துணையை இழந்தவர்களுக்கு என்ன தேவை? நீங்கள் எவ்வாறு உதவலாம்?
துணையை இழந்தவர்களுக்கு என்ன தேவை? நீங்கள் எவ்வாறு உதவலாம்?
சிறிய வீடு. மங்கலான சமையலறை. மேஜைமீது தட்டுகளையும் பாத்திரங்களையும் இயந்திரத்தனமாக வைத்துக் கொண்டிருக்கிறார் ஜீன். ஏதாவது சாப்பிட்டாக வேண்டுமே என்ற சலிப்பு அவருக்கு. திடீரெனப் பார்த்தால், அங்கு இரண்டு தட்டுகள் இருக்கின்றன. . . . அவர் ஓவென்று அழ ஆரம்பிக்கிறார். பழக்கதோஷத்தில் இரண்டு தட்டுகளை எடுத்து வைத்துவிட்டார்! அவருடைய அன்புக் கணவர் இறந்து இரண்டு வருடங்கள் ஆகியும் இந்நிலை.
கணவனையோ மனைவியையோ பறிகொடுத்தவர்கள் அனுபவிக்கிற கடும் வேதனையை மற்றவர்களால் புரிந்துகொள்ளவே முடியாது. சொல்லப்போனால், நெஞ்சைப் பிழியும் இந்தச் சோகச் சம்பவத்தை மனித மனம் மெல்ல மெல்லத்தான் ஏற்றுக்கொள்ளும். 72 வயதான பெரல் என்பவரால் தன்னுடைய கணவரின் திடீர் மரணத்தை ஜீரணிக்கவே முடியவில்லை. “அது கனவு மாதிரி இருந்தது. அவர் இனிமேல் வீட்டிற்கு வர மாட்டார் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை” என்கிறார் அவர்.
சில சமயங்களில், ஒருவருடைய கையோ காலோ வெட்டி எடுக்கப்பட்ட பிறகும்கூட அது இன்னும் அங்கேயே இருப்பதுபோல் அவர் “உணருவார்.” அது போலவே, துணையை இழந்து தவிப்பவர்கள், சிலசமயங்களில் அவரை ஒரு கூட்டத்தில் “பார்ப்பார்கள்”; அல்லது, அவர் இருப்பதாக நினைத்துக்கொண்டு ஏதாவது பேசுவார்கள்!
இந்தப் பரிதாபமான நிலையைப் பார்க்கிற நண்பர்களுக்கும் குடும்பத்தாருக்கும் என்ன செய்வதென்று பெரும்பாலும் தெரிவதில்லை. மரணத்தில் தன் துணையைப் பறிகொடுத்த யாராவது ஒருவரை உங்களுக்குத் தெரியுமா? அப்படியானால், அவருக்கு நீங்கள் எவ்வாறு உதவலாம்? துக்கத்திலிருந்து மீள அப்படிப்பட்டவர்களுக்கு உதவிசெய்ய நீங்கள் என்னென்ன விஷயங்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்? அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக சகஜ நிலைக்குத் திரும்ப நீங்கள் எவ்வாறு உதவலாம்?
செய்யக்கூடாதவை
துணையை இழந்து தவிப்போரின் நிலையைப் பார்த்து அவர்களுடைய நண்பர்களும் குடும்பத்தாரும் கவலைப்படலாம்; அதோடு, அவர்கள்மேல் இருக்கும் அக்கறையினால், சீக்கிரத்தில் அவர்களை சகஜ நிலைக்குக் கொண்டுவர ஏதாவது முயற்சி செய்யலாம். இருந்தாலும், துணையை ஆதியாகமம் 37:34, 35; யோபு 10:1.
