கடவுளிடம் நெருங்கி வாருங்கள்
“நீர் ஏங்குகிறீர்”
நம்முடைய நேசத்துக்கும் பாசத்துக்கும் உரிய ஒருவர் இறப்பதைப் பார்க்கும்போது நாம் அப்படியே துடிதுடித்துப் போகிறோம். ‘இனி அவரைப் பார்க்க முடியாது’ என்பதை நினைத்தாலே நமக்குக் கண்ணீர் முட்டிக்கொண்டு வரும். ஆனால், ஆறுதலான விஷயம் என்னவென்றால், நம்முடைய படைப்பாளராகிய யெகோவா தேவன் நாம் அனுபவிக்கிற வேதனையைப் புரிந்திருக்கிறார்! அதுமட்டுமா, தம்முடைய மகா வல்லமையைப் பயன்படுத்தி இறந்தவர்களை மறுபடியும் உயிரோடு எழுப்புவார்! அப்படி எழுப்பவும் ஏங்குகிறார்!! முற்காலத்தில் வாழ்ந்த யோபு என்ற மனிதருக்கு இந்த நம்பிக்கை இருந்தது; அவர் சொன்ன வார்த்தைகள் யோபு 14:13-15-ல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
யோபுவின் வாழ்வில் நடந்த சம்பவங்களைக் கவனியுங்கள். யெகோவாமீது அசைக்க முடியாத விசுவாசம் வைத்திருந்த அவருக்கு அடுக்கடுக்காய்த் துன்பங்கள் வந்தன. முதலில், அவர் தன்னுடைய சொத்துசுகங்களை இழந்தார்... அடுத்து, தன் பிள்ளைச் செல்வங்களைப் பறிகொடுத்தார்... கடைசியில், கொடிய நோயால் அவதிப்பட்டார். தாங்க முடியாத துன்பத்தில் தவித்த அவர், ‘நீர் என்னைப் பாதாளத்தில் [மனிதகுலத்தின் பொதுக் கல்லறையில்] ஒளித்து வையும்’ என்று கடவுளிடம் கேட்டுக்கொண்டார். (வசனம் 13) துன்பத்திலிருந்து தப்பிக்க கல்லறையே ஏற்ற இடம் என யோபு நினைத்தார். கடவுளால் ஒளித்து வைக்கப்பட்ட ஒரு பொக்கிஷத்தைப் போல அவர் அங்கே இருப்பார், துன்ப துயரங்களிலிருந்து விடுபட்டிருப்பார். a
அப்படியானால், யோபு கல்லறையிலேயே இருந்துவிட வேண்டியிருக்குமா? இல்லை என யோபுவுக்கே நன்றாகத் தெரியும். ஏனென்றால், “என்னைத் திரும்ப நினைக்கும்படிக்கு எனக்கு ஒரு காலத்தைக் குறித்தால் நலமாயிருக்கும்” என்று அவர் தொடர்ந்து ஜெபம் செய்தார். கல்லறையில் தான் நிரந்தரமாக இருக்க வேண்டியிருக்காது என்றும் யெகோவா தன்னை மறந்துவிடமாட்டார் என்றும் யோபு உறுதியாக நம்பினார். கல்லறையில் தான் இருக்க வேண்டிய காலத்தை ஒரு ‘கட்டாயச் சேவைக்கு’, அதாவது கண்டிப்பாய்க் காத்திருக்க வேண்டிய ஒரு காலப்பகுதிக்கு அவர் ஒப்பிட்டார். எவ்வளவு காலத்துக்கு அவர் காத்திருக்க வேண்டும்? “எனக்கு விடுதலை வரும்வரை” என்று அவரே பதில் சொல்கிறார். (வசனம் 14, NW) விடுதலை என்பது கல்லறையிலிருந்து விடுவிக்கப்படுவதை அதாவது, மறுபடியும் உயிர் பெறுவதைக் குறிக்கிறது.
தனக்கு விடுதலை கிடைக்கும் என யோபு ஏன் அவ்வளவு உறுதியாக நம்பினார்? உண்மையாய் வாழ்ந்து இறந்துபோனவர்களைப் பற்றி நம்முடைய அன்பான கடவுள் எப்படி உணருகிறார் என்பதை அவர் அறிந்திருந்தார். யோபு சொல்கிறார்: “நீர் என்னை கூப்பிடுவீர், நான் உமக்குப் பதில் சொல்வேன். உம்முடைய கைகளின் படைப்பைக் காண நீர் மிகவும் ஏங்குகிறீர்.” (வசனம் 15, NW) தான் கடவுளின் கைவண்ணம் என்பதை யோபு ஒப்புக்கொள்கிறார். தாயின் கருவறையில் யோபுவை உருவாக்கியவர் கடவுள்தானே! அப்படியானால், யோபு இறந்துவிட்டாலும்கூட கடவுளால் அவரை நிச்சயம் உயிர்த்தெழுப்ப முடியும்!!—யோபு 10:8, 9; 31:15.
