நம் தீர்மானங்கள் கடவுளுக்குப் புகழ் சேர்க்க...
நம் தீர்மானங்கள் கடவுளுக்குப் புகழ் சேர்க்க...
‘விவேகி தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்.’—நீதி. 14:15.
1, 2. (அ) நாம் எதை மனதில் வைத்துத் தீர்மானங்கள் எடுக்க வேண்டும்? (ஆ) என்ன கேள்விகளைச் சிந்திப்போம்?
ஒவ்வொரு நாளும் நாம் எத்தனையோ தீர்மானங்கள் எடுக்கிறோம். அவற்றில் அநேகத் தீர்மானங்கள் அந்தளவு முக்கியத்துவம் இல்லாதவை. ஆனால் சில அதிமுக்கியமானவை; நம் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துபவை. நாம் எடுக்கிற தீர்மானங்கள் அதிமுக்கியமானவையோ அந்தளவு முக்கியமில்லாதவையோ அவை கடவுளுக்குப் புகழ் சேர்க்க வேண்டும், அதுதான் முக்கியம்.—1 கொரிந்தியர் 10:31-ஐ வாசியுங்கள்.
2 தீர்மானங்கள் எடுப்பது உங்களுக்குச் சுலபமாக இருக்கிறதா அல்லது கஷ்டமாக இருக்கிறதா? நாம் முதிர்ச்சியுள்ள ஒரு கிறிஸ்தவராக ஆக வேண்டுமென்றால், எது சரி எது தவறு என்பதைப் பகுத்தறிய கற்றுக்கொள்ள வேண்டும்; அதன் பிறகு, மற்றவர்கள் சொல்கிறபடி அல்ல நமது கிறிஸ்தவ நம்பிக்கைகளின் அடிப்படையில் தீர்மானங்கள் எடுக்க வேண்டும். (ரோ. 12:1, 2; எபி. 5:14) நல்ல தீர்மானங்கள் எடுக்கக் கற்றுக்கொள்வதற்கு வேறென்ன முக்கியக் காரணங்கள் இருக்கின்றன? சில சமயங்களில் அப்படிப்பட்ட தீர்மானங்கள் எடுப்பது ஏன் ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது? கடவுளுக்குப் புகழ் சேர்க்கும் விதத்தில் தீர்மானங்கள் எடுப்பதற்கு உதவும் சில படிகள் யாவை?
ஏன் தீர்மானங்கள் எடுக்க வேண்டும்?
3. தீர்மானம் எடுக்கும்போது நாம் எதற்கு இடமளித்துவிடக் கூடாது?
3 பைபிள் நெறிகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நாம் இருமனமுள்ளவர்களாய் இருந்தால், நம்முடைய நம்பிக்கைகளில் நாமே உறுதியாய் இல்லை என்று சக மாணவர்களோ சக பணியாளர்களோ முடிவுகட்டி விடலாம்; அதனால், நம்மை எளிதில் இணங்க வைத்துவிட முடியுமென நினைக்கலாம். அவர்கள் பொய் சொல்லலாம், ஏமாற்றலாம், அல்லது திருடலாம். அதுமட்டுமா, அவர்களுடைய ‘கும்பலைப் பின்பற்ற’ நம்மையும் இழுக்கலாம் அல்லது அவர்களைக் காட்டிக்கொடுக்காமல் இருக்கும்படி நம்மிடம் கேட்கலாம். (யாத். 23:2, பொது மொழிபெயர்ப்பு) ஆனால், கடவுளுக்குப் புகழ் சேர்க்கும் விதத்தில் தீர்மானம் எடுக்கத் தெரிந்த ஒருவர் மனிதருக்குப் பயந்தோ மனிதருக்குப் பிடித்த மாதிரி நடக்க வேண்டுமென ஆசைப்பட்டோ பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட தன் மனசாட்சிக்கு எதிராக நடக்க மாட்டார்.—ரோ. 13:5.
4. மற்றவர்கள் நமக்காகத் தீர்மானம் எடுக்க ஏன் விரும்பலாம்?
