குறைகளை நிறைகளாக்க...
குறைகளை நிறைகளாக்க...
திருமண வாழ்க்கை சவால்களே இல்லாத சுகமான வாழ்க்கை என்று பைபிள் சொல்வது கிடையாது. தம்பதிகள், “அன்றாடக் கவலைகளை” சமாளிக்க வேண்டியிருக்கும் என்று கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (1 கொரிந்தியர் 7:28, டூடேஸ் இங்லிஷ் வர்ஷன்) ஆனால், இல்லற வாழ்வில் துன்பப் புயல் வீசுவதும் சந்தோஷச் சாரல் அடிப்பதும் தம்பதிகளின் கையில்தான் இருக்கிறது. இப்போது, கணவர்களுக்கும் மனைவிகளுக்கும் இருக்கிற ஆறு விதமான மனக்குறைகளைச் சிந்திப்போம்; அவற்றைச் சரிசெய்ய பைபிள் நெறிகள் எப்படி உதவுகின்றன என்பதையும் சிந்திப்போம்.
1
மனக்குறை:
“முன்பிருந்த அளவுக்கு அன்னியோன்னியம் இப்போது எங்களுக்குள் இல்லை.”
பைபிள் நெறி:
‘மிக முக்கியமான காரியங்கள் எவையென நீங்கள் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும்.’—பிலிப்பியர் 1:10.
உங்கள் வாழ்க்கையில் திருமண பந்தம் முக்கிய அங்கம் வகிக்க வேண்டும். அதற்கு நீங்கள் முதலிடம் கொடுக்க வேண்டும். எனவே, “முன்பிருந்த அளவுக்கு அன்னியோன்னியம் இப்போது எங்களுக்குள் இல்லை” என நீங்கள் நினைத்தால் அதற்கு உங்கள் தினசரி அலுவல்கள்தான் காரணமா என யோசித்துப் பாருங்கள். அன்றாட வேலைகளில் மூழ்கிப்போவதால் நீங்களும் உங்கள் துணையும் இரு தீவுகளாக ஆகிவிடாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். உண்மைதான், சில சமயங்களில் வேலை காரணமாகவோ அல்லது தவிர்க்க முடியாத மற்ற விஷயங்கள் காரணமாகவோ நீங்கள் இருவரும் அதிக நேரம்
செலவிட முடியாமல் இருக்கலாம். ஆனால், நீங்கள் மனது வைத்தால் எந்தெந்த விஷயங்களில் நேரத்தைக் குறைக்க முடியுமோ அந்தந்த விஷயங்களில் நேரத்தைக் குறைக்கலாம், குறைக்கவும் வேண்டும். உதாரணமாக பொழுதுபோக்கு, நண்பர்களோடு செலவிடும் நேரம் போன்றவற்றைக் குறைத்துக்கொள்ளலாம்.என்றாலும், சிலர் தங்களுடைய துணையோடு நேரம் செலவிடக்கூடாது என்பதற்காகவே கூடுதல் நேரம் வேலை செய்கிறார்கள் அல்லது பொழுதுபோக்கில் ஈடுபடுகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் வேண்டுமென்றே தங்கள் துணையிடமிருந்து விலகிச் செல்கிறார்கள். உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இதுதான் பிரச்சினை என்றால், அதற்கான காரணம் என்னவென்பதைக் கண்டறிந்து அதைச் சரிசெய்ய முயற்சி செய்யுங்கள். உங்களிடையே உள்ள இறுக்கத்தைக் குறைத்து நெருக்கத்தைக் கூட்ட ஒன்றுசேர்ந்து நேரம் செலவழியுங்கள்; அப்போதுதான் உங்களுக்குள் அன்னியோன்னியம் அதிகமாகும், முழுமையான கருத்தில் நீங்கள் இருவரும் ‘ஒரே உடலாக இருப்பீர்கள்.’—ஆதியாகமம் 2:24, NW.