யோபு சொன்ன வார்த்தைகளிலிருந்து யெகோவா எவ்வளவு கனிவானவர் என்பதை நாம் கற்றுக்கொள்கிறோம். யோபுவைப் போலவே அநேகர் தங்களை யெகோவாவின் கையில் ஒப்படைத்து, அவருக்குப் பிடித்தமான விதத்தில் தங்களைச் செதுக்கிச் சீராக்க அனுமதித்திருக்கிறார்கள்; அப்படிப்பட்டவர்கள்மீது அவருக்குத் தனி பாசம் உள்ளது. (ஏசாயா 64:8) தம்முடைய உண்மையுள்ள வணக்கத்தாரை யெகோவா விலைமதிப்புள்ள பொக்கிஷமாய்க் கருதுகிறார். தமக்கு விசுவாசமாய் இருந்து இறந்துபோனவர்களைப் பார்க்க அவர் ‘மிகவும் ஏங்குகிறார்.’ இங்கே, ‘ஏங்குகிறார்’ என்பதற்கான எபிரெய வார்த்தையைப் பற்றி ஓர் அறிஞர் இப்படிச் சொல்கிறார்: ‘ஒருவருக்கு இருக்கிற அளவுகடந்த ஏக்கத்தை இந்த வார்த்தை மிகத் தத்ரூபமாக வெளிப்படுத்துகிறது என்பதில் சந்தேகமே இல்லை.” ஆம், தம்மை வழிபடுகிறவர்களை யெகோவா நினைவுகூருகிறார், அவர்களுக்கு மீண்டும் உயிரளிக்கவும் ஏங்குகிறார்.
யோபு புத்தகம் முதன்முதலில் எழுதப்பட்ட பைபிள் புத்தகங்களில் ஒன்று. அதில், இறந்தவர்களுக்கான தம் நோக்கத்தைப் பற்றி, அதாவது அவர்களை உயிர்த்தெழுப்பப் போவதைப் பற்றி, யெகோவா தெரிவித்திருக்கிறார்; இதற்கு நாம் அவருக்கு நன்றியோடிருக்கலாம். b இறந்துபோன உங்கள் அன்புக்குரியவர்களோடு உங்களை மறுபடியும் இணைத்து வைக்க அவர் ஆசைப்படுகிறார். இந்த உண்மையை மனதில் வைத்திருந்தால், உங்களையே நீங்கள் தேற்றிக்கொள்ள முடியும். இந்த அருமையான காரியத்தைச் செய்யப்போகிற கடவுளைப் பற்றி நீங்கள் இன்னும் அதிகமாக தெரிந்துகொள்ளலாம், அல்லவா? கடவுளுடைய நோக்கங்கள் நிறைவேறும்போது... அவரால் செதுக்கிச் சீராக்கப்பட்ட நபர்கள் மட்டுமே அதைக் கண்ணாரக் காண்பார்கள்; அவர்களில் ஒருவராய் இருப்பதற்காக நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் தெரிந்துகொள்ளலாம், அல்லவா? (w11-E 03/01)
a ‘என்னை ஒளித்து வையும்’ என்று யோபு சொன்ன வார்த்தைகள், “விலைமதிப்புள்ள பொக்கிஷத்தைப் போல என்னை பத்திரமாக வையும்” என்ற அர்த்தத்தைத் தருவதாக ஒரு புத்தகம் குறிப்பிடுகிறது. “புதையலைப் போல என்னை மறைத்து வையும்” என்று அர்த்தம் தருவதாக மற்றொரு புத்தகம் சொல்கிறது.
b நீதியுள்ள புதிய உலகில் இந்த உயிர்த்தெழுதல் நடக்கும் என பைபிள் வாக்குறுதி அளிக்கிறது; இதைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள விரும்பினால், யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட, பைபிள் உண்மையில் என்ன கற்பிக்கிறது? புத்தகத்தில் அதிகாரம் 7-ஐப் பாருங்கள்.