நாம் ஏன் வாழ்கிறோம்?
நாம் ஏன் வாழ்கிறோம்?
இக்கேள்விக்குப் பதில் காண்பது ஏன் அவசியம்? வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லை, நோக்கமே இல்லை என்ற எண்ணம்தான் மனிதனை ரொம்பவே அலைக்கழிக்கிறது. மறுபட்சத்தில், ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் வாழ்பவர், எவ்வளவு கஷ்டமான சூழ்நிலை வந்தாலும் அதைச் சமாளிப்பார். நரம்பியல் நிபுணரும் நாசி படுகொலை சம்பவத்தில் தப்பியவருமான, விக்டர் ஈ. ஃபிராங்க்கல் எழுதியதாவது: “வாழ்க்கைக்கு ஓர் அர்த்தமுண்டு என்பதை ஒருவர் அறிந்திருந்தாரென்றால், எப்படிப்பட்ட மோசமான சூழ்நிலையையும் அவர் தாக்குப்பிடிப்பார்; இந்த அறிவைப் போல் வேறு எதுவும் அவருக்குக் கைகொடுக்காது என அடித்துச் சொல்வேன்.”
இருந்தபோதிலும், இந்த விஷயத்தைக் குறித்து முரண்பட்ட பல்வேறு கருத்துகள் ஏராளமாக நிலவுகின்றன. வாழ்க்கையின் நோக்கத்தைத் தீர்மானிப்பது அவரவரைப் பொறுத்தது என்பதாக அநேகர் நினைக்கிறார்கள். அதற்கு மாறாக, பரிணாமத்தை நம்புகிற சிலர் வாழ்க்கைக்கு உண்மையான அர்த்தம் எதுவும் கிடையாது என்று கற்பிக்கிறார்கள்.
ஆனாலும், வாழ்க்கையின் நோக்கத்தைக் கண்டுபிடிப்பதற்குத் தகுந்த வழி, உயிரைக் கொடுத்த யெகோவா தேவனிடமிருந்து கற்றுக்கொள்வதே. இந்த விஷயத்தைப்பற்றி அவருடைய வார்த்தை என்ன சொல்கிறதென்று சிந்திப்போம்.
பைபிள் சொல்வது
ஆணையும் பெண்ணையும் யெகோவா தேவன் படைத்தபோது அவர்களுக்கென்று ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை வைத்திருந்தார் என பைபிள் கற்பிக்கிறது. நம் முதல் பெற்றோராகிய அவர்களுக்குப் பின்வரும் கட்டளையை அவர் கொடுத்தார்.
ஆதியாகமம் 1:28. “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள்.”
ஆதாமும் ஏவாளும் அவர்களுடைய பிள்ளைகளும், பூமி முழுவதையும் பூங்கா போன்ற பரதீஸாய் ஆக்க வேண்டுமென்பதே கடவுளின் நோக்கமாக இருந்தது. மனிதர் வயதாகி இறந்துபோவதோ, சுற்றுச்சூழலுக்கு அவர்கள் கேடுவிளைவிப்பதோ அவருடைய நோக்கமாக இருக்கவில்லை. என்றாலும், நம் முதல் பெற்றோர் யோசிக்காமல் செய்த தீர்மானத்தின் விளைவாக நாம் பாவத்தையும் மரணத்தையும் சொத்தாகப் பெற வேண்டியதாகிவிட்டது. (ஆதியாகமம் 3:2-6; ரோமர் 5:12) அப்படியிருந்தும், யெகோவாவின் நோக்கம் மாறவே இல்லை. சீக்கிரத்தில், பூமி ஒரு பரதீஸாக மாறும்.—ஏசாயா 55:10, 11.
யெகோவா தம் நோக்கத்தை நிறைவேற்றுவதற்குத் தேவையான சரீர ஆற்றலோடும் மனத் திறனோடுமே நம்மைப் படைத்திருக்கிறார். அவருடைய உதவியின்றி வாழ்வதற்காக நம்மை அவர் படைக்கவில்லை. நம்மைக் குறித்து கடவுளுடைய நோக்கம் என்ன என்பது பின்வரும் பைபிள் பகுதிகளில் குறிப்பிடப்பட்டிருப்பதைக் கவனியுங்கள்.
பிரசங்கி 12:13. ‘காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக்கு [“மெய்த் தேவனுக்கு,” NW] பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.’
மீகா 6:8. “நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் [“யெகோவா,” NW] உன்னிடத்தில் கேட்கிறார்.”
மத்தேயு 22:37-39. “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே.”