இந்த அறிவுரையைச் சிலர் எப்படிக் கடைப்பிடித்திருக்கிறார்கள்: ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தம்பதியான ஆண்ட்ரூவும் a டான்ஜீயும் மண வாழ்வில் அடியெடுத்து வைத்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆண்ட்ரூ சொல்கிறார்: “எப்போது பார்த்தாலும் வேலை, வேலை என ஓடிக்கொண்டிருப்பது... நண்பர்களோடு எக்கச்சக்கமாக நேரம் செலவழிப்பது... பொழுதுபோக்கில் மிதமிஞ்சி ஈடுபடுவது... இவையெல்லாம் எங்களுடைய திருமண வாழ்க்கையைக் குழிதோண்டி புதைத்துவிடும் என்பதை நான் நன்றாகவே புரிந்துகொண்டேன். அதனால், நாங்கள் இருவரும் மனம்விட்டுப் பேச நேரம் ஒதுக்குகிறோம்.”
அமெரிக்காவைச் சேர்ந்த டேவ், ஜேன் தம்பதி திருமண பந்தத்தில் இணைந்து 22 வருடங்கள் ஆகிவிட்டன. இவர்கள் ஒவ்வொரு நாளும் மாலையில் அரை மணி நேரத்தை ஒதுக்கி அன்றைய நிகழ்வுகளையும் தங்களுடைய எண்ணங்களையும் பகிர்ந்துகொள்கிறார்கள். ஜேன் சொல்கிறார்: “அது எங்களுக்கே எங்களுக்கான நேரம்; அந்தச் சமயத்தில் வேறு எதுவுமே எங்களுக்கு இடைஞ்சலாக வர நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.”
2
மனக்குறை:
“நான் எதிர்பார்க்கிற மாதிரி அவர்(ள்) என்னிடம் நடந்துகொள்வதில்லை.”
பைபிள் நெறி:
“ஒவ்வொருவனும் தனக்குப் பிரயோஜனமானதை நாடாமல், மற்றவர்களுக்குப் பிரயோஜனமானதையே நாட வேண்டும்.”—1 கொரிந்தியர் 10:24.
தன்னுடைய திருமண பந்தத்திலிருந்து தனக்கு என்ன கிடைக்கும் என்பதிலேயே குறியாக இருக்கும் ஒரு ஆணோ பெண்ணோ ஒருபோதும் சந்தோஷமாக இருக்க மாட்டார், அவர் எத்தனை தடவைத் திருமணம் செய்தாலும் சரி. ஆனால், ஒருவர் தன் துணை தனக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியே யோசிக்காமல் தான் அவரு(ளு)க்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி யோசித்தால் திருமணம் வெற்றி சிறக்கும். ஏன் இப்படி யோசிக்க வேண்டும் என்பதற்கான காரணத்தை இயேசு சொல்கிறார்: “பெற்றுக்கொள்வதைவிடக் கொடுப்பதிலேயே அதிகச் சந்தோஷம் இருக்கிறது.”—அப்போஸ்தலர் 20:35.
இந்த அறிவுரையைச் சிலர் எப்படிக் கடைப்பிடித்திருக்கிறார்கள்: மெக்சிகோவில் வசிக்கும் மரியா, மார்ட்டின் தம்பதியரை எடுத்துக்கொள்ளுங்கள். அவர்களுக்கு கல்யாணமாகி 39 வருடங்கள் ஓடிவிட்டன. அவர்களுடைய மண வாழ்க்கையில் எப்போதுமே தென்றல் வீசிக்கொண்டிருக்கவில்லை; அவ்வப்போது புயலும் அடித்தது. அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தைப் பற்றி மரியா சொல்கிறார்: “ஒரு சமயம், எங்களுக்குள்ளே சூடான வாக்குவாதம் ஏற்பட்டது. பேச்சுவாக்கில் நான் மார்டினிடம் ஏதோ மரியாதையில்லாமல் பேசிவிட்டேன். அவருக்குப் பயங்கர கோபம் வந்துவிட்டது. ‘நான் வேண்டுமென்றே சொல்லவில்லை, கோபத்தில் தெரியாமல் சொல்லிவிட்டேன்’ என்பதை அவருக்குப் புரியவைக்க எவ்வளவோ முயற்சி செய்தேன். ஆனால், அதை கேட்க அவர் தயாராக இல்லை.” இப்போது, மார்டின் சொல்வதைக் கேளுங்கள்: “அப்படிச் சண்டை போட்டபோது ‘இனி எங்க இரண்டு பேருக்கும் ஒத்தே வராது, சமரசம் பண்ணுவதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை’ என்று நினைத்தேன்.”