4 நமக்காக மற்றவர்கள் எடுக்கும் தீர்மானங்கள் எல்லாமே தவறானதென சொல்ல முடியாது. நம்மீது அக்கறையுள்ள நண்பர்கள் தங்களுடைய ஆலோசனையைக் கேட்டு நடக்கும்படி நம்மை வற்புறுத்தலாம். நாம் வீட்டைவிட்டு வெகு தொலைவில் வசித்தாலும்கூட நம்மீது வீட்டாருக்கு அளவுகடந்த அக்கறை இருப்பதால் சில முக்கியமான தீர்மானங்களை எடுக்கும்போது அவர்களும் அவற்றில் தலையிட நினைக்கலாம். உதாரணத்திற்கு, மருத்துவ சிகிச்சை சம்பந்தப்பட்ட விஷயத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இரத்தத்தைப் பயன்படுத்தக் கூடாது என பைபிள் தெள்ளத் தெளிவாகக் கூறுகிறது. (அப். 15:28, 29) உடல்நலம் சம்பந்தப்பட்ட மற்ற விஷயங்களைப் பற்றி பைபிள் நேரடியாகச் சொல்லாவிட்டாலும், எப்படிப்பட்ட சிகிச்சையை ஏற்றுக்கொள்ளலாம் எதை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். * நம்மை உயிருக்குயிராய் நேசிக்கிறவர்கள், இந்த விஷயத்தில் தாங்கள் சொல்கிறபடியே தீர்மானம் எடுக்க வேண்டுமென எதிர்பார்க்கலாம். ஆனால், சிகிச்சையைப் பொறுத்ததில் கடவுளுக்குத் தங்களை அர்ப்பணித்து ஞானஸ்நானம் பெற்ற கிறிஸ்தவர் ஒவ்வொருவரும் “தன்தன் பாரத்தைச் சுமக்க” வேண்டும். (கலா. 6:4, 5) மனிதருக்கு முன்பாக அல்ல, கடவுளுக்கு முன்பாக நல்மனசாட்சியைக் காத்துக்கொள்வதே நம்முடைய முக்கிய நோக்கம்.—1 தீ. 1:5.
5. நம்முடைய விசுவாசம் எனும் கப்பல் மூழ்கிவிடுவதை எப்படித் தவிர்க்கலாம்?
5 இருமனமுள்ளவர்களாய் இருப்பது நமக்கு பெரும் ஆபத்தாகி விடலாம். “இருமனமுள்ளவன், தன் வழிகளிலெல்லாம் உறுதியற்றவன்” என்று சீடனாகிய யாக்கோபு எழுதினார். (யாக். 1:8) கொந்தளிப்பான கடலில் செல்லும் சுக்கான் இல்லாத படகில் பயணிக்கும் மனிதனைப் போல, அவன் மற்றவர்களுடைய பல்வேறு கருத்துகளால் அலைக்கழிக்கப்படுவான். அப்படிப்பட்ட ஒருவன் தன்னுடைய விசுவாசம் எனும் கப்பலை மூழ்கடித்துவிட்டு அதற்காக மற்றவர்கள்மேல் பழிபோடுவது எவ்வளவு எளிது! (1 தீ. 1:19) இப்படி நடப்பதை நாம் எப்படித் தவிர்க்கலாம்? ‘விசுவாசத்தில் பலப்பட்டவர்களாய்’ இருப்பதன் மூலம் தவிர்க்கலாம். (கொலோசெயர் 2:6, 7-ஐ வாசியுங்கள்.) இதற்காக, கடவுளுடைய வார்த்தையில் விசுவாசம் இருப்பதைக் காட்டும் விதத்தில் தீர்மானங்கள் எடுக்கக் கற்றுக்கொள்வது அவசியம். (2 தீ. 3:14-17) என்றாலும், நல்ல தீர்மானங்கள் எடுப்பதற்கு எது தடையாக இருக்கலாம்?
தீர்மானங்கள் எடுக்கக் கஷ்டமாக இருப்பது எதனால்?
6. பயம் நம்மை எப்படிப் பாதிக்கலாம்?
