ஒருபோதும் ‘யெகோவாமீது கோபம்கொள்ளாதீர்’
“மனிதனின் முட்டாள்தனம் அவனுடைய வழியைத் தாறுமாறாக்கும்; அதோடு தன் இருதயத்திலே யெகோவாமீது கோபம்கொள்வான்.” —நீதி. 19:3, NW.
1, 2. மனிதரின் பிரச்சினைகளுக்கு நாம் ஏன் யெகோவாவைக் குற்றப்படுத்தக் கூடாது? உதாரணத்துடன் விளக்குங்கள்.
உங்களுக்குத் திருமணமாகி பல வருடங்கள் ஆகிவிட்டதென வைத்துக்கொள்வோம். ஒருநாள் நீங்கள் வீடு திரும்பியபோது எல்லாமே அலங்கோலமாகக் கிடக்கிறது. நாற்காலிகள் உடைந்து கிடக்கின்றன, பாத்திரங்கள் சிதறிக்கிடக்கின்றன, திரைச்சீலைகள் கிழிந்து தொங்குகின்றன. உங்களுடைய அழகான வீடு புயல் தாக்கிய இடம்போல் காட்சியளிக்கிறது. “என் மனைவி ஏன் இப்படிச் செய்தாள்” என்று கத்தி கூச்சல் போடுவீர்களா? அல்லது “யார் இப்படிச் செய்தது” என்று கேட்பீர்களா? நிச்சயம் இந்த இரண்டாவது கேள்விதான் உங்கள் மனதுக்கு உடனே வரும். ஏனென்றால், உங்கள் அன்பு மனைவி இப்படியொரு நாச வேலை செய்திருக்க மாட்டாள் என்பது உங்களுக்குத் தெரியும்.
2 இன்று, மனிதனின் வீடான இந்தப் பூமியும் வன்முறை, தூய்மைக்கேடு, ஒழுக்கக்கேடு ஆகியவற்றால் அலங்கோலமாகக் காட்சியளிக்கிறது. இதற்கெல்லாம் யெகோவா காரணமல்ல என்பதை பைபிளிலிருந்து கற்றிருக்கிறோம். இந்தப் பூமி ஓர் அழகிய பூஞ்சோலையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே யெகோவா அதைப் படைத்தார். (ஆதி. 2:8, 15) அவர் அன்புள்ளவர். (1 யோ. 4:8) நாம் பைபிளை ஆழ்ந்து படித்தபோது, உலகிலுள்ள பல பிரச்சினைகளுக்கு யார் காரணம் என்பதைத் தெரிந்துகொண்டோம். அது வேறு யாருமல்ல, “இந்த உலகத்தை ஆளுகிற” பிசாசாகிய சாத்தானே.—யோவா. 14:30; 2 கொ. 4:4.
3. நம் பிரச்சினைகளை எப்படித் தவறான விதத்தில் பார்க்க ஆரம்பித்துவிடலாம்?
3 என்றாலும், நம்முடைய எல்லாக் கஷ்டங்களுக்கும் சாத்தான்மீது பழிபோட முடியாது. ஏனென்றால், சில பிரச்சினைகளுக்குக் காரணம் நாம் செய்கிற தவறுகள்தான். (உபாகமம் 32:4-6-ஐ வாசியுங்கள்.) இதை நாம் ஒத்துக்கொண்டாலும் அபூரணத்தின் காரணமாக நம்முடைய பிரச்சினைகளைத் தவறான விதத்தில் பார்க்க ஆரம்பித்துவிடலாம். இது ஆபத்தானது. (நீதி. 14:12) எப்படி? ஒரு பிரச்சினைக்கு நம்மையோ சாத்தானையோ குற்றப்படுத்துவதற்குப் பதிலாக யெகோவாவைக் குற்றப்படுத்த ஆரம்பித்துவிடலாம். ‘யெகோவாமீது கோபம்கொள்ளவும்’ ஆரம்பித்துவிடலாம்.—நீதி. 19:3.