தன் மனைவி தன்னை மதிக்க வேண்டுமென்று மார்ட்டின் எதிர்பார்த்தார். மரியாவோ தன் கணவன் தன்னைப் புரிந்துகொள்ள வேண்டுமென நினைத்தார். இரண்டு பேருக்குமே அவர்கள் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை.
இந்தச் சண்டையை அவர்கள் எப்படித் தீர்த்துக்கொண்டார்கள்? மார்ட்டின் சொல்கிறார்: “என் கோபம் தணியும்வரை நான் அமைதியாக இருந்தேன். மரியாதையையும் கனிவையும் காட்டும்படி பைபிள் சொல்கிற ஞானமான அறிவுரையைக் கடைப்பிடிக்க நாங்கள் முடிவு செய்தோம். எத்தனை முறை பிரச்சினைகள் வந்தாலும்சரி, உதவி கேட்டு கடவுளிடம் ஜெபம் செய்து, பைபிளிலுள்ள அறிவுரையைக் கடைப்பிடித்தால் அவற்றைத் தீர்க்க முடியும் என்பதை இத்தனை வருட அனுபவத்தில் நாங்கள் கற்றுக்கொண்டிருக்கிறோம்.”—ஏசாயா 48:17, 18; எபேசியர் 4:31, 32.
3
மனக்குறை:
“அவரு(ளு)டைய பொறுப்புகளை அவர்(ள்) சரிவர செய்வதில்லை.”
பைபிள் நெறி:
“நாம் ஒவ்வொருவரும் நம்மைக் குறித்துக் கடவுளிடம் கணக்குக் கொடுப்போம்.”—ரோமர் 14:12.
திருமண வாழ்க்கை வெற்றி சிறக்க ஒருவர் மட்டுமே உழைக்கும்போது ஓரளவுக்குத்தான் வெற்றி கிடைக்கும். அப்படியிருக்க, இருவருமே உழைக்காமல் ஒருவருக்கொருவர் குறை சொல்லிக்கொண்டிருக்கும்போது வெற்றி என்பது எட்டாக் கனியாகிவிடும்.
உங்களுடைய துணை எதையெல்லாம் செய்வதில்லை என்பதைப் பற்றியே நீங்கள் சதா யோசித்துக்கொண்டிருந்தால், உங்கள் வாழ்க்கையில் நீங்களே மண் அள்ளிப் போட்டுக்கொள்வீர்கள். அதுவும், உங்கள் துணை தன் பொறுப்புகளைச் செய்யாததைச் சாக்காக வைத்துக்கொண்டு நீங்களும் உங்கள் பொறுப்புகளைத் தட்டிக்கழித்தால், இந்த கதிக்குத்தான் ஆளாவீர்கள். ஆனால், நல்ல கணவனாகவோ நல்ல மனைவியாகவோ இருக்க நீங்கள் முயற்சி செய்தால், உங்கள் மண வாழ்வில் வசந்தம் வீச வாய்ப்பிருக்கிறது. (1 பேதுரு 3:1-3) அதைவிட முக்கியமாக, கடவுள் செய்த திருமண ஏற்பாட்டை நீங்கள் மதிக்கிறீர்கள் என்பதைக் காட்டுவீர்கள்; நீங்கள் செய்வதைப் பார்த்து கடவுளும் சந்தோஷப்படுவார்.—1 பேதுரு 2:19.
இந்த அறிவுரையைச் சிலர் எப்படிக் கடைப்பிடித்திருக்கிறார்கள்: கிம் என்பவரும் அவருடைய கணவரும் கொரியாவில் வாழ்கிறார்கள்; அவர்களுக்குத் திருமணமாகி 38 வருடங்கள் ஆகிவிட்டன. கிம் சொல்கிறார்: “சில சமயம் என் கணவர் என்னிடம் கோபித்துக்கொண்டு பேசாமலேயே இருந்துவிடுவார்; அவர் ஏன் அப்படி இருக்கிறார் என்றே எனக்குப் புரியாது. அவர் என்மேல் வைத்திருந்த பாசம் கொஞ்சம்கொஞ்சமாகக் குறைந்துவருகிறதோ என எனக்குச் சந்தேகம் வரும். சில சமயங்களில் நான் இப்படியும் நினைப்பேன்: ‘அவர் என்னைப் புரிந்துகொள்ளாதபோது நான் மட்டும் அவரைப் புரிந்துகொள்ள வேண்டுமென அவர் எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்?’”