6 தவறான தீர்மானம் எடுத்துவிடுவோமோ, ஏதாவது சறுக்கல் ஏற்பட்டுவிடுமோ, மற்றவர்கள் நம்மை முட்டாள் என நினைத்துவிடுவார்களோ என்ற பயமே அதற்குக் காரணம். அப்படிப் பயப்படுவது இயல்பே. அவதிப்பட வைக்கிற, அவமானப்பட வைக்கிற தீர்மானத்தை எடுக்க யாருமே விரும்ப மாட்டார்கள். இருந்தாலும், கடவுள்மீதும் அவருடைய வார்த்தைமீதும் உள்ள அன்பு அப்படிப்பட்ட பயத்திலிருந்து விடுபட நமக்கு உதவும். எப்படி? கடவுள்மீது அன்பு இருக்கும்போது, முக்கியமான தீர்மானங்களை எடுப்பதற்கு முன் தவறாமல் அவருடைய வார்த்தையையும் பைபிள் பிரசுரங்களையும் ஆராய்வோம். இப்படிச் செய்யும்போது தவறான தீர்மானங்கள் எடுப்பதைப் படிப்படியாகக் குறைப்போம். ஏன் அப்படிச் சொல்கிறோம்? ஏனென்றால், பைபிள் “பேதைகளுக்கு வினாவையும், வாலிபருக்கு அறிவையும் விவேகத்தையும் கொடுக்கும்.”—நீதி. 1:4.
7. தாவீது ராஜாவின் உதாரணத்திலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்?
7 நாம் எப்போதுமே சரியான தீர்மானம் எடுப்போம் என்று சொல்ல முடியுமா? முடியாது. ஏனென்றால், நாம் எல்லாரும் தவறு செய்துவிடுகிறோம். (ரோ. 3:23) உதாரணமாக, தாவீது ராஜா ஞானமும் உண்மையும் உள்ளவராய் இருந்தார். ஆனாலும், சில சமயங்களில் அவர் தவறான தீர்மானங்கள் எடுத்தார்; அதனால், அவரும் துன்பப்பட்டார், மற்றவர்களும் துன்பப்பட்டார்கள். (2 சா. 12:9-12) என்றாலும் தவறு செய்ததை நினைத்து, கடவுளுக்குப் பிடித்தமான விதத்தில் தன்னால் தீர்மானங்கள் எடுக்க முடியாது என்ற முடிவுக்கு அவர் வந்துவிடவில்லை. (1 இரா. 15:4, 5) நாம் கடந்த காலத்தில் தவறுகள் செய்திருந்தால்கூட யெகோவா நம் பாவங்களைப் பெரிதுபடுத்தாமல் அவற்றை மன்னிப்பார் என தாவீதைப் போல உணர்ந்தால் நம்மாலும் நல்ல தீர்மானங்கள் எடுக்க முடியும். தம்மை நேசித்து தமக்குக் கீழ்ப்படிகிறவர்களை அவர் எப்போதும் ஆதரிப்பார்.—சங். 51:1-4, 7-10.
8. திருமணம் செய்துகொள்வது சம்பந்தமாக அப்போஸ்தலன் பவுல் சொன்னதிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்?
8 நல்ல தீர்மானங்கள் எடுக்க முடியுமா என்ற கவலையை நம்மால் குறைக்க முடியும். எப்படி? நாம் தேர்ந்தெடுப்பதற்கு சில சமயங்களில் நிறைய நல்ல வழிகள் இருப்பதை உணர்ந்துகொள்வதன் மூலம். திருமணம் செய்துகொள்வது சம்பந்தமாக அப்போஸ்தலன் பவுல் சொன்னதைக் கவனியுங்கள். “ஒருவன் தன்னுடைய காம உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாதிருந்தால், இளமை மலரும் பருவத்தைக் கடந்திருந்தால், திருமணம் செய்துகொள்வதுதான் தனக்கு நல்லதென்று நினைத்தால், அவன் தன் விருப்பப்படியே செய்யட்டும்; அதில் பாவம் இல்லை. அப்படிப்பட்டவர்கள் திருமணம் செய்துகொள்ளட்டும். ஆனால், ஒருவன் திருமணத்திற்கு அவசியமில்லையென நினைத்து தன் இருதயத்தில் உறுதியுள்ளவனாகவும் தன் சொந்த ஆசைகளைக் கட்டுப்படுத்த முடிந்தவனாகவும் இருந்தால் நல்லது; அதோடு, திருமணமாகாதிருக்கும்படி தானே தன் இருதயத்தில் தீர்மானம் எடுத்திருந்தால் நல்லது” என்று கடவுளுடைய சக்தியினால் தூண்டப்பட்டு அவர் எழுதினார். (1 கொ. 7:36-38) மணமாகாதிருப்பதே சிறந்தது என அவர் குறிப்பிட்டார், ஆனால் அதுதான் சரியான தீர்மானம் என அவர் சொல்லவில்லை.