4, 5. ஒரு கிறிஸ்தவர் எவ்விதத்தில் ‘யெகோவாமீது கோபம்கொள்ளலாம்’?
4 ‘யெகோவாமீது கோபம்கொள்வது’ சாத்தியமா? அப்படியே கோபம்கொண்டாலும் அது வீண்தான். (ஏசா. 41:11) ஒரு கவிஞர் இவ்வாறு சொன்னார்: “கடவுளோடு குத்துச்சண்டை போடுமளவுக்கு உங்கள் கைகள் ஒன்றும் பெரியவை அல்ல.” யெகோவாமீது கோபமாக இருக்கிறேன் என்று நாம் வாய்விட்டு சொல்ல மாட்டோம். என்றாலும், நீதிமொழிகள் 19:3 (NW) குறிப்பிடுகிறபடி, “மனிதனின் முட்டாள்தனம் அவனுடைய வழியைத் தாறுமாறாக்கும்; அதோடு தன் இருதயத்திலே யெகோவாமீது கோபம்கொள்வான்.” ஆம், ஒருவர் தன் இருதயத்திலே கடவுள்மீது கோபம்கொள்ளலாம். இந்த மனப்பான்மை மறைமுகமான விதங்களில் வெளிப்படும். யெகோவாமீது அவர் வெறுப்பைக் காட்டுவதால் கூட்டங்களுக்கு வருவதை நிறுத்திவிடலாம், வழிபாடு சம்பந்தப்பட்ட ஏற்பாடுகளுக்கு முழு ஆதரவு கொடுக்காமல் இருக்கலாம்.
5 என்ன விஷயங்கள் ‘யெகோவாமீது கோபம்கொள்ள’ வைக்கலாம்? இந்த வலையில் நாம் எப்படி விழாமல் இருக்கலாம்? இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தெரிந்துகொள்வது முக்கியம். அப்போதுதான் யெகோவா தேவனோடுள்ள நம் பந்தத்தைக் காத்துக்கொள்ள முடியும்.
‘யெகோவாமீது கோபம்கொள்ள’ வைக்கும் விஷயங்கள்
6, 7. மோசேயின் காலத்திலிருந்த இஸ்ரவேலர் யெகோவாவைப் பற்றி ஏன் குறைகூற ஆரம்பித்தார்கள்?
6 உண்மை ஊழியர் ஒருவர் தன் இருதயத்தில் யெகோவாமீது கசப்பை வளர்க்க ஆரம்பிப்பதற்குக் காரணமான சில விஷயங்கள் யாவை? ஐந்து விஷயங்களை இப்போது பார்க்கலாம். கடந்த காலத்தில் சிலர் எப்படி இந்த வலையில் விழுந்தார்கள் என்பதையும் பைபிளிலிருந்து பார்க்கலாம்.—1 கொ. 10:11, 12.
7 மற்றவர்களின் எதிர்மறையான பேச்சு நம்மீது செல்வாக்கு செலுத்தலாம். (உபாகமம் 1:26-28-ஐ வாசியுங்கள்.) இஸ்ரவேலர்களை அப்போதுதான் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து யெகோவா விடுவித்திருந்தார். அதற்காக எகிப்தியர்மீது பத்து வாதைகளைக் கொண்டுவந்தார்; பார்வோனையும் அவனுடைய படையையும் செங்கடலில் சமாதியாக்கினார். (யாத். 12:29-32, 51; 14:29-31; சங். 136:15) கடவுளுடைய மக்கள் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழையும் தருவாயில் இருந்தார்கள். அந்த முக்கியமான கட்டத்தில், அவர்கள் யெகோவாவைப் பற்றிக் குறைகூற ஆரம்பித்தார்கள். அவர்கள் யெகோவாமீது விசுவாசம் வைக்காமல் போனதற்குக் காரணம் என்ன? தேசத்தை வேவு பார்க்கச் சென்ற சிலர் கொடுத்த தவறான அறிக்கையைக் கேட்டு அவர்கள் பதற்றம் அடைந்தார்கள். (எண். 14:1-4) அதன் விளைவு? அவர்களை யெகோவா அந்த ‘நல்ல தேசத்திற்குள்’ நுழைய அனுமதிக்கவில்லை. (உபா. 1:34, 35) இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? மற்றவர்களுடைய எதிர்மறையான பேச்சு நம்முடைய விசுவாசத்தைக் குலைத்துவிடலாம், யெகோவா தம்முடைய மக்களை வழிநடத்தும் விதத்தைப் பற்றிக் குறைகூற வைக்கலாம்.