தன்னுடைய கணவர் தன்னைப் புரிந்துகொள்ளாமல் இப்படி அநியாயமாக நடந்துகொள்வதைப் பற்றியே கிம் யோசித்துக்கொண்டிருக்கவில்லை. அதற்குப் பதிலாக, தான் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி யோசித்தார். கிம் சொல்கிறார்: “கோபமாக இருப்பதற்குப் பதிலாக, சமாதானம் பண்ணுவதற்கு நான் முதல்படி எடுப்பது நல்லது என்பதைப் புரிந்துகொண்டேன். கடைசியில், நாங்கள் இரண்டு பேருமே அமைதியாகப் பேசி பிரச்சினையைத் தீர்த்துக்கொள்வோம்.”—யாக்கோபு 3:18.
4
மனக்குறை:
“என் மனைவி எனக்கு அடங்கி நடப்பதில்லை.”
பைபிள் நெறி:
“ஆணுக்குக் கிறிஸ்து தலையாக இருக்கிறார்.”—1 கொரிந்தியர் 11:3.
மனைவி தனக்கு அடங்கி நடப்பதில்லையென ஒரு கணவர் நினைத்தால், அவர் முதலில், ‘என் தலைவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு அடங்கி நடக்க நான் மனமுள்ளவராக இருக்கிறேனா?’ என கேட்டுக்கொள்ள வேண்டும். அப்படி அடங்கி நடக்க ஒரு கணவர் என்ன செய்ய வேண்டும்? இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும்.
“கணவர்களே, சபைக்காகக் கிறிஸ்து தம்மையே அர்ப்பணிக்கும் அளவுக்கு அதன்மீது அன்பு காட்டியதுபோல் நீங்களும் உங்கள் மனைவிமீது தொடர்ந்து அன்பு காட்டுங்கள்” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (எபேசியர் 5:25) இயேசு தம்முடைய சீடர்களை ‘அடக்கி ஆளவில்லை.’ (மாற்கு 10:42-44) அவர்களுக்குத் தெளிவான அறிவுரைகளைக் கொடுத்தார், திருத்த வேண்டிய சமயத்தில் அவர்களைத் திருத்தினார். ஆனால், ஒருபோதும் அவர்களிடம் எரிந்து விழவில்லை, அளவுக்குமீறி எதிர்பார்க்கவுமில்லை. அதற்குப் பதிலாக, எப்போதும் அவர்களிடம் கனிவாக நடந்துகொண்டார். (மத்தேயு 11:29, 30; மாற்கு 6:30, 31; 14:37, 38) தம்முடைய விருப்பங்களைவிட அவர்களுடைய விருப்பங்களுக்கே முதலிடம் கொடுத்தார்.—மத்தேயு 20:25-28.
ஒரு கணவர் தன்னையே இப்படிக் கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘குடும்பத் தலைவன் என்றால் இப்படித்தான்... மனைவி என்றால் இவ்வளவுதான்... என என் சமுதாயம் வகுத்திருக்கும் நெறிகளுக்கு இசைவாக நடக்கிறேனா அல்லது பைபிளிலுள்ள அறிவுரைகளும் உதாரணங்களும் காட்டுகிற வழியில் நடக்கிறேனா?’ உதாரணமாக, தன் கணவனுடைய கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாத பட்சத்தில், ஒரு மனைவி அதை உறுதியாகவும் மரியாதையாகவும் வெளிப்படுத்துகிறார் என்றால், அவரைப் பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்? ஆபிரகாமின் மனைவியான சாராள் அடிபணிந்து நடப்பதில் தலைசிறந்த உதாரணம் என பைபிள் சொல்கிறது. (1 பேதுரு 3:1, 6) என்றாலும், தேவைப்பட்ட சமயத்தில் அவள் தன் கருத்தை வெளிப்படையாகச் சொன்னாள்; உதாரணமாக, ஒரு சமயம் குடும்பத்தின் அமைதியைக் குலைத்த சில பிரச்சினைகளை ஆபிரகாம் புரிந்துகொள்ள தவறியபோது, அவள் தன் மனதில் பட்டதை வெளிப்படையாகச் சொன்னாள்.—ஆதியாகமம் 16:5; 21:9-12.