இழந்த 700 ஆண்கள் மற்றும் பெண்களிடம் ஆய்வு நடத்திய ஓர் ஆராய்ச்சியாளர் இவ்வாறு எழுதினார்: “‘இவ்வளவு’ காலத்திற்குத்தான் துக்கப்பட வேண்டும் என்ற அளவு எதுவும் இல்லை.” ஆகவே, துணையை இழந்தவரின் துக்கத்தை அணை போட்டுத் தடுப்பதற்குப் பதிலாக, அவர் அதை வெளிப்படுத்த காலம் அனுமதியுங்கள்.—சவ அடக்க ஏற்பாடுகளின்போது நீங்கள் உதவ நினைப்பதில் எந்தத் தவறும் இல்லை; ஆனால், எல்லாக் காரியங்களையும் நீங்களே செய்ய வேண்டும் என்று நினைக்காதீர்கள். மனைவியை இழந்த 49 வயதான பௌல் என்பவர் இவ்வாறு சொல்கிறார்: “சவ அடக்க ஏற்பாடுகளைச் செய்ய எனக்கு நடைமுறையான உதவிகளை அளித்தவர்கள், முக்கியமான சில தீர்மானங்கள் எடுக்க வேண்டிய பொறுப்பை என்னிடமே விட்டுவிட்டது நல்ல விஷயம் என்று நினைக்கிறேன். என் மனைவியுடைய சவ அடக்க நிகழ்ச்சியில் எல்லாமே நல்லபடியாக நடக்க வேண்டுமென்று நினைத்தேன். அவளைக் கௌரவிக்க எனக்குக் கிடைத்த கடைசி வாய்ப்பாக அதை நான் கருதினேன்.”
என்றாலும், தேவையான உதவிகளைச் செய்யும்போது அநேகர் நன்றி தெரிவிக்கிறார்கள். ஐலீன் என்ற 68 வயது விதவை இவ்வாறு சொல்கிறார்: “என்னால் எதையும் சரியாக யோசிக்க முடியாததால், சவ அடக்கத்திற்கு ஏற்பாடு செய்வதும் பேப்பர் வேலைகளை முடிப்பதும் ரொம்பச் சிரமமாக இருந்தது. நல்ல வேளையாக, என் மகனும் மருமகளும் எனக்குப் பக்கபலமாக இருந்தார்கள்.”
மேலும், இறந்தவரைப் பற்றிப் பேச பயப்படாதீர்கள். முன்னால் குறிப்பிடப்பட்ட பெரல் இவ்வாறு சொல்கிறார்: “என் நண்பர்கள் எனக்குக் கொடுத்த ஆதரவுக்கு அளவே இல்லை. இருந்தாலும், என் கணவர் ஜானைப் பற்றிப் பேசுவதை அநேகர் தவிர்த்தார்கள். அவர் ஏதோ இந்த உலகத்தில் வாழாததுபோல் அவர்கள் நடந்து கொண்டார்கள்; இது என் மனதிற்கு வருத்தமாக இருந்தது.” ஒருவர் நாளடைவில், இறந்துபோன தன் துணையைப் பற்றி மனந்திறந்து பேச விரும்பலாம். இறந்தவர் செய்த ஒரு அன்பான செயலோ வேடிக்கையான செயலோ உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? அப்படியென்றால், அதை அவருடைய துணையிடம் சொல்லுங்கள்; சொன்னால் என்ன நினைப்பாரோ என்று பயந்து சொல்லாமல் இருந்துவிடாதீர்கள். நீங்கள் சொல்வதைக் கேட்கும் மனநிலையில் அந்தத் துணை இருந்தால், இறந்துபோனவரிடம் உங்களுக்கு என்ன பிடித்திருந்தது என்பதைச் சொல்லுங்கள்; அதோடு, அவருடைய மறைவு உங்களுக்கு எவ்வளவு பெரிய இழப்பு என்பதையும் சொல்லுங்கள். இப்படிச் செய்வது, மற்றவர்களும் தன்னைப் போல் துக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அந்தத் துணை புரிந்துகொள்ள உதவும்.—ரோமர் 12:15.
வேதனையில் இருப்பவர்களுக்கு ஆறுதல் அளிப்பதாகச் சொல்லிக்கொண்டு அறிவுரையை அள்ளிவீசி அவர்களைத் திக்குமுக்காடச் செய்துவிடாதீர்கள். உடனடியாகத் தீர்மானங்கள் எடுக்கச் சொல்லி அவர்களை வற்புறுத்தாதீர்கள். a மாறாக, பகுத்துணர்வுடன் உங்களையே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘மிகக் கஷ்டமான இந்தக் காலக்கட்டத்தைச் சமாளிக்க என் நண்பருக்கு [அல்லது, உறவினருக்கு] நான் எப்படி உதவி செய்யலாம்?’
