சுயதியாக மனப்பான்மையைக் காத்துக்கொள்வது எப்படி?
‘எவராவது என்னைப் பின்பற்றிவர விரும்பினால், அவர் தன்னையே அர்ப்பணம் செய்ய வேண்டும்.’—மத். 16:24.
1. சுயதியாக மனப்பான்மைக்கு இயேசு எப்படித் தலைசிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார்?
சுயதியாக மனப்பான்மைக்குத் தலைசிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர் இயேசு கிறிஸ்து. அவர் பூமியில் வாழ்ந்த காலமெல்லாம் தன்னுடைய சொந்த ஆசைகளுக்கும் சொகுசான வாழ்க்கைக்கும் முக்கியத்துவம் தரவில்லை; கடவுளுடைய சித்தத்தைச் செய்வதே அவருடைய உயிர்மூச்சாக இருந்தது. (யோவா. 5:30) கழுமரத்தில் சாகும்வரை உண்மையோடு இருந்தது, அவருடைய சுயதியாக மனப்பான்மைக்குப் மாபெரும் அத்தாட்சி அளித்தது.—பிலி. 2:8.
2. சுயதியாக மனப்பான்மையை நாம் எப்படி வெளிக்காட்டலாம், ஏன் வெளிக்காட்ட வேண்டும்?
2 இயேசுவைப் பின்பற்றுகிற நாமும் சுயதியாக மனப்பான்மையை வெளிக்காட்ட வேண்டும். சுயதியாக மனப்பான்மை என்றால் என்ன? இது, சுயநலத்திற்கு எதிர்மாறானது; மற்றவர்களுக்கு உதவுவதற்காக ஒருவர் தன்னுடைய விருப்பங்களைத் தியாகம் செய்வதை அர்த்தப்படுத்துகிறது. (மத்தேயு 16:24-ஐ வாசியுங்கள்.) நமக்கு சுயதியாக மனப்பான்மை இருந்தால், நம்முடைய ஆசைகளையும் விருப்பங்களையும்விட மற்றவர்களுடைய ஆசைகளுக்கும் விருப்பங்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்போம். (பிலி. 2:3, 4) சுயதியாக மனப்பான்மை நம் வழிபாட்டின் அஸ்திவாரமென இயேசு சொன்னார். இயேசுவின் சீடர்களுக்குரிய அடையாளமான அன்புதான் இந்த மனப்பான்மையை வெளிக்காட்ட நம்மைத் தூண்டுகிறது. (யோவா. 13:34, 35) இப்படிப்பட்ட மனப்பான்மையுள்ள சர்வதேச சகோதரத்துவத்தின் பாகமாக இருப்பது, நமக்கு எத்தனை ஆசீர்வாதங்களை அள்ளித் தருகின்றன!
3. சுயதியாக மனப்பான்மையைக் காட்டவிடாமல் நம்மைத் தடுப்பது எது?
3 சுயதியாக மனப்பான்மையைக் காட்டவிடாமல் தடுக்கும் ஓர் எதிரி நமக்குள் ஒளிந்திருக்கிறது. அதுதான் சுயநலம். ஆதாமும் ஏவாளும் எப்படிச் சுயநலமாக நடந்துகொண்டார்கள் என்பதை யோசித்துப் பாருங்கள். கடவுளைப் போல ஆக வேண்டும் என்ற ஆசையில் ஏவாள் சுயநலமாக நடந்துகொண்டாள். ஏவாளைப் பிரியப்படுத்த வேண்டும் என்ற ஆசையில் ஆதாமும் சுயநலமாக நடந்துகொண்டான். (ஆதி. 3:5, 6) அது முதற்கொண்டு சுயநலமாக நடந்துகொள்ள மக்களை சாத்தான் விடாமல் தூண்டியிருக்கிறான். அவன் இயேசுவையும் விட்டுவைக்கவில்லை. (மத். 4:1-9) நம் நாளில், சுயநலமாக நடந்துகொள்ள அநேகரை பல வழிகளில் தூண்டியிருக்கிறான்; அதில் வெற்றியும் கண்டிருக்கிறான். நாம் கவனமாக இல்லாவிட்டால், இந்த மனப்பான்மை நம்மையும் தொற்றிக்கொள்ளும்.—எபே. 2:2.
