பெற்றோரே, பிள்ளைகளே—அன்பாகப் பேசுங்கள்
“ஒவ்வொருவரும் கேட்பதற்குத் தீவிரமாகவும், பேசுவதற்கு நிதானமாகவும், கோபிப்பதற்கு தாமதமாகவும் இருக்க வேண்டும்.”—யாக். 1:19.
1, 2. பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் என்ன மனப்பான்மை இருக்கிறது, ஆனால் சில சமயங்களில் எது அவர்களுக்குச் சவாலாக இருக்கிறது?
“உங்களுடைய அப்பா-அம்மா நாளைக்கு இறந்துவிடுவார்கள் என்று தெரியவந்தால், அவர்களிடம் இன்று என்ன சொல்ல ஆசைப்படுவீர்கள்?” அமெரிக்காவிலுள்ள நூற்றுக்கணக்கான பிள்ளைகளிடம் கேட்கப்பட்ட கேள்வி இது. பெற்றோர்களோடு ஆயிரத்தெட்டு பிரச்சினைகள் இருந்தாலும், சுமார் 95 சதவீத பிள்ளைகள் சொன்ன பதில்: “என்னை மன்னிச்சிடுங்க,” “உங்க மேல உயிரையே வச்சிருக்கேன்.”—ஷான்ட்டி ஃபெல்ட்ஹான் மற்றும் லீசா ரைஸ் எழுதிய ஃபார் பேரன்ட்ஸ் ஒன்லி.
2 பொதுவாக, பிள்ளைகளுக்கு பெற்றோர்கள்மீது அன்பு இருக்கும், பெற்றோர்களுக்கும் பிள்ளைகள்மீது அன்பு இருக்கும். கிறிஸ்தவக் குடும்பங்களில் அதைப் பற்றி சொல்லவே வேண்டாம். ஆனால், நிறைய சமயங்களில் அவர்களுக்கிடையே நல்ல பேச்சுத்தொடர்பு இருப்பதில்லை. மனந்திறந்து, வெளிப்படையாக பேசுபவர்கள்கூட, சில விஷயங்களைப் பற்றி ஏன் வாயே திறப்பதில்லை? நல்ல பேச்சுத்தொடர்புக்குத் தடையாக இருப்பவை யாவை? அவற்றை எப்படித் தகர்த்தெறியலாம்?
பேசுவதற்கு நேரத்தை ‘விலைக்கு வாங்குங்கள்’
3. (அ) நிறைய குடும்பங்களில் நல்ல பேச்சுத்தொடர்புக்கு எது சவாலாக இருக்கிறது? (ஆ) குடும்பத்தாரோடு நேரம் செலவிடுவதற்கு பூர்வ இஸ்ரவேலில் என்ன வாய்ப்புகள் இருந்தன?
3 குடும்பத்தாருடன் நன்றாகப் பேசுவதற்கு நேரமே இல்லை என நிறைய பேர் நினைக்கிறார்கள். ஆனால், எல்லாச் சமயத்திலுமே அது உண்மையில்லை. இஸ்ரவேலர்களிடம் மோசே இப்படிச் சொன்னார்: ‘நீ அவைகளை [அதாவது, கடவுளுடைய வார்த்தைகளை] உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசு.’ (உபா. 6:6, 7) அந்தக் காலத்திலிருந்த பிள்ளைகள், அம்மாவோடு வீட்டில் இருந்தார்கள் அல்லது அப்பாவோடு வயலிலோ வேலை செய்யுமிடத்திலோ இருந்தார்கள். அப்போது, பெற்றோரும் பிள்ளைகளும் பேசிக்கொள்வதற்கு நிறைய நேரம் இருந்தது. எனவே, பிள்ளைகளின் தேவைகளை, விருப்பங்களை, சுபாவங்களை பெற்றோரால் நன்கு புரிந்துகொள்ள முடிந்தது. அதேபோல், பெற்றோரை நன்கு புரிந்துகொள்வதற்கு பிள்ளைகளுக்கும் நேரமும் வாய்ப்புகளும் கிடைத்தன.
4. இன்று அநேக குடும்பங்களில் பேச்சுத்தொடர்புக்குத் தடையாக இருப்பது என்ன?