8. ஏசாயாவின் நாளில், யூத மக்கள் தங்களுடைய பிரச்சினைகளுக்கு ஏன் யெகோவாமீது பழிபோட்டார்கள்?
8 துன்ப துயரங்கள் நம்மைத் துவண்டுபோகச் செய்யலாம். (ஏசாயா 8:21, 22-ஐ வாசியுங்கள்.) ஏசாயாவின் காலத்தில், யூதா தேசத்து மக்கள் நெருக்கடியான சூழ்நிலையில் இருந்தார்கள். விரோதிகள் அவர்களைச் சூழ்ந்திருந்தார்கள். உணவு தட்டுப்பாடு காரணமாக பலர் பசியில் வாடினர். அதைவிட முக்கியமாக ஆன்மீக பஞ்சம் நிலவியது. (ஆமோ. 8:11) இந்த நெருக்கடிகளைச் சமாளிக்க யெகோவாவிடம் உதவி கேட்பதற்குப் பதிலாக, தங்களுடைய ராஜாவையும் கடவுளையும் ‘தூஷித்தார்கள்.’ ஆம், தங்களுடைய பிரச்சினைகளுக்கு யெகோவாமீது பழிபோட்டார்கள். அதேபோல், துன்ப துயரங்கள் நம்மை தாக்கும்போது, ‘யெகோவா எங்கே போனார்’ என்று நாமும் கேட்கிறோமா?
9. எசேக்கியேலின் காலத்திலிருந்த இஸ்ரவேலர்கள் யெகோவாவைப் பற்றி ஏன் தவறாக நினைத்தார்கள்?
9 நமக்கு எல்லா விஷயங்களும் தெரியாது. எசேக்கியேலின் காலத்திலிருந்த இஸ்ரவேலர்களுக்கு எல்லா விஷயங்களும் தெரியாததால், யெகோவாவின் வழி ‘செம்மையானதல்ல’ என்று நினைத்தார்கள். (எசே. 18:29) யெகோவா ஒரு விஷயத்தை செய்ததற்கான காரணத்தை அவர்கள் முழுமையாகப் புரிந்திருக்கவில்லை; இருந்தாலும் கடவுளை நியாயந்தீர்க்கவும் அவர் செய்கிற விஷயங்கள் சரிதானா எனத் தீர்மானிக்கவும் தங்களுக்கு உரிமை இருப்பதுபோல் நடந்துகொண்டார்கள். சில சமயங்களில், ஒரு பைபிள் பதிவைப் பற்றி அல்லது நம்முடைய வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களைப் பற்றி முழுமையாகப் புரிந்துகொள்ளாமல், யெகோவா செய்தது ‘செம்மையானதல்ல,’ அதாவது நியாயமானதல்ல என்று இருதயத்தில் நினைக்கிறோமா?—யோபு 35:2.
10. ஆதாமின் கெட்ட முன்மாதிரியை ஒருவர் எப்படிப் பின்பற்றக்கூடும்?