செய்ய வேண்டியவை
துணையைப் பறிகொடுத்தவர்களுக்கு ஆரம்பத்தில் நடைமுறையான உதவி தேவைப்படலாம். உங்களால் அவர்களுக்குச் சமைத்துக் கொடுக்க முடியுமா? அவர்களுடன் நேரம் செலவிட முடியுமா? அல்லது, அவர்களைப் பார்க்க வரும் விருந்தாளிகளை உங்கள் வீட்டில் தங்க வைக்க முடியுமா?
துக்கத்திலிருந்தும் தனிமையிலிருந்தும் மீள ஆண்கள் ஒரு விதமாகவும் பெண்கள் ஒரு விதமாகவும் முயற்சி செய்வார்கள் என்பதைக்கூட நீங்கள் புரிந்து வைத்திருக்க வேண்டும். உதாரணத்திற்கு, உலகின் சில பகுதிகளில், மனைவியை இழந்த 18 மாதங்களிலேயே ஐம்பது சதவீதத்திற்கும் அதிகமான ஆண்கள் மறுமணம் செய்துகொள்கிறார்கள்—இது கணவனை இழந்த பெண்களின் விஷயத்தில் சற்று அபூர்வமானது. இந்த வித்தியாசத்திற்குக் காரணம் என்ன?
அநேகர் நினைப்பதுபோல், வெறுமனே சரீரத் தேவைகளையோ பாலியல் தேவைகளையோ பூர்த்தி செய்வதற்காக ஆண்கள் மறுமணம் செய்துகொள்வதில்லை. மனைவியிடம் மட்டுமே மனந்திறந்து பேசுவது ஆண்களுடைய சுபாவமாக இருப்பதால், அவளுடைய மரணத்திற்குப் பிறகு தனிமை அவர்களைப் பயங்கரமாக ஆட்டிப்படைக்க ஆரம்பித்துவிடுகிறது. மறுமணம் செய்வதுதான் தனிமையைச் சமாளிக்க ஒரே வழி என்று அவர்கள் நினைப்பதற்கு இதுவே காரணம்; மனைவி இறந்த கொஞ்சக் காலத்திலேயே புதிய மணவாழ்க்கைக்குள் காலடி எடுத்து வைப்பது ஆபத்து என்று தெரிந்தாலும் அவர்கள் மறுமணம் செய்கிறார்கள். மறுபட்சத்தில், கணவனை இழந்த பெண்கள் தங்கள் மனதில் உள்ள பாரத்தை மற்றவர்களிடம் இறக்கிவைத்து ஆறுதலைக் கண்டடைகிறார்கள். ஆகவே, கணவனை இழந்த பெண்கள் தனிமையின் கொடுமையைச் சிறந்த விதத்தில் சமாளிக்கும் திறனைப் பெற்றிருக்கிறார்கள்.
துணையை இழந்த உங்கள் நண்பரோ உறவினரோ ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி, அவருடைய தனிமை உணர்வைத் தணிக்க நீங்கள் என்ன செய்யலாம்? ஹெலன் என்ற 49 வயது விதவை இவ்வாறு சொல்கிறார்: “உதவ வேண்டும் என்ற எண்ணம் அநேகருக்கு இருக்கிறது, ஆனால் அவர்களாகவே முன்வந்து உதவி செய்வதற்கு முயற்சி எடுப்பதில்லை. ‘ஏதாவது உதவி வேண்டுமென்றால், என்னைக் கேளுங்கள்’ என்றுதான் சொல்வார்கள். ஆனால், ‘நான் கடைக்குப் போகிறேன். என்னுடன் வருகிறீர்களா?’ என்று சிலர் சொன்னபோது நான் சந்தோஷப்பட்டேன்.” பௌல், தன்னுடைய மனைவி புற்றுநோயினால் இறந்துபோன பிறகு மற்றவர்கள் தன்னை அழைத்து உபசரித்ததற்காக ஏன் சந்தோஷப்பட்டார் என்பதைப் பற்றி சொல்கிறார்: “சில நேரங்களில், மற்றவர்களைப் பார்த்துப் பேசவோ உங்களுடைய நிலைமையைப் பற்றிச் சொல்லவோ உங்களுக்குப் பிடிக்காது. ஆனாலும், மற்றவர்களோடு சேர்ந்து பொழுதைக் கழிக்கும்போது உங்கள் மனதிற்கு இதமாக இருக்கும்; தனிமையில் வாட மாட்டீர்கள். உங்கள்மீது மற்றவர்களுக்கு அக்கறை இருப்பதைத் தெரிந்துகொள்ளும்போது உங்கள் மனபாரம் குறையும்.” b
அனுதாபம்—முக்கியமாகப் போற்றப்படுவது எப்போது?