4 இன்று மனிதர்களின் வாழ்க்கையே தலைகீழாக மாறிவிட்டது! சில நாடுகளில், 2 வயதிலேயே பிள்ளைகளை நர்சரிக்கு அனுப்பிவிடுகிறார்கள். நிறைய குடும்பங்களில் அப்பா-அம்மா இருவருமே வேலைக்குப் போகிறார்கள். பெற்றோரும் பிள்ளைகளும் வீட்டில் இருக்கிற கொஞ்ச நேரத்தையும் கம்ப்யூட்டர், டிவி, ஃபோன் போன்ற சாதனங்கள் உறிஞ்சி விடுகின்றன. பல குடும்பங்களில் பெற்றோர்களும் பிள்ளைகளும் தனித்தனி உலகமாகச் சுற்றுகிறார்கள். அவர்களுக்கிடையில் நல்ல பேச்சுத்தொடர்பே கிடையாது.
5, 6. பெற்றோர்கள் சிலர் தங்களுடைய பிள்ளைகளோடு இருப்பதற்காக எப்படி நேரத்தை ‘விலைக்கு வாங்கியிருக்கிறார்கள்’?
5 குடும்பத்தாரோடு நிறைய நேரம் செலவிடுவதற்காக பிற காரியங்களிலிருந்து நேரத்தை ‘விலைக்கு வாங்க’ முடியுமா? (எபேசியர் 5:15, 16-ஐ வாசியுங்கள்.) சில குடும்பத்தார் டிவி அல்லது கம்ப்யூட்டருக்குக் கொடுக்கிற நேரத்தைக் குறைக்க முன்வந்திருக்கிறார்கள். இன்னும் சிலர் தினமும் ஒரு வேளையாவது சேர்ந்து சாப்பிட முயலுகிறார்கள். அதோடு, பெற்றோர்-பிள்ளை உறவை பலப்படுத்துவதற்கும் ஆன்மீக விஷயங்களைப் பேசுவதற்கும் குடும்ப வழிபாடு ஒரு சிறந்த ஏற்பாடு, அல்லவா? இதற்காக வாரத்தில் ஒரு மணிநேரமோ அதற்கும் அதிகமான நேரமோ ஒதுக்குவது நல்லது. ஆனால், மனந்திறந்து பேசுவதற்கு அது மட்டுமே போதாது. தினமும் பேசுவதற்கு நேரம் ஒதுக்க வேண்டும். உங்களுடைய பிள்ளை ஸ்கூலுக்கு போகும்முன் உற்சாகமூட்டும் விஷயம் ஏதாவது சொல்லுங்கள், தினவசனத்தைக் கலந்தாலோசியுங்கள் அல்லது சேர்ந்து ஜெபம் செய்யுங்கள். அப்போது அந்த நாள் முழுவதும் அவனுக்கு/அவளுக்கு சந்தோஷமாக இருக்கும்.
6 பெற்றோர்கள் சிலர், தங்களுடைய இளம் பிள்ளைகளோடு நேரம் செலவிடுவதற்காக வாழ்க்கை முறையையே மாற்றியிருக்கிறார்கள். இரண்டு பிள்ளைகளுக்குத் தாயான லதா, * தன்னுடைய வேலையையே விட்டுவிட்டார். “காலைல எழுந்திருச்சா வேலை, ஸ்கூலுனு ஆளாளுக்கு பறந்துட்டு இருப்போம். வேலைலயிருந்து நான் வீட்டுக்கு வர்றதுக்குள்ள பிள்ளைங்க தூங்கியிருப்பாங்க, அதுவும் ஆயாதான் அவங்கள தூங்க வச்சிருப்பாங்க. இப்போ வேலைய விட்டதுனால பணத்துக்கு கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு. ஆனாலும், பிள்ளைங்களோட மனச புரிஞ்சுக்க முடியுது, பிரச்சினைங்கள தெரிஞ்சுக்க முடியுது. ஜெபத்துல அவங்க என்ன சொல்றாங்கன்னு கேட்டு உதவி செய்ய முடியுது, உற்சாகப்படுத்த முடியுது, கற்றுக்கொடுக்கவும் முடியுது” என்று அவர் சொல்கிறார்.