10 நாம் செய்யும் பாவங்கள் மற்றும் தவறுகளுக்கான பொறுப்பை நாம் ஏற்பதில்லை. முதல் மனிதனான ஆதாம், தான் செய்த பாவத்திற்குக் கடவுள்மீது பழிபோட்டான். (ஆதி. 3:12) கடவுளுடைய சட்டத்தை மீறினால் வரும் விளைவுகளை ஆதாம் நன்கு அறிந்திருந்தும் அதை வேண்டுமென்றே மீறினான்; இருந்தாலும் யெகோவாமீதே பழிபோட்டான். ஆம், யெகோவா தனக்கு ஒரு கெட்ட மனைவியைக் கொடுத்தாகச் சொன்னான். அன்று முதல் மற்றவர்களும் ஆதாமைப் போலவே தங்களுடைய தவறுகளுக்கு யெகோவாமீது பழிபோடுகிறார்கள். நம்மையே இவ்வாறு கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘நான் செய்த தவறை நினைத்து ரொம்பவே வெறுப்பும் விரக்தியும் அடைவதால் யெகோவாவுடைய நெறிகளையே குறைகூறுகிறேனா?’
11. யோனாவிடமிருந்து நாம் என்ன பாடம் கற்றுக்கொள்கிறோம்?
11 நம்மைப் பற்றி மட்டுமே யோசிப்பது. நினிவே மக்கள்மீது யெகோவா இரக்கம் காட்டியதைப் பார்த்து யோனா தீர்க்கதரிசி கோபமடைந்தார். (யோனா 4:1-3) ஏன்? தான் அறிவித்தபடி அழிவு வராததைப் பார்த்து எங்கே மக்கள் தன்னை ஒரு போலி தீர்க்கதரிசி என்று சொல்லிவிடுவார்களோ என பயந்தார். மனந்திரும்பிய அந்த மக்களைவிட தன்னைப் பற்றியே அவர் அதிகமாகக் கவலைப்பட்டார். அதேபோல் நாமும் நம்மைப் பற்றியே அதிகம் யோசித்துக்கொண்டு, யெகோவா ஏன் இன்னும் முடிவைக் கொண்டுவரவில்லை என நினைத்து அவர்மேல் கோபம்கொள்கிறோமா? யெகோவாவின் நாள் சீக்கிரம் வரப்போகிறது என நாம் பல வருடங்களாகவே பிரசங்கித்து வந்திருக்கலாம். ஆனால், அந்த நாள் இன்னும் வராததைக் குறித்து மற்றவர்கள் கேலி கிண்டல் செய்யும்போது பொறுமையிழந்து விடுகிறோமா?—2 பே. 3:3, 4, 9.
‘யெகோவாமீது கோபம்கொள்வதை’ எப்படித் தவிர்க்கலாம்?
12, 13. யெகோவா செய்கிற சில விஷயங்களைக் குறித்து சந்தேகம் எழுந்தால் நாம் என்ன செய்ய வேண்டும்?
12 யெகோவா செய்கிற சில விஷயங்களைக் குறித்து சந்தேகம் எழுந்தால் நாம் என்ன செய்யலாம்? அப்படிச் சந்தேகிப்பது ஞானமற்றது என்பதை நினைவில் வையுங்கள். “ஒருவனது சொந்த முட்டாள்தனம் அவனது வாழ்வை அழித்துவிடும் . . . அவன் கர்த்தர் மீது பழி சொல்லுவான்” என்று ஈஸி டு ரீட் வர்ஷன் நீதிமொழிகள் 19:3-ஐ மொழிபெயர்த்துள்ளது. வாழ்க்கையில் ஏமாற்றங்களைச் சந்திக்கும்போது யெகோவாமீது பழிபோடாதிருக்க உதவும் ஐந்து குறிப்புகளை இப்போது பார்க்கலாம்.