பெரும்பாலான உறவினர்கள் தங்களுடைய அன்றாட வேலைகளை மறுபடியும் கவனிக்க ஆரம்பித்தபோதுதான் ஹெலனுக்கு உணர்ச்சி ரீதியில் அதிக ஆதரவு தேவைப்பட்டது. “ஆரம்பத்தில், நண்பர்களும் உறவினர்களும் உங்கள்கூடவே இருப்பார்கள். ஆனால், அதற்குப் பிறகு அவர்கள் சகஜ வாழ்க்கைக்குத் திரும்பி விடுகிறார்கள். உங்களாலோ அப்படிச் செய்ய முடிவதில்லை” என்கிறார் அவர். அந்த நிஜத்தை உண்மையான நண்பர்கள் புரிந்துகொண்டு, எப்போது வேண்டுமானாலும் உதவத் தயாராக இருப்பதுடன், தொடர்ந்து ஆதரவையும் அளிக்கிறார்கள்.
துணையை இழந்தவர்கள், குறிப்பாகத் திருமண நாள் அல்லது துணையின் மரண நினைவு நாள் போன்ற தினங்களில் மற்றவர்களோடு நேரம் செலவிட வேண்டியிருக்கலாம். திருமண நாளன்று தன் கணவர் இல்லாத குறையைத் தன் மகன் தீர்த்து வைப்பதாக முன்பு குறிப்பிடப்பட்ட ஐலீன் சொல்கிறார்: “ஒவ்வொரு வருடமும் என்னுடைய திருமண நாளன்று என் மகன் கெவின் என்னை வெளியே கூட்டிக்கொண்டு போவான். அவனும் நானும் சேர்ந்து மதிய உணவு சாப்பிடுவோம். இது அம்மாவும் மகனுமாக நாங்கள் சேர்ந்து செலவிடுகிற பொன்னான நேரம்.” ஆகவே, துணையை இழந்தோரை வேதனையில் ஆழ்த்தும் இப்படிப்பட்ட தினங்களில் நீங்கள் ஏன் அவர்களுக்கு விசேஷக் கவனம் செலுத்தக்கூடாது? நீங்களோ மற்றவர்களோ அவர்களுடன் இருக்க ஏற்பாடு செய்யலாம், அல்லவா?—நீதிமொழிகள் 17:17.
துணையை இழந்தவர்கள், தங்களைப் போலவே துணையை இழந்து தவிக்கும் மற்றவர்களுக்கு ஆறுதலளிக்க முடியும் என்பதைக் கண்டிருக்கின்றனர். எட்டு வருடங்களாய் விதவையாக இருக்கும் ஆனீ, மற்றொரு விதவையுடன் பழகியதால் ஏற்பட்ட நன்மையைப் பற்றிச் சொல்கிறார்: “அவருடைய மனவுறுதியைப் பார்த்து நான் நெகிழ்ந்துபோனேன்; நானும் மனதை விட்டுவிடாமல் வாழ வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்.”
ஆம், துணையை இழந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் துக்கத்திலிருந்து மீண்ட பிறகு, மற்றவர்களுக்கு உற்சாகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கிற ஊற்றாகத் திகழ்வார்கள். பைபிளில் சொல்லப்பட்டிருக்கிற இரண்டு விதவைகளான ரூத் என்ற இளம் பெண்ணும் அவளுடைய மாமியார் நகோமியும் ஒருவருக்கொருவர் அளித்த ஆதரவினால் நன்மையடைந்தனர். அவர்கள் ஒருவருக்கொருவர் காண்பித்த அக்கறை, துக்கத்தைத் தாங்கிக் கொள்வதற்கும் கடினமான சூழ்நிலையைச் சமாளிப்பதற்கும் எப்படி உதவியதென மனதைத் தொடும் இந்தப் பதிவு சித்தரிக்கிறது.—ரூத் 1:15-17; 3:1; 4:14, 15.