“கேட்பதற்குத் தீவிரமாக” இருங்கள்
7. பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையில் இருக்கிற முக்கிய பிரச்சினை என்ன?
7 இளம் பிள்ளைகளிடம் பேட்டி கண்ட பிறகு, ஃபார் பேரன்ட்ஸ் ஒன்லி என்ற புத்தகத்தின் எழுத்தாளர்கள் பேச்சுத்தொடர்புக்குத் தடையாக இருக்கும் மற்றொரு விஷயத்தையும் குறிப்பிட்டார்கள். “பெற்றோர்களைப் பற்றி பிள்ளைகள் சொல்கிற நம்பர் ஒன் புகார் என்னவென்றால், ‘நாங்க சொல்றத அவங்க கவனிச்சு கேட்குறதே இல்ல.’” பெற்றோர்களும் பிள்ளைகளைப் பற்றி இதே குறையைத்தான் சொல்கிறார்கள். குடும்பத்தில் நல்ல பேச்சுத்தொடர்பு இருக்க வேண்டுமென்றால் எல்லோருமே ஒருவருக்கொருவர் கடமைக்காக அல்ல, உண்மையிலேயே காதுகொடுத்து கேட்க வேண்டும்.—யாக்கோபு 1:19-ஐ வாசியுங்கள்.
8. பிள்ளைகள் சொல்வதைப் பெற்றோர்கள் எப்படி உண்மையிலேயே காதுகொடுத்துக் கேட்கலாம்?
8 பெற்றோர்களே, உங்களுடைய பிள்ளைகள் சொல்வதை உண்மையிலேயே காதுகொடுத்து கேட்கிறீர்களா? நீங்கள் களைப்பாக இருக்கும்போது அல்லது சாதாரண விஷயத்தைப் பிள்ளைகள் சொல்லும்போது காதுகொடுத்து கேட்பது கஷ்டம்தான். ஆனால், உங்களுக்கு அது சாதாரண விஷயமாகத் தெரிந்தாலும், பிள்ளைகளுக்கு அது ரொம்பவே பெரிய விஷயமாக இருக்கும். “கேட்பதற்குத் தீவிரமாக” இருக்க வேண்டுமென்றால், உங்கள் பிள்ளை என்ன சொல்கிறான்/ள் என்பதைக் கவனித்தால் மட்டும் போதாது, அதை எப்படிச் சொல்கிறான்/ள் என்பதையும் கவனிக்க வேண்டும். பிள்ளையின் முகபாவம், பேசும் தொனி, சைகை எல்லாம் அவனுடைய/அவளுடைய மனதைப் படம்பிடித்து காட்டிவிடும். கேள்விகள் கேட்பதும் முக்கியம். “ஒருவருடைய எண்ணங்கள் ஆழமான கிணற்றிலுள்ள தண்ணீர் போல இருக்கும். விவேகி அவற்றை மொண்டெடுப்பான்” என்று பைபிள் சொல்கிறது. (நீதி. 20:5, டுடேஸ் இங்லிஷ் வர்ஷன்) பிள்ளை பேசத் தயங்கும் விஷயங்களைக்கூட அவனுடைய/அவளுடைய மனதிலிருந்து வெளிக்கொணர பகுத்தறிவும் விவேகமும் அவசியம்.
9. பெற்றோர்கள் சொல்வதைப் பிள்ளைகள் ஏன் கேட்க வேண்டும்?
9 பிள்ளைகளே, உங்களுடைய பெற்றோர்களுக்குக் கீழ்ப்படிகிறீர்களா? “என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே” என்று கடவுளுடைய வார்த்தை சொல்கிறது. (நீதி. 1:8) பெற்றோர்களுக்கு உங்கள்மேல் அன்பு இருக்கிறது, உங்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென்றே அவர்கள் நினைக்கிறார்கள். அதனால், அவர்கள் சொல்வதைக் கேளுங்கள், அவர்களுக்குக் கீழ்ப்படியுங்கள். (எபே. 6:1) நல்ல பேச்சுத்தொடர்பு இருக்கும்போதும் அப்பா-அம்மா உங்களை நேசிக்கிறார்கள் என்பதை அறிந்திருக்கும்போதும் கீழ்ப்படிவது சுலபம். ஒரு விஷயத்தைப் பற்றி எப்படி உணருகிறீர்கள் என்பதை அப்பா-அம்மாவிடம் சொல்லுங்கள். அப்போது உங்களை நன்கு புரிந்துகொள்வார்கள். அதேசமயம், அவர்களைப் புரிந்துகொள்ளவும் நீங்கள் முயற்சி செய்ய வேண்டும்.