9. நாம் எடுக்கிற தீர்மானங்களைக் குறித்து மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று கவலைப்பட வேண்டுமா? விளக்குங்கள்.
9 நாம் எடுக்கிற தீர்மானங்களைக் குறித்து மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று கவலைப்பட வேண்டுமா? ஓரளவுக்குக் கவலைப்படுவதில் தவறில்லை. உருவச் சிலைகளுக்குப் படைக்கப்பட்டதாய்த் தோன்றுகிற உணவைச் சாப்பிடுவதைப் பற்றி பவுல் சொன்னதைக் கவனியுங்கள். அதைச் சாப்பிடுவதில் தவறொன்றும் இல்லைதான்; ஆனாலும், அப்படிச் சாப்பிடுவது பலவீனமான மனசாட்சி உடைய ஒருவரைப் பாதிக்கலாம் என அவர் குறிப்பிட்டார். ஆகவே பவுல் என்ன செய்யத் தீர்மானித்தார்? “நான் சாப்பிடுகிற இறைச்சி என் சகோதரனுடைய விசுவாசத்திற்குத் தடைக்கல்லாக இருந்தால், நான் அவனுக்குத் தடைக்கல்லாகி விடாதபடி இனி ஒருபோதும் அதைச் சாப்பிட மாட்டேன்” என்று அவர் சொன்னார். (1 கொ. 8:4-13) நம்முடைய தீர்மானங்கள் மற்றவர்களுடைய மனசாட்சியை எப்படிப் பாதிக்கும் என்பதை நாமும்கூட சிந்தித்துப் பார்க்க வேண்டும். என்றாலும், நம்முடைய தீர்மானங்கள் யெகோவாவுடன் நாம் வைத்துள்ள நட்பை எப்படிப் பாதிக்கும் என்பதையே முக்கியமாய்ச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். (ரோமர் 14:1-4-ஐ வாசியுங்கள்.) கடவுளுக்குப் புகழ் சேர்க்கிற தீர்மானங்களை எடுக்க என்ன பைபிள் நியமங்கள் நமக்கு உதவும்?
நல்ல தீர்மானங்கள் எடுக்க ஆறு படிகள்
10, 11. (அ) குடும்பத்தில் அகந்தையை எப்படித் தவிர்க்கலாம்? (ஆ) சபைக்கு நன்மை தரும் தீர்மானங்களை எடுக்கையில் மூப்பர்கள் எதை மனதில் வைக்க வேண்டும்?
10 அகந்தையைத் தவிருங்கள். ஒரு தீர்மானத்தை எடுக்கும் முன், ‘இதை எடுக்க எனக்கு உரிமை இருக்கிறதா?’ என்று நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டும். “அகந்தை வந்தால் இலச்சையும் வரும்; தாழ்ந்த சிந்தையுள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு” என்று சாலொமோன் ராஜா எழுதினார்.—நீதி. 11:2.