குணமாக ஒரு காலம்
துணையை இழந்தவர்கள், தங்களுடைய அன்புத் துணையின் நினைவுகளோடு வாழ விரும்பினாலும் தங்களுடைய தற்போதைய தேவைகளையும் கவனித்துக்கொள்ள வேண்டும்; அப்போதுதான் அவர்கள் வாழ்க்கையை மீண்டும் அனுபவிக்க முடியும். “அழ ஒரு காலமுண்டு” என்று ஞானியான சாலொமோன் ராஜா ஒத்துக்கொண்டார். அதேசமயத்தில், குணமாகவும் ‘நகைக்கவும்’ ஒரு காலமுண்டு என்றும் அவர் குறிப்பிட்டார்.—பிரசங்கி 3:3, 4.
கடந்த காலத்தின் நினைவாகவே இருப்பதைத் தவிர்ப்பது எவ்வளவு கடினம் என்பதை முன்னால் குறிப்பிடப்பட்ட பௌல் ஓர் உதாரணத்துடன் விளக்குகிறார்: “ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த இரண்டு இளம் மரங்களைப் போல் நானும் என் மனைவியும் இருந்தோம். ஆனால், திடீரென்று ஒரு மரம் செத்துப்போய் அகற்றப்பட்டது. அதனால், இன்னொன்று உருக்குலைந்து போனது. அதுபோலத்தான் நானும் ஆகிவிட்டேன்.” சிலரோ, இறந்துபோன துணைக்கு உண்மையாயிருக்க வேண்டும் என்று எண்ணி, கடந்த காலத்தின் நினைவாகவே இருக்கின்றனர். வேறு சிலர், தாங்கள் சந்தோஷமாக வாழ்வது இறந்துபோன துணைக்குத் துரோகம் செய்வதாக இருக்குமென்று நினைக்கின்றனர். ஆகவே, அவர்கள் வெளியே செல்வதையோ மற்றவர்களைச் சந்திப்பதையோ தவிர்க்கின்றனர். துணையை இழந்தவர்கள் மீண்டும் சகஜமாக வாழ ஆரம்பிக்க நாம் எப்படிக் கனிவுடன் உதவலாம்?
உணர்வுகளை வெளிப்படுத்த அந்த நபருக்கு உதவுவதே நாம் செய்ய வேண்டிய முதல் படி. 6 வருடங்களுக்கு முன்னால் தன் மனைவியை இழந்த ஹெர்பர்ட் இவ்வாறு சொல்கிறார்: “என் மனைவியைப் பற்றி நான் ஆசை ஆசையாக நினைத்துப் பார்த்துச் சொன்னதையெல்லாம் விருந்தினர்கள் அமைதியாக உட்கார்ந்து கேட்ட சந்தர்ப்பங்கள் என் நெஞ்சைவிட்டு நீங்கவே நீங்காது. நான் சொல்வதையே கேட்டுக்கொண்டிருப்பது கண்டிப்பாக அவர்களுக்குச் சலிப்பாக இருந்திருக்கும்; ஆனாலும், அவர்கள் என்மேல் அனுதாபம் காட்டினார்கள்; அதற்காக நான் ரொம்ப நன்றியுடன் இருக்கிறேன்.” ஒரு முதிர்ச்சியுள்ள நண்பர் எப்போதும் பௌலிடம் சென்று நலம் விசாரித்தது அவரது நெஞ்சைத் தொட்டது. “என் நண்பர் உண்மையான அக்கறையுடன் வந்து சாந்தமாகப் பேசியது எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. அதனால், என் மனதில் இருந்ததையெல்லாம் அவரிடம் கொட்டினேன்” என்கிறார் பௌல்.—நீதிமொழிகள் 18:24.
துக்கத்தில் இருக்கும் நபர், வருத்தம், குற்றவுணர்வு, அல்லது கோபம் போன்ற எதிர்மறையான உணர்வுகளைப் பற்றி மனந்திறந்து பேசும்போது, தன்னுடைய 2 சாமுவேல் 12:19-23.