13 யெகோவாவோடுள்ள நல்லுறவை விட்டுவிடாதீர்கள். கடவுளோடு எப்போதும் நெருங்கிய பந்தத்தை வைத்திருக்கும்போது, அவர்மீது கோபம்கொள்ள மாட்டோம். (நீதிமொழிகள் 3:5, 6-ஐ வாசியுங்கள்.) யெகோவாவை நாம் நம்ப வேண்டும். கடவுளைவிட எனக்கு அதிகம் தெரியும் என்றோ என்னுடைய தேவைகள்தான் முக்கியம் என்றோ நினைப்பதைத் தவிர்க்க வேண்டும். (நீதி. 3:7; பிர. 7:16) அப்படிச் செய்தால் கெட்ட காரியங்கள் நடக்கும்போது யெகோவாமீது பழிபோட மாட்டோம்.
14, 15. மற்றவர்களுடைய எதிர்மறையான பேச்சு நம்மைப் பாதிக்காதிருக்க எது நமக்கு உதவும்?
14 எதிர்மறையான பேச்சு உங்கள்மீது செல்வாக்கு செலுத்த அனுமதிக்காதீர்கள். யெகோவா தங்களை வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் நல்லபடியாக அழைத்துச் செல்வார் என நம்புவதற்கு மோசேயின் காலத்திலிருந்த இஸ்ரவேலர்களுக்கு நிறைய காரணங்கள் இருந்தன. (சங். 78:43-53) ஆனால், விசுவாசமற்ற பத்து வேவுகாரரின் அறிக்கையை கேட்டபோதோ ‘அவருடைய கரத்தை நினையாமற்போனார்கள்.’ (சங். 78:42) யெகோவா நமக்காக செய்துள்ள அருமையான காரியங்களையெல்லாம் தியானித்துப் பார்க்கும்போது, அவரோடு இன்னும் நெருக்கமாவோம். அப்போது, யெகோவாவிடமிருந்து நம்மைப் பிரிக்கும் எந்தவொரு எதிர்மறையான பேச்சுக்கும் இடங்கொடுக்க மாட்டோம்.—சங். 77:11, 12.
15 நம் சகோதர சகோதரிகளைப் பற்றி தவறாக நினைப்பதும்கூட யெகோவாவோடு உள்ள நம் பந்தத்தைப் பாதிக்கும். (1 யோ 4:20) ஆரோனை பிரதான ஆசாரியனாக நியமித்ததைக் குறித்து இஸ்ரவேலர்கள் குறைகூறியபோது, தம்மைக் குறைகூறியதாகவே யெகோவா அதைக் கருதினார். (எண். 17:10) அதுபோல இன்று, தம்முடைய அமைப்பின் பூமிக்குரிய பாகத்தை வழிநடத்த யெகோவா பயன்படுத்துகிறவர்களை நாம் குறைகூறினால், அது யெகோவாவைக் குறைகூறுவதற்குச் சமம்.—எபி. 13:7, 17.
16, 17. பிரச்சினைகள் வரும்போது நாம் எதை நினைவில் வைக்க வேண்டும்?
16 நம்முடைய பிரச்சினைகளுக்கு யெகோவா காரணம் அல்ல என்பதை மனதில் வையுங்கள். ஏசாயாவின் காலத்திலிருந்த இஸ்ரவேலர்கள் யெகோவாவிடமிருந்து விலகிச் சென்றிருந்தாலும் அவர்களுக்கு உதவ அவர் தயாராய் இருந்தார். (ஏசா. 1:16-19) நமக்கு என்ன பிரச்சினை வந்தாலும், யெகோவா நம்மீது அக்கறையாக... நமக்கு உதவத் தயாராக... இருப்பதை அறியும்போது ஆறுதல் அடைகிறோம். (1 பே. 5:7) சொல்லப்போனால், எப்போதும் சகித்திருப்பதற்கான பலத்தைத் தருவதாக வாக்குக் கொடுத்திருக்கிறார்.—1 கொ. 10:13.