10. ரெகொபெயாமிடமிருந்து என்ன பாடம் கற்றுக்கொள்ளலாம்?
10 உங்களுடைய சக வயதினர் ஆலோசனை சொல்லும்போது கவனமாக இருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பிடித்த விதத்தில் ஆலோசனை சொல்லலாம், ஆனால், அது எந்த நன்மையும் தராது. சொல்லப்போனால், பிரச்சினைதான் வரும். அவர்களுக்கு ஞானமும் அனுபவமும் இல்லாததால், தொலைநோக்கு பார்வையுடன் விஷயங்களைப் பார்க்க மாட்டார்கள். பின்விளைவுகளைப் பற்றி யோசித்துப் பார்க்க மாட்டார்கள். சாலொமோன் ராஜாவுடைய மகன் ரெகொபெயாமுக்கு என்ன நடந்ததென நினைத்துப் பாருங்கள். அவர் இஸ்ரவேலின் ராஜாவானபோது, பெரியவர்களின் ஆலோசனையைத்தான் கேட்டிருக்க வேண்டும். ஆனால், தன் வயதிலுள்ள இளைஞர்களின் முட்டாள்தனமான ஆலோசனையைக் கேட்டார். அதனால், பெரும்பாலான குடிமக்களின் ஆதரவை இழந்தார். (1 இரா. 12:1-17) ரெகொபெயாமைப் போல் இல்லாமல் பெற்றோர்கள் சொல்வதைக் கேட்க உங்கள் மனக்கதவைத் திறந்து வையுங்கள். மனதிலுள்ளதைப் பெற்றோர்களிடம் சொல்லுங்கள். அவர்கள் சொல்லும் ஆலோசனையைக் கேளுங்கள், அந்த ஞானமான ஆலோசனையிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்.—நீதி. 13:20.
11. பெற்றோர்கள் நண்பர்களைப்போல் நடந்துகொள்ளவில்லை என்றால் என்ன ஆகும்?
11 பெற்றோர்களே, உங்களுடைய பிள்ளைகள் நண்பர்களின் அறிவுரையைத் தேடிப் போகக்கூடாது என்றால் நீங்களே அவர்களுடைய நண்பர்களாகுங்கள். ஒரு டீன்-ஏஜ் சகோதரி எழுதினார்: “ஏதாவது ஒரு பையனுடைய பெயரைச் சொன்னாலே போதும், உடனே அப்பாவும் அம்மாவும் ஒருமாதிரி பார்ப்பார்கள். அப்போது எனக்கும் ஒருமாதிரி ஆகிவிடும். அதற்குப் பிறகு பேசவே தோன்றாது.” மற்றொரு இளம் சகோதரி எழுதினார்: “நிறைய டீன்-ஏஜ் பிள்ளைகள் பெற்றோர்களின் ஆலோசனையைக் கேட்கத்தான் விரும்புகிறார்கள். ஆனால், அவர்கள் சொல்வதைப் பெற்றோர்கள் ஒரு பொருட்டாக எடுக்காமல் போகும்போதுதான் அக்கறையோடு கேட்கிறவர்களைத் தேடிப் போகிறார்கள், அதுவும் அனுபவம் இல்லாதவர்களிடம் போய்விடுகிறார்கள்.” பிள்ளைகள் எந்த விஷயத்தைப் பற்றிச் சொன்னாலும் அதைப் பாசத்தோடு கேட்டால், அவர்கள் உங்களிடம் மனதைத் திறப்பார்கள், உங்களுடைய ஆலோசனையையும் கேட்பார்கள்.