சாராள் தன் கருத்தை வெளிப்படுத்திய சமயங்களில், ‘உன் வேலையைப் பார்த்துகிட்டு பேசாமல் இரு’ என்று ஆபிரகாம் அவருடைய வாயை அடைத்துவிடவில்லை. சாராளிடம் ஒரு கொடுங்கோலரைப் போல நடக்கவில்லை. அதேபோல், பைபிள் அறிவுரைகளைப் பின்பற்றுகிற ஒரு கணவர் தன் மனைவியிடம், ‘நான் வைச்சதுதான் சட்டம், அதுக்கு நீ அடங்கி நடக்கிறதா இருந்தால் இங்க இரு’ என்றெல்லாம் சொல்லி மிரட்டமாட்டார். தன்னுடைய தலைமை ஸ்தானத்தைக் கனிவான முறையில் காட்டுவதன் மூலம் தன் மனைவியின் மதிப்பைச் சம்பாதித்துக்கொள்வார்.
இந்த அறிவுரையைச் சிலர் எப்படிக் கடைப்பிடித்திருக்கிறார்கள்: இங்கிலாந்துவாசியான ஜேம்ஸுக்கு மணமாகி எட்டு வருடங்களாகிவிட்டது. அவர் சொல்கிறார்: “என்னுடைய மனைவியின் கருத்தைக் கேட்டுவிட்டுத்தான் எந்தத் தீர்மானத்தையும் எடுக்க முயற்சி செய்கிறேன். என்னைப் பற்றி மட்டுமே யோசிக்காமல், அவளுக்கு என்ன பிடிக்குமென்று தெரிந்துகொண்டு அதன்படியும் செய்ய முயற்சி செய்கிறேன்.”
அமெரிக்காவில் வசிக்கும் ஜார்ஜ் 59 வருடங்களாக மணவாழ்க்கையை ருசித்து வருகிறார். “என் மனைவியை நான் எப்பவுமே மட்டமாக நினைத்ததில்லை, புத்திசாலியான, திறமைசாலியான ‘பார்ட்னராக’ கருதுகிறேன்” என்று அவர் சொல்கிறார்.—நீதிமொழிகள் 31:10.
5
மனக்குறை:
“என் கணவர் எதையும் தானாக செய்யமாட்டார், எல்லாவற்றையும் நான் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.”
பைபிள் நெறி:
“புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள்; புத்தியில்லாத ஸ்திரீயோ தன் கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள்.”—நீதிமொழிகள் 14:1.
உங்கள் கணவர் குடும்பத்தை முன்நின்று நடத்தவோ தீர்மானங்கள் எடுக்கவோ தயங்கினால்: ஒன்று, (1) அவருடைய குறைகளை நீங்கள் சதா சுட்டிக்காட்டிக்கொண்டே இருக்கலாம்; இல்லையென்றால், (2) அவருடைய தலைமை ஸ்தானத்தை தட்டிப்பறித்துக்கொள்ளலாம்; அல்லது (3) அவர் எடுக்கிற சின்ன சின்ன முயற்சிகளுக்கும்கூட அவரைப் மனதாரப் பாராட்டலாம். முதலில் சொன்னபடியோ, இரண்டாவதாகச் சொன்னபடியோ நீங்கள் நடந்தால், உங்கள் கையாலேயே உங்களுடைய வீட்டை இடித்துப்போடுவீர்கள், அதாவது குடும்ப வாழ்க்கையை குலைத்துப் போடுவீர்கள். மூன்றாவதாகச் சொன்னபடி நடந்தால், உங்கள் வீட்டைக் கட்டுவீர்கள், அதாவது உங்கள் திருமண பந்தத்தைப் பலப்படுத்துவீர்கள்.