பைபிள் அளிக்கும் பதில் நிஜமாகவே மன நிம்மதி தருவது எப்படி
உதிரி பாகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட எந்தவொரு சிக்கலான இயந்திரமும் சரியாக வேலைசெய்ய வேண்டுமானால், அதை எதற்காகத் தயாரித்திருக்கிறார்களோ அந்த நோக்கத்திற்கு அதைப் பயன்படுத்த வேண்டும், அதற்குரிய முறைப்படி அதைப் பயன்படுத்த வேண்டும். அவ்வாறே, நாமும்கூட நம் படைப்பாளர் வகுத்திருக்கும் முறைப்படியே நம் வாழ்க்கையைப்
பயன்படுத்த வேண்டும்; இல்லையெனில் ஆன்மீக, மன, உணர்ச்சி, உடல் என எல்லா ரீதியிலும் நமக்குநாமே சேதத்தை ஏற்படுத்திக்கொள்வோம். கடவுளுடைய நோக்கத்தை அறிந்திருப்பது வாழ்க்கையின் பின்வரும் அம்சங்களில் நமக்கு எப்படி மன நிம்மதியைத் தருகிறது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.எவை முக்கியமானவை எனத் தீர்மானிக்கையில், இன்று அநேகர் செல்வத்தைச் சேர்ப்பதிலேயே தங்களுடைய வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணிக்கிறார்கள். என்றாலும், “ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், . . . மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள்” என பைபிள் எச்சரிக்கிறது.—1 தீமோத்தேயு 6:9, 10.
மறுபட்சத்தில், பணத்தின்மீது பிரியம் வைப்பதற்குப் பதிலாகக் கடவுள்மீது பிரியம் வைப்பதற்குக் கற்றுக்கொள்பவர்கள் திருப்தியின் இரகசியத்தைக் கண்டுபிடித்துக்கொள்கிறார்கள். (1 தீமோத்தேயு 6:7, 8) கடினமாய் உழைப்பது எவ்வளவு முக்கியம் என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள்; சரீரத் தேவைகளைக் கவனித்துக்கொள்ளும் கடமை தங்களுக்கு இருப்பதையும் அறிந்துகொள்கிறார்கள். (எபேசியர் 4:28) அதே சமயத்தில், இயேசுவின் பின்வரும் எச்சரிக்கைக்கும் அவர்கள் செவிசாய்க்கிறார்கள்: “இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து, மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் [அதாவது, செல்வத்துக்கும்] ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது.”—மத்தேயு 6:24.
ஆகவே, கடவுளை நேசிப்பவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் வேலைக்கோ பணத்திற்கோ முதலிடம் கொடுப்பதற்குப் பதிலாக, அவருடைய சித்தத்தைச் செய்வதற்கே முதலிடம் கொடுக்கிறார்கள். கடவுளுடைய சித்தத்திற்கு முதலிடம் கொடுத்தால், யெகோவா தேவன் தங்களைப் பார்த்துக்கொள்வார் என்று அவர்கள் அறிந்திருக்கிறார்கள். சொல்லப்போனால், அவ்வாறு செய்வதற்குத் தாம் கடமைப்பட்டவராகவே யெகோவா கருதுகிறார்.—மத்தேயு 6:25-33.
மக்களுடன் பழகுகையில், அநேகர் தங்களுக்கே முதலிடம் கொடுக்கிறார்கள். இன்று, இந்த உலகின் அமைதியில்லா நிலைக்கு முக்கியக் காரணம், மக்கள் “தற்பிரியராயும், . . . சுபாவ அன்பில்லாதவர்களாயும்” இருப்பதே. (2 தீமோத்தேயு 3:2, 3) யாராவது தங்களை ஏமாற்றிவிட்டாலோ, தங்கள் கருத்துக்கு மறுப்புத் தெரிவித்தாலோ, அவ்வளவுதான், “கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும்” தலைகாட்டிவிடும். (எபேசியர் 4:31) அவ்வாறு சுயகட்டுப்பாட்டை இழப்பது, மன அமைதியைத் தருவதற்குப் பதிலாக ‘சண்டையையே எழுப்பும்.’—நீதிமொழிகள் 15:18.
அதற்கு நேர்மாறாக, கடவுளுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து தங்களைப்போலவே மற்றவர்களையும் நேசிப்பவர்கள், ‘ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, . . . ஒருவருக்கொருவர் மன்னிக்கிறார்கள்.’ (எபேசியர் 4:32; கொலோசெயர் 3:13) தங்களை மற்றவர்கள் தயவுடன் நடத்தாவிட்டாலும், ‘வையப்படும்போது பதில்வையாமல்’ இருந்த இயேசுவைப் போலவே நடந்துகொள்ள பெரிதும் விரும்புகிறார்கள். (1 பேதுரு 2:23) மற்றவர்கள் நன்றிகெட்டவர்களாய் இருந்தாலும், இயேசுவைப் போலவே, மற்றவர்களுக்குச் சேவை செய்வது உண்மையான திருப்தியைத் தருமென்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். (மத்தேயு 20:25-28; யோவான் 13:14, 15; அப்போஸ்தலர் 20:35) தம் குமாரனைப் பின்பற்ற முயற்சி செய்பவர்களுக்கு யெகோவா தேவன் தம்முடைய ஆவியை அருளுகிறார். இந்த ஆவியே அவர்களுடைய வாழ்வில் நிஜமான மன அமைதியைத் தருகிறது.—கலாத்தியர் 5:22.
என்றாலும், எதிர்காலத்தைப் பற்றிய உங்கள் கருத்து உங்கள் மன அமைதியை எவ்வாறு பாதிக்கலாம்?(w08 2/1)
[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]
வாழ்க்கையில் ஒருவருக்குக் குறிப்பிட்ட நோக்கம் தேவை
[பக்கம் 7-ன் படம்]
மன அமைதிக்கான வழியை இயேசு நமக்குக் கற்பிக்கிறார்