வாசகரின் கேள்வி
சில ஜெபங்களுக்கு ஏன் பதில் கிடைப்பதில்லை?
தம்மிடம் பேச வருகிற மக்களைக் கடவுள் இருகரம் நீட்டி வரவேற்கிறார். ஓர் அன்பான அப்பா என்ன செய்வார்? தன்னிடம் பேச வருகிற பிள்ளைகளை அரவணைத்து அவர்கள் பேசுவதை ஆவலோடு கேட்பார். அவ்வாறே, கடவுளாகிய யெகோவாவும் நம்முடைய ஜெபங்களைக் கேட்க ஆவலோடு இருக்கிறார். என்றாலும், ஞானமான அப்பா, பிள்ளைகள் கேட்கிற எல்லாவற்றுக்கும் தலையசைக்க மாட்டார், அவற்றுள் சிலவற்றைச் செய்ய மறுத்துவிடுவார்; அதற்கு நியாயமான காரணங்கள் அவருக்கு இருக்கும்; அவ்வாறே, சில ஜெபங்களுக்குப் பதிலளிக்காதிருக்கக் கடவுளுக்கும் நியாயமான காரணங்கள் இருக்கின்றன. அந்தக் காரணங்களை அவர் மறைத்து வைத்திருக்கிறாரா, அல்லது அவற்றைக் குறித்து பைபிளில் ஏதாவது வெளிப்படுத்தியிருக்கிறாரா?
“கடவுளுடைய சித்தத்திற்கு இசைவாக நாம் எதைக் கேட்டாலும், அவர் நமக்குச் செவிகொடுக்கிறார் என்பதே நாம் அவர்மீது கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை” என அப்போஸ்தலன் யோவான் நம்பிக்கை தெரிவிக்கிறார். (1 யோவான் 5:14) ஆகவே, நாம் கடவுளிடம் கேட்கும் காரியங்கள் அவருடைய சித்தத்திற்கு இசைவாக இருக்க வேண்டும். சிலருடைய ஜெபங்கள் அவரது சித்தத்திற்கு இசைவாக இருப்பதே இல்லை; உதாரணத்திற்கு, லாட்டரிச் சீட்டில் பரிசு விழ வேண்டும், பந்தயத்தில் ஜெயிக்க வேண்டும் என்றெல்லாம் அவர்கள் ஜெபம் செய்கிறார்கள். வேறு சிலர் தவறான உள்ளெண்ணத்தோடு ஜெபம் செய்கிறார்கள். இப்படி ஜெபிக்காதிருக்கும்படி எச்சரிக்கிறார் சீடராகிய யாக்கோபு: “நீங்கள் வேண்டிக்கொண்டாலும் பெறுவதில்லை; ஏனென்றால், தவறான நோக்கத்திற்காக, அதாவது உங்கள் கெட்ட ஆசைகளைத் திருப்திப்படுத்துவதற்காக வேண்டிக்கொள்கிறீர்கள்.”—யாக்கோபு 4:3.
கால் பந்தாட்டப் போட்டியில் களமிறங்கும் இரு தரப்பினரைச் சற்று நினைத்துப் பாருங்கள்; வெற்றி பெற வேண்டுமென அந்த இரு தரப்பினருமே கடவுளிடம் ஜெபம் செய்வார்கள். அந்த இரு தரப்பினரின் ஜெபங்களுக்கும் கடவுள் பதிலளிப்பாரென நாம் எதிர்பார்க்க முடியாது. இன்று நடக்கிற போர்களைக் குறித்ததிலும் இதுவே உண்மை; வெற்றிக்காக ஜெபிக்கும் இரு நாட்டினரின் ஜெபங்களுக்கும் கடவுள் பதிலளிப்பாரென நாம் எதிர்பார்க்க முடியாது.
கடவுளுடைய சட்டங்களைக் கடைப்பிடிக்க மறுப்பவர்களுடைய ஜெபங்களும் வீண்தான். போலியாகத் தம்மை வழிபட்டு வந்தவர்களிடம் கடவுள் ஒருமுறை வேதனையோடு இவ்வாறு கூறினார்: “நீங்கள் உங்கள் கைகளை விரித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் ஜெபம் பண்ணினாலும் கேளேன்; உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது.” (ஏசாயா 1:15) பைபிள் இப்படிக் கூறுகிறது: “வேதத்தைக் கேளாதபடி தன் செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது.”—நீதிமொழிகள் 28:9.