4. (அ) இந்த உலகத்தில், சுயநல ஆசைகளை நம்மால் விட்டொழிக்க முடியுமா? விளக்குங்கள். (ஆ) என்ன கேள்விகளை ஆராயப் போகிறோம்?
4 சுயநல மனப்பான்மை துரு போன்றது. இரும்பாலான ஒரு பொருள் துருப்பிடிப்பதைக் கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டுவிட்டால், அது அந்தப் பொருளை அரித்து, உருக்குலைத்துவிடும். பின்பு, ஒன்றுக்கும் உதவாமல் போய்விடும். நம்முடைய வாழ்க்கையும் அப்படித்தான். இந்த உலகத்தில், அபூரணத்தையும் சுயநல மனப்பான்மையையும் நம்மால் விட்டொழிக்க முடியாவிட்டாலும், அப்படிப்பட்ட மனப்பான்மை தலைதூக்காதபடி தொடர்ந்து போராட வேண்டும். அதனால் வரும் ஆபத்துகளைக் குறித்து கவனமாக இல்லாவிட்டால், அது நம்முடைய சுயதியாக மனப்பான்மையை அரித்துவிடும். (1 கொ. 9:26, 27) சுயநல மனப்பான்மை நமக்குள் தலைதூக்குவதை எப்படித் தெரிந்துகொள்ளலாம்? சுயதியாக மனப்பான்மையை நாம் எப்படி வளர்த்துக்கொள்ளலாம்?
சுயநலத்தைக் கண்டறிய பைபிளைப் பயன்படுத்துங்கள்
5. (அ) பைபிள் எப்படி ஒரு கண்ணாடியைப் போல இருக்கிறது? (கட்டுரையின் முதல் படத்தைப் பாருங்கள்.) (ஆ) நமக்குள் சுயநல மனப்பான்மை இருக்கிறதா என ஆராயும்போது, நாம் எதைத் தவிர்க்க வேண்டும்?
5 பொதுவாக நாம் எல்லோரும் கண்ணாடியில் நம் முகத்தைச் சரிபார்க்கிறோம். பைபிளும் ஒரு கண்ணாடிதான். பைபிளைப் படிக்கும்போது நம்முடைய சுபாவங்களைக் கண்டறியவும் குறைகளைச் சரிசெய்யவும் முடியும். (யாக்கோபு 1:22-25-ஐ வாசியுங்கள்.) கண்ணாடியில் சரியாகப் பார்த்தால்தான் நம் முகம் தெளிவாகத் தெரியும். வெறுமென பார்த்துவிட்டு திரும்பிவிட்டால் முகத்தில் இருக்கும் சிறிதான, அதே சமயத்தில் முக்கியமான குறையைப் பார்க்கத் தவறிவிடுவோம். அதே சமயத்தில், கண்ணாடியை ஏதோவொரு ஓரத்திலிருந்து பார்த்தால் வேறொருவருடைய முகம்தான் தெரியும். பைபிள் என்ற கண்ணாடியில் நம்மைப் பார்க்கும்போது, சுயநலம் போன்ற குறைகள் நமக்குள் இருக்கிறதா என்பதைக் கவனியுங்கள். அதை மேலோட்டமாகவோ மற்றவர்களுடைய குறைகளைக் கண்டுபிடிக்கும் நோக்கத்துடனோ வாசித்தால் நம் குறைகள் நமக்குத் தெரியாமல் போய்விடும்.
6. பரிபூரணமான சட்டத்தை நாம் எப்படி ‘விடாமல் கடைப்பிடிக்கிறோம்’?
