பெற்றோரே—சிசுப் பருவத்திலிருந்தே பிள்ளையைப் பயிற்றுவியுங்கள்
“இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்” என்று பைபிள் சொல்கிறது. (சங். 127:4) அதனால்தான், ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும்போது கிறிஸ்தவப் பெற்றோர் அவ்வளவு சந்தோஷப்படுகிறார்கள்!
ஒரு குழந்தை பிறக்கும்போது சந்தோஷத்தோடுகூட பொறுப்பும் வருகிறது. ஒரு குழந்தை ஆரோக்கியமாக வளர அவனுக்குச் சத்தான ஆகாரம் தேவை. அதேபோல் அந்தக் குழந்தை யெகோவாவோடுள்ள நல்லுறவில் வளர அவனுக்கு ஆன்மீக ஆகாரமும் பெற்றோரின் புத்திமதிகளும் தேவை. இதற்காக, பெற்றோர் தெய்வீக நியமங்களை அவனுடைய மனதில் பதிய வைக்க வேண்டும். (நீதி. 1:8) அப்படிப்பட்ட பயிற்றுவிப்பை எப்போது ஆரம்பிப்பது? என்ன கற்று தருவது?
பெற்றோருக்கு அறிவுரை தேவை
பூர்வ இஸ்ரவேலிலிருந்த சோரா ஊரானான தாண் வம்சத்தைச் சேர்ந்த மனோவாவை எடுத்துக்கொள்ளுங்கள். குழந்தை பாக்கியம் இல்லாதிருந்த அவருடைய மனைவி ஒரு மகனைப் பெற்றெடுப்பாள் என்று யெகோவாவின் தூதர் அவளுக்கு அறிவித்தார். (நியா. 13:2, 3) இதைக் கேட்டு மனோவாவும் அவருடைய மனைவியும் பெருமகிழ்ச்சி அடைந்திருப்பார்கள். ஆனால், அவர்களுக்கு ஒரு பெரிய கவலையும் இருந்தது. எனவே, மனோவா இப்படி ஜெபம் செய்தார்: “ஆ, என் ஆண்டவரே, நீர் அனுப்பின தேவனுடைய மனுஷன் மறுபடியும் ஒருவிசை எங்களிடத்தில் வந்து, பிறக்கப்போகிற பிள்ளைக்காக நாங்கள் செய்யவேண்டியதை எங்களுக்குக் கற்பிப்பாராக.” (நியா. 13:8) அந்த மகனை எப்படி வளர்க்கப்போகிறோமோ என்ற நியாயமான கவலை அவர்களுக்கு இருந்தது. சிம்சோன் பிறந்தபின் அவனுக்கு கடவுளுடைய சட்டங்களைக் கற்றுக்கொடுத்தார்கள்; சிம்சோனும் கற்றுக்கொடுக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது. சீக்கிரத்திலேயே கடவுளுடைய சக்தி சிம்சோன்மீது செயல்பட ஆரம்பித்தது என பைபிள் சொல்கிறது. அதனால், இஸ்ரவேலின் நியாயாதிபதிகளில் ஒருவரான அவர் நிறைய வல்லமையான செயல்களைச் செய்தார்.—நியா. 13:25; 14:5, 6; 15:14, 15.
பிள்ளைக்கு பயிற்றுவிப்பை எவ்வளவு சீக்கிரம் ஆரம்பிப்பது? தீமோத்தேயுவுக்கு அவருடைய பாட்டி லோவிசாளும் தாய் ஐனிக்கேயாளும் ‘பரிசுத்த எழுத்துக்களைச் சிசுப் பருவத்திலிருந்தே’ கற்றுத்தந்தார்கள். (2 தீ. 1:5; 3:15) ஆம், பச்சிளங்குழந்தையாக இருக்கும்போதே தீமோத்தேயுவுக்கு வேத வசனங்களைக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார்கள்.
