கடவுள் நிஜமான நபரா?
கடவுள் நிஜமான நபரா?
எல்லாரும் சொல்கிற பதில்கள்:
◼ “அவர் எங்கும் நிறைந்தவர்.” “தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார்.”
◼ “நம் அறிவுக்கு அப்பாற்பட்டவர், அவருக்கு உருவம் கிடையாது, அவர் ஒரு சக்தி.”
இயேசுவின் பதில்:
◼ “என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு.” (யோவான் 14:2) கடவுளுக்கு ஒரு வீடு அல்லது வாசஸ்தலம் இருப்பது போல் இயேசு இங்கு உருவகமாகக் குறிப்பிட்டார்.
◼ “நான் பிதாவினிடத்திலிருந்து புறப்பட்டு உலகத்திலே வந்தேன்; மறுபடியும் உலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகிறேன்.” (யோவான் 16:28) கடவுள் நிஜமான நபர் என்றும் அவர் குடிகொண்டிருப்பதற்கு ஓர் இடம் இருக்கிறது என்றும் இயேசு நம்பினார்.
கடவுளை ஏதோவொரு சக்தியென இயேசு எங்குமே சொல்லவில்லை. ஆனால் அவர் கடவுளிடம் பேசினார், பிரார்த்தனையும் செய்தார். பல சமயங்களில் யெகோவாவை பரலோக தகப்பனே என்று அழைத்தார். கடவுளோடு அவர் அன்னியோன்னியமாய் இருந்தார் என்பதை இதிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.—யோவான் 8:19, 38, 54.
“தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை,” “தேவன் ஆவியாயிருக்கிறார்” என்று பைபிள் சொல்வது வாஸ்தவம்தான். (யோவான் 1:18; 4:24) அதற்காக, அவருக்கு எந்தவிதமான உடலோ உருவமோ இல்லை என்று அர்த்தமாகாது. ஏனென்றால், “ஜென்ம சரீரமுமுண்டு, ஆவிக்குரிய சரீரமுமுண்டு” என்று பைபிள் சொல்கிறது. (1 கொரிந்தியர் 15:44) அப்படியென்றால், யெகோவாவுக்கு ஓர் ஆவி உடல் இருக்கிறதா?
ஆம், இருக்கிறது. இயேசு உயிர்த்தெழுப்பப்பட்ட பிறகு, ‘கடவுளுக்குமுன் நமக்காகத் தோன்றும்படி பரலோகத்திற்குள்ளே சென்றார்.’ (எபிரெயர் 9:24, NW) கடவுளைப் பற்றிய இரண்டு முக்கியமான உண்மைகளை இந்த வசனம் நமக்குக் கற்பிக்கிறது. முதலாவதாக, அவருக்கென்று ஓர் இருப்பிடம் இருக்கிறது. இரண்டாவதாக, அவர் நிஜமான ஒரு நபர்; எங்கும் நிறைந்திருக்கும் ஒரு சக்தி அல்ல.
அப்படியென்றால், கடவுளால் எப்படி அண்ட சராசரத்தையும் ஆட்டிப்படைக்க முடிகிறது? கடவுள் தம்முடைய பரிசுத்த ஆவியை, அதாவது சக்தியை, அண்டத்திலுள்ள எல்லா இடத்துக்கும் அனுப்ப முடியும். ஓர் அப்பா தன் கையை நீட்டி பிள்ளையை அரவணைப்பதுபோல் கடவுள் தமது சக்தியை அனுப்பி தம் நோக்கத்தை நிறைவேற்றுகிறார்.—சங்கீதம் 104:30; 139:7.
கடவுள் நிஜமான ஒரு நபராக இருப்பதால், அவருக்கு உணர்ச்சிகள் இருக்கின்றன; ஆம், அவருக்கென்று விருப்பு வெறுப்புகள் இருக்கின்றன. கடவுள் தம்முடைய மக்களைச் சிநேகிக்கிறார், தம்முடைய செயல்களில் மகிழ்கிறார், விக்கிரகாராதனையை வெறுக்கிறார், பொல்லாங்கைக் கண்டு மனஸ்தாபப்படுகிறார் என்றெல்லாம் அவரைப் பற்றி பைபிள் சொல்கிறது. (ஆதியாகமம். 6:6; உபாகமம் 16:22; 1 இராஜாக்கள் 10:9; சங்கீதம் 104:31) அவரை ‘நித்தியானந்த தேவன்’ என 1 தீமோத்தேயு 1:11 வர்ணிக்கிறது. இப்படிப்பட்ட கடவுளை நாம் முழு மனதுடன் நேசிக்கக் கற்றுக்கொள்ள முடியுமென இயேசு சொன்னதில் ஆச்சரியமேதுமில்லை.—மாற்கு 12:30. a (w09 2/1)
[அடிக்குறிப்பு]
a இந்த விஷயத்தைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள, யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தில் முதல் அதிகாரத்தைக் காண்க.
[பக்கம் 5-ன் சிறு குறிப்பு]
ஓர் அப்பா தன் கையை நீட்டி பிள்ளையை அரவணைப்பதுபோல் கடவுள் தமது சக்தியை அனுப்பி தம் நோக்கத்தை நிறைவேற்றுகிறார்