நம் வரலாற்றுச் சுவடுகள்
ஜப்பானில் நற்செய்தி அறிவிக்கப்பட்டது
ஜப்பானைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்காவில் பில்கிரிமாக (பயணக் கண்காணியாக) இருந்தார். செப்டம்பர் 6, 1926-ல் மிஷனரியாக ஜப்பானுக்கு திரும்பி வந்தார். இவரை வரவேற்க ஒரு சகோதரர் காத்திருந்தார். அந்தச் சகோதரர் மட்டும்தான் காவற்கோபுர பத்திரிகையை சந்தா மூலம் பெற்றுக்கொண்டிருந்தார். இந்த சகோதரர் கோபே என்ற இடத்தில் பைபிள் மாணாக்கர்களின் சிறிய தொகுதியை ஆரம்பித்து வைத்தார். ஜனவரி 2, 1927-ல் கோபேயில் முதல் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில், 36 பேர் கலந்துகொண்டார்கள்; 8 பேர் ஞானஸ்நானம் எடுத்தார்கள். இந்தச் சிறு தொகுதியினர்தான், ஜப்பானில் இருக்கும் 6 கோடி (60 மில்லியன்) மக்களுக்கும் நற்செய்தியை அறிவிக்க வேண்டியிருந்தது. எவ்வளவு பெரிய வேலை இது!
மே 1927-ல் ஜப்பானில் பொது பேச்சுகள் கொடுக்க ஏற்பாடு செய்தார்கள். மக்களை அழைப்பதற்காக, பொது இடங்களில் அழைப்பிதழ்களைக் கொடுத்தார்கள், போஸ்டர்களையும் பேனர்களையும் வைத்தார்கள். முதல் பேச்சு ஒசாகா என்ற இடத்தில் கொடுக்கப்பட்டது. அதற்காக 1,50,000 அழைப்பிதழ்களைக் கொடுத்தார்கள்; அங்கிருந்த பிரபலமான 3,000 ஆட்களுக்கும் அழைப்பிதழ்களை அனுப்பினார்கள். அதோடு, முக்கிய செய்தித்தாள்களில் விளம்பரம் செய்தார்கள்; 4,00,000 ட்ரெயின் டிக்கெட்டுகளிலும் இதைப் பற்றி விளம்பரம் செய்தார்கள். பேச்சு கொடுக்கப்பட்ட நாளில், இரண்டு விமானங்களில் சென்று 1,00,000 அழைப்பிதழ்களை ஒசாகா முழுவதிலும் போட்டார்கள். ஒசாகா ஆசாஹீ என்ற மன்றத்தில் அந்தப் பேச்சு கொடுக்கப்பட்டது. “கடவுளுடைய அரசாங்கம் சீக்கிரம் வரப்போகிறது!” என்ற அந்தப் பேச்சைக் கேட்க சுமார் 2,300 பேர் வந்திருந்தார்கள். முழு மன்றமும் நிறைந்துவிட்டது. அதனால், கிட்டத்தட்ட 1,000 பேர் திரும்பி போய்விட்டார்கள். பேச்சு முடிந்த பிறகு 600-க்கும் அதிகமானவர்கள் அவர்களுக்கு இருந்த சந்தேகங்களைக் கேட்டு பதில்களை தெரிந்துகொண்டார்கள். அடுத்தடுத்த மாதங்களில் மேற்கு ஜப்பானில் இருக்கும் கியோடோவிலும் மற்ற நகரங்களிலும் பொது பேச்சுகள் கொடுக்கப்பட்டன.
அக்டோபர் 1927-ல் ஜப்பானின் தலைநகரமான டோக்கியோவிலும் பொது பேச்சுகள் கொடுக்க ஏற்பாடு செய்தார்கள். பிரதம மந்திரி, பாராளுமன்ற அங்கத்தினர்கள், மதத் தலைவர்கள், ராணுவ அதிகாரிகள் என முக்கியமான ஆட்களுக்கு அழைப்பிதழ்களை அனுப்பினார்கள். போஸ்டர்கள் வைத்தார்கள்; செய்தித்தாளில் விளம்பரம் செய்தார்கள்; 7,10,000 அழைப்பிதழ்களைக் கொடுத்தார்கள். மொத்தம் மூன்று பேச்சுகள் கொடுக்கப்பட்டன. 4,800 பேர் அந்தப் பேச்சுகளைக் கேட்க வந்திருந்தார்கள்.
வைராக்கியமான ஊழியர்கள்
கால்பார்ட்டர்கள் அதாவது, பயனியர்கள் வீடுவீடாக சென்று நற்செய்தியை அறிவித்தார்கள். முதல்முதலில் ஜப்பானில் பயனியர் செய்தவர்களில் மாட்சூயெ ஈஷீ என்பவரும் ஒருவர். அவருடைய கணவர் ஜீஸோவோடு சேர்ந்து ஜப்பானின் பெரும்பாலான பகுதிகளில் நற்செய்தியை அறிவித்தார்கள். சப்போரோ, சென்டை, டோக்கியோ, யோகோஹாமா, நாகொயா, ஒசாகா, கியோடோ, ஒகாயாமா, டொகுஷிமா போன்ற இடங்களில் எல்லாம் பிரசங்கித்தார்கள். ஈஷீ என்ற சகோதரியும் சாக்கீக்கோ டானாக்கா என்ற வயதான சகோதரியும் அரசாங்க அதிகாரிகளைப் பார்த்து சாட்சி கொடுத்தார்கள். அந்த அதிகாரிகளில் ஒருவர், தி ஹார்ப் ஆஃப் காட் மற்றும் டெலிவரன்ஸ் என்ற புத்தகங்களை சிறைகளில் இருக்கும் நூலகங்களில் வைப்பதற்காக கேட்டார்; ஒவ்வொரு புத்தகத்திலும் 300 பிரதிகளைக் கேட்டார்.
