கடவுளுக்குப் பயப்பட ஐந்து காரணங்கள்
கடவுளுக்குப் பயப்பட ஐந்து காரணங்கள்
அந்த இளைஞனுக்கு இன்ப அதிர்ச்சி. அவனுடைய கேள்விக்கு அப்படியொரு பதில் கிடைக்குமென்று அவன் எதிர்பார்க்கவே இல்லை. யெகோவாவின் சாட்சிகளில் இருவர் அவனிடம் பேசிய விஷயம் அவனது அறிவுக் கண்களைத் திறந்தது. கடவுள் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார் என்ற அந்தக் கேள்வி அவன் மனதைப் பல வருடங்களாகக் குடைந்துகொண்டே இருந்தது; இப்போதோ அதற்கு பைபிளிலிருந்து தெளிவான பதில் கிடைத்துவிட்டது. இதயத்துக்கு இதமளிக்கும் இப்படியொரு பொன்னான தகவல் பைபிளில் புதைந்திருக்குமென்று அவன் நினைக்கவே இல்லை.
அந்த இருவரும் போனதுதான் தாமதம், அந்த வீட்டுச் சொந்தக்காரி அங்கே புயல்போல நுழைந்து, “யார் அவர்கள்?” என்று சீறினாள்.
இதைச் சிறிதும் எதிர்பார்க்காத அந்த இளைஞன் வாயடைத்துப்போனான்.
“அவர்கள் யாரென்று எனக்குத் தெரியும்; இன்னொரு தடவை நீ அவர்களை வீட்டுக்குள் விட்டாயென்றால், மூட்டைமுடிச்சைக் கட்டிக்கொண்டு வெளியே போய்விடு!” என்று ஆக்ரோஷமாகக் கத்தினாள்.
படாரென்று கதவைச் சாத்திவிட்டு வெளியேறினாள்.
உண்மைக் கிறிஸ்தவர்கள் எதிர்ப்பை எதிர்பார்க்கலாம்
இதுபோன்ற அனுபவங்கள் சகஜமானவைதான். “கிறிஸ்து இயேசுவின் சீடர்களாகத் தேவபக்தியோடு வாழ விரும்புகிற எல்லாரும் துன்புறுத்தப்படுவார்கள்” என்று கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள் சொல்கிறது. (2 தீமோத்தேயு 3:12) பொதுவாக, உண்மைக் கிறிஸ்தவர்களைக் கண்டாலே மக்களுக்குப் பிடிக்காது; இன்று மட்டுமல்ல, அன்றும் இதே கதைதான். காரணம்? சக கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் யோவான் இப்படிச் சொல்கிறார்: “நாம் கடவுளின் பக்கம் இருக்கிறோம் என்று நமக்குத் தெரியும், ஆனால் இந்த உலகம் முழுவதும் பொல்லாதவனுடைய கைக்குள் கிடக்கிறது.” பிசாசாகிய சாத்தான், ‘கர்ஜிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று அலைந்து திரிவதாகவும்’ விவரிக்கப்படுகிறான். (1 யோவான் 5:19; 1 பேதுரு 5:8) சாத்தான் படுதிறமையாகப் பயன்படுத்துகிற ஆயுதங்களில் ஒன்று மனித பயம்.
எவ்வளவோ நன்மைகளைச் செய்தவரும், எந்தத் தீமையும் செய்யாதவருமான இயேசு கிறிஸ்துவும்கூட, கேலி கிண்டல்களுக்கு ஆளானார், துன்புறுத்தலை எதிர்ப்பட்டார். “காரணமில்லாமல் என்னை வெறுத்தார்கள்” என்று அவர் கூறினார். (யோவான் 15:25) “உலகம் உங்களை வெறுத்தால், அது உங்களை வெறுப்பதற்கு முன்னரே என்னை வெறுத்ததென்று தெரிந்துகொள்ளுங்கள். நான் உங்களுக்குச் சொன்ன வார்த்தையை நினைவில் வையுங்கள், அடிமை தன் எஜமானைவிட உயர்ந்தவன் அல்ல. அவர்கள் என்னைத் துன்புறுத்தியிருந்தால் உங்களையும் துன்புறுத்துவார்கள்” என்று தாம் இறப்பதற்கு முந்தின இரவு சொன்னார்.—யோவான் 15:18, 20.