ஆண்களைப் பொறுத்தவரை, மனைவிகளிடமிருந்து அன்பைவிட மரியாதையையே அதிகமாக எதிர்பார்க்கிறார்கள். எனவே, குடும்பத்தை நடத்துவதற்காக அவர் எடுக்கிற முயற்சிகளையெல்லாம் நீங்கள் பாராட்டினீர்கள் என்றால் நீங்கள் அவரை மதிக்கிறீர்கள் என்பதை அவர் புரிந்துகொள்வார், தன் பொறுப்புகளை இன்னும் சிறப்பாகவும் செய்வார். சில சமயங்களில், உங்கள் கணவரோடு உங்களுக்குக் கருத்துவேறுபாடு வரலாம். அப்போது, நீங்கள் இருவரும் அதைப் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும். (நீதிமொழிகள் 18:13) நீங்கள் தேர்ந்தெடுக்கிற வார்த்தைகளும் பேசுகிற தொனியும் உங்கள் மணவாழ்க்கையை அலங்கரிக்கலாம் அல்லது அலங்கோலமாக்கலாம். (நீதிமொழிகள் 21:9; 27:15) உங்களுடைய கருத்துகளை மரியாதையோடு தெரியப்படுத்துங்கள்; அப்போது, நீங்கள் எதிர்பார்ப்பதைப் போலவே அவர் குடும்பத்தை நன்றாக நடத்தலாம்.
இந்த அறிவுரையைச் சிலர் எப்படிக் கடைப்பிடித்திருக்கிறார்கள்: அமெரிக்காவில் வாழும் மிஷெல் 30 வருடங்களுக்கு முன்பு மணவாழ்வில் அடியெடுத்து வைத்தார். அவர் சொல்கிறார்: “என்னுடைய அம்மா ஆண்துணையே இல்லாமல், என்னையும் என் தங்கச்சிகளையும் ஆளாக்கினார்; தானாகவே முடிவெடுத்துச் செயல்படுகிற திடமான பெண்மணியாக இருந்தார். அம்மாவின் குணங்கள் எனக்குள்ளேயும் அவ்வப்போது எட்டிப்பார்க்கும். அதனால், கணவனுக்கு அடிபணிந்து நடக்கிற விஷயத்தில் நான் எப்பவுமே உழைக்க வேண்டியிருக்கிறது. அதுவும் முக்கியமாக, நானாகவே எந்தத் தீர்மானத்தையும் எடுக்காமல் என்னுடைய கணவனின் அபிப்பிராயத்தைக் கேட்டுத் தீர்மானம் எடுக்க வேண்டும் என்பதை நான் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொண்டு வருகிறேன்.”
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரேச்சல், 21 வருடங்களுக்கு முன்பு மார்க் என்பவரைக் கரம்பிடித்தார். அவருக்கும் இதேதான் பிரச்சினை. “எங்க அம்மா எங்க அப்பாவுக்கு அடங்கி நடந்ததாக சரித்திரமே இல்லை. இரண்டு பேரும் எப்பப் பார்த்தாலும் சண்டைப் போட்டுக்கொண்டிருப்பார்கள், கன்னாபின்னாவென்று திட்டிக்கொண்டிருப்பார்கள். கல்யாணமான புதிதில் நான் எங்க அம்மா மாதிரியே இருந்தேன். வருஷங்கள் உருண்டோட... மரியாதைக் காட்டும்படி பைபிள் சொல்கிற அறிவுரையைக் கடைப்பிடிப்பது மிகவும் பயனுள்ளது என்பதைப் புரிந்துகொண்டேன். இப்போது எங்களுடைய மண வாழ்க்கை ரொம்ப ரம்மியமாக இருக்கிறது” என்கிறார் ரேச்சல்.
6
மனக்குறை:
“அவர்(ள்) செய்கிற சில விஷயங்களைப் பார்த்தால் எனக்கு எரிச்சலாக இருக்கிறது.”
பைபிள் நெறி:
“ஒருவர்மீது ஒருவருக்கு ஏதாவது மனக்குறை இருந்தால், ஒருவரையொருவர் பொறுத்துக்கொள்ளுங்கள், தாராளமாக மன்னியுங்கள்.”—கொலோசெயர் 3:13.
கல்யாணத்திற்கு முன்பு, உங்களுடைய வருங்காலத் துணையின் நல்ல குணங்கள்தான் உங்கள் கண்ணுக்குப் பளிச்சென்று தெரிந்திருக்கும், குற்றங்குறைகளே கண்ணில்பட்டிருக்காது.