யெகோவாவின் சித்தத்திற்கு ஏற்ப அவரை வணங்குவதற்குச் சிலர் தங்களால் முடிந்த மிகச் சிறந்ததைச் செய்கிறார்கள்; அப்படிப்பட்டவர்களுடைய உள்ளப்பூர்வமான ஜெபங்களை யெகோவா எப்போதும் கேட்பார். அதற்கென்று, அவர்கள் கேட்கிற எல்லாவற்றையும் அவர் அருளுவாரென நாம் எதிர்பார்க்கலாமா? எதிர்பார்க்க முடியாது. இதற்குச் சில உதாரணங்களை பைபிளிலிருந்து பார்ப்போம்.
மோசேக்குக் கடவுளோடு மிகமிக நெருங்கிய பந்தம் இருந்தது; என்றாலும், அவரும்கூட “கடவுளுடைய சித்தத்திற்கு இசைவாக” ஜெபம் செய்ய வேண்டியிருந்தது. அவர் கானான் தேசத்திற்குள் கால் வைக்கப்போவதில்லை எனக் கடவுள் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்; அப்படியிருந்தும் அவர் கடவுளிடம், “நான் கடந்துபோய் யோர்தானுக்கு அப்புறத்திலுள்ள அந்த நல்ல தேசத்தை . . . பார்க்கும்படி உத்தரவு கொடுத்தருளும்” என்று கெஞ்சினார். மோசே செய்திருந்த ஒரு தவறுக்குத் தண்டனையாகத்தான் யெகோவா அப்படித் தெரிவித்திருந்தார். ஆகவே, மோசே கேட்டுக்கொண்டதை அருளாமல், “போதும், இனி இந்தக் காரியத்தைக் குறித்து என்னோடே பேச வேண்டாம்” என்று கடவுள் சொல்லிவிட்டார்.—உபாகமம் 3:25, 26; 32:51.
அப்போஸ்தலன் பவுலும்கூட, தன் “உடலில் ஒரு முள்” இருப்பதாகக் குறிப்பிட்டு, அதை நீக்கிவிடும்படி கடவுளிடம் ஜெபம் செய்தார். (2 கொரிந்தியர் 12:7) அந்த “முள்,” அவருக்கு ஏற்பட்ட தீராத கண்நோயாக இருந்திருக்கலாம்; அல்லது அவருடைய எதிரிகளாலும் ‘போலிச் சகோதரர்களாலும்’ ஏற்பட்ட தீராத தொல்லையாக இருந்திருக்கலாம். (2 கொரிந்தியர் 11:26; கலாத்தியர் 4:14, 15) “அதை என்னிடமிருந்து நீக்கிவிடும்படி மூன்று முறை நம் எஜமானரிடம் வருந்திக் கேட்டேன்” என்று பவுல் எழுதினார். என்றாலும், தன்னைக் குத்திக்கொண்டிருந்த ‘முள்ளின்’ ஓயாத தொல்லைக்கு மத்தியிலும் பவுல் பிரசங்க வேலையைத் தொடர்ந்து செய்தால், அது தம்முடைய பலத்திற்குத் தெளிவான அத்தாட்சி அளிக்கும் என்பதைக் கடவுள் அறிந்திருந்தார்; அதோடு, தம்மீது பவுலுக்கு இருந்த அசைக்க முடியாத நம்பிக்கைக்கும் தெளிவான அத்தாட்சி அளிக்கும் என்பதை அவர் அறிந்திருந்தார். ஆகவே, பவுல் வேண்டிக்கொண்டதை அருளுவதற்குப் பதிலாக, “நீ பலவீனமாக இருக்கும்போது என்னுடைய பலம் உனக்கு முழுமையாகக் கிடைக்கும்” என்று கடவுள் சொன்னார்.—2 கொரிந்தியர் 12:8, 9.
ஆகவே, நாம் ஜெபத்தில் கேட்கிற காரியங்கள் சிலவற்றை அருளுவது நமக்கு நன்மையாய் இருக்குமா இல்லையா என்று நம்மைவிடக் கடவுளுக்குத்தான் நன்றாகத் தெரியும். தம்முடைய அன்பான நோக்கங்களுக்கு இசைவாக யெகோவா நம் ஜெபங்களுக்கு எப்போதும் பதிலளிக்கிறார், அதுவும் நம் நன்மைக்காகவே! (w09 1/1)