6 பைபிளை தினமும் வாசித்தாலும், சில சமயங்களில் சுயநல மனப்பான்மை நமக்குள் தலைதூக்குவதை நாம் உணராமல் இருக்கலாம். எப்படி? இதைச் சற்று கற்பனை செய்துபாருங்கள்: கண்ணாடி பற்றிய உதாரணத்தில், அந்த மனிதன் “தன்னைத்தானே பார்த்து” கொண்டிருந்ததாக யாக்கோபு எழுதினார். “பார்த்து” என்பதற்கு யாக்கோபு பயன்படுத்திய கிரேக்க வார்த்தை, ஆராய்ந்து பார்ப்பதை அல்லது கவனமாகச் சிந்தித்துப் பார்ப்பதை அர்த்தப்படுத்துகிறது. ஆனாலும் அந்த மனிதன் ஒரு காரியத்தைச் செய்யத் தவறிவிட்டான். அது என்ன? அவன் அங்கிருந்து “போனவுடனே தன் தோற்றம் எப்படி இருந்தது என்பதை மறந்துவிடுகிறான்.” வேறு வார்த்தைகளில் சொன்னால், கண்ணாடியில் பார்த்துவிட்டுத் தன்னைச் சரிசெய்யாமல் போய்விடுகிறான். ஆனால், தன்னைச் சரிசெய்ய வேண்டுமென நினைக்கும் ஒருவர், ‘பரிபூரணமான சட்டத்தைக் கூர்ந்து கவனிப்பதோடு’ ‘அதை விடாமல் கடைப்பிடிக்கிறார்.’ அவர் கடவுளுடைய வார்த்தை எனும் பரிபூரணமான சட்டத்தை விட்டுவிடாமல் அதிலுள்ள போதனைகளை எப்போதும் கடைப்பிடிக்கிறார். “நீங்கள் என் வார்த்தையில் நிலைத்திருந்தால் நிஜமாகவே என் சீடர்களாக இருப்பீர்கள்” என்று இயேசுவும் சொல்லியிருக்கிறார்.—யோவா. 8:31.
7. பைபிளைப் பயன்படுத்தி சுயநலத்தின் சுவடுகளை எப்படிக் கண்டறியலாம்?
7 நமக்குள் சுயநலத்தின் சுவடுகள் இருக்கிறதா என்பதைக் கண்டறிய, முதலில் கடவுளுடைய வார்த்தையைக் கவனமாகப் படிக்க வேண்டும். எந்தெந்த விஷயங்களில் முன்னேற வேண்டும் என் பதைக் கண்டறிய இது உங்களுக்கு உதவும். அத்துடன் நிறுத்திவிடக் கூடாது. இன்னும் ஆழமாக ஆராய்ச்சி செய்ய வேண்டும். ஒரு பைபிள் சம்பவத்தை வாசிக்கும்போது நீங்கள் அங்கிருப்பதாக கற்பனை செய்து பாருங்கள். பிறகு, உங்களையே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘இந்தச் சூழ்நிலையில் நான் எப்படி நடந்திருப்பேன்? சரியாக நடந்திருப்பேனா?’ படித்த விஷயங்களைத் தியானித்துப் பார்த்த பிறகு அதைக் கடைப்பிடிப்பது ரொம்ப முக்கியம். (மத். 7:24, 25) சுயதியாக மனப்பான்மையைக் காத்துக்கொள்ள பைபிள் உதாரணங்கள் நமக்குக் கைகொடுக்கும். சவுல் ராஜா மற்றும் அப்போஸ்தலன் பவுலின் உதாரணங்களை இப்போது ஆராயலாம்.
சவுல் ராஜாவின் எச்சரிப்பூட்டும் உதாரணம்
8. ஆரம்பத்தில் சவுலுக்கு எப்படிப்பட்ட மனப்பான்மை இருந்தது, அதைச் செயலில் எப்படிக் காட்டினார்?
8 சுயநலம், சுயதியாக மனப்பான்மையை அழித்துவிடும் என்பதை சவுல் ராஜாவின் உதாரணம் காட்டுகிறது. அவர் தன்னுடைய ஆட்சியின் ஆரம்பத்தில் பணிவாக, மனத்தாழ்மையாக நடந்துகொண்டார். (1 சா. 9:21) தன்னைப் பற்றி இஸ்ரவேலர்கள் கேவலமாகப் பேசியபோது, கடவுள் கொடுத்த அதிகாரத்தால் அவர்களைத் தண்டித்திருக்கலாம்; ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. (1 சா. 10:27) கடவுளுடைய சக்தியின் வழிநடத்துதலால் அவர் அம்மோனியர்களுக்கு எதிராகப் போரிட்டு இஸ்ரவேலர்களுக்கு வெற்றி தேடித் தந்தார். வெற்றிக்கான புகழை மனத்தாழ்மையோடு யெகோவாவுக்கே சேர்த்தார்.—1 சா. 11:6, 11-13.