இப்போதும் அதேபோல் பார்க்க நீங்கள் ஏன் முயற்சிக்கக்கூடாது? உங்கள் துணைவரிடம் உங்களுக்குப் பிடிக்காத சில விஷயங்கள் இருக்கும் என்பது உண்மைதான். என்றாலும், ‘நான் அவரு(ளு)டைய எந்த குணங்களை உன்னிப்பாய் கவனிக்கிறேன், நல்ல குணங்களையா கெட்ட குணங்களையா?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்.மற்றவர்களிடம் நாம் பார்க்கிற குறைகளைப் பெரிதுபடுத்தக்கூடாது என்ற குறிப்பை வலியுறுத்த வலிமையான ஓர் உதாரணத்தை இயேசு பயன்படுத்தினார். “உங்கள் கண்ணிலுள்ள மரக்கட்டையைக் [உத்திரத்தை] கவனிக்காமல் உங்கள் சகோதரனுடைய கண்ணிலுள்ள தூசியை ஏன் பார்க்கிறீர்கள்?” என்று கேட்டார். (மத்தேயு 7:3, அடிக்குறிப்பு) தூசி ரொம்ப ரொம்ப சிறியது, உத்திரமோ ரொம்ப ரொம்ப பெரியது. உத்திரத்தோடு ஒப்பிட தூசி ஒன்றுமே இல்லை. அப்படியென்றால் இயேசு என்ன குறிப்பை உணர்த்தினார்: “உங்கள் கண்ணிலுள்ள மரக்கட்டையை [அதாவது, உத்திரத்தை] எடுத்துப்போடுங்கள், அப்போதுதான் உங்கள் சகோதரனுடைய கண்ணிலிருந்து தூசியை எப்படி எடுப்பது என்று உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்.”—மத்தேயு 7:5.
இந்த உதாரணத்தைச் சொல்வதற்கு முன்பு இயேசு ஒரு முக்கிய எச்சரிப்பைக் கொடுத்தார். “நீங்கள் நியாயந்தீர்க்கப்படாமல் இருப்பதற்கு மற்றவர்களை நியாயந்தீர்ப்பதை நிறுத்துங்கள்; மற்றவர்களை எப்படி நியாயந்தீர்க்கிறீர்களோ அப்படித்தான் நீங்களும் நியாயந்தீர்க்கப்படுவீர்கள்” என்று சொன்னார். (மத்தேயு 7:1, 2) உங்கள் கண்ணிலுள்ள உத்திரத்தை அதாவது, உங்களுடைய குற்றங்குறைகளை கடவுள் மன்னிக்க வேண்டுமென நீங்கள் நினைத்தால், உங்கள் துணையுடைய குற்றங்குறைகளை நீங்களும் மன்னிக்கத்தானே வேண்டும்!—மத்தேயு 6:14, 15.
இந்த அறிவுரையைச் சிலர் எப்படிக் கடைப்பிடித்திருக்கிறார்கள்: இங்கிலாந்தில் வாழும் ஜென்னி, ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு சைமனின் வாழ்க்கைத் துணைவியானார். ஜென்னி சொல்கிறார்: “அவர் எதையுமே திட்டம்போட்டுச் செய்ய மாட்டார்; எல்லாவற்றையுமே கடைசி நேரத்தில்தான் செய்வார். இதுதான் அவரிடம் எனக்குப் பிடிக்காத விஷயம். ஆனால், வேடிக்கை என்னவென்றால், நாங்கள் காதலித்த சமயத்தில், அவர் சட்சட்-என்று முடிவெடுத்ததுதான் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. ஆனால், அவரை மட்டுமே குற்றம் சொல்ல முடியாது; என்னிடமும் குறை இருக்கிறது. நானும் மற்றவர்களை ஆட்டிப்படைக்க வேண்டுமென நினைப்பேன். அதனால், நானும் சரி சைமனும் சரி, ஒருத்தருக்கொருத்தர் குறைகளைப் பெரிதுபடுத்தாதிருக்க கற்றுக்கொண்டிருக்கிறோம்.”
