‘உனது ஆட்சி . . . தொடரும்’
கடவுளிடம் நெருங்கி வாருங்கள்
‘உனது ஆட்சி . . . தொடரும்’
சரித்திரம் முழுவதிலும் அநேக ஆட்சியாளர்கள் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள். சிலர் ஓட்டெடுப்பின் மூலம் நீக்கப்பட்டிருக்கிறார்கள், இன்னும் சிலர் வலுக்கட்டாயமாக நீக்கப்பட்டிருக்கிறார்கள். கடவுளுடைய பரலோக அரசாங்கத்தின் அரசரான இயேசு கிறிஸ்துவைக் குறித்து என்ன சொல்லலாம்? கடவுள் நியமித்திருக்கும் அரசராக அவர் ஆட்சி செய்வதை ஏதாவது தடுக்க முடியுமா? அதற்கான பதில், பூர்வ இஸ்ரவேலை ஆண்ட தாவீது ராஜாவிடம் யெகோவா சொன்ன வார்த்தைகளில் காணப்படுகிறது; அது, 2 சாமுவேல் 7-ஆம் அதிகாரத்தில் உள்ளது.
சாதாரண மனித ராஜாவான தாவீது, தான் அழகிய மாளிகையில் குடியிருக்கும்போது கடவுளுடைய ஒப்பந்தப் பெட்டி எளிய கூடாரத்தில் வைக்கப்பட்டிருப்பதை நினைத்துக் கவலைப்படுவதைப் பற்றி அந்த அதிகாரத்தின் ஆரம்பத்தில் வாசிக்கிறோம். a யெகோவாவுக்கு ஏற்ற ஒரு வீட்டை, அதாவது ஆலயத்தை, கட்ட விரும்புவதாக தாவீது சொல்கிறார். (வசனம் 2) ஆனால், அவர் அதைக் கட்டப் போவதில்லை. அவருடைய மகன் அந்த ஆலயத்தைக் கட்டுவான் என்பதை நாத்தான் தீர்க்கதரிசி மூலம் தாவீதிடம் யெகோவா சொல்கிறார்.—வசனங்கள் 4, 5, 12, 13.
தாவீதின் உள்ளார்ந்த ஆசையைப் பார்த்து யெகோவா நெகிழ்ந்துபோகிறார். தாவீதின் பக்தியை அங்கீகரிக்கும் விதத்திலும் தாம் முன்னுரைத்ததற்கு இசைவாகவும், அவர் தாவீதுடன் ஓர் ஒப்பந்தத்தைச் செய்கிறார்; அதன்படி, என்றென்றும் அரசாளப் போகும் ஒருவரை தாவீதின் பரம்பரையில் தோன்றச் செய்யப் போவதாக அவர் சொல்கிறார். கடவுள் கொடுத்த வாக்குறுதியைத் தாவீதிடம் நாத்தான் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “உனது குடும்பத்தினர் அரசர்களாகத் தொடர்ந்து இருப்பார்கள். நீ அதை நம்பியிருக்கலாம்! உனது ஆட்சி என்றும் தொடரும், உனது சிங்காசனம் என்றும் நிலைத்து நிற்கும்!” (வசனம் 16, ஈஸி டு ரீட் வர்ஷன்) இந்த ஒப்பந்தத்தின்படி, என்றென்றும் அரசாளும் அந்த நிரந்தர வாரிசு யார்?—சங்கீதம் 89:20, 29, 34-36.
நாசரேத்தைச் சேர்ந்த இயேசு, தாவீதின் வம்சத்தில் வந்தவர். இயேசுவின் பிறப்பைப் பற்றி ஒரு தேவதூதர் அறிவிக்கையில் இவ்வாறு சொன்னார்: “தாவீதின் சிம்மாசனத்தைக் கடவுளாகிய யெகோவா அவருக்குக் கொடுப்பார்; யாக்கோபின் குடும்பத்தின் மீது அவர் என்றென்றும் ராஜாவாக ஆளுவார்; அவருடைய அரசாட்சிக்கு முடிவே இருக்காது.” (லூக்கா 1:32, 33) ஆகவே, தாவீதுடன் செய்யப்பட்ட ஒப்பந்தம் இயேசு கிறிஸ்துவில் நிறைவேற்றமடைகிறது. எனவே, மனிதர்கள் தேர்ந்தெடுப்பதால் அவர் அரசாளுவதில்லை; ஆனால், கடவுளுடைய வாக்குறுதியின் அடிப்படையில் என்றென்றும் ஆளுவதற்கான உரிமை பெற்றிருப்பதால் அரசாளுகிறார். கடவுளுடைய வாக்குறுதிகள் எப்போதுமே நிறைவேறும் என்பதை நாம் மனதில் வைப்போமாக.—ஏசாயா 55:10, 11.
2 சாமுவேல் 7-ஆம் அதிகாரத்திலிருந்து இரண்டு முக்கியமான பாடங்களைக் கற்றுக்கொள்கிறோம். முதலாவதாக, இயேசு கிறிஸ்து அரசாளுவதை எதுவுமே, யாருமே தடுத்து நிறுத்த முடியாதென நாம் உறுதியாய் இருக்கலாம். எனவே, அவர் தம்முடைய ஆட்சியின் நோக்கத்தை நிறைவேற்றுவார் என நாம் உறுதியாய் நம்பலாம்; அதாவது, கடவுளுடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல் பூமியிலேயும் முழுமையாய்ச் செய்யப்படும்படி பார்த்துக்கொள்வார் என நாம் நம்பலாம்.—மத்தேயு 6:9, 10.
இரண்டாவதாக, யெகோவாவைப் பற்றிய நெஞ்சை நெகிழ வைக்கும் பாடத்தை இந்தப் பதிவு நமக்குக் கற்பிக்கிறது. யெகோவா, தாவீதின் இருதயத்தைப் பார்த்து அவருடைய உள்நோக்கத்தை மதித்தார் என்பதை நினைவுபடுத்திப் பாருங்கள். எனவே அவர், நாம் காட்டும் பக்தியைப் பார்த்து, அதை மதிக்கிறார் என்பதை அறிந்துகொள்வது ஆறுதலை அளிக்கிறது. நம்மில் சிலருடைய விஷயத்தில், சூழ்நிலைகள் கைமீறிப் போயிருக்கலாம்; கடவுளுக்குச் சேவை செய்ய வேண்டுமென்ற ஏக்கம் இருந்தாலும் அதைச் செய்ய முடியாதபடி உடல்நலமோ முதுமையோ நம்மைத் தடுக்கலாம். அப்படியென்றால், பக்தி நிறைந்த நம் இருதயத்தின் உள்நோக்கத்தைக்கூட யெகோவா பார்க்கிறார் என்பதை அறிந்து நாம் ஆறுதல் அடைவோமாக. (w10-E 04/01)
[அடிக்குறிப்பு]
a ஒப்பந்தப் பெட்டி என்பது, யெகோவாவின் அறிவுரைப்படியும் அவர் அளித்த வடிவமைப்பின்படியும் உருவாக்கப்பட்ட பரிசுத்த பெட்டியாகும். அது, பூர்வ இஸ்ரவேலில் யெகோவாவின் பிரசன்னத்தைப் பிரதிநிதித்துவம் செய்தது.—யாத்திராகமம் 25:22.