புதிய சூழ்நிலையை ஏற்றுக்கொள்வதற்கான ஒரு முக்கிய படியை எடுக்கிறார். தாவீது ராஜா தன்னுடைய மிக நெருங்கிய நண்பரான யெகோவா தேவனிடம் தன் மனபாரத்தையெல்லாம் இறக்கிவைத்தார்; இதுதான், அவர் ‘எழுந்திருப்பதற்கான’ பலத்தைப் பெறுவதற்கும், தன்னுடைய மகன் இறந்துவிட்டான் என்ற கசப்பான உண்மையை ஏற்றுக்கொள்வதற்கும் உதவியது.—துணையை இழந்தவர்கள் சகஜ நிலைக்குத் திரும்புவது ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும் காலப்போக்கில் இதை அவர்கள் செய்தாக வேண்டும். நீங்கள் தினமும் கடைக்குப் போகும்போதோ காலார நடந்து போகும்போதோ அவர்களையும் அழைத்துச்செல்ல முடியுமா? ஏதாவது வேலையைச் செய்ய உதவும்படி அவர்களிடம் கேட்க முடியுமா? இது, தனிமை என்னும் சிறையிலிருந்து அவர்களை வெளியே கொண்டு வருவதற்கான இன்னொரு வழி. உதாரணத்திற்கு, அவர்களால் உங்கள் பிள்ளைகளைக் கவனித்துக்கொள்ள முடியுமா, அல்லது ஓர் உணவுப் பதார்த்தத்தைச் செய்ய உங்களுக்குச் சொல்லித்தர முடியுமா? உங்கள் வீட்டில் எதையாவது பழுதுபார்க்க வேண்டியிருந்தால் அவர்களிடம் உதவி கேட்க முடியுமா? இப்படிப்பட்ட உதவிகளை அவர்களிடம் கேட்பது, உற்சாகமளிக்கும் வேலைகளில் அவர்களை ஈடுபடுத்துகிறது; அதோடு, அவர்களுடைய வாழ்க்கைக்கு அர்த்தமிருக்கிறது என்ற நம்பிக்கையையும் தருகிறது.
துணையை இழந்து தவிப்போர் மற்றவர்களிடம் மனந்திறந்து பேசுவதன் மூலம், மறுபடியும் வாழ்க்கையைப் படிப்படியாக ருசிக்க ஆரம்பிக்கலாம்; அதோடு, புதுப்புது இலக்குகளை வைக்கவும் ஆரம்பிக்கலாம். யோனெட் என்ற 44 வயதான விதவைத் தாயின் விஷயத்திலும் இதுவே உண்மை. “சகஜ வாழ்க்கைக்குத் திரும்புவது மிகவும் கடினமாக இருந்தது. அன்றாட வேலைகளைச் செய்வதும், செலவுகளைச் சமாளிப்பதும், மூன்று குழந்தைகளைக் கவனித்துக் கொள்வதும் பெரும் பாடாக இருந்தது” என்று அவர் சொல்கிறார். என்றாலும், காலப்போக்கில் யோனெட் தன்னுடைய வேலைகளை ஒழுங்குபடுத்திக்கொள்வதற்கும், தன் பிள்ளைகளுடன் மனம்விட்டுப் பேசுவதற்கும் பழகிக்கொண்டார். அதோடு, நெருங்கிய நண்பர்களிடமிருந்து உதவி பெற்றுக்கொள்வதற்கும் கற்றுக்கொண்டார்.
“வாழ்க்கை விலைமதிக்க முடியாத பரிசுதான்”
நண்பர்களும் குடும்பத்தினரும் சிறந்த விதத்தில் உதவிசெய்வதற்கு, எதார்த்தமாக இருக்க வேண்டும். துணையை இழந்தவர்களின் வாழ்க்கையில் அமைதியெனும் பூங்காற்றும் சோர்வெனும் சூறாவளியும் மாறிமாறி வீசலாம்; மாதக்கணக்கிலோ, ஏன் வருடக்கணக்கிலோகூட அவர்கள் இப்படித்தான் இருப்பார்கள். நிச்சயமாகவே, ‘அவர்களுடைய மனவேதனை’ மிகவும் கடுமையாக இருக்கலாம்.—1 இராஜாக்கள் 8:38, 39, NW.
துணையை இழந்தவர்கள் இப்படிச் சோர்வுற்றிருக்கும் காலத்தில் நிஜ உலகிலிருந்து விலகி தனிமைக்குள் மூழ்கிவிட வாய்ப்பிருக்கிறது; இதைத் தவிர்க்க, மற்றவர்கள் அவர்களுக்குச் சரியாக வழிகாட்டுவதும் மென்மையாக ஊக்குவிப்பதும் அவசியம். இதுபோன்ற ஆதரவுதான் வாழ்க்கையை ஒரு புதிய கோணத்தில் பார்க்க அவர்களில் அநேகருக்கு உதவியிருக்கிறது. ஆப்பிரிக்காவில் முழுநேர ஊழியராக இருக்கும் 60 வயதான க்லாட், மனைவியை இழந்தவர். “துணையைப் பறிகொடுப்பது ரொம்ப வேதனையான அனுபவம்; ஆனால், அதற்குப் பிறகும்கூட வாழ்க்கை விலைமதிக்க முடியாத பரிசாகத்தான் இருக்கிறது” என்று அவர் சொல்கிறார்.
