Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்

இயேசு கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்

இயேசு கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்

கீழ்ப்படிவது என்றால் உனக்குக் கஷ்டமாக இருக்கிறதா?— a கவலைப்படாதே, உனக்கு மட்டும் அல்ல, சில சமயம் எல்லாருக்குமே அப்படித்தான். இயேசுகூட கீழ்ப்படிதலைக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது, அது உனக்குத் தெரியுமா?—

சின்ன பிள்ளைகள் எல்லாரும் யாருக்குக் கீழ்ப்படிய வேண்டும்?— ஆமாம், அப்பா அம்மாவுக்குத்தான். “பிள்ளைகளே, நம் எஜமானர் விரும்புகிறபடி உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியுங்கள்” என பைபிள் சொல்கிறது. (எபேசியர் 6:1) சரி, இயேசுவுடைய அப்பா யார்?—  யெகோவா தேவன், நமக்கும் அவர்தான் அப்பா. (மத்தேயு 6:9, 10) ஆனால், இயேசுவின் அப்பா யோசேப்பு, அம்மா மரியாள் என்று நீ சொன்னாலும் சரிதான். இவர்கள் எப்படி இயேசுவுக்கு அப்பா அம்மா ஆனார்கள் என்று உனக்குத் தெரியுமா?—

ஒரு நாள் காபிரியேல் என்ற தேவதூதர் மரியாளிடம் வந்து, ‘உனக்கு ஒரு குழந்தை பிறக்க போகிறது’ என்று சொன்னார். ஆனால், மரியாளுக்கு அப்போது கல்யாணமே ஆகவில்லை. இருந்தாலும், அவருக்குப் பிள்ளை பிறக்கும் என்று காபிரியேல் சொன்னார். மரியாள் கர்ப்பமாவதற்கு யெகோவா ஒரு பெரிய அற்புதம் செய்தார். மரியாளிடம் காபிரியேல் தூதர் இப்படிச் சொன்னார்: “உன்னதமானவருடைய வல்லமை உன்மீது தங்கும். இதன் காரணமாக, உனக்குப் பிறக்கப்போகும் குழந்தை பரிசுத்தமானது என்றும், கடவுளுடைய மகன் என்றும் அழைக்கப்படும்.”—லூக்கா 1:30-35.

பரலோகத்திலிருந்த தம் மகனுடைய உயிரை மரியாளுடைய வயிற்றில் கடவுள் வைத்தார். எல்லா குழந்தைகளைப் போலவே இயேசுவும் மரியாளுடைய வயிற்றில் வளர்ந்துவந்தார். கிட்டத்தட்ட ஒன்பது மாதத்திற்கு பிறகு இயேசு பிறந்தார். இதற்கிடையில் மரியாளை யோசேப்பு கல்யாணம் செய்துகொண்டார். அதனால் யோசேப்புதான் இயேசுவுடைய நிஜமான அப்பா என்று அநேகர் நினைத்தார்கள். உண்மையைச் சொன்னால், இயேசுவுடைய வளர்ப்பு தந்தைதான் யோசேப்பு. இதனால்தான் இயேசுவுக்கு இரண்டு அப்பாக்கள் இருந்தார்கள் என்று சொல்லலாம்.

இயேசுவுக்கு 12 வயதாக இருந்தபோது, பரலோகத்திலுள்ள தம் அப்பாமீது, அதாவது யெகோவாமீது, அவர் எவ்வளவு அன்பு வைத்திருந்தார் என்பதைக் காட்டினார். அந்தச் சமயத்தில், பஸ்கா பண்டிகை கொண்டாடுவதற்காக ரொம்ப தூரத்திலிருந்த எருசலேம் என்ற ஊருக்கு இயேசுவுடைய குடும்பத்தார் போனார்கள். அவர்கள் ஒவ்வொரு வருடமும் அப்படிப் போவது வழக்கம். பண்டிகை முடிந்து வீட்டுக்கு வந்துகொண்டிருந்த சமயத்தில்தான் இயேசு தங்களோடு வரவில்லை என்ற விஷயம் யோசேப்புக்கும் மரியாளுக்கும் தெரிந்தது. அவர்கள் எப்படி இயேசுவை விட்டுவிட்டு வரலாம் என்று யோசிக்கிறாயா?—