17 உண்மையுள்ள மனிதனான யோபுவைப் போல நமக்கு ஏதாவது அநியாயம் இழைக்கப்பட்டால், அதற்கு யெகோவா காரணம் அல்ல என்பதை நினைவில் வைக்க வேண்டும். அவர் அநியாயத்தை வெறுக்கிறார், நீதியை நேசிக்கிறார். (சங். 33:5) யோபுவின் நண்பர் எலிகூவைப் போல நாமும் இப்படிச் சொல்லலாம்: “அக்கிரமம் தேவனுக்கும், அநீதி சர்வவல்லவருக்கும் தூரமாயிருக்கிறது.” (யோபு 34:10) நம் பிரச்சினைகளுக்கு அவர் ஒருபோதும் காரணம் அல்ல; மாறாக, “நல்ல பரிசுகள் ஒவ்வொன்றும், தலைசிறந்த அன்பளிப்புகள் ஒவ்வொன்றும்” அவரிடமிருந்தே வருகின்றன.—யாக். 1:13, 17.
18, 19. யெகோவாவை நாம் ஏன் சந்தேகிக்கக் கூடாது? உதாரணத்துடன் விளக்குங்கள்.
18 யெகோவாவை ஒருபோதும் சந்தேகிக்காதீர்கள். கடவுள் பரிபூரணர், அவருடைய நினைவுகள் நம்முடைய நினைவுகளைவிட உயர்ந்தவை. (ஏசா. 55:8, 9) எனவே, மனத்தாழ்மையுள்ளவர்களாக இருந்தால், எல்லாவற்றையும் நம்மால் புரிந்துகொள்ள முடியாது என்பதை ஒத்துக்கொள்வோம். (ரோ. 9:20) நிறைய சந்தர்ப்பங்களில், ஒரு விஷயத்தைப் பற்றிய எல்லா விவரங்களும் நமக்குத் தெரிந்திருக்காது. நீதிமொழிகளிலுள்ள இந்த வார்த்தைகள் உண்மை என்பதை நீங்கள் அனுபவத்தில் கண்டிருப்பீர்கள்: “இன்னொருவன் வந்து கேள்வி கேட்கும்வரை ஒருவன் பேசுவது சரியானது போலவே தோன்றும்.”—நீதி. 18:17, ERV.
19 நம்முடைய நெருங்கிய நண்பர் ஒரு காரியம் செய்ததாக வைத்துக்கொள்ளுங்கள். அவர் ஏன் அப்படிச் செய்தாரென புரியவில்லை; வழக்கமாக அவர் அப்படிச் செய்யவும் மாட்டார். அப்படியிருக்க, அவர் தவறு செய்துவிட்டாரென உடனே முடிவு கட்டிவிடுவோமா? இல்லை. அதுவும் அந்த நண்பரை பல வருடங்களாக நமக்குத் தெரியும் என்றால் அவரைச் சந்தேகிக்கவே மாட்டோம். அபூரண நண்பரையே நாம் நம்பும்போது நம் பரலோகத் தகப்பனை இன்னும் எந்தளவுக்கு நம்ப வேண்டும்! ஆம், யெகோவாவுடைய வழிகளும் நினைவுகளும் மிக மிக உயர்ந்தவை.
20, 21. நம்முடைய பிரச்சினைகளுக்கு நாம் ஏன் யெகோவாவை ஒருபோதும் குறைகூறக் கூடாது?
20 நம்முடைய பிரச்சினைகளுக்கான உண்மையான காரணத்தை மறந்துவிடாதீர்கள். சில பிரச்சினைகளுக்கு நாம்தான் காரணம் என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும். (கலா. 6:7) பிரச்சினைகளுக்கு யெகோவாவைக் குற்றப்படுத்தக் கூடாது. ஏன்? இந்த உதாரணத்தைக் கவனியுங்கள்: ஒரு காரை படு வேகமாக ஓட்ட முடியும் என்பதற்காக, அதன் டிரைவர் வளைவிலும் அதைப் படு வேகமாக ஓட்டிச் சென்றதால் விபத்து ஏற்பட்டு விடுகிறது. விபத்திற்கு அந்தக் காரின் தயாரிப்பாளரைக் குறைசொல்ல முடியுமா? முடியாது. அது போலவே, யெகோவா நமக்குச் சுயமாகத் தீர்மானிக்கும் சுதந்திரத்தைத் தந்திருக்கிறார். அதே சமயத்தில், ஞானமான தீர்மானங்களை எடுப்பதற்கான வழிமுறைகளையும் வழங்கியிருக்கிறார். அப்படியிருக்க, நாம் செய்யும் தவறுகளுக்கு கடவுளை எப்படிக் குற்றப்படுத்த முடியும்?