அவர் இப்படிச் சொன்னதால், உண்மை வணக்கத்தின் பக்கம் உறுதியாய் நிற்க அநேகர் தயங்கினார்கள். ஒரு சமயம் இயேசுவைப் பிடிப்பதற்காக யூதர்கள் தேடிக்கொண்டிருந்தார்கள்; அவர்களைப் பற்றி பைபிள் இவ்வாறு சொல்கிறது: ‘யூதர்களுக்குப் பயந்ததால் யாருமே அவரைப் பற்றி வெளிப்படையாகப் பேசவில்லை.’ (யோவான் 7:13; 12:42) அப்படி யாராவது கிறிஸ்துவின்மீது விசுவாசம் வைத்தால், அவர்களை ஜெபக்கூடத்திலிருந்து விலக்கி வைத்துவிடுவதாக அன்றைய மதத் தலைவர்கள் மிரட்டினார்கள். இதனால், மனித பயத்திற்கு இடங்கொடுத்த அநேகர் கிறிஸ்தவர்களாகாமலேயே இருந்துவிட்டார்கள்.—அப்போஸ்தலர் 5:13.
கிறிஸ்தவ மதம் தோன்றியதற்குப் பின், எருசலேமிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு “கடும் துன்புறுத்தல்” ஏற்பட்டதாக நாம் வாசிக்கிறோம். (அப்போஸ்தலர் 8:1) சொல்லப்போனால், ரோம சாம்ராஜ்யம் முழுவதிலும் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தலைச் சகிக்க வேண்டியிருந்தது. “எல்லா இடங்களிலும் இந்த மதப்பிரிவுக்கு விரோதமாகவே பேசப்படுகிறது என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம்” என்று ரோமிலிருந்த பிரபலமான ஆட்கள் அப்போஸ்தலன் பவுலிடம் சொன்னார்கள். (அப்போஸ்தலர் 28:22) ஆம், உண்மைக் கிறிஸ்தவர்களுக்கு எங்கும் எதிர்ப்பு இருந்தது.
சாத்தான் இன்னமும் மனித பயம் என்ற ஆயுதத்தையே பயன்படுத்தி அநேகரை உண்மைக் கிறிஸ்தவர்களாய் ஆகாதபடி தடுக்கிறான். எப்படியென்றால், யெகோவாவின் சாட்சிகளிடம் பைபிளைப் படித்து வருகிற நல்மனமுள்ளவர்கள் பள்ளியிலோ, வேலை பார்க்குமிடத்திலோ, அக்கம்பக்கத்திலோ, நண்பர்கள் வட்டத்திலோ எதிர்ப்பையும் கேலி கிண்டல்களையும் சந்திக்கிறார்கள். தங்களுடைய மதிப்பு மரியாதை பறிபோய்விடுமென்றோ, நண்பர்களுடைய ஆதரவு கிடைக்காமல் போய்விடுமென்றோ, பொருளுதவியை இழக்க நேரிடுமென்றோ அவர்கள் பயப்படுகிறார்கள். சில கிராமப் பகுதிகளில், அறுவடை சமயத்தின்போது தங்கள் அக்கம்பக்கத்தார் உதவிக்கு வராமலும், தங்களுடைய கால்நடைகளைப் பாதுகாக்காமலும் போய்விடுவார்களோ என்று விவசாயிகள் பயப்படுகிறார்கள். இதுபோன்ற பயங்கள் ஒருபுறம் இருந்தாலும், இயேசு கிறிஸ்துவைப் போலவே லட்சக்கணக்கானோர் கடவுள்மீது நம்பிக்கை வைக்கவும், அவருடைய வார்த்தைக்கு இசைய வாழவும் தீர்மானமாய் இருக்கிறார்கள். அப்படிச் செய்வதால் அவர்களை யெகோவா ஆசீர்வதித்திருக்கிறார்.