காட்சூவோ-ஹாஜீனோ மீயூரா தம்பதிக்கு சகோதரி ஈஷீ நற்செய்தியை அறிவித்தார். அவர்கள் பைபிள் பிரசுரங்களைப் பெற்றுக்கொண்டார்கள், நல்ல முன்னேற்றம் செய்து, 1931-ல் ஞானஸ்நானம் எடுத்தார்கள், பயனியர்களாக ஆனார்கள். ஹாரூயீச்சீ-ட்டானே யாமாடா என்ற இன்னொரு தம்பதியும் அவர்களுடைய சொந்தக்காரர்களும் நற்செய்தியை ஏற்றுக்கொண்டு பைபிள் மாணாக்கர்கள் ஆனார்கள். பிறகு அந்தத் தம்பதி பயனியரானார்கள். அவர்களுடைய மகள் யூக்கீக்கோ, டோக்கியோவிலுள்ள பெத்தேலுக்குப் போனார்.
வாகன வீடுகள்
அப்போதெல்லாம், சாலைகள் மிகவும் மோசமாக இருந்தன. அதோடு கார்களின் விலையும் அதிகமாக இருந்தது. அதனால், காஸூமீ மீனாயூரா என்ற சகோதரரும் மற்ற இளம் பயனியர்களும் இன்ஜின் இல்லாத வாகன வீடுகளை பயன்படுத்தினார்கள். அதற்கு வேகமாக ரதத்தை ஓட்டிய யெகூவின் பெயரை வைத்தார்கள். (2 இரா. 10:15, 16) மூன்று பெரிய ‘யெகூவை’ அதாவது, வாகன வீடுகளைப் பயன்படுத்தினார்கள். ஒவ்வொரு வாகன வீடும், 7.2 அடி (2.2 மீ.) நீளமும் 6.2 அடி (1.9 மீ.) அகலமும் 6.2 அடி (1.9 மீ.) உயரமுமாக இருந்தது. அதில் 6 பேர் தங்க முடியும். அதோடு, 11 சிறிய ‘யெகூவை’ அதாவது, வாகன வீடுகளை ஜப்பான் கிளை அலுவலகத்தில் செய்தார்கள். அதில் 2 பேர்தான் தங்க முடியும். இந்தச் சிறிய வீடு சைக்கிளோடு இணைக்கப்பட்டிருந்தது. கீயிச்சீ ஈவாசாக்கீ என்ற சகோதரர் இதைச் செய்ய உதவினார். அவர் சொல்கிறார்: ‘ஒவ்வொரு வாகன வீட்டை மூடுவதற்கு ஒரு கனமான துணியை பயன்படுத்தினார்கள், மின்சாரத்திற்காக ஒரு கார் பேட்டரியையும் வைத்திருந்தார்கள்.’ வடக்கில் இருக்கும் ஹாக்கைடோ என்ற ஊரிலிருந்து தெற்கில் இருக்கும் கியூஷு என்ற ஊர் வரை ஜப்பான் முழுவதிலும் பயனியர்கள் நற்செய்தியை அறிவித்தார்கள். வாகன வீட்டிலேயே சென்று மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் நற்செய்தியை அறிவித்தார்கள்.
ஈக்கூமாட்சூ ஓட்டா என்ற பயனியர் சகோதரர் சொன்னார்: ‘ஒரு ஊருக்கு போனதும் எங்களுடைய யெகூவை [வாகன வீட்டை] ஒரு இடத்துல நிறுத்திடுவோம். அதுக்கு அப்புறம், அந்த ஊருல இருக்குற அதிகாரிய, இல்லனா முக்கியமான ஆட்களை பார்த்து பேசுவோம். அப்புறம்தான் வீடுவீடா போய் நற்செய்தியை சொல்லி புத்தகங்கள கொடுப்போம். ஒரு ஊர்ல பிரசங்கிச்ச பிறகு அடுத்த ஊருக்குப் போவோம்.”
முதல்முதலில் மாநாடு நடந்தபோது ஜப்பானில் 36 பைபிள் மாணாக்கர்கள் மட்டும்தான் இருந்தார்கள். (சக. 4:10) ஐந்தே வருஷங்களில் அதாவது, 1932-ல் பயனியர்களும் பிரஸ்தாபிகளும் சேர்ந்து 103 பேர் ஊழிய அறிக்கை செய்தார்கள். 14,000 புத்தகங்களை கொடுத்தார்கள். இப்போது, ஜப்பானில் 2,20,000 பிரஸ்தாபிகள் இருக்கிறார்கள். அவர்கள் முக்கிய நகரங்களில் பொது ஊழியம் செய்கிறார்கள். நற்செய்தியை வைராக்கியமாக அறிவிக்கிறார்கள்.—ஜப்பானின் வரலாற்றுச் சுவடுகள்.