“பேசுவதற்கு நிதானமாக” இருங்கள்
12. பெற்றோர்களின் பிரதிபலிப்பு பேச்சுத்தொடர்புக்கு எப்படித் தடையாக இருக்கலாம்?
12 பிள்ளைகள் எதையாவது சொல்லும்போது பெற்றோர்கள் உணர்ச்சிவசப்பட்டோ கோபப்பட்டோ பேசுவதுகூட பேச்சுத்தொடர்புக்குத் தடை போட்டுவிடும். பிள்ளைகளைப் பாதுகாக்க வேண்டுமென்றே கிறிஸ்தவ பெற்றோர்கள் விரும்புகிறார்கள். ஏனென்றால், இந்த “கடைசி நாட்களில்” பிள்ளைகளைச் சுற்றி நிறைய ஆபத்துகள் இருக்கின்றன. (2 தீ. 3:1-5) ஆனால், பாதுகாப்புக்காக பெற்றோர்கள் செய்வதெல்லாம், சுதந்திரத்தைப் பறிப்பதற்காக செய்வதுபோல் பிள்ளைகளுக்குத் தோன்றலாம்.
13. பெற்றோர்கள் ஏன் தங்களுடைய கருத்துகளைச் சட்டென சொல்லிவிடக் கூடாது?
13 பெற்றோர்கள் தங்களுடைய கருத்துகளைச் சட்டென சொல்லாதிருப்பது நல்லது. எரிச்சலூட்டும் விதமாக எதையாவது பிள்ளைகள் சொன்னால், எதுவும் பேசாமல் இருப்பது கஷ்டம்தான். ஆனாலும், வாயைத் திறப்பதற்கு முன் காதைத் திறப்பது முக்கியம். “காரியத்தைக் கேட்குமுன் உத்தரம் சொல்லுகிறவனுக்கு, அது புத்தியீனமும் வெட்கமுமாயிருக்கும்” என்று சாலொமோன் ராஜா எழுதியிருக்கிறார். (நீதி. 18:13) நீங்கள் அமைதியாக இருந்தால்தான், அவர்கள் விஷயத்தை முழுமையாகச் சொல்வார்கள். விஷயத்தை முழுமையாகத் தெரிந்துகொண்டால்தான் உங்களால் சரியான உதவியை அளிக்க முடியும். அவர்களுடைய நெஞ்சம் கனத்துப்போய் இருப்பதால்தான் அப்படி “மூடத்தனமாக” பேசியிருப்பார்கள். (யோபு 6:1-3, ஈஸி டு ரீட் வர்ஷன்) அன்பான பெற்றோர்களாக, உங்கள் காதால் அவர்கள் சொல்வதைக் கேட்டு புரிந்துகொள்ளுங்கள், உங்கள் நாவால் அவர்களுடைய நெஞ்சின் காயத்தை ஆற்றுங்கள்.
14. பேசுவதில் பிள்ளைகள் ஏன் நிதானமாக இருக்க வேண்டும்?
14 பிள்ளைகளே, நீங்களும்கூட ‘பேசுவதில் நிதானமாக’ இருக்க வேண்டும். பெற்றோர்களுடைய பேச்சுகளுக்கெல்லாம் உடனுக்குடன் எதிர்பேச்சு பேசி அவர்களுடைய வாயை அடைக்கக் கூடாது. ஏனென்றால், உங்களை நல்வழியில் நடத்தும் பொறுப்பை கடவுளிடமிருந்து அவர்கள் பெற்றிருக்கிறார்கள். (நீதி. 22:6) நீங்கள் எதிர்ப்படுகிற இதே சூழ்நிலையை அவர்களும் எதிர்ப்பட்டிருப்பார்கள். அதுமட்டுமல்ல, அவர்கள் சின்ன வயதில் செய்த தவறுகளை நினைத்து வருந்துகிறார்கள். அதே தவறுகளை நீங்கள் செய்துவிடாதபடி உங்களைப் பாதுகாக்க துடியாய் துடிக்கிறார்கள். ஆகவே, உங்கள் பெற்றோர்களை விரோதிகளாக அல்ல, நண்பர்களாகப் பாருங்கள்; பகைவர்களாக அல்ல, ஆலோசகர்களாகப் பாருங்கள். (நீதிமொழிகள் 1:5-ஐ வாசியுங்கள்.) ‘உங்கள் தகப்பனுக்கும் உங்கள் தாய்க்கும் மதிப்புக் கொடுங்கள்.’ உங்கள்மீது அளவுகடந்த அன்பு இருப்பதைப் பெற்றோர்கள் காட்டுவதுபோலவே, நீங்களும் அவர்களிடம் அன்பு காட்டுங்கள். அப்போது, ‘யெகோவாவுக்கு ஏற்ற முறையில் உங்களைக் கண்டித்து அவருடைய சிந்தையை உங்களுடைய மனதில் பதிய வைக்கும் விதத்தில் வளர்ப்பது’ அவர்களுக்கு எளிதாக இருக்கும்.—எபே. 6:2, 4.