மேலே குறிப்பிடப்பட்டுள்ள மிஷலின் கணவரான கர்ட் இவ்வாறு சொல்கிறார்: “துணையிடம் உங்களுக்குப் பிடிக்காத விஷயங்களை மட்டுமே நீங்கள் பார்த்துக்கொண்டிருந்தால், அது இன்னும் இன்னும் பெரிதாகத் தெரியும். மிஷலிடம் எந்த குணங்களைப் பார்த்து நான் ஆரம்பத்தில் மயங்கினேனோ அந்த குணங்களை மட்டுமே பார்க்க இப்போதும் முயற்சி செய்கிறேன்.”
வெற்றியின் ரகசியம்
உங்களுடைய மண வாழ்வில் தலைதூக்குகிற பிரச்சினைகளைத் தவிர்க்க முடியாவிட்டாலும், அவற்றைத் தகர்க்க முடியும் என்பதை மேலேயுள்ள உதாரணங்கள் காட்டுகின்றன. அப்படியானால், வெற்றிகரமான மணவாழ்வின் ரகசியம் என்ன? கடவுள்மீது அன்பை வளர்த்துக்கொண்டு பைபிளிலுள்ள அறிவுரைகளைக் கடைப்பிடிக்க மனமுள்ளவர்களாக இருப்பதே.
அலெக்ஸும் இட்டோகனும் நைஜீரியாவில் வாழ்கிறார்கள்; இவர்களுக்குத் திருமணமாகி 20 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இவர்கள் வெற்றிகரமான மண வாழ்க்கையின் ரகசியத்தைக் கற்றிருக்கிறார்கள். அலெக்ஸ் சொல்கிறார்: “தம்பதியர் பைபிள் நெறிகளைக் கடைப்பிடிக்க உறுதிபூண்டால் மலைபோல வருகிற பிரச்சினைகள்கூட பனிபோல விலகிப்போய்விடும் என்பதை நான் அனுபவத்தில் அறிந்திருக்கிறேன்.” அவரது மனைவி சொல்கிறார்: “எப்போதும் ஒன்றுசேர்ந்து ஜெபம் செய்வது எவ்வளவு முக்கியம் என்பதை நாங்கள் புரிந்துகொண்டிருக்கிறோம். அதோடு, உள்ளப்பூர்வமாக நேசிக்கும்படியும் ஒருவருக்கொருவர் பொறுமையை காட்டும்படியும் பைபிள் சொல்கிற அறிவுரையைப் பின்பற்றுவது எவ்வளவு முக்கியம் என்பதையும் புரிந்துகொண்டிருக்கிறோம். புதிதாகத் திருமணமானபோது இருந்தளவுக்கு இப்போது எங்களுக்குள் பிரச்சினைகள் இல்லை.”
உங்கள் மண வாழ்வு மணம் வீச, பைபிளிலுள்ள காலத்துக்கேற்ற அறிவுரைகள் எப்படி உதவும் என்பதைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? அப்படியானால், யெகோவாவின் சாட்சிகளிடம் கேளுங்கள்; பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்திலிருந்து இந்த விஷயத்தை அவர்கள் உங்களோடு கலந்தாலோசிப்பார்கள். b (w11-E 02/01)
[அடிக்குறிப்புகள்]
a சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
b சந்தோஷமான குடும்ப வாழ்க்கைக்கு வழியைத் தெரிந்துகொள்ள இந்தப் புத்தகத்தில் 14-ஆம் அதிகாரத்தை வாசித்துப் பாருங்கள்; இது யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
[பக்கம் 4-ன் படம்]
நாங்கள் ஒன்றுசேர்ந்து நேரம் செலவிடுகிறோமா?
[பக்கம் 5-ன் படம்]
என் துணையிடமிருந்து நான் எதை எதிர்பார்க்கிறேனோ அதைவிட அதிகத்தை நான் அவரு(ளு)க்குக் கொடுக்கிறேனா?
[பக்கம் 6-ன் படம்]
பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நான் முதல்படி எடுக்கிறேனா?
[பக்கம் 7-ன் படம்]
தீர்மானம் எடுப்பதற்கு முன்பு என்னுடைய மனைவியின் கருத்தைக் கேட்கிறேனா?
[பக்கம் 9-ன் படம்]
என்னுடைய துணையிடமுள்ள நல்ல குணங்களையே பார்க்கிறேனா?