9. சவுல் எப்படிச் சுயநலமாக நடந்துகொள்ள ஆரம்பித்தார்?
9 பிற்பாடு, சவுல் சுயநலத்தையும் தற்பெருமையையும் தனக்குள் வளரவிட்டார்; இது துருவைப் போல அவருடைய சுபாவத்தை அரித்துப்போட்டது. அமலேக்கியரோடு போரிட்ட சமயத்தில் யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் தன்னுடைய சுயநல ஆசைகளுக்கு அடிபணிந்தார். அமலேக்கியரின் பொருள்களை அழிக்கும்படி கடவுள் கொடுத்த கட்டளையை மீறினார். தற்பெருமையில் மிதந்த அவர், தனக்காக ஒரு ஜெயஸ்தம்பத்தையும் நாட்டினார். (1 சா. 15:3, 9, 12) அதில் யெகோவா பிரியப்படவில்லை என்பதை சாமுவேல் சொன்னபோது, அமலேக்கியர்களை அழிக்கும் விஷயத்தில் கடவுளுக்கு தான் கீழ்ப்படிந்ததாக நியாயப்படுத்தினார். ஆனால், பொருள்களை கொண்டுவந்தது மக்கள்தான் என்று சொல்லி அவர்கள்மேல் பழி சுமத்தினார். (1 சா. 15:16-21) தற்பெருமை சவுலின் கண்ணை மறைத்ததால் கடவுளைப் பிரியப்படுத்துவதற்குப் பதிலாக மக்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டுமென்பதில் குறியாக இருந்தார். (1 சா. 15:30) சுயதியாக மனப்பான்மையைக் காத்துக்கொள்ள சவுலின் எச்சரிப்பூட்டும் உதாரணம் நமக்கு எப்படி ஒரு கண்ணாடிபோல் இருக்கிறது?
10, 11. (அ) சுயதியாக மனப்பான்மையைக் காத்துக்கொள்வதன் அவசியத்தை சவுலின் உதாரணம் எப்படிக் காட்டுகிறது? (ஆ) சவுலின் கெட்ட முன்மாதிரியை நாம் எப்படித் தவிர்க்கலாம்?
10 முதலாவது, நாம் சவுலைப் போல மெத்தனமாக இருந்துவிடக் கூடாது. முன்பு சுயதியாக மனப்பான்மையைக் காட்டினோம் என்பதற்காக எப்போதுமே அந்த மனப்பான்மையைக் காட்டுவோம் என்று நினைக்கக் கூடாது. (1 தீ. 4:10) சவுல் ஆரம்பத்தில் மனத்தாழ்மையோடு நடந்ததால் கடவுளுடைய ஆசீர்வாதத்தைப் பெற்றார். ஆனால் நாளடைவில் தனக்குள் சுயநலம் செல்வாக்கு செலுத்த ஆரம்பித்தபோது அவர் அதை அடியோடு அகற்றிவிடத் தவறினார். இதனால், கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போனார்; கடைசியில் யெகோவா அவரை நிராகரித்தார்.
11 இரண்டாவதாக, நம்மிடமுள்ள நல்ல விஷயங்களையே பார்த்துக்கொண்டு, முன்னேற வேண்டிய விஷயங்களைப் பார்க்காமல் விட்டுவிடக் கூடாது. இப்படிச் செய்வது, நாம் அணிந்திருக்கும் புதுத் துணிகளை மட்டும் கண்ணாடியில் பார்த்து ரசித்துவிட்டு முகத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் அழுக்கைப் பார்க்காமல் விட்டுவிடுவதுபோல் இருக்கிறது. ஒருவேளை, நாம் சவுலைப் போல தற்பெருமையில் மிதக்காமல் இருக்கலாம். ஆனால், சவுலின் முடிவுக்குக் காரணமாயிருந்த கெட்ட மனப்பான்மை நமக்குள் இருக்கலாம்; அதை நாம் தவிர்க்க வேண்டும். நமக்கு ஏதாவது ஆலோசனை கொடுக்கப்பட்டால், தவறை நியாயப்படுத்தாமலும் பழியை மற்றவர்கள்மீது போடாமலும் இருக்க வேண்டும். மாறாக, கொடுக்கப்படும் ஆலோசனையை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.—சங்கீதம் 141:5-ஐ வாசியுங்கள்.
