவுளுடைய மனதில் துளிகூட இல்லை. சொல்லப்போனால், முதுமையின் பிடியிலிருந்து நம்மை விடுவிக்கவே அவர் விரும்புகிறார், அதற்கான ஏற்பாட்டையும் செய்திருக்கிறார். இதைப் புரிந்துகொள்ள நம் மூதாதையான யோபுவிடம் கடவுள் சொன்ன வார்த்தைகளை யோபு 33:24, 25-ல் வாசித்துப் பாருங்கள்.
இப்போது நாம் யோபுவின் வாழ்க்கையைக் கொஞ்சம் பின்நோக்கிப் பார்க்கலாம். அவர் யெகோவா தேவனுக்கு உண்மையாய் வாழ்ந்தார். யெகோவாவும் அவரை நேசித்தார். ஆனால், யோபுவின் உண்மைத்தன்மையைக் குறித்து சாத்தான் கேள்வி எழுப்பினான்; யோபுவைக் கடவுள் ஆசீர்வதித்திருப்பதால்தான் அவன் அவரை வணங்குகிறான் எனப் பொய்யாகக் குற்றம் சாட்டினான். இதெல்லாம் யோபுவுக்குத் தெரியாது. யெகோவாவுக்கு யோபுமீது நம்பிக்கை இருந்ததாலும் எந்தக் கெடுதலையும் சரிசெய்யும் வல்லமை இருந்ததாலும் யோபுவைச் சோதிக்க அவர் சாத்தானை அனுமதித்தார். எனவே, சாத்தான் “யோபின் உள்ளங்கால் தொடங்கி அவன் உச்சந்தலைமட்டும் கொடிய பருக்களால் அவனை வாதித்தான்.” (யோபு 2:7) அவர் உடல் முழுவதும் புழுக்கள் ஊறின. அவருடைய தோல் பாளம் பாளமாக வெடித்து, கருத்து, உதிர்ந்தது. (யோபு 7:5; 30:17, 30) அவர் வேதனையில் துடிதுடித்ததை உங்களால் உணர முடிகிறதா? இத்தனை கஷ்டம் வந்தாலும், “நான் சாகும்வரை என் உத்தமத்தை விட்டுவிடமாட்டேன்” என்று அவர் சொன்னார். ஆம், யோபு கடைசிவரை கடவுளுக்கு உண்மையாய் இருந்தார்.—யோபு 27:5, NW.
என்றாலும், யோபு ஒரு பெரிய தவறைச் செய்தார். அவர் மரண வாசலை நெருங்கியதுபோலத் தோன்றிய சமயத்தில், ‘தேவனைப் பார்க்கிலும் தான் நீதிமான்’ என்றும், தன்னிடம் எந்தத் தவறும் இல்லை என்றும், நிரூபிப்பதிலிலேயே குறியாய் இருந்தார். (யோபு 32:2) கடவுள் சார்பாக பேசிய எலிகூ அவருடைய தவறை உணர்த்தினார். அதேசமயத்தில் கடவுள் தெரிவித்த ஓர் ஆறுதலான செய்தியையும் சொன்னார். ‘அவன் [யோபு] படுகுழியில் [கல்லறையில்] இறங்காதபடிக்கு: நீர் அவனை இரட்சியும்; மீட்கும் பொருளை நான் கண்டுபிடித்தேன் என்பார். அப்பொழுது அவன் மாம்சம் வாலிபத்தில் இருந்ததைப் பார்க்கிலும் ஆரோக்கியமடையும்; தன் வாலிப நாட்களுக்குத் திரும்புவான்.’ (யோபு 33:24, 25) இந்த வார்த்தைகள் யோபுவின் வாழ்க்கையில் நம்பிக்கை ஒளியை ஏற்றின. யோபு மனந்திரும்பினால் அவருக்காக ஒரு மீட்கும் பொருளை ஏற்றுக்கொண்டு அவரை இந்தக் கஷ்டங்களிலிருந்து விடுவிக்க கடவுள் ஆவலாய் இருந்தார். a எனவே, வாழ்நாள் முழுக்க அவர் இப்படிக் கஷ்டப்பட வேண்டிய அவசியம் இருக்காது.
எலிகூ கொடுத்த அறிவுரையை யோபு மனத்தாழ்மையோடு ஏற்றுக்கொண்டார், தவறை உணர்ந்து மனந்திரும்பினார். (யோபு 42:6) யோபுவுக்காகக் கொடுக்கப்பட்ட மீட்கும் பொருளை யெகோவா நிச்சயம் ஏற்றிருப்பார். அவருடைய பாவங்களை மன்னித்து அவரை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வந்தார்; அவர்மீது அளவில்லா ஆசீர்வாதங்களைப் பொழிந்தார். யெகோவா, “யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார்.” (யோபு 42:12-17) தன்னுடைய வியாதி மெல்ல மெல்ல குணமாவதை... ‘வாலிபத்தில் இருந்ததைப் பார்க்கிலும்’ தன் தேகம் பொலிவடைவதை... அதோடு தனக்குக் கிடைத்த பல ஆசீர்வாதங்களை... பார்த்து அவர் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்!
யோபுவுக்காகக் கொடுக்கப்பட்ட அந்த மீட்கும் பொருள் அவர் அனுபவித்த கஷ்டங்களிலிருந்து அவரை விடுவித்தது. ஆனால், அபூரணத்திலிருந்தோ மரணத்திலிருந்தோ அவரை விடுவிக்கவில்லை. ஏனென்றால், அவர் கடைசியில் இறந்துபோனார். ஆனால் அதைவிட உன்னதமான மீட்கும் பொருள் நமக்காகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. யெகோவா தம்முடைய மகனை நமக்கென்று பலியாகக் கொடுத்திருக்கிறார். (மத்தேயு 20:28; யோவான் 3:16) அந்த மீட்கும் பொருளின் மீது விசுவாசம் வைக்கிற எல்லாருக்கும் பூஞ்சோலை பூமியில் என்றென்றும் வாழும் வாய்ப்பு காத்திருக்கிறது. முதுமையின் பாதையில் பயணிக்கும் மனிதகுலம், புதிய உலகில் இளமையின் பாதையில் பயணிக்கும். முதியோரெல்லாம் “வாலிபத்தில் இருந்ததைப் பார்க்கிலும் ஆரோக்கியமடையும்” காலத்தில் நீங்களும் வாழ ஆசைப்படுகிறீர்களா? அப்படியானால் அதைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ளுங்களேன். (w11-E 04/01)
[அடிக்குறிப்பு]
a இங்கே பயன்படுத்தப்பட்டுள்ள “மீட்கும் பொருள்” என்ற வார்த்தை “ஈடுகட்டுவதை” குறிக்கிறது. யோபுவுடைய விஷயத்தில் மீட்கும் பொருள் என்பது மிருக பலியைக் குறித்திருக்கலாம். எனவே, கடவுள் அந்தப் பலியை ஏற்றுக்கொண்டு யோபுவின் பாவங்களை மன்னித்தார்.—யோபு 1:5.