21 நம்முடைய எல்லாப் பிரச்சினைகளுக்கும் நாம் செய்யும் தவறுகள்தான் காரணம் என்பது எப்போதுமே உண்மை அல்ல. “எதிர்பாரா வேளைகளில் ஏற்படுகிற அசம்பாவிதங்களால்” சில துயரங்கள் நேரிடுகின்றன. (பிர. 9:11, NW) அதோடு, துன்பங்களுக்கெல்லாம் முக்கிய காரணம் பிசாசாகிய சாத்தான் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. (1 யோ. 5:19; வெளி. 12:9) அவன்தான் நம் எதிரி, யெகோவா அல்ல.—1 பே. 5:8.
யெகோவாவோடுள்ள பந்தத்தைப் பொக்கிஷமாய்ப் பாதுகாத்திடுங்கள்
22, 23. பிரச்சினைகளால் நாம் சோர்ந்துபோனால் எதை நினைத்துப் பார்க்க வேண்டும்?
22 துன்ப துயரங்கள் வரும்போது, யோசுவா மற்றும் காலேபின் உதாரணத்தை நினைத்துப் பாருங்கள். மற்ற பத்து வேவுகாரர்களைப் போலில்லாமல், இந்த இரண்டு உண்மையுள்ள ஆண்களும் சரியான அறிக்கையைக் கொடுத்தார்கள். (எண். 14:6-9) யெகோவாமீதிருந்த விசுவாசத்தை வெளிக்காட்டினார்கள். என்றாலும், மற்ற இஸ்ரவேலர்களோடு சேர்ந்து இவர்களும் வனாந்தரத்தில் 40 வருடங்கள் அலைந்து திரிய வேண்டியிருந்தது. யோசுவாவும் காலேபும், ‘இதெல்லாம் அநியாயம்’ என்று சொல்லி யெகோவாவைக் குறைகூறினார்களா? இல்லை. அவர்கள் யெகோவாமீது நம்பிக்கை வைத்தார்கள். அதனால் ஆசீர்வதிக்கப்பட்டார்களா? நிச்சயமாக! பெரும்பாலான இஸ்ரவேலர்கள் வனாந்தரத்திலேயே செத்து மடிந்தார்கள்; ஆனால், யோசுவாவும் காலேபும் பிற்பாடு வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குச் சென்றார்கள். (எண். 14:30) அதேபோல் நாமும், யெகோவாவின் சித்தத்தைச் செய்வதில் ‘சோர்ந்துபோகாதிருந்தால்’ அவருடைய ஆசீர்வாதத்தைப் பெறுவோம்.—கலா. 6:9; எபி. 6:10.
23 பிரச்சினைகளாலோ, உங்களுடைய அல்லது பிறருடைய அபூரணத்தாலோ சோர்ந்துபோனால் என்ன செய்யலாம்? யெகோவாவின் அருமையான குணங்களைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருங்கள். யெகோவா வாக்குக் கொடுத்துள்ள எதிர்காலத்தை மனத்திரையில் ஓடவிடுங்கள். ‘யெகோவா மட்டும் இல்லையென்றால் என் வாழ்க்கை எப்படியிருந்திருக்கும்’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். எப்போதும் அவருடன் நெருக்கமாக இருங்கள், அவர்மீது ஒருபோதும் கோபம்கொள்ளாதீர்கள்.