கிறிஸ்தவப் பெற்றோர் தங்கள் குழந்தையை “சிசுப் பருவத்திலிருந்தே” பயிற்றுவிப்பதற்கு யெகோவாவிடம் ஆலோசனை கேட்டு ஜெபம் செய்ய வேண்டும், முன்கூட்டியே திட்டமிடவும் வேண்டும். “கவனமான திட்டங்கள் இலாபத்தைத் தரும்” என்று நீதிமொழிகள் 21:5 (ஈஸி டு ரீட் வர்ஷன்) சொல்கிறது. குழந்தை பிறப்பதற்கு முன்பே பெற்றோர் அந்தக் குழந்தைக்காக நிச்சயம் ஒவ்வொன்றையும் கவனமாகத் தயார் செய்வார்கள். ஏன், குழந்தைக்குத் தேவையான விஷயங்களை பட்டியலிட்டும் வைப்பார்கள். அதைவிட முக்கியமாக யெகோவாவைப் பற்றி குழந்தைக்குக் கற்றுத்தர பெற்றோர் திட்டமிட வேண்டும். அப்படிப்பட்ட பயிற்றுவிப்பை குழந்தை பிறந்தவுடன் ஆரம்பிப்பதே அவர்களுடைய லட்சியமாக இருக்க வேண்டும்.
குழந்தைகள் வளர்ந்து ஆளாவதைப் பற்றி விளக்கும் ஒரு புத்தகம் இவ்வாறு குறிப்பிடுகிறது: “குழந்தையின் முதல் சில மாதங்கள் மூளை வளர்ச்சிக்கு மிக முக்கியமான காலம். அந்தச் சமயத்தில்தான் மூளையில் சினாப்ஸிஸின் எண்ணிக்கை, அதாவது கற்றுக்கொள்வதற்கு தேவையான இணைப்புகளின் எண்ணிக்கை இருபது மடங்காக அதிகரிக்கிறது.” எனவே, இந்தக் காலத்தைப் பயன்படுத்தி குழந்தைகளுக்கு யெகோவாவைப் பற்றியும் அவருடைய நெறிகளைப் பற்றியும் கற்றுத்தருவது எவ்வளவு முக்கியம்!
ஒழுங்கான பயனியராக இருக்கும் ஒரு அம்மா தன் மகளைப் பற்றி இப்படிச் சொன்னார்: “அவள் பிறந்து ஒரு மாதத்திலிருந்தே அவளை ஊழியத்துக்குத் தூக்கிக்கொண்டு போவேன். என்ன நடக்கிறது என அவளால் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும் ஊழியத்தில் இருந்ததால் நிச்சயம் பயனடைந்திருப்பாள் என நம்புகிறேன். இரண்டு வயதானதும் ஊழியத்தில் தைரியமாக துண்டுப்பிரதிகளைக் கொடுக்க ஆரம்பித்தாள்.”
சிசுப் பருவத்திலிருந்தே குழந்தையை ஆன்மீகக் காரியங்களில் பயிற்றுவிப்பது நல்ல பலன்களைத் தரும். அதேசமயம் இது சுலபமல்ல என்பதையும் பெற்றோர் அறிந்திருக்கிறார்கள்.
‘பொன்னான நேரத்தை விலைக்கு வாங்கிக்கொள்ளுங்கள்’
பிள்ளைகள் துருதுருவென்று இருப்பார்கள்; நீண்ட நேரம் கவனிக்க மாட்டார்கள். இது பெற்றோருக்குப் பெரிய சவாலாக இருக்கலாம். அவர்களுடைய கவனம் ஒரு விஷயத்திலிருந்து மற்றொரு விஷயத்திற்கு சட்டென மாறிக்கொண்டே இருக்கும். அதுமட்டுமல்ல, தங்களைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் தெரிந்துகொள்ளவும் துருவி ஆராயவும் விரும்புவார்கள். பிள்ளையின் கவனத்தை தாங்கள் கற்றுத்தரும் விஷயத்தின்மீது ஒருமுகப்படுத்த பெற்றோர் என்ன செய்யலாம்?
மோசே சொன்னதைக் கவனியுங்கள். உபாகமம் 6:6, 7 சொல்கிறது: ‘இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது. நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசு.’ “கருத்தாய்ப் போதித்து” என்ற சொற்கள் அடிக்கடி திரும்பத் திரும்ப போதிப்பதைக் குறிக்கிறது. ஓர் இளஞ்செடிக்கு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை அடிக்கடி ஊற்ற வேண்டும். சிறு பிள்ளையின் விஷயத்திலும் இதுவே உண்மை. முக்கியமான விஷயத்தை பலமுறை கேட்கும்போது பெரியவர்களால்கூட அதை ஞாபகம் வைத்துக்கொள்ள முடிகிறது; அதேபோல்தான் பிள்ளைகளும் பலமுறை கேட்கும் விஷயத்தை மறக்க மாட்டார்கள்.