12. மோசமான பாவத்தைச் செய்துவிட்டால் சுயதியாக மனப்பான்மை நம்மை என்ன செய்யத் தூண்டும்?
12 மோசமான ஒரு பாவத்தைச் செய்துவிட்டால் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? சவுல் தன்னுடைய பெயரையும் புகழையும் தக்க வைத்துக்கொள்வதிலேயே குறியாக இருந்தார். அதனால், ஆலோசனையை ஏற்றுக்கொள்வதை அவமானமாக நினைத்து அதை நிராகரித்தார். நமக்கு சுயதியாக மனப்பான்மை இருந்தால், அவமானம் கருதாமல் நாமாகவே போய் மூப்பர்களின் ஆலோசனையை நாடுவோம். (நீதி. 28:13; யாக். 5:14-16) உதாரணத்திற்கு, ஒரு சகோதரர் தன்னுடைய 12 வயதிலிருந்தே ஆபாசத்தைப் பார்த்து வந்தார்; பத்து வருடங்களுக்கும் மேலாக இதை இரகசியமாகச் செய்து வந்தார். அவர் இப்படிச் சொல்கிறார்: “என்னோட மனைவிகிட்டேயும் மூப்பர்கள்கிட்டேயும் இதை பற்றி சொல்றதுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. ஆனா, அதை சொன்னதுக்கு அப்புறம்தான் என் மனசுல இருந்த பாரமெல்லாம் குறைஞ்சுது. என்னை உதவி ஊழியர் பொறுப்பிலிருந்து நீக்கியத என்னோட ஃப்ரெண்ட்ஸ் சிலர் அவமானமா நினைச்சாங்க. நான் ஆபாசத்தை பார்த்த சமயத்துல செஞ்ச சேவையைவிட, இப்ப நான் செய்ற சேவையிலதான் யெகோவா ரொம்ப சந்தோஷப்படுறார்னு எனக்கு தெரியும். யெகோவா என்னை பற்றி என்ன நினைக்கிறாருங்குறதுதான் எனக்கு ரொம்ப முக்கியம்.”
பேதுருவின் சிறந்த உதாரணம்
13, 14. பேதுரு எப்படிச் சுயநலத்தோடு நடந்துகொண்டார்?
13 இயேசுவால் பயிற்றுவிக்கப்பட்ட சமயத்தில், பேதுரு சுயதியாக மனப்பான்மையைக் காட்டினார். (லூக். 5:3-11) ஆனாலும், தனக்குள் இருந்த சுயநலத்தை அவர் எதிர்த்துப் போராட வேண்டியிருந்தது. உதாரணத்திற்கு, கடவுளுடைய அரசாங்கத்தில் இயேசுவின் வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் தங்களுக்கு இடம் வேண்டுமென்று யாக்கோபும் யோவானும் கேட்டபோது பேதுரு அவர்கள்மீது கடுங்கோபம் அடைந்தார். ஒருவேளை, அதில் தனக்கு ஓர் இடம் கிடைக்குமென பேதுரு நினைத்திருக்கலாம். ஏனென்றால், பேதுருவுக்கு ஒரு முக்கிய பொறுப்பு கொடுக்கப்போவதாக அவரிடம் இயேசு ஏற்கெனவே சொல்லியிருந்தார். (மத். 16:18, 19) சுயநலத்தோடு தங்களுடைய சகோதரர்கள்மேல் ‘அதிகாரம் செலுத்த’ நினைத்ததற்காக யாக்கோபையும் யோவானையும் மட்டுமல்ல, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலர்களையும் இயேசு கண்டித்தார்.—மாற். 10:35-45.