மனிதனுக்குப் பயப்படாமல் ஏன் கடவுளுக்குப் பயப்பட வேண்டும்
மனிதனுக்குப் பயப்படாமல் கடவுளுக்குப் பயப்பட வேண்டுமென்று பைபிள் நம்மை அறிவுறுத்துகிறது. ‘யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்’ என்று அது சொல்கிறது. (சங்கீதம் 111:10) இது, குலைநடுங்க வைக்கிற ஆரோக்கியமற்ற பயமல்ல; மாறாக, நமக்கு உயிர் கொடுத்தவருடைய இதயத்தை நோகடித்துவிடக் கூடாதே என்ற ஆரோக்கியமான பயமாகும். இந்தப் பயம், அன்போடு நெருங்கிய தொடர்புடையது. அப்படியானால், நாம் ஏன் மனிதனுக்குப் பயப்படாமல் கடவுளுக்குப் பயப்பட வேண்டும்? ஐந்து காரணங்களை இப்போது நாம் ஆராயலாம்.
யெகோவா அதி உன்னதர். யெகோவா எந்த மனிதரையும்விட அதிக பலம் படைத்தவர். அவருடைய பார்வையில் “நாடுகள் எல்லாம் வாளியில் ஒரு சிறுதுளி போன்றது.” (ஏசாயா 40:15, ஈஸி டு ரீட் வர்ஷன்) அப்படிப்பட்டவரிடம் பயபக்தியோடு நடந்துகொள்வதன் மூலம் நாம் சர்வ வல்லவரின் வணக்கத்தாரெனக் காட்டுகிறோம். கடவுள் சர்வ வல்லவராய் இருப்பதால், தம்மை வணங்குவோருக்கு ‘விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காமல் போகும்படி’ செய்யும் வல்லமை அவருக்கு இருக்கிறது. (ஏசாயா 54:17) முடிவில்லா வாழ்வைப் பெறத் தகுதியுள்ளவர்கள் யாரென்பதை அவரே தீர்மானிக்கப்போகிறார்; எனவே, அவரைப் பற்றிக் கற்றுக்கொள்வதையும் அவருடைய சித்தத்தின்படி செய்வதையும் தடுக்கிற எதற்குமே இடங்கொடுக்காமல் பார்த்துக்கொள்வது ஞானமான செயல்.—வெளிப்படுத்துதல் 14:6, 7.
கடவுளே சகாயர், நம்மைக் காப்பவர். ‘மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்; யெகோவாவை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்’ என பைபிளிலுள்ள நீதிமொழிகள் 29:25 கூறுகிறது. மனித பயம் ஒரு கண்ணியாகவே இருக்கிறது; ஏனென்றால், கடவுள்மீது நமக்குள்ள நம்பிக்கையை மற்றவர்களிடம் சொல்ல விடாமல் அது தடுக்கிறது. ஆனால், நம்மைக் காக்கிற வல்லமை தமக்கு இருக்கிறதென்று கடவுள் உறுதியளிக்கிறார்: “நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.”—ஏசாயா 41:10.
தம்மிடம் நெருங்கி வருபவர்களைக் கடவுள் நேசிக்கிறார். மனம் நெகிழச் செய்யும் இவ்வார்த்தைகளை அப்போஸ்தலன் பவுல் எழுதினார்: “சாவோ, வாழ்வோ, தேவதூதர்களோ, அரசாங்கங்களோ, இன்றுள்ள காரியங்களோ, இனிவரும் காரியங்களோ, வலிமைமிக்க சக்திகளோ, உயர்வான காரியங்களோ தாழ்வான காரியங்களோ வேறெந்தப் ரோமர் 8:37-39) கடவுள்மீது நம்பிக்கை வைக்கவும் அவருக்குக் கீழ்ப்படியவும் கற்றுக்கொண்டால், சர்வலோகப் பேரரசராகிய அவருடைய நித்திய அன்பை நாம் ருசிக்கலாம். எப்பேர்ப்பட்ட பாக்கியம்!