கடவுளைப் பற்றி பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க பெற்றோர் நேரம் செலவிட வேண்டும். இன்றுள்ள அவசரகதியான வாழ்க்கையில் இப்படி நேரம் செலவிடுவது பெரும் சவால்தான். ஆனால், முக்கியமான ஆன்மீகக் காரியங்களுக்காக ‘பொன்னான நேரத்தை விலைக்கு வாங்கிக்கொள்ளுங்கள்’ என்று பவுல் சொன்னார். (எபே. 5:15, 16, அடிக்குறிப்பு) இதை எப்படிச் செய்வது? பிள்ளையைப் பயிற்றுவிப்பது... சபை பொறுப்புகளைக் கவனிப்பது... வேலை பார்ப்பது... என இந்த மூன்றையும் சமநிலையோடு செய்வது ஒரு மூப்பருக்குக் கஷ்டமாக இருந்தது; அவருடைய மனைவி ஒரு ஒழுங்கான பயனியர் என்பதால் அவரும் படுபிஸியாக இருந்தார். அப்படியிருக்க அவர்கள் இருவரும் எப்படித் தங்கள் பிள்ளையைப் பயிற்றுவிக்க நேரம் ஒதுக்கினார்கள்? அந்தச் சகோதரர் இப்படிச் சொன்னார்: “ஒவ்வொரு நாளும் காலையில் வேலைக்கு போவதற்கு முன் என்னுடைய பைபிள் கதை புத்தகத்திலிருந்தோ தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்தல் என்ற சிறு புத்தகத்திலிருந்தோ அவளுக்கு நானும் என் மனைவியும் வாசித்துக்காட்டுவோம். தூங்க போவதற்குமுன் தவறாமல் அவளுக்கு வாசிப்போம், ஊழியத்திற்கு கூட்டிக்கொண்டு போவோம். சிறு வயதிலேயே அவளை பயிற்றுவிக்கும் இந்த வாய்ப்பைத் தவறவிட நாங்கள் விரும்பவில்லை.”
‘பிள்ளைகள் அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்’
நம் பிள்ளைகள் பொறுப்புள்ள நபர்களாக வளரவே நாம் ஆசைப்படுவோம். ஆனாலும், நம்முடைய பயிற்றுவிப்பின் மிக முக்கியமான நோக்கம் அவர்களுடைய இருதயத்தில் கடவுள்மீதான அன்பை வளர்ப்பதே.—மாற். 12:28-30.
சங்கீதம் 127:5 சொல்கிறது: “வாலவயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.” பிள்ளைகள், இலக்கை நோக்கி சரியாக எய்யப்படும் அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள். அம்பு எய்கிறவர் அம்பைக் கொஞ்ச நேரத்திற்கே வில்லில் வைத்திருக்க முடியும்; ஒருமுறை எய்த பிறகு அது திரும்பவும் கைக்கு வராது. அதேபோல், பிள்ளைகளைக் கொஞ்சக் காலத்திற்கு மட்டுமே பெற்றோர் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். பிள்ளைகளுடைய மனதிலும் இருதயத்திலும் தெய்வீக நியமங்களை பதிய வைக்க அந்தக் கொஞ்சம் காலத்தை பெற்றோர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
அப்போஸ்தலன் யோவான் தன்னுடைய ஆன்மீகப் பிள்ளைகளைப் பற்றி இவ்வாறு எழுதினார்: “என் பிள்ளைகள் சத்தியத்தில் தொடர்ந்து நடக்கிறார்கள் என்பதைக் கேள்விப்படும்போது ஏற்படுகிற சந்தோஷத்தைவிட அதிகமான சந்தோஷம் எனக்கு வேறில்லை.” (3 யோ. 4) கிறிஸ்தவப் பெற்றோரும் தங்கள் ‘பிள்ளைகள் சத்தியத்தில் தொடர்ந்து நடப்பதை’ பார்த்து சந்தோஷப்படுவார்கள்.