ஒருவருடைய துணை இறந்தபின் வாழ்க்கை முன்போல் இருப்பதில்லைதான். என்றாலும், அன்புத் துணையை இழந்தவர்கள் மற்றவர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்க முடியும்.—பிரசங்கி 11:7, 8. (w10-E 05/01)
[அடிக்குறிப்புகள்]
a பக்கம் 12-ல் உள்ள, “ஞாபகார்த்தப் பொருள்கள்—சுகமா, சுமையா?” என்ற பெட்டியைக் காண்க.
b துணையை இழந்தோருக்கு நடைமுறையான உதவியளிக்க கூடுதலான ஆலோசனைகளுக்கு, யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில் என்ற சிற்றேட்டில் பக்கங்கள் 20-25-ஐக் காண்க.
[பக்கம் 11-ன் சிறுகுறிப்பு]
உண்மையான நண்பர்கள் எப்போது வேண்டுமானாலும் உதவத் தயாராக இருப்பதுடன், தொடர்ந்து ஆதரவையும் அளிக்கிறார்கள்
[பக்கம் 12-ன் பெட்டி/ படம்]
ஞாபகார்த்தப் பொருள்கள் —சுகமா, சுமையா?
ஒருசில வருடங்களுக்குமுன் தன் கணவரைப் பறிகொடுத்த ஹெலன் இவ்வாறு சொல்கிறார்: “என்னுடைய கணவர் உபயோகித்த நிறையப் பொருள்களை நான் பத்திரமாக வைத்துக் கொண்டேன். இவற்றைப் பார்க்கும்போதெல்லாம் அவருடைய நினைவுகள் என் மனதில் மலர்ந்து, சந்தோஷத்தைக் கொடுக்கின்றன. அவருடைய பொருள்கள் எதையுமே நான் தூக்கியெறிய விரும்பவில்லை; ஏனென்றால், நாளாக நாளாக என் உணர்வுகள் மாறலாம் என்று எனக்குத் தெரிந்திருந்தது.”
இதற்கு நேர்மாறாக, க்லாட் என்பவர் சொல்வதைக் கவனியுங்கள்; இவர் தன் மனைவியை இழந்து ஐந்து வருடங்களுக்கும் மேலாகிவிட்டது: “என்னைப் பொறுத்தவரை, என் மனைவி உபயோகித்த பொருள்களெல்லாம் என்னைச் சுற்றிலும் இருந்தால்தான் அவளை நினைத்துப் பார்ப்பேன் என்பதில்லை. அதனால், அவற்றையெல்லாம் அகற்றிவிட்டேன்; இது, அவள் இல்லை என்ற நிஜத்தை ஏற்றுக்கொண்டு வேதனையைச் சமாளிக்க எனக்கு உதவியிருக்கிறது.”
இந்த இருவருடைய அனுபவத்தையும் வைத்துப் பார்க்கும்போது, இறந்தவருடைய பொருள்களை வைத்திருப்பதா வேண்டாமா என்பதில் வித்தியாசமான அபிப்பிராயங்கள் இருப்பது தெரிகிறது. ஆகவே, விவேகமுள்ள நண்பர்களும் உறவினர்களும் இந்த விஷயத்தில் தங்களுடைய சொந்தக் கருத்துகளைத் திணிக்கக் கூடாது.—கலாத்தியர் 6:2, 5.
[பக்கம் 9-ன் படம்]
எந்தெந்த தினங்களில் உங்களுடைய உதவி முக்கியமாகத் தேவைப்படும்?
[பக்கம் 9-ன் படம்]
அவர்களை வெளியில் அழைத்துச் செல்ல மறந்து விடாதீர்கள்
[பக்கம் 10-ன் படங்கள்]
துணையை இழந்தவர்களை உங்களுடைய அன்றாட வேலைகளிலோ பொழுதுபோக்குகளிலோ சேர்த்துக்கொள்ளுங்கள்