படைப்போ நம் எஜமானராகிய கிறிஸ்து இயேசுவின் மூலம் கடவுள் காட்டுகிற அன்பிலிருந்து நம்மைப் பிரிக்க முடியாதென்று நான் உறுதியாக நம்புகிறேன்.” (கடவுள் நமக்குச் செய்திருக்கும் அனைத்தையும் உயர்வாய் மதிக்கிறோம். யெகோவா நம்மைப் படைத்திருக்கிறார், அவரே உயிரின் ஊற்றுமூலராக இருக்கிறார். அதுமட்டுமல்ல, நாம் உயிர்வாழ உதவும் அடிப்படைப் பொருள்களைத் தந்திருப்பதோடு, வாழ்க்கையை ரசித்து ருசிக்கவும் வழிசெய்திருக்கிறார். ஒவ்வொரு நல்ல பரிசையும் அவரே நமக்குக் கொடுக்கிறார். (யாக்கோபு 1:17) உண்மை ஊழியரான தாவீது, கடவுளுடைய அன்புமாறா கருணையைப் போற்றி இவ்வாறு எழுதினார்: ‘என் தேவனாகிய யெகோவாவே, நீர் எங்கள் நிமித்தஞ்செய்த உம்முடைய அதிசயங்களும் உம்முடைய யோசனைகளும் அநேகமாயிருக்கிறது; . . . நான் அவைகளைச் சொல்லி அறிவிக்க வேண்டுமானால் அவைகள் எண்ணிக்கைக்கு மேலானவைகள்.’—சங்கீதம் 40:5.
நம்மை எதிர்க்கிற சிலர் மனம் மாறலாம். உங்களை எதிர்ப்பவர்களுக்கும்கூட நீங்கள் உதவலாம். எப்படி? விசுவாசத்தை விட்டுக்கொடுக்காமல் கடைசிவரை கடவுளுக்குப் பயந்து அவரை நேசிப்பதன் மூலமாகும். உதாரணத்திற்கு, இயேசுவின் உறவினர்களை எடுத்துக்கொள்ளுங்கள். ஆரம்பத்தில் அவர்கள் இயேசுவை விசுவாசிக்கவில்லை; “அவனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது” என்றே சொன்னார்கள். (மாற்கு 3:21; யோவான் 7:5) இயேசு இறந்து உயிர்த்தெழுப்பப்பட்ட பின்போ அவர்களில் அநேகர் விசுவாசிகளானார்கள். இயேசுவின் ஒன்றுவிட்ட சகோதரர்களான யாக்கோபும் யூதாவும் பைபிள் புத்தகங்கள் சிலவற்றையும்கூட எழுதினார்கள். மற்றொரு உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். மதவெறியால் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்திவந்த சவுல், பிற்பாடு அப்போஸ்தலன் பவுலாக மாறினார். இன்றும்கூட, நமக்குத் தொல்லை கொடுக்கும் சிலர், நாம் உறுதியாய் இருப்பதைப் பார்த்து, பைபிள் சத்தியம் நம்மிடம் இருப்பதைப் புரிந்துகொள்ளலாம்.—1 தீமோத்தேயு 1:13.
இதற்கு உதாரணமாக, ஆப்பிரிக்காவைச் சேர்ந்த அபிராஷ் என்ற பெண்ணைப் பற்றிப் பார்க்கலாம். கடவுளைப் பற்றிய சத்தியத்தைக் கண்டுபிடிக்க உதவுமாறு அவள் ஜெபித்துவந்தாள். யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்க ஆரம்பித்த பிறகு அவளுடைய குடும்பத்தாரிடமிருந்தும் மதத் தலைவர்களிடமிருந்தும் கடும் எதிர்ப்பைச் சந்தித்தாள். அவளைப் போலவே பைபிளைப் படிக்க ஆரம்பித்திருந்த அவளுடைய உறவினர்களில் சிலர் மனித பயத்தால் அந்தப் படிப்பை நிறுத்திக்கொண்டார்கள். அவளோ, பலத்திற்காகவும் தைரியத்திற்காகவும் கடவுளிடம் கெஞ்சி மன்றாடினாள்; யெகோவாவின் சாட்சிகளில் ஒருத்தியாக ஞானஸ்நானம் பெற்றாள். பலன்? அவளுடைய உறவினர்களில் எட்டுப் பேர் அவளுடைய முன்மாதிரியால் ஊக்கம் பெற்றார்கள்; மீண்டும் பைபிள் படிப்பைத் தொடர்ந்தார்கள், இப்போது ஆன்மீக ரீதியில் நல்ல முன்னேற்றம் செய்து வருகிறார்கள்.