அதற்கு ஒரு காரணம், அந்தச் சமயத்தில் யோசேப்புக்கும் மரியாளுக்கும் வேறு பிள்ளைகளும் இருந்தார்கள். (மத்தேயு 13:55, 56) அதோடு, அவர்களுடன் சேர்ந்து அவர்களுடைய சொந்தக்காரர்களும் பயணம் செய்திருக்கலாம். உதாரணத்திற்கு, யாக்கோபு, யோவான், இவர்களுடைய அப்பா செபுதேயு, அம்மா சலோமி (இவர் மரியாளுடைய சகோதரியாக இருந்திருக்கலாம்) ஆகியோர் இருந்திருக்கலாம். அதனால், இயேசு ஒருவேளை சொந்தக்காரர்களோடு சேர்ந்து வந்துகொண்டிருப்பார் என்று மரியாள் நினைத்திருக்கலாம்.—மத்தேயு 27:56; மாற்கு 15:40; யோவான் 19:25.

இயேசு அவர்களோடு வரவில்லை என்று தெரிந்ததும் யோசேப்பும் மரியாளும் எருசலேமிற்கு அவசர அவசரமாக திரும்பிப் போனார்கள். மூலை முடுக்கெல்லாம் தேடினார்கள். மூன்றாம் நாள் இயேசுவை ஆலயத்தில் கண்டுபிடித்தார்கள். அப்போது மரியாள் இயேசுவைப் பார்த்து, “ஏன் இப்படிச் செய்தாய்? உன் தகப்பனும் நானும் மிகுந்த கவலையோடு உன்னைத் தேடிக்கொண்டிருந்தோமே” என்று கேட்டார். அதற்கு இயேசு, “நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தகப்பனுடைய வீட்டில் இருக்க வேண்டுமென உங்களுக்குத் தெரியாதா?” என்று சொன்னார்.—லூக்கா 2:45-50.

அம்மாவிடம் இயேசு அப்படிப் பேசியது தப்பு என நினைக்கிறாயா?— கடவுளுடைய ஆலயத்திற்கு சென்று அவரை வணங்குவதென்றால் இயேசுவுக்கு கொள்ளைப் பிரியம் என்று அவருடைய அப்பா அம்மாவுக்கு நன்கு தெரியும். (சங்கீதம் 122:1) அதனால், அவர்கள் முதலில் ஆலயத்தில்தானே தம்மை தேடியிருக்க வேண்டும் என்று இயேசு நினைத்தது சரிதானே?— இயேசு சொன்னதைக் குறித்து மரியாள் பின்னர் யோசித்துக்கொண்டிருந்தார்.

யோசேப்பிடமும் மரியாளிடமும் இயேசு எப்படி நடந்துகொண்டார்?— “[இயேசு] அவர்களுடன் நாசரேத்துக்குப் போய், தொடர்ந்து அவர்களுக்குக் கட்டுப்பட்டு நடந்தார்” என்று பைபிள் சொல்கிறது. (லூக்கா 2:51, 52) இயேசுவிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?— நாமும் நம்முடைய அப்பா அம்மாவுக்குக் கீழ்ப்படிய வேண்டும்.

ஆனால், கீழ்ப்படிவது இயேசுவுக்கு எப்போதும் சுலபமாக இல்லை. ஏன், பரலோகத்தில் இருக்கிற அவருடைய அப்பாவுக்குக் கீழ்ப்படிவதுகூட அவருக்குச் சுலபமாக இல்லை.

இயேசுவிடம் ஒரு காரியத்தைச் செய்யும்படி யெகோவா சொல்லியிருந்தார், ஆனால், அதைச் செய்யாமல் இருந்துவிடலாமா என்று சாவதற்கு முந்தின நாள் இரவு யெகோவாவிடம் அவர் கேட்டார். (லூக்கா 22:42) ஆனால், இயேசுவுக்கு அது கஷ்டமாக இருந்தபோதிலும் கடவுளுக்குக் கீழ்ப்படிந்தார். “தாம் பட்ட பாடுகளின் மூலம் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்” என்று பைபிள் சொல்கிறது. (எபிரெயர் 5:8) நாமும் இயேசுவைப் போல் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொள்ள முடியுமா?— (w10-E  04/01)

a நீங்கள் பிள்ளையுடன் சேர்ந்து படிக்கிறீர்கள் என்றால், கோடிட்ட இடத்தில் சற்று நிறுத்தி அங்கு கேட்கப்பட்ட கேள்விக்கு பிள்ளையையே பதில் சொல்ல சொல்லுங்கள்.