“கோபிப்பதற்கு தாமதமாக” இருங்கள்
15. நாம் அன்பு வைத்திருப்பவர்களிடத்தில் பொறுமையை இழந்துவிடாமல், கோபப்படாமல் பேச எது நமக்கு உதவும்?
15 நம்மீது அன்பு வைத்திருப்பவர்களிடம் நாம் எல்லா நேரத்திலும் பொறுமையாகப் பேசுவதில்லை. “கொலோசெ நகரத்தில் கிறிஸ்துவோடு ஒன்றுபட்டிருக்கிற பரிசுத்தவான்களும் உண்மையுள்ளவர்களுமான சகோதரர்களுக்கு” அப்போஸ்தலன் பவுல் இப்படி எழுதினார்: “கணவர்களே, உங்கள் மனைவிமீது எப்போதும் அன்பு காட்டுங்கள், அவள்மீது மனக்கசப்பைக் காட்டாதீர்கள். தகப்பன்மார்களே, உங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சலூட்டாதீர்கள்; அவர்கள் சோர்ந்துபோவார்கள்.” (கொலோ. 1:1, 2; 3:19, 21) எபேசியர்களுக்கு பவுல் இவ்வாறு அறிவுரை கூறினார்: “எல்லா விதமான மனக்கசப்பையும், சினத்தையும், கடுங்கோபத்தையும், கூச்சலையும், பழிப்பேச்சையும், மற்ற எல்லா விதமான துர்குணத்தையும் உங்களைவிட்டு நீக்கிப்போடுங்கள்.” (எபே. 4:31) கடவுளுடைய சக்தியினால் பிறப்பிக்கப்படும் குணங்களான நீடிய பொறுமை, சாந்தம், சுயக்கட்டுப்பாடு போன்றவற்றை வளர்த்துக்கொள்ளும்போது தலைக்குமேல் பிரச்சினைகள் இருந்தால்கூட பொறுமையாக இருப்போம்.—கலா. 5:22, 23.
16. இயேசு தம் சீடர்களை எப்படித் திருத்தினார், இது ஏன் மிகவும் குறிப்பிடத்தக்கது?
16 இயேசுவின் உதாரணத்தை எடுத்துக்கொள்ளலாம். தம் சீடர்களோடு சேர்ந்து கடைசி இரவு விருந்தை அனுசரித்தபோது, அவர் எந்தளவு மனபாரத்தோடு இருந்திருப்பார் என்பதை யோசித்துப் பாருங்கள். இன்னும் சில மணிநேரங்களில் அணு அணுவாக துடிதுடித்து உயிர்விடப் போகிறார் என்பது அவருக்குத் தெரியும். தம் தகப்பனின் பெயரைப் பரிசுத்தப்படுவதற்கும் மனிதர் மீட்பு பெறுவதற்கும் கடைசி நிமிடம்வரை உண்மையோடு நிலைத்திருக்க வேண்டும் என்பதும் அவருக்குத் தெரியும். ஆனாலும், அந்த இரவு விருந்தின்போது “தங்களில் யார் மிக உயர்ந்தவர் என்பதைக் குறித்து அவர்களிடையே [சீடர்களிடையே] கடும் வாக்குவாதம் எழுந்தது.” அப்போது இயேசு கோபத்தில் அவர்களை கண்டபடி திட்டவில்லை. மாறாக, பொறுமையோடு அவர்களைத் திருத்தினார். கஷ்டத்தின்போது அவர்கள் தம்மோடு இருந்ததை அவர்களுக்கு நினைப்பூட்டினார். கோதுமையை சலித்தெடுப்பது போல சலித்தெடுக்க சாத்தான் உத்தரவு கேட்டிருந்தாலும் அவர்கள் உண்மையுள்ளவர்களாய் இருப்பார்கள் என்று அவர்கள்மேல் இருந்த நம்பிக்கையைத் தெரியப்படுத்தினார். அவர்களோடு ஓர் ஒப்பந்தமும் செய்தார்.—லூக். 22:24-32.