மனித பயத்தை நீங்கள் மேற்கொள்ளலாம்
நீங்கள் மனித பயத்திற்குப் பலியாகிவிடாமல் இருக்க வேண்டுமானால், கடவுள்மீது வைத்திருக்கிற அன்பை வளர்க்க உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்யுங்கள். பைபிளைப் படிப்பதன் மூலமும், “யெகோவாவே எனக்குத் துணை; நான் பயப்பட மாட்டேன், மனுஷன் எனக்கு என்ன செய்துவிட முடியும்?” என்று எபிரெயர் 13:6-ல் உள்ளதைப் போன்ற வசனங்களைத் தியானிப்பதன் மூலமும் இதை நீங்கள் செய்யலாம். மனிதனுக்குப் பயப்படாமல் கடவுளுக்குப் பயப்படுவதே சரியான, ஞானமான செயல் என்பதற்கான காரணங்களை மறக்காதீர்கள்.
அதோடு, பைபிளிலிருந்து கற்றுக்கொள்பவற்றைக் கடைப்பிடிப்பதால் வரும் ஏராளமான நன்மைகளை மனதில் வையுங்கள்: வாழ்க்கையின் முக்கியமான கேள்விகளுக்குத் திருப்தியளிக்கும் பதில்களை நீங்கள் கண்டடையலாம். வாழ்க்கையின் பிரச்சினைகளைச் சமாளிக்க நடைமுறை ஞானத்தை நீங்கள் பெறலாம். இன்றைய குழப்பமான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் ஒளிமயமான எதிர்கால நம்பிக்கையோடு நீங்கள் வாழலாம். எந்தச் சமயத்தில் வேண்டுமானாலும் சர்வவல்லமையுள்ள கடவுளிடம் நீங்கள் ஜெபம் செய்யலாம்.
அப்போஸ்தலன் யோவான் எழுதினார்: “இந்த உலகமும் அதன் இச்சையும் ஒழிந்துபோகும்; கடவுளுடைய சித்தத்தைச் செய்கிறவனோ என்றென்றும் நிலைத்திருப்பான்.” (1 யோவான் 2:17) ஆகையால், விசுவாசத்தில் உறுதியாய் இருப்பதற்கும் கடவுளுக்குப் பயந்து நடப்பதற்கும் இதுவே சமயம். நாம் மனித பயத்திற்கு இடங்கொடுத்து விடாமல், கடவுள் கொடுக்கிற இந்த அறிவுரைக்குக் கீழ்ப்படியத் தீர்மானிக்கலாம்: “என் மகனே, என்னை நிந்திக்கிறவனுக்கு நான் உத்தரவு கொடுக்கத்தக்கதாக, நீ ஞானவானாகி, என் இருதயத்தைச் சந்தோஷப்படுத்து.” (நீதிமொழிகள் 27:11) இதற்குக் கீழ்ப்படிவது எப்பேர்ப்பட்ட பாக்கியம்!
கடவுளுக்குப் பயப்படுகிறவர்களுக்கு அவர் தரப்போகிற காரியங்களை வேறு எந்த மனிதனும் உங்களுக்குத் தர முடியாது என்பதை நினைவில் வையுங்கள்: ‘தாழ்மைக்கும் யெகோவாவுக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம்.’—நீதிமொழிகள் 22:4. (w09 3/1)
[பக்கம் 30-ன் படம்]
அபிராஷ் காட்டிய தைரியத்தால் அவளது உறவினர்களில் எட்டுப் பேர் மீண்டும் பைபிள் படிப்பைத் தொடர்ந் திருக்கிறார்கள்