14 சுயநல மனப்பான்மையைச் சரிசெய்ய பேதுருவுக்கு இயேசு உதவியபோதிலும், அதை விட்டொழிக்க அவர் தொடர்ந்து போராட வேண்டியிருந்தது. அப்போஸ்தலர்கள் எல்லோரும் தம்மை விட்டு ஓடிப்போவார்கள் என்று இயேசு சொன்னபோது, மற்றவர்கள் ஓடிப்போனாலும் தான் ஓடிப்போவதில்லை என்று பேதுரு அடித்துச் சொன்னார். இதன் மூலம், மற்றவர்களைவிட தன்னை உயர்வாகக் காட்டிக்கொண்டார். (மத். 26:31-33) பேதுருவுக்குத் தன்னைப் பற்றி அப்படியொரு தன்னம்பிக்கை இருந்திருக்கக் கூடாது. ஏனென்றால், அதே ராத்திரியில் தன் உயிருக்குப் பயந்து, இயேசுவை தனக்குத் தெரியவே தெரியாது என்று மூன்று முறை சொல்லிவிட்டார். இப்படிச் செய்ததன் மூலம் பேதுரு சுயதியாக மனப்பான்மையைக் காட்டத் தவறினார்.—மத். 26:69-75.
15. பேதுருவின் உதாரணத்திலிருந்து நாம் எப்படிப் பயனடையலாம்?
15 சுயநலத்தை விட்டொழிக்க பேதுரு போராடியபோதிலும் சில சமயங்களில் தோல்வியடைந்தார்; இருந்தாலும் அவருடைய உதாரணத்திலிருந்து நாம் பயனடையலாம். அவர், தன்னுடைய முயற்சியாலும் கடவுளுடைய சக்தியின் உதவியாலும் சுயநலத்தைக் களைந்தார், சுயக்கட்டுப்பாட்டையும் சுயதியாக அன்பையும் வளர்த்துக்கொண்டார். (கலா. 5:22, 23) முன்பு சகிக்க முடியாதிருந்த பல துன்பங்களை பிற்பாடு சகித்தார். ஒருமுறை அப்போஸ்தலன் பவுல், அவரை மற்றவர்கள்முன் வன்மையாகக் கண்டித்தபோது அதை மனத்தாழ்மையோடு ஏற்றுக்கொண்டார். (கலா. 2:11-14) தன்னை அவமானப்படுத்திவிட்டதாக நினைத்து பவுல்மீது கோபங்கொள்ளவில்லை; மாறாக, அவர்மீது தொடர்ந்து அன்பு காட்டினார். (2 பே. 3:15) சுயதியாக மனப்பான்மையை வளர்த்துகொள்ள பேதுரு நமக்குச் சிறந்த உதாரணம், அல்லவா?
16. துன்புறுத்தப்படும்போது எப்படிச் சுயதியாக மனப்பான்மையைக் காட்டலாம்?
16 துன்புறுத்தப்படும்போது நீங்கள் என்ன மனப்பான்மையைக் காட்டுகிறீர்கள் என்பதைச் சற்று யோசித்துப் பாருங்கள். பிரசங்கித்ததற்காக பேதுருவும் அப்போஸ்தலர்களும் சிறையில் அடைக்கப்பட்டார்கள், சாட்டையால் அடிக்கப்பட்டார்கள். அப்போது, “[இயேசுவின்] பெயருக்காகத் தாங்கள் அவமானப்படத் தகுதியுள்ளவர்களெனக் கருதப்பட்டதை” நினைத்து சந்தோஷப்பட்டார்கள். (அப். 5:41) பேதுருவைப் போல, நீங்களும் துன்புறுத்தப்படும்போது இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி சுயதியாக மனப்பான்மையைக் காட்டுங்கள். (1 பேதுரு 2:20, 21-ஐ வாசியுங்கள்.) மூப்பர்கள் கொடுக்கும் ஆலோசனையை ஏற்றுக்கொள்வதற்கும் இந்த மனப்பான்மை உங்களுக்கு உதவும். அவர்கள்மீது கோபப்படுவதற்குப் பதிலாக, பேதுருவின் முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்.—பிர. 7:9.
17, 18. (அ) ஆன்மீக இலக்குகளை வைக்கும்போது என்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்ளலாம்? (ஆ) நமக்குள் சுயநலம் எட்டிப்பார்த்தால் என்ன செய்யலாம்?