17. பொறுமையோடிருக்க பிள்ளைகளுக்கு எது உதவும்?
17 பிள்ளைகளும் பொறுமையாக இருக்க வேண்டும். முக்கியமாக, பிள்ளைகள் டீன்-ஏஜை எட்டும்போது தங்கள்மேல் உள்ள சந்தேகத்தினால்தான் பெற்றோர்கள் சில அறிவுரைகளைக் கொடுப்பதாக நினைக்கலாம். ஆனால், பெற்றோர்கள் உங்கள்மேல் உயிரே வைத்திருப்பதால்தான் அப்படிச் சொல்கிறார்கள் என்பதை நினைவில் வையுங்கள். அவர்கள் சொல்வதைப் பொறுமையாகக் கேட்டு, அவர்களுடைய அறிவுரைபடி நடந்தால் அவர்கள் உங்களை மதிப்பார்கள், நம்புவார்கள். சில விஷயங்களில் உங்களுக்கு அதிக சுதந்திரமும் தருவார்கள். எனவே, பொறுமையாக இருப்பதுதான் ஞானமானது. “அறிவில்லாதவர் தன் சினத்தை அடக்க மாட்டார்; ஞானமுள்ளவரோ பொறுமையோடிருப்பதால், அவர் சினம் ஆறும்” என்று பைபிள் சொல்கிறது.—நீதி. 29:11, பொது மொழிபெயர்ப்பு.
18. குடும்பத்தில் நல்ல பேச்சுத்தொடர்புக்கு அன்பு எப்படி துணைபுரிகிறது?
18 அன்பான பெற்றோர்களே, பிள்ளைகளே, குடும்பத்தில் நீங்கள் நினைக்கிறபடி பேச்சுத்தொடர்பு இல்லையென்றால், சோர்ந்துவிடாதீர்கள். தொடர்ந்து முயற்சி செய்யுங்கள், தொடர்ந்து சத்தியத்தில் நடங்கள். (3 யோ. 4) புதிய உலகில் வாழும் பரிபூரண மக்கள் மனஸ்தாபங்களோ வாக்குவாதங்களோ இல்லாமல் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வார்கள். ஆனால், இப்போது நாம் எல்லோருமே ஏதாவது தவறு செய்துவிட்டு, பின்னால் வருத்தப்படுகிறோம். ஆகவே, மன்னிப்பு கேட்கத் தயங்காதீர்கள். தாராளமாக மன்னியுங்கள். ‘அன்பில் ஒன்றிணைக்கப்பட்டவர்களாய்’ இருங்கள். (கொலோ. 2:2) அன்பால் எதையும் சாதிக்க முடியும். ‘அன்பு நீடிய பொறுமையும் கருணையும் உள்ளது. அன்பு எரிச்சல் அடையாது, தீங்கைக் கணக்கு வைக்காது, எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ளும், எல்லாவற்றையும் விசுவாசிக்கும், எல்லாவற்றையும் நம்பிக்கையோடு எதிர்பார்க்கும், எல்லாவற்றையும் சகித்துக்கொள்ளும்.’ (1 கொ. 13:4-7) அன்பெனும் நீரை பாய்ச்சிக்கொண்டே இருங்கள், பேச்சுத்தொடர்பு எனும் கொடி தழைத்து வளரும். அது உங்கள் குடும்பத்துக்கு மகிழ்ச்சி மலரையும், யெகோவாவுக்கு புகழ்ச்சி கனியையும் கொடுக்கும்.
^ பெயர் மாற்றப்பட்டுள்ளது.