பதில்களைத் தேடி . . .
பதில்களைத் தேடி . . .
“வயிற்றுப்பாட்டிற்கு ‘என்ன’ செய்வோம் என்ற கேள்விக்கு மனிதன் பதில் கண்டுபிடித்துவிட்டான். ஒருகாலத்தில் கனவிலும் கண்டிராத சொகுசுப் பொருள்கள் எல்லாம் இப்போது நம்மைச் சுற்றி வலம் வருகின்றன. ‘குளுகுளு’ வசதிகள் என்ன, இன்னிசை கேட்டு மகிழ உயர்தர ‘சிடி’ என்ன, வருடமெல்லாம் விதவிதமான கனிகள் என்ன, எல்லாமே இன்று நம் கண்ணெதிரே மலிந்து கிடக்கின்றன. ஆனாலும், நாம் ‘ஏன்’ வாழ்கிறோம் என்ற கேள்விதான் நம் மனதை இன்னும் குடைந்துகொண்டிருக்கிறது. ஏன் இந்த அவசர ஓட்டம்? என்னதான் நோக்கம்?” —டேவிட் ஜி. மையர்ஸ், உளவியல் பேராசிரியர், ஹோப் காலேஜ், ஹாலண்ட், மிச்சிகன், அ.ஐ.மா.
இந்தப் பேராசிரியர் எழுப்பிய இக்கேள்விகளுக்கு நீங்கள் எப்படிப் பதில் அளிப்பீர்கள்? இக்கேள்விகளுக்குப் பதில் காண நேரம் செலவிடுவதால் பிரயோஜனம் இருக்கிறதா என்றும்கூட சிலர் யோசிக்கலாம். என்றாலும், இந்தக் கேள்விகளை எல்லாம் மூட்டைகட்டி வைத்துவிட்டு வாழ்க்கையை ஓட்டலாம் என நீங்கள் நினைக்கலாம். ஆனால், அந்த வாழ்க்கை இன்பமாக இருக்குமா? நடக்கும்போது சிறிய கல் ஒன்று உங்கள் ‘ஷூ’விற்குள்ளே போய்விட்டதென வைத்துக்கொள்ளுங்கள். அதன் உறுத்தலைச் சமாளித்துக்கொண்டு உங்களால் தொடர்ந்து நடக்க முடியும், என்றாலும், உங்கள் பயணம் இனிமையாக இருக்குமா? இருக்கவே இருக்காது.
வாழ்க்கைக்கு என்னதான் நோக்கம் என்று நீங்கள் எப்பொழுதாவது கேட்டிருந்தால், அப்படிக் கேட்டவர் நீங்கள் மட்டுமே அல்ல. மனித நெறிமுறைகள் சம்பந்தப்பட்ட மிகப் பெரிய ஆய்வுகளில் ஒன்றான உலக நெறிமுறைகள் பற்றிய ஆய்வு இதையே காட்டியது. அநேக நாடுகளில் இப்போதெல்லாம், “வாழ்க்கையின் அர்த்தத்தையும் நோக்கத்தையும்” குறித்து யோசிப்பவர்கள் அதிகமாகிக்கொண்டே போகிறார்கள் என அந்த ஆய்வு சுட்டிக் காட்டியது.
உங்கள் மனதிலுள்ள நெருடலைப் போக்கி நிஜமான மன நிம்மதியைக் காண வேண்டுமென்றால், பின்வரும் மூன்று முக்கியக் கேள்விகளுக்குப் பதில் தேட வேண்டும்.
நாம் எவ்வாறு தோன்றினோம்?
நாம் ஏன் வாழ்கிறோம்?
நமக்கு என்ன எதிர்காலம்?
முக்கியமான இந்தக் கேள்விகளுக்குச் சரியான பதில்களை நீங்கள் எங்கே கண்டுபிடிக்கலாம்? அடுத்துவரும் கட்டுரைகள் இதற்குப் பதிலளிக்கின்றன; ஊகங்களின் அடிப்படையிலோ தத்துவங்களின் அடிப்படையிலோ அல்ல, மாறாக கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளின் அடிப்படையில் இதற்குப் பதிலளிக்கின்றன. உங்களிடம் பைபிள் இருந்தால் அதை எடுத்து நீங்களே அந்தப் பதில்களைக் காணும்படி உங்களைக் கேட்டுக்கொள்கிறோம்.(w08 2/1)