17 ஆன்மீக இலக்குகள் வைப்பதற்கும் பேதுருவின் உதாரணம் உங்களுக்கு உதவும். அதற்காக உழைக்கும்போது, உங்களுடைய சுயதியாக மனப்பான்மை அதில் பளிச்செனத் தெரிய வேண்டும். மற்றவர்கள் உங்களைப் புகழ வேண்டும் என்பதற்காக இதைச் செய்யாதபடி கவனமாக இருங்கள். ‘நான் ஏன் யெகோவாவுக்கு அதிகமாக சேவை செய்ய நினைக்கிறேன்? யாக்கோபையும் யோவானையும் போல பேர் புகழுக்காகவோ அதிகாரத்திற்காகவோ அப்படிச் செய்கிறேனா?’ என உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்.
18 உங்களுக்குள் சுயநலம் எட்டிப்பார்க்கிறது என்றால் உங்களுடைய யோசனைகளையும் உணர்ச்சிகளையும் சரிசெய்ய உதவும்படி யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள். அதோடு, உங்களுக்கு அல்ல யெகோவாவுக்கு மகிமை சேர்க்க கடுமையாக உழையுங்கள். (சங். 86:11) மற்றவர்களுடைய கவனத்தை உங்கள்மீது ஈர்க்காத சில ஆன்மீக இலக்குகளையும் வையுங்கள். உதாரணத்திற்கு, கடவுளுடைய சக்தி பிறப்பிக்கும் குணங்களில் எவை உங்களுக்குக் கஷ்டமாக இருக்கிறதோ அவற்றை வளர்த்துக்கொள்ள முயலுங்கள். ஒருவேளை, சபைக் கூட்டத்திற்கு நீங்கள் நன்கு தயாரிக்கலாம், ஆனால் ராஜ்ய மன்றத்தைச் சுத்தம் செய்ய ஆர்வம் இல்லாதிருக்கலாம். அப்படியென்றால், ரோமர்களுக்கு பவுல் கொடுத்த ஆலோசனையைப் பின்பற்ற இலக்கு வையுங்கள்.—ரோமர் 12:16-ஐ வாசியுங்கள்.
19. கடவுளுடைய வார்த்தை எனும் கண்ணாடியில் நம் குறைகளைப் பார்த்து சோர்வடையாமல் இருக்க நாம் என்ன செய்யலாம்?
19 கடவுளுடைய வார்த்தை எனும் கண்ணாடியில் கவனமாகப் பார்க்கும்போது, நம்மிடம் குறைகளும் சுயநல மனப்பான்மையும் இருப்பது தெரிய வரலாம், அதை நினைத்து நாம் சோர்ந்துபோகலாம். அப்போது, யாக்கோபு புத்தகத்திலுள்ள உதாரணத்தை யோசித்துப் பாருங்கள். அந்த மனிதன் உடனடியாக தன் தவறுகளைத் திருத்திக்கொண்டான் என்றோ எல்லாத் தவறுகளையும் சரிசெய்துகொண்டான் என்றோ யாக்கோபு குறிப்பிடவில்லை. மாறாக, அந்த மனிதன் ‘பரிபூரணமான சட்டத்தைக் கூர்ந்து கவனித்தான்’ என்றே குறிப்பிட்டார். (யாக். 1:25) கண்ணாடியில் பார்த்ததை ஞாபகத்தில் வைத்து, அதைச் சரிசெய்வதற்காக அந்த மனிதன் தொடர்ந்து முயன்றான். எனவே, உங்கள் குறைகளை நினைத்து சோர்ந்துபோகாதீர்கள், நாம் எல்லோருமே அபூரணர்கள் என்பதை நினைவில் வையுங்கள். (பிரசங்கி 7:20-ஐ வாசியுங்கள்.) பரிபூரணமான சட்டத்தை எப்போதும் கூர்ந்து கவனியுங்கள், சுயதியாக மனப்பான்மையைக் காத்துக்கொள்ள முயலுங்கள். அப்போது, அபூரணரான சகோதர சகோதரிகள் அநேகருக்கு யெகோவா தம்முடைய ஆதரவையும் ஆசீர்வாதத்தையும் அளித்திருப்பதுபோலவே உங்களுக்கும் அளிப்பார்.
[பக்கம் 10-ன் படம்]
பேதுரு கண்டிக்கப்பட்டபோது எப்படி நடந்துகொண்டார், நாமும் அப்படி நடந்துகொள்வோமா? (பாரா 15)