11 பிள்ளைகளே சில தீர்மானங்களை எடுப்பதற்குப் பெற்றோர் அனுமதிக்கலாம்; அதற்காக தங்களுக்கு அந்த உரிமை இருக்கிறதென பிள்ளைகள் நினைத்துக்கொள்ளக் கூடாது. (கொலோ. 3:20) மனைவிகளுக்கும் தாய்மார்களுக்கும் குடும்பத்தில் ஓரளவு அதிகாரம் இருந்தாலும், அவர்கள் தங்களுடைய கணவர்களின் தலைமை ஸ்தானத்தை ஏற்று நடக்க வேண்டும். (நீதி. 1:8; 31:10-18; எபே. 5:23) அதேபோல, கணவர்களும்கூட தங்களுடைய அதிகாரம் வரம்புக்குட்பட்டது என்பதைப் புரிந்துகொண்டு கிறிஸ்துவுக்குக் கீழ்ப்பட்டிருக்க வேண்டும். (1 கொ. 11:3) மூப்பர்கள் எடுக்கிற தீர்மானங்கள் சபைக்கு நன்மை தருகின்றன. என்றாலும், அந்தத் தீர்மானங்கள் கடவுளுடைய வார்த்தையில் ‘எழுதப்பட்ட விஷயங்களுக்கு மிஞ்சிப் போகாதிருக்க’ அவர்கள் கவனமாய் இருக்கிறார்கள். (1 கொ. 4:6) அதோடு, உண்மையுள்ள அடிமை வகுப்பார் தரும் அறிவுரைகளையும் முழுமையாய் கடைப்பிடிக்கிறார்கள். (மத். 24:45-47) தீர்மானங்கள் எடுக்க நமக்கு அதிகாரம் இருக்கும்போது மட்டுமே தாழ்மையோடு தீர்மானங்கள் எடுத்தால் வீணான கவலையிலிருந்தும் வேதனையிலிருந்தும் நாம் விடுபடுவதோடு மற்றவர்களும் பாதிக்கப்படாமல் இருக்கலாம்.
12. (அ) நாம் ஏன் அலசி ஆராய வேண்டும்? (ஆ) ஒருவர் எப்படி ஆராயலாம் என்பதை விளக்குங்கள்.
12 அலசி ஆராயுங்கள். “திட்டமிட்டு ஊக்கத்துடன் உழைப்பவரிடம் செல்வம் சேரும் என்பது திண்ணம்; பதற்றத்துடன் வேலை செய்பவர் பற்றாக்குறையில் இருப்பார்” என்று சாலொமோன் எழுதினார். (நீதி. 21:5, பொ.மொ.) உதாரணத்திற்கு, ஒரு தொழிலை ஆரம்பிப்பதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்களா? யோசிக்காமல் கொள்ளாமல் அதில் இறங்கிவிடாதீர்கள். தேவையான எல்லாத் தகவல்களையும் சேகரியுங்கள், இந்தத் தொழிலில் அனுபவமுள்ளவர்களின் ஆலோசனையை நாடுங்கள், அதன் பிறகு சரியான தீர்மானம் எடுப்பதற்கு உதவும் பைபிள் நியமங்களைக் கண்டுபிடியுங்கள். (நீதி. 20:18) ஆராய்ந்து சேகரித்த தகவல்களை இரண்டாகப் பட்டியலிடுங்கள்: ஒன்றில் நன்மைகளையும் மற்றொன்றில் சவால்களையும் எழுதுங்கள். தீர்மானம் எடுப்பதற்கு முன் ‘செலவைக் கணக்கிட்டுப் பாருங்கள்.’ (லூக். 14:28) நீங்கள் எடுக்கும் தீர்மானத்தால் உங்களுடைய பொருளாதார நிலை மட்டுமல்ல ஆன்மீக நிலையும் எப்படிப் பாதிக்கப்படலாம் என்பதைச் சிந்தியுங்கள். ஆராய்வதற்கு அதிக நேரமும் முயற்சியும் தேவைதான். என்றாலும் அப்படிச் செய்யும்போது, அவசரப்பட்டு தீர்மானம் எடுத்து அநாவசியமாகக் கவலைப்படுவதைத் தவிர்க்கலாம்.
13. (அ) யாக்கோபு 1:5-ல் என்ன வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது? (ஆ) ஞானத்திற்காக ஜெபம் செய்வது நமக்கு எப்படி உதவும்?
13 ஞானத்திற்காக ஜெபியுங்கள். தீர்மானங்கள் எடுப்பதற்கு நாம் கடவுளுடைய உதவியை நாடினால் மட்டுமே அவை அவருக்குப் புகழ் சேர்ப்பதாய் இருக்கும். “உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுபட்டிருந்தால், கடவுளிடம் அவன் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்; அப்படிக் கேட்கிறவர்களை அவர் கடிந்துகொள்ள மாட்டார்; எல்லாருக்கும் தாராளமாகக் கொடுக்கிற அவர் அவனுக்கும் கொடுப்பார்” என்று சீடனாகிய யாக்கோபு எழுதினார். (யாக். 1:5) கடவுளுடைய ஞானம் இல்லாமல் தீர்மானங்கள் எடுக்க முடியாது என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். (நீதி. 3:5, 6) சொல்லப்போனால், முழுக்க முழுக்க நம்முடைய அறிவைச் சார்ந்து தீர்மானங்கள் எடுத்தால் எளிதில் சறுக்கல் ஏற்பட்டுவிடும். ஞானத்திற்காக ஜெபம் செய்து, கடவுளுடைய வார்த்தையிலுள்ள நியமங்களை ஆராயும்போது, நாம் என்ன நோக்கத்தோடு ஒரு செயலில் இறங்க விரும்புகிறோம் என்பதைப் பகுத்தறிய கடவுளுடைய சக்தி நமக்கு உதவும்.—எபி. 4:12; யாக்கோபு 1:22-25-ஐ வாசியுங்கள்.
14. நாம் ஏன் காலந்தாழ்த்தக் கூடாது?
14 தீர்மானம் எடுங்கள். அலசி ஆராயாமல், ஞானத்திற்காக ஜெபிக்காமல் அவசரப்பட்டு இந்தப் படியை எடுத்து விடாதீர்கள். ஞானமுள்ள ஒருவர் ‘தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறார்’; அதாவது தான் எடுக்கும் படிகளைக் குறித்து சிந்தித்துப் பார்க்க நேரமெடுத்துக் கொள்கிறார். (நீதி. 14:15) அதற்காக, காலந்தாழ்த்திக் கொண்டே இருக்காதீர்கள். அப்படிச் செய்பவர் தான் தீர்மானம் எடுக்காததற்கு வினோதமான சாக்குப்போக்குகளைச் சொல்லலாம். (நீதி. 22:13) இருந்தாலும், அவர் ஒரு தீர்மானம் எடுக்கிறார்; ஆம், அவருக்காக மற்றவர்கள் தீர்மானம் எடுக்க விட்டுவிடுகிறார்.
15, 16. ஒரு தீர்மானத்தைச் செயல்படுத்துவதற்கு என்ன தேவை?
15 தீர்மானத்தைச் செயல்படுத்துங்கள். நாம் எடுத்த நல்ல தீர்மானத்தின்படி மும்முரமாகச் செயல்படாவிட்டால், அதற்காக நாம் பட்ட பிரயாசமெல்லாம் பாழாய்ப் போய்விடலாம். “செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்” என்று சாலொமோன் எழுதினார். (பிர. 9:10) ஆனால், தீர்மானத்தைச் செயல்படுத்துவதற்குத் தேவையான எல்லாவற்றையும் செய்ய நாம் மனமுள்ளவர்களாய் இருந்தால்தான் வெற்றி பெற முடியும். உதாரணமாக, ஒரு பிரஸ்தாபி பயனியர் சேவை செய்யத் தீர்மானிக்கலாம். அந்தச் சேவையில் அவர் வெற்றி பெறுவாரா? வேலையே கதியென்று கிடக்காமல், பொழுதுபோக்கிலேயே மூழ்கிவிடாமல் இருந்தால் அவர் வெற்றி பெறலாம்; இல்லையென்றால், ஊழியத்திற்குச் செலவிட வேண்டிய நேரத்தை, சக்தியை வேலையும் பொழுதுபோக்கும் உறிஞ்சி விடும்.
16 நாம் எடுக்கிற மிகச் சிறந்த தீர்மானங்களைச் செயல்படுத்துவது அவ்வளவு எளிதல்ல. ஏன்? ஏனென்றால், “இந்த உலகம் முழுவதும் பொல்லாதவனுடைய கைக்குள் கிடக்கிறது.” (1 யோ. 5:19) “இந்த இருண்ட உலகத்தின் தலைவர்களோடும், பரலோகத்திலுள்ள பொல்லாத தூதர் கூட்டத்தோடும் நாம் மல்யுத்தம் செய்ய வேண்டியிருக்கிறது.” (எபே. 6:12) கடவுளுக்குப் புகழ் சேர்க்கும் விதத்தில் தீர்மானம் எடுக்க விரும்புகிறவர்கள் போராட வேண்டியிருக்கும் என்பதை அப்போஸ்தலன் பவுலும் சீடனாகிய யூதாவும் சுட்டிக் காட்டினார்கள்.—1 தீ. 6:12; யூ. 3.
17. நாம் தீர்மானங்கள் எடுக்கையில் யெகோவா நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார்?
17 எடுத்த தீர்மானத்தைப் பரிசீலனை செய்யுங்கள், தேவைப்பட்டால் மாற்றங்களைச் செய்யுங்கள். நாம் திட்டமிட்டபடியே எல்லாத் தீர்மானங்களையும் செயல்படுத்த முடியாமல் போகலாம். ஏனென்றால், “எதிர்பாராத வேளைகளில் அசம்பாவிதங்கள் எல்லாருக்கும் நேரிடுகின்றன.” (பிர. 9:11, NW) அப்படிப் பிரச்சினைகள் வந்தாலும் நாம் எடுத்த சில தீர்மானங்களுக்கு இசைய செயல்படும்படி யெகோவா எதிர்பார்க்கிறார். ஒருவர், யெகோவாவுக்குத் தன்னை அர்ப்பணித்த பிறகு அல்லது திருமண உறுதிமொழி எடுத்த பிறகு அந்தத் தீர்மானத்தை மாற்ற முடியாது. இவ்வாறு எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு இசைய வாழ வேண்டுமென கடவுள் எதிர்பார்க்கிறார். (சங்கீதம் 15:1, 2, 4-ஐ வாசியுங்கள்.) என்றாலும், பெரும்பாலான தீர்மானங்கள் இந்தளவு முக்கியமானவை அல்ல. அதனால், ஞானமுள்ள ஒருவர் தான் எடுத்த தீர்மானங்களை அவ்வப்போது பரிசீலனை செய்வார். அகந்தை அல்லது பிடிவாதம் காரணமாக தன்னுடைய தீர்மானத்தில் மாற்றங்கள் செய்யாமல் இருக்க மாட்டார்; தேவைப்பட்டால் அந்தத் தீர்மானத்தை அடியோடு மாற்றவும் தயங்க மாட்டார். (நீதி. 16:18) வாழ்க்கையில் எப்போதும் கடவுளுக்குப் புகழ் சேர்ப்பதே அவருடைய முக்கிய நோக்கமாக இருக்கும்.
கடவுளுக்குப் புகழ் சேர்க்கும் தீர்மானங்களை எடுக்க பிறருக்கு உதவுங்கள்
18. பிள்ளைகள் நல்ல தீர்மானங்கள் எடுக்க பெற்றோர் எப்படி உதவலாம்?
18 கடவுளுக்குப் புகழ் சேர்க்கும் விதமாகத் தீர்மானங்கள் எடுக்க பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு பல வழிகளில் உதவலாம். பெற்றோரின் நல்ல முன்மாதிரியே அவர்களுக்கு மிகச் சிறந்த ஆசான். (லூக். 6:40) ஒரு தீர்மானத்தை எடுப்பதற்கு என்னென்ன படிகளை எடுத்தார்கள் என பொருத்தமான சந்தர்ப்பங்களில் பெற்றோர் பிள்ளைகளுக்கு விளக்கலாம். சில தீர்மானங்களைப் பிள்ளைகளே எடுக்கும்படியும் விட்டுவிடலாம்; அவை வெற்றி கண்டால் அவர்களைப் பாராட்டலாம். ஆனால், ஒரு பிள்ளை தவறான தீர்மானம் எடுத்துவிட்டால்? அதன் பின்விளைவுகளிலிருந்து பிள்ளையைக் காப்பாற்றவே பொதுவாக பெற்றோர் துடிப்பார்கள்; ஆனால், அப்படிச் செய்வது எப்போதுமே நல்லதல்ல. உதாரணமாக, ஓட்டுநர் உரிமம் வாங்க தன் பிள்ளைக்குப் பெற்றோர் அனுமதி அளிக்கலாம். ஆனால், அந்தப் பிள்ளை சாலை விதியை மீறியதன் காரணமாக அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால்? ஒருவேளை பெற்றோர் அந்த அபராதத்தைச் செலுத்திவிடலாம். ஆனாலும், ‘நீயே சம்பாதித்து அந்த அபராதத்தைக் கட்டு’ என்று பெற்றோர் சொன்னால் பிள்ளை பிற்பாடு பொறுப்பாக நடந்துகொள்ளும், அல்லவா?—ரோ. 13:4.
19. நம் பைபிள் மாணாக்கர்களுக்கு எதைக் கற்றுக்கொடுக்க வேண்டும், இதை எப்படிச் செய்யலாம்?
19 மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும்படி இயேசு தம் சீடர்களிடம் சொன்னார். (மத். 28:20) அவற்றில், நல்ல தீர்மானங்கள் எடுக்க பைபிள் மாணாக்கர்களுக்கு நாம் கற்றுக்கொடுப்பது மிக முக்கியமான ஒன்று. இதை நல்ல விதமாகச் செய்வதற்கு, அவர்கள் என்ன செய்ய வேண்டுமென நாமே முந்திக்கொண்டு சொல்லிவிடக் கூடாது. மாறாக, பைபிள் நியமங்களை ஆராய்ந்து பார்த்து அதன் அடிப்படையில் அவர்களே தீர்மானம் எடுக்கக் கற்றுக்கொடுப்பதே சிறந்தது. சொல்லப்போனால், ‘நாம் ஒவ்வொருவரும் நம்மைக் குறித்துக் கடவுளிடம் கணக்குக் கொடுக்க’ வேண்டும், அல்லவா? (ரோ. 14:12) ஆகையால், நாம் எல்லாருமே கடவுளுக்குப் புகழ் சேர்க்கும் விதத்தில் தீர்மானங்கள் எடுக்க நியாயமான காரணங்கள் உள்ளன.
[அடிக்குறிப்பு]
^ பாரா. 4 இந்த விஷயத்தைப் பற்றிக் கூடுதலாகத் தெரிந்துகொள்வதற்கு கடவுளது அன்பு என்ற புத்தகத்தில் பக்கங்கள் 246-249-ல் “இரத்தத்தின் சிறு கூறுகளும் அறுவை சிகிச்சை முறைகளும்” என்ற தலைப்பிலுள்ள பிற்சேர்க்கையையும் நவம்பர் 2006 நம் ராஜ்ய ஊழியம், பக்கங்கள் 3-6-ல், “இரத்தத்தின் சிறு கூறுகளையும் என்னுடைய சொந்த இரத்தத்தைப் பயன்படுத்திச் செய்யப்படும் மருத்துவ முறைகளையும் பற்றி நான் என்ன தீர்மானம் எடுக்க வேண்டும்?” என்ற தலைப்பிலுள்ள உட்சேர்க்கையையும் பாருங்கள்.
எப்படிப் பதிலளிப்பீர்கள்?
• தீர்மானங்கள் எடுக்க நாம் ஏன் கற்றுக்கொள்ள வேண்டும்?
• பயம் நம்மை எப்படிப் பாதிக்கலாம், அதை எப்படிச் சமாளிக்கலாம்?
• கடவுளுக்குப் புகழ் சேர்க்கும் விதத்தில் தீர்மானங்கள் எடுக்க உதவும் ஆறு படிகள் யாவை?
[கேள்விகள்]
[பக்கம் 16-ன் பெட்டி/படம்]
நல்ல தீர்மானங்கள் எடுக்க உதவும் படிகள்
1 அகந்தையைத் தவிருங்கள்
2 அலசி ஆராயுங்கள்
3 ஞானத்திற்காக ஜெபியுங்கள்
4 தீர்மானம் எடுங்கள்
5 தீர்மானத்தைச் செயல்படுத்துங்கள்
6 பரிசீலனை செய்யுங்கள், மாற்றங்கள் செய்யுங்கள்
[பக்கம் 15-ன் படம்]
இருமனமுள்ளவன் கொந்தளிப்பான கடலில் செல்லும் சுக்கான் இல்லாத படகில் பயணிக்கும் மனிதனைப